உரை
 
2. இலாவாண காண்டம்
 
17. தேவியைப் பிரித்தது
 
            உறுவரை மார்பன் உவந்தன னாகி
            இறுவரை இமயத் துயர்மிசை இழிந்து
            பன்முகம் பரப்பிப் பௌவம் புகூஉம்
      35    நன்முகக் கங்கையின் நகர நண்ணிப்
            பன்மலர்க் கோதையைப் பற்றுவிட் டகலான்
            சின்னாள் கழிந்த காலைச் சிறந்த
 
        {உதயணகுமரன் அவள் கூற்றுக்கிணங்கி நகரம்புக்கிருத்தல்}
                      32-37 ; உறுவரை,,,,,,,,,காலை
 
(பொழிப்புரை) அதுகேட்ட பெரியமலைபோன்ற மார்பனும், அதற்கிணங்கி மகிழ்ச்சியுடையவனாய் இமயமலையினது உச்சியினின்றும் இறங்கிப் பலமுகங்களைப் பரப்பிக் கடலிலே புகாநின்ற கங்கையாறு போன்று அம் மலைச்சாரலினின்றும் தன் பரிசனங்களுடன் பல வழியானும் அவ்விலாவாண நகரதிற் புகுந்து ஆண்டுள்ள அரண் மனையின்கண் வாசவதத்தையின்பால் அன்பு தவிராதவனாய் உவளகம் தனதாக உறையாநிற்பச் சில நாள்கள் கழிந்  தன; அப்பொழுது என்க.
 
(விளக்கம்) 32. பெரிய மலைபோன்ற மார்பினையுடைய உதயணகுமரன் என்க,
    33.  இறுவரை இமயம் - உலகினுள் பெரிய மலையாகிய இமயமலை, உயர்மிசை - உயர்ந்த உச்சி.
    34.  பன்முகம் - பல வழிகளானும் (தன் நீரைப் பரப்பிச்சென்று என்க.)
    35.  நல்ல புகுமுகத்தை (சங்கமுகம்) உடைய கங்கை யாறு  போன்று,
    36, பலவேறு மலர்களானும் தொடுத்த மாலையினையுடைய  வசவதத்தையை. பற்று - நீங்காத அன்பு ; (காமம்).