உரை
 
2. இலாவாண காண்டம்
 
17. தேவியைப் பிரித்தது
 
         
     55    வடுநீங் கமைச்சர் வலித்தன ராகிப்
           பிணைமலர்ப் படலைப் பிரச்சோ தனன்றன்
           இணைமலர்ப் பாவையை இயைந்ததற் கொண்டும்
           ஊக்கம் இலனிவன் வெட்கையின் வீழ்ந்தென
           வீக்கங் காணார் வேட்டுவர் எள்ளிக்
     60    கலக்கம் எய்தக் கட்டழல் உறீஇய
           தலைக்கொண் டனரெனத் தமர்க்கும் பிறர்க்கும்
           அறியக் கூறிய செறிவுடைச் செய்கை
           வெஞ்சொன் மாற்றம் வந்துகை கூட
           வன்கண் மள்ளர் வந்தழல் உறீஇப்
     65    போர்ப்பறை அரவமொ டார்ப்பனர் வளைஇக்
           கோப்பெருந் தேவி  போக்கற மூடிக்
           கையிகந்து பெருகிய செய்கைச் குழ்ச்சியுள்
 
        {ஏவலர் அரண்மனையில் தீக்கொளுவுதல்}
            55 - 67; வடுநீங்கு..........சூழ்ச்சியுள்
 
(பொழிப்புரை) குற்றமற்ற அமைச்சர் தாங்கருதிய செயலைச் செய்யத் துணிந்தனராகிப் பகைவராகிய வேடர், உதயண மன்னன் பாவையை மணந்த நாள் தொடங்கிக் காம வேட்கையுள் அழுந்தி ஊக்கமிலன் ஆயினான்; ஆதலின் இவனை வெல்லுதல் எளிதென்றும் அவன் பெருமையைக் கருதாதும் இகழ்ந்து அவன் கலக்கமுறும் பொருட்டு அரண்மனையில் தீக் கொளுவத்தலைப்பட்டனர் என்னும் ஒரு செய்தியைத் தஞ் சுற்றத்தாரும் பிற மாந்தரும் அறியும்படி பரப்பிய கருத்துச் செறிந்த அக்கொடுஞ்சொல் யாண்டும் பரவாநிற்ப, அச்செயலுக்குக் கருவியாயமைந்த தறுகண்மையுடைய மறவரும் அவ்வாறே போர்ப்பறை முழக்கத்தோடே ஆரவாரித்து வந்து அவ்வரண்மனையைச் சூழ்ந்து அதனகத்திருந்த வாசவதத்தை புறம் போகாதபடி அதன் வாயில்களை மூடி அதன்கண் தீக்கொளுவிய வரை கடந்து பெருகிய இச் சூழ்ச்சிச் செயல் நிகழுங்கால் என்க,
 
(விளக்கம்) 55. தீயச்செயல் போலத் தோன்றுமாத்திரையே;அதனைச் செய்வோர் தூயரே என்பார் வடுநீங்கு அமைச்சர் என விதந்தார்.
    59 - 7. பிணைத்த மலர் மாலையும் தளிர் மாலையும் அணியும் பிரச்சோதனன் மகளாகிய திருமகளை ஒத்த வாசவதத்தையை மணந்த நாள் தொடங்கி என்க. படலை -தளிர்விரவிய மாலை. மலர்ப்பாவை ; திருமகள். அவளை ஒத்த வாசவதத்தை என்க.
    58. ஊக்கமிலன் - தன்வினை செய்தற்கண் மனக்கிளர்ச்சியிலாது மெலிந்தான் என்று கருதி என்க. எனவே இவனை அழித்தல் மிக எளிது என்று எள்ளி அழலிட்டனர் என்று கருதும்படி என்பது கருத்து.
    59. வீக்கம் -பெருமை. எள்ளி-இகழ்ந்து; மதியாமல் என்றவாறு.
    60, உறீஇய - கொளுவ; செய்யிய என்னும் வாய்பாட்டெச்சம்.
    63, அறியும் பொருட்டு அவ் வமைச்சர் கூறிவிடுத்த மாற்றம் என்க. இங்ஙனம் கூறிவிடுத்தது தம் குழ்ச்சி வெளிப்படாமைப் பொருட்டென்க, செறிவுடைச் செய்கை -கருத்துச் செறிவுடைய செயல்; ஆராய்ந்து துணிந்த செயல் என்றவாறு.
    65. ஆர்ப்பனர் - ஆர்த்து. வளைஇ -வளைத்துக்கொண்டு.
    66, கோப்பெருந்தேவி ; வாசவதத்தை.
    67. கையிகந்து-மிக்கு. சூழ்ச்சிச் செய்கையுள் என  மாறுக.