உரை
 
2. இலாவாண காண்டம்
 
17. தேவியைப் பிரித்தது
 
           பொய்ந்நிலம் அமைத்த பொறியமை மாடத்
           திரும்பும் வெள்ளியும் இசைத்துருக் குறீஇ
     70    அருங்கலம் ஆக்கி யாப்புப்பிணி யுழக்கும்
           கொலைச்சிறை இருவரைப் பொருக்கெனப் புகீஇ
           நலத்தகு மாதர் அடிக்கல முதலாத்
           தலைக்கலங் காறுந் தந்தகத் தொடுக்கிச்
           சித்திரப் பெரும்பொறி உய்த்தனர் அகற்றி
     75    வத்தவர் கோமாண் மனத்தமர் துணைவியொடு
           தத்துவச் செவிலியைத் தலைப்பெருங் கோயில்
           மொய்த்தழல் புதைப்பினும் புக்கவட் போமினென்
           றத்தக வமைத்த யாப்புறு செய்கையொ
           டருமனை வரைப்பகம் ஆரழல் உறீஇய
     80    கருமக் கள்வரைக் கலங்கத் தாக்கி
           உருமண் ணுவாவும் ஒருபால் அகலப்
           பொறிவரித் தவிசிற் பொன்னிறப் பலகை
           உறநிறைத் தியற்றி உருக்கரக் குறீஇய
           மாடமும் வாயிலும் ஓடெரி கவர
 
           68 - 84 ; பொய்ந்நிலம்.....,...கவர
 
(பொழிப்புரை) சுருங்கை வழியுடனே இயந்திரமமைந்த மாடத்தின்கண் கொலைத் தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு கள்வரை விரைந்து புகுத்தி வாசவதத்தையின் அடியணிகலன் முதலாகத் தலையணிகலன் ஈறாகவுள்ள அணிகலன்களையும் வாங்கி அம்மாடத்துள் ஒருசார் வைத்துச் சித்திரத் தொழி லமைந்த சுருங்கை வாயிலியந்திரத்தை அகற்றிக் கோமான் துணைவியையும், தத்துவச் செவிலியையும், அழைத்து நீவிரிரு வீரும் இவ்வரண்மனையைத் தீப்பற்றி அழிப்பினும் அஞ்சாது இச் சுருங்கை வழியே குறிப்பிட்ட அவ்விடத்திற்குச் செல்வீராக என்று அறிவுறுத்தி அங்ஙனம் அவர் வெளியேறியவுடன் அவ்வாயில் தானே மூடிக்கொள்ளத் தகுந்ததொரு செய்கையும் செய்தமைத்துப் பின்னர் அவ்வரண்மனையின்கண் தீக்கொளுவிய பொய்க் கள்வரைக் கலங்கி ஓடும்படி அவரோடேபொய்ப் போர் புரிதல் தலைக்கீடாக அவ்வுருமண்ணுவா ஒருசார் அகலா நிற்பப் பொன்னிறப் பலகையின் மேல் புலி மான் இவற்றின் தோலால் ஆகிய இருக்கைகளைப் பொருந்த இடப்பட்டதும்; அரக்கால் இயற்றப்பட்டதுமாகிய அவ்வரண்மனை மாடங்களையும் வாயில்களையும் விரையும் தீ விரைந்து கவர்ந்துகொள்ளா  நிற்ப என்க.
 
(விளக்கம்) 68. பொய்ந்நிலம்-சுருங்கைவழி. பொறி-இயந்திரம்.

    69 - 71, அரசனுக்கு முடிக்கலன் செய்யுங்கால் பொன்னைக் களவு
  கொண்டு, அதற்கீடாக இரும்பையும் வெள்ளியையும் உருக்கிச்சேர்த்து அம் முடிக்கலனைச் செய்து அக்குற்றத்தின் பொருட்டு விலங்கிட்டுக் கொலைத்தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையிடைக் கிடந்த இரண்டு கள்வரை விரைந்து அம் மாடத்துள்ளே புகுத்தி என்க. இங்ஙனம் புகுத்தியது அம் மாடத்திலிருந்த மகளிரிருவரும் தீயான் மாண்டனர் என்று இக் கள்வர் உடலைக் காட்டி உதயண குமரனை நம்பச்செய்தற் பொருட்டென்க,
    72, நலத்தகுமாதர் - வாசவதத்தையின். அவள் அணிகலன் களைப் பின்னர் இறந்த வாசவதத்தையினுடையன இவை என உதயணனுக்குக் காட்டும் பொருட்டு அம் மாடத்துள்ளிட்டு வைத்தனர் என்பது கருத்து.
    73, தலைக்கலம்- தலைக்கோல முதலிய அணிகலன்.
    74. சித்திரத் தொழில் அமைந்த பெரிய பொறி என்க, உய்த்து அகற்றி தள்ளிநீக்கி.
    75. துணைவி - மனைவியாகிய வாசவதத்தை. 76. தத்துவ முணர்ந்த சாங்கியத்தாய் ஆகிய செவிலி என்க. பெருங்கோயிற்றலை அழல் மொய்த்துப் புதைப்பினும் (அஞ்சாமல்) என்று மாறுக. புதைத்ததல் - மூடுதல்,
    80. கருமக் கள்வர் - ஒரு கருமத்தின் பொருட்டுக் கள்வராய் நடித்த அவ்வேடரை.  கலங்கும்படி பொய்யாகத் தாக்கி என்க.
    82, பொறிவரித் தவிசு-புள்ளியுடைய மான்தோலிருக்கையும், வரியுடைய புலித் தோலிருக்கையும் என்க.
    83, அரக்குறீஇய - நிறமூட்டிய எனினுமாம். ஒடெரி-விரையும் நெருப்பு.