உரை
 
2. இலாவாண காண்டம்
 
17. தேவியைப் பிரித்தது
 
         
     85    இளையரு மகளிருங் களைகண் காணார்
           வேகுறு துயரமொ டாகுலம் எடுப்பத்
           தடங்கண் பிறழத் தளர்பூங் கொடியின்
           நடுங்கிவெய் துயிர்க்கு நன்னுதற் பணைத்தோள்
           தேவியைப் பற்றித் தெரிமூ தாட்டி
     90    யூகி கூறிய ஒளிநில மருங்கிற்
           பெருங்கல நிதியம் பெய்துவாய் அமைத்த
           அரும்பிலத் தியாத்த அச்ச மாந்தர்
           வாயில் பெற்று வழிப்படர்ந் தாங்குப்
           போக அமைத்த பொய்ந்நிலச் சுருங்கையுள்
     95    நற்புடை அமைச்சனை நண்ணிய பொழுதிற்
 
        [85-101. சாங்கியந் தாய் வாசவதத்தையை அழைத்துக்
                 கொண்டு யூகியின்பாற் செல்லுதல். ]
              85 - 95 ; இளையரும்,.........பொழுதில்
 
(பொழிப்புரை) அவ்வரண்மனையின்கண் உள்ள சிறுவரும், மகளிரும், தமக்குற்ற துயரம் போக்குவாரைக் காணப் பெறாராய் வேதலுற்ற பெரிய துன்பத்தோடே ஆரவாரஞ் செய்யா நிற்பத்தன் கண்கள் பிறழும்படி தளரா நின்ற பூங்கொடிபோல நடுங்கி வெய்தாக உயிர்க்கும் வாசவதத்தையை மூதாட்டி தன்கையிலே பற்றிக்கொண்டு யூகியால் தனக்குக் கூறப்பட்ட மறைவிடத்தே அமைந்த சுருங்கை வழியில் புழுக்கறைப்படுத்தப்பட்ட அச்சமுடையவர் தமக்கொரு வாயில் திறக்கப்பட்டு அவ்வழியே விரைந்து செல்லுமாறு போலச் சென்று யூகி இருக்கை யருகே செல்லா நின்றனள்; அங்ஙனம் சென்றபொழுது என்க,
 
(விளக்கம்) 85. அங்குறைந்த இளையரும் மகளிரும் என்க. களைகண் - புகலாவார்; துன்பங்களைந்து ஆதரவு நல்குவோர்
    86, தீயானே வேதலுறாநின்ற துயரத்தோடே என்க. ஆகுலம் - பூசல் ; ஆரவாரம்.
    87-9. மூதாட்டி தேவியைப்பற்றி என மறிக் கூட்டுக. தனது பெரிய கண்கள் பிறழாநிற்பச் சூறைக்காற்றாலே தளராநின்ற யூங்கொடிபோல நடுங்கி வெய்தாக உயிர்க்கின்ற தேவி, நன்னுதலையும் பணை போன்ற தோளையும் உடைய தேவி எனத் தனித்தனி கூட்டுக.
    88, வெய்துயிர்த்தல்-வெய்தாகப் பெருமூச் செறிதல். பணை - மூங்கில்.
    89. தேவி - கோப்பெருந்தேவி ; வாசவதத்தை. தெரிமூதாட்டி; வினைத்தொகை. மெய்ப்பொருள் உணர்ந்த முதியவளாகிய சாங்கியத்தாய் என்க.
    90. முன்னர் யூகி தனக்குக் கூறிய என்க. ஒளிநிலம்-மறைவான நிலம்.
    91. பெருங்கல நிதியம்-பேரணிகலன்களாகிய பொருள். வாய் அமைத்த - வாயை மூடிவைக்கப்பட்ட.
    92. அரும்பிலம்-தப்புதற்கரிய நிலவறை இதனைப் பொதியறை என்றும் கூறுப. 'பொதியறைப்பட்டோர்' (4; 105.19-8) என்பது மணிமேகலை. அச்சமாந்தர் - அச்சத்தையுடைய மனிதர்,
    93, வெளியேறுதற்கு ஒருவாயில் திறக்கப் பெற்று என்க.
    94, வெளியேறுதற் பொருட்டு அமைக்கப்பட்ட உட்பொய் யாகிய சுருங்கையுள் சென்று என்க.
    95. நற்பு உடை அமைச்சனை -நன்மையுடைய அமைச்சனாகிய யூகியை என்க. நற்பு-நன்மை.