|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 17. தேவியைப் பிரித்தது | | கற்புடை
மாதரைக் காதற் செவிலி
அற்புடைப் பொருள்பே ரறிவிற்
காட்டி அஞ்சி
லோதி அஞ்சல்நும் பெருமான்
நெஞ்சுபுரை அமைச்ச னீதியிற் செய்த
100 வஞ்சம் இதுவென வலிப்பக்
கூறி
அருந்திறல் அமைச்சனொ டொருங்குதலைப்
பெய்தபின்
இன்னகை முறுவலொ டெண்ணியது
முடிந்ததென்
றெதிரெழுந்து விரும்பி யூகி இறைஞ்சி
மதிபுரை முகத்திக்கு மற்றிது கூறும்
| | 96
- 104 ; கற்புடை........கூறும்
| | (பொழிப்புரை) கற்புக்கடம் பூண்ட வாசவதத்தைக்கு அன்புமிக்க அச்செவிலி தன்
பேரறிவுடைமையாலே பொருணீதியை எடுத்துக் கூறி அறிவுறுத்தி, 'அஞ்சிலோதீ!
அஞ்சாதே கொள்! நும்பெருமானாகிய உதயணவேந்தனுடைய நெஞ்சினை ஒத்த
அமைச்சன் ஒருவன் தனக்குரிய நீதியை மேற்கொண்டு இயற்றிய
தொரு வஞ்சகச் செயல், இஃதாகும்; இச்செயல் நுங்கள் நலத்தின் பொருட்டே
செய்யப்படுவதாம் ; என்று, அவள் நெஞ்சம் தெளிந்து உறுதி கெள்ளும்படி கூறி
(அழைத்துச் சென்று,) அவ்வமைச்சன் இருக்கையை எய்திய பின்னர் அங்கிருந்த
அவ்வமைச்சன் யாம் எண்ணிய செயல் நிறைவேறியது என்று மகிழ்ந்து இனிய
முகமலர்ச்சி யோடு அவர் தம் எதிரே வந்து அவரை விரும்பி வரவேற்று அவருள்
வாசவதத்தையை வணங்கி நின்று அவளுக்குப் பின்வருமாறு
கூறாநின்றனன் என்க.
| | (விளக்கம்) 96. கற்புடை
மாதர் என்றது அயலார்முற் செல்ல நாணும் இயல்புடையாள் என்பதுபட
விதந்தோதியபடியாம்.
97, அற்பு - அன்பு, அன்போடளாவிய பொருள்நீதி என்க. தனது
பேரறிவுடைமையாலே காட்டி என்க. 98, அஞ்சிலோதி
; அன்மொழித்தொகை; விளியேற்று நின்றது. அழகிய சிலவாகிய கூந்தலையுடைய
நங்காய் என்றவாறு, அஞ்சல் - அஞ்சாதே கொள். நும்பெருமான் என்புழிப்
பன்மை நினக்கும் ஏனையோர்க்கும் பெருமான் என்றபடி ; ஒருமைப் பன்மை
மயக்கமன்று. 99, நெஞ்சுபுரை-நெஞ்சத்தை ஒத்த, நீதியிற்
செய்த வஞ்சம் என்பது வஞ்சித்தும் தன்னரசனை நன்னெறிச் செலுத்தல்
வேண்டும் என்னும் அமைச்சியனீதியால் செய்த என்றவாறு.
100. இது - இச்செயல். வலிப்ப -நெஞ்சம்
உறுதிகொள்ளும்படி. 101. அருந்திறல் அமைச்சன் - பெறலரும்
திறலையுடைய அமைச்சனாகிய ஒருவன் என்க. என்றது யூகியை நினைந்து
கூறியதாம். 102- 4. தான் கருதிய செயல் இனி நிறைவேறுதல்
திண்ணம் என்னும் நினைவாலுண்டான இனிய மகிழ்ச்சியோடும் முறுவலோடும்.
விரும்பி எதிர்வந்து முகத்தியை இறைஞ்சி அவட்கு இது கூறும் என
இயைக்க. 103. இறைஞ்சி - வணங்கி.
104, திங்களை ஒத்த முகத்தையுடைய வாசவதத்தைக்கு என்க, இது - பின்வருமிம்
மொழியை
|
|