உரை
 
2. இலாவாண காண்டம்
 
17. தேவியைப் பிரித்தது
 
         
     105    இருங்கடல் உடுத்தவிப் பெருங்கண் ஞாலத்துத்
           தன்னின் அல்லது தாமீக் கூரிய
           மன்னரை வணக்கு மறமாச் சேனன்
           காதன் மகளே மாதர் மடவோய்
           வத்தவர் பெருமகன் வரைபுரை அகலத்து
     110    வித்தக நறுந்தார் விருப்பொடு பொருந்தி
           நுகர்தற் கமைந்த புகர்தீர் பொம்மற்
           கோல வனமுலைக் கொடிபுரை மருங்குல்
           வால்வளைப் பணைத்தோள் வாசவ தத்தாய்
          அருளிக் கேண்மோ அரசியல் வழாஅ
 
        [105-147. யூகி வாசவதத்தைக்குக் கூறல்]
           105 - 114 ; இருங்கடல்........கேண்மோ
 
(பொழிப்புரை) மறமாச் சேனன் காதல் மகளே! மாதர் மடவோய்! வாசவதத்தாய் ! கேட்டருள்க! என்க.
 
(விளக்கம்) 105-8. பெரிய கடலை ஆடையாக உடுத்த பேரிடத்தையுடைய இவ்வுலகத்தின்கண் - தன்னருள் பெற்றல்லது தாமே மீக்கூர்ந்த மன்னரை எல்லாம் தன்னை வணங்கும்படி செய்யாநின்ற மறமாச் சேனனுடையமகனே என்க.
    106, தன்னின் அல்லது-தன் அருளார்ன்றி. மீக்கூர்தல் - உயர்தல்.
    107. மறமாச்சேனன்;  பிரச்சோதனன்.        
    108, காதலையுடைய மகனே என்க, மாதர் மடவோய்-அழகிய
  மடப்பமுடையோய்.
    109 - 13. வத்தவர் மன்னனாகிய உதயணகுமரனுடைய மலையை ஒத்த மார்பிலணிந்த தொழிற்றிறனமைந்த நறிய மாலையை விருப்பத்தோடே பொருந்தி இன்பம் நுகர்தற்குப் பொருந்திய தவத்தையுடையோய்! குற்றந் தீர்ந்த பருமையினையும் ஒப்பனையையும் அழகையும் உடைய முலையினையும், பூங்கொடியை ஒத்த அழகிய நுண்ணிடையினையும் வெள்ளிய சங்கவளையலணிந்த மூங்கில் போன்ற தோளினையும் உடைய வாசவதத்தையே! என்க,
    114. அருளிக் கேண்மோ - கேட்டருள்க,