|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 17. தேவியைப் பிரித்தது | | விட்டுறை
வாற்றா வேட்கையிற் கெழுமிப்
பட்டுறை பிரியாப் படிமையின் அவ்வழி
130 ஒட்டிடை விட்டபின் அல்லதை
யொழிதல் வாணுதன்
மடவோய் அரிதுமற் றதனால்
சேண்வரு பெருங்குடிச் சிறுசொல்
நீங்க ஆர்வ
நெஞ்சத் தாவது புகலும்
இன்னுயிர் அன்ன என்னையு நோக்கி
135 மன்னிய தொல்சீர் மரபின்
திரியா நலமிகு
பெருமைநின் குலமு நோக்கிப்
பொருந்திய சிறப்பின் அரும்பெறற்
காதலன்
தலைமையின் வழீஇய நிலைமையு நோக்கி
நிலம்புடை பெயரினும் விசும்புவந்
திழியினும் 140 கலங்காக்
கடவுள்நின் கற்பு நோக்கி
அருளினை யாகி அறியா அமைச்சியல்
பொருளெனக் கருதிப் பூங்குழை
மடவோய் ஒன்னா
மன்னனை உதயண குமரன்
இன்னா செய்துதன் இகன்மேம் படநினைச்
145 சின்னா பிரியச் சிதைவதொன்
றில்லை வலிக்கற்
பாலை வயங்கிழை நீயென்
றொலிக்குங் கழற்கால் யூகி இரப்ப
| | 128 -
147 ; வேட்கையில்.......யூகி இரப்ப
| | (பொழிப்புரை) மடவோய்!
நினது முலைப்போகத்தை விட்டுத் தனித்துறைதல் ஆற்றாமைக்குக் காரணமான
காமவேட்கையான் நிறைந்து உறையினின்றும் நீங்கமாட்டாத படிமைபோல நின்
கணவன் அவ்வழி உறைதலினின்றும் விலகினாலன்றி அவ் வொழுக்கத்தினின்றும்
அவன் ஒழிதல் அரிதேயாகும். அங்ஙனமாதலினால் தொன்றுதொட்டு
வருகின்ற அவனுடைய பெருங்குடிக்கு எய்திய பழிச்சொல் நீங்குதல் வேண்டும்
என்னும் ஆர்வ நெஞ்சமுடமையானே இனி ஆகும் காரியங்களைக் கூறாநிற்கும்
நுங்கள் உயிர் நண்பனாகிய என் கடமையும் அஃதே யாதல் கருதியும்,
நிலைபெற்ற பழைய புகழினையுடையதும், முறைமையிற் பிறழாததும் நன்மைமிக்க
பெருமையினையுடையதுமாகிய உன்னுடைய குலப்பெருமையைக் காத்தல்
கருதியும், சிறப்புடைய நின் கணவன் தன் தலைமைத்தன்மை யினின்றும் தப்பிய
நிலைமையினை நோக்கி அவனை மீட்பது கருதியும், நின் கற்புச் சிறப்பினைக்
கருதியும், இதனைப் பொறுத்தருள்க! என் கடமையையே பொருள் எனக் கருதியான்
உதயணகுமரன் தன் பகைமன்னனுக்கு இன்னாசெய்து இகலின்கண் மேம்பட்டுத்
திகழ்தலை விரும்பியே இச்செயல்களைச் செய்யத் துணிந்தேன் ஆதலானும்,
அவ்வுதயண வேந்தன் நின்னை ஒருசில நாள் பிரிய நேர்ந்தமையால்
அவனுக்குக் கெடுவது ஒன்றுமில்லையாதலானும், இச்செயலை ஒரு
குற்றமாக நின் திருவுளத் தடைப்பாயல்லை என்று கூறி இரவா நிற்ப என்க.
| | (விளக்கம்) 127. வனமுலை -
அழகிய முலை. 128. விட்டுறைவு - நீங்கியிருத்தல்.
கெழுமி-நிரம்பி, 129.
பட்டு உறைபிரியாப் படிமையின் - பட்டாலாகிய உறையினின்றும் அகலாத
பொம்மை போல. 129-30 அவ்வழி ஒட்டு - அந்த நெறியிலுண்டான
பற்று. அல்லதை - அல்லது. 131. வாள்நுதல்
மடவோய் - ஒளியுடைய நெற்றியையும் மடப் பத்தையும்
உடையோயே. 132.சேண்வரு பெருங்குடி - நீண்டகாலமாகப்
பெருமையைப் பேணி வருகின்ற குடி. சொல் - பழிச்சொல்; சிறுமையைப்
குறிக்குஞ் சொல். 133. நும்பால் உண்டாகிய ஆர்வத்தையுடைய
நெஞ்சுடைமையானே. ஆவது - நுமக்கு ஆக்கந்தருஞ்
செயலை. 134. நுங்கட்கு இனிய உயிரை ஒத்த கேண்மையுடையேனாகிய
என் தன்மையைக் கருதியும் என்க. 135-6. மன்னிய
தொல்சீர் மரபில் திரியா நலமிகு பெருமை நின் குலமும் நோக்கி -
நிலை பெற்ற பழைதாகிய சிறப்பினையுடைய தன் முறைமையினின்றும்
பிறழாத நன்மைமிக்க பெருமையினையுடைய நினது பிறந்தை (பிறந்த குலம்) யின்
தன்மையினையும் கருதி என்க. எனவே அதற்கும் சிறு சொல் பிறவாமற் பேணும்
பொருட்டு என்றவாறு. 137. பொருந்திய சிறப்பினையுடைய
பெறுதலரிய காதலையுடைய நின் கணவன் தனக்குரிய தலைமைத் தன்மையினின்றும்
இழிந்த தன்மையையும் கருதி என்க. 139. நீ
சிலநாள் தனித்துறைதலானே நின் கற்புடைமைக்கு இழுக்குண்டாங்கொல் என்று
அஞ்ச வேண்டாத கடவுட் கற்புடையை ஆதலின் அவனைப் பிரித்தலும்
நினக்குக் குற்றமாகாமையுங் கருதுக! என்பான், ''நிலம்புடை பெயரினும்
விசும்பு வந்து இழியினும் கலங்க நின் கற்பும் நோக்கி'' என்றான்,
நின்கடவுட். கற்பு என மாறுக. 141. அருளினையாகி என்றது இச்
செயலைப் பொறுத்தருள் வாயாக என்றவாறு.
142, யான் நன்கு இன்னும் அறிந்து கொள்ளமாட்டாத அமைச்சு இயலினை
என்க. 143, ஒன்னா மன்னன் என்றது, ஆருணி
அரசனை. 144. இகல் - போர் ;
ஆகுபெயர். 145.
அவனுக்குக் கெடுவது ஒரு பொருளும் இல்லை யாகலான் என்க.
146. வலிக்கற் பாலை - திருவுளத்தே உறுதி கொள்ளற் பாலை.
வயங்கிழை ; அன்மொழி. ஆரவாரிக்கும் வீரக்கழல் அணிந்த காலையுடைய
யூகி என்க.
|
|