உரை
 
2. இலாவாண காண்டம்
 
17. தேவியைப் பிரித்தது
 
           நெறிதாழ் ஓதி நெஞ்சின் அகத்தே
           பொறிதாழ் மார்பிற் புரவலற் கியைந்த
     150    நூல்வல் லாளர் நால்வ ருள்ளும்
           யூகி முடிந்தனன் உருமண் ணுவாவொடு
           வாய்மொழி வயந்தகன் இடபகன் என்ற
           மூவரும் அல்லன் முன்னின் றிரப்போன்
           யாவன் கொல்இவன் என்றவற் கெதிர்மொழி
     155    யாவதுங் கொடாஅள் அறிவிற் சூழ
 
        {வாசவதத்தை தன்னுள்ளே ஆராய்ந்து தெளிதல்}
            148 - 155 ; நெறிதாழ்.,,,.,,அறிவிற் சூழ
 
(பொழிப்புரை) அறல்பட்டுத் தாழ்ந்த கூந்தலையுடைய வாசவதத்தை அங்ஙனம் இரக்கும் யூகியை நோக்கித் தன் நெஞ்சினுள்ளே 'நம் புரவலனுக்குப் பொருந்திய அமைச்சர் நால்வருள் வைத்து, யூகி என்பான் இறந்துபட்டான்; இவன் எஞ்சிய உருமண்ணுவாவும், வயந்தக குமரனும், இடபகனும் என்று கூறப்படும் மூவருள்ளும் ஒருவன் அல்லன், ஆயின் இவன்றான் யாவனோ?' என்று ஐயுற்று, அவனுக்கு ஏதும் எதிர்மொழி கொடாதவளாய் நின்று தன் அறிவினாலே ஆராயா நிற்ப என்க.
 
(விளக்கம்) 148. நெறி-நெறிப்பு; அறல்படுதல், ஓதி; கூந்தலையுடைய வாசவதத்தை.
    149. திருமகள் விரும்பி நெடிது வீற்றிருத்தற்குக் காரணமான மார்பினையுடைய வேந்தனாகிய உதயணகுமரனுக்கு என்க.
    150, நூல் வல்லாளர்-அமைச்சியல் நூல் கற்று வல்லவராகிய அமைச்சர் என்க. 151. முடிந்தனன் - இறந்துபட்டான்.
    153-4. மூவருள் வைத்து ஒருவன் அல்லன் என்க, அங்ஙனமாயின் முன்னின்று இரக்கும் இவன் யாவன் என்று ஐயுற்று என்க.