உரை
 
2. இலாவாண காண்டம்
 
17. தேவியைப் பிரித்தது
 
         
     160    உரைத்த கருமத் துறுதி விழுப்பமும்
           கருத்துநிறை கணாது கண்புரை தோழன்
           வலித்த கருமமும் வத்தவர் பெருமகன்
           உதயண குமரன் யூகி என்பதை
           உரையினும் உடம்பினும் வேறெனின் அல்ல
     165    துயிர்வே றில்லாச் செயிர்தீர் சிறப்பும்
           திண்ணிதின் அறிந்த செறிவினள் ஆயினும்
           பெண்ணியல் பூர்தரப் பெருங்கண் பில்கிக்
           குளிர்முற் றாளி குளிர்ப்புள் ளுறாஅ
           தொளிமுத் தாரத் துறைப்பவை அரக்கி
 
              (வாசவதத்தையின் செயல்.)
           160 - 169 ; உரைத்த,,,,,,..............அரக்கி
 
(பொழிப்புரை) அவ்மைச்சன் கூறிய செயலினால் விளையும் ஆக்கச் சிறப்பையும், அவன் தன் கண்போன்ற நண்பனாகிய உதயணன்பாற் கருத்தினை நிறுத்தும் தன்மை காணாமையானே செய்தற்குத் துணிந்த செயலையும் இவள் உதயணன் இவன் யூகி என்பது அவர் தம் உரை வேற்றுமையானும் உடல் வேற்றுமையானும் கண்டு கூறப்படுதலன்றி உயிரான் நோக்குழி இரு வேறுயிருடையராகாமல் இருவரும் ஓருயிரே உடையராகும் குற்றமற்ற சிறப்பினையுடையராதலையும், நன்கு தெரிந்துணர்ந்த திண்ணிய கருத்தினை உடையளாயிருந்தும், தன் பெண்ணியல்பு மிகுதலானே பெரிய தன் கண்ணினின்றும் வீழாநின்ற கண்ணீர்த் துளிகள் குளிர்ப்பின்றி வெவ்வியவாக முத்தாரம் போல ஒன்றன்பின் ஒன்றாகத் துளிப்பவற்றைத் தன் கையாலே துடைத்துக்கொண்டு என்க,
 
(விளக்கம்) 160. உரைத்த கருமம் என்றது யூகியாற் கூறப்பட்ட உதயணனையும் வாசவதத்தையையும் பிரியச் செய்யும் சூழ்ச்சிச் செயலினை. உறுதி விழுப்பம் - ஆக்கத்தினது சிறப்பு,
    161. கண்புரை தோழன் கருத்து நிறை காணாது என மாறுக. கண்ணை ஒத்த நண்பனாகிய உதயணனுடைய நெஞ்சின்கண் நிறையினைக் காணாமையானே என்பது கருத்து.
    162. வலித்த கருமம் -துணிந்த செயல்.
    163 - 5. இவன் உதயணகுமரன், இவன் யூகி என்று அவ்விருவர் தம் உரை வேற்றுமையானும் உடல் வேற்றுமையானும் கண்டு கூறுதல் அன்றி உயிரால் இருவர்க்கும் இரு வேறுயிர்கள் உண்டென்றற்கு அவர் தம்பால் வேற்றுமை இல்லாத குற்றமற்ற சிறப்பினையும் என்க. ஈரிடத்தும் இவன் என்னுஞ் சுட்டுச்சொல் வருவித்துக்கொள்க.
    165. உயிர் வேறென்றற்கு வேற்றுமை காண்டல் இல்லாத என்க. செயிர் - குற்றம்.
    166. திண்ணிதின்-திண்மையாக. செறிவினள் - மனத்திட்பமுடையள்.
    167. பெண்ணியல்பு - பெண்மைத்தன்மை.
    168 - 9, ஆலி - ஆலங்கட்டி; கண்ணீர்த்துளிக்கு உவம ஆகுபெயர். குளிர் முதிர்தல் காரணமாகத் திரண்ட ஆலி என்பார் குளிர்முற்று ஆலி என்றார். ஆலி தனக்கு இயல்பாகவுள்ள குளிர்ப்பு உள்ளே பொருந்தாமல் (வெப்பமுடையனவாக) முத்தாரம் போலத் துளிப்பவற்றை அரக்கி என்க. துன்பக் கண்ணீராகலின் குளிர்ப்பு உள்ளுறாது என்றார். அரக்கி-துடைத்து.