உரை
 
2. இலாவாண காண்டம்
 
17. தேவியைப் பிரித்தது
 
         
     170    அரிமான் அன்ன அஞ்சுவரு துப்பினெம்
           பெருமான் பணியன் றாயினுந் தெரிமொழி
           நூலொடு பட்ட நுனிப்பியல் வழாமைக்
           கால வகையிற் கருமம் பெரிதெனல்
           நெறியின் திரியா நீர்மையிற் காட்டி
     175    உறுகுறை அண்ணல் இவன்வேண் டுறுகுறை
           நன்றே யாயினுந் தீதே யாயினும்
           ஒன்றா வலித்தல் உறுதி யுடைத்தெனக்
           கைவரை நில்லாது கனன்றகத் தெழுதரும்
           வெய்துயிர்ப் படக்கிநீ வேண்டுயது வேண்டாக்
 
            170 - 179 ; அரிமான்.,,,.,,,அடக்கி
 
(பொழிப்புரை) இஃது எம்பெருமான் பணியன்றாயினும் ஆராய்ந்தமைத்த மொழியினையுடைய மெய்ந்நூலோடு பொருந்திய ஆராய்ச்சியின் இயல்பிற் பிறழாமல் அந்நூலின்கண், காலஞ்செவ்விதாம்பொழுது அக்காலத்தே செய்யக்கடவதாகிய கருமத்தைத் தாழாது இயற்றல் பெருமையுடைத்தாம் என்று கூறாநின்ற நெறியினின்றும் பிறழாத தன்மையோடே எடுத்துக்காட்டி அண்ணலாகிய இவன் நம்பால் வேண்டாநின்ற வேண்டுகோள்! நன்றேயாயினும், அன்றித் தீதேயாயினும், யாதாயினும் அவன் கருத்தோடே பொருத்தித் துணிதலே எமக்கு உறுதியுடைத்தாகும் என்று தன்நெஞ்சினுள்ளே கருதித் தன் வயப்படாமல் தன்னெஞ்சம் கனலுதலானே உள்ளே நின்றும் எழா நின்ற உயிர்ப்பினை வலிந்தடக்கிக் கொண்டு, என்க.
 
(விளக்கம்) 170. அரிமான் - சிங்கம். துப்பு - வலிமை. இது, சிங்கத்தை ஒத்த வலிமையுடைய எம் தலைவனாகிய உதயணனுடைய கட்டளை அன்றாயினும் என்க. நீ சின்னாள் பிரிந்திருப்பாயாக என்று என் கணவன் இட்ட கட்டளை அன்றாயினும் என்பது கருத்து.
    171. பணி - கட்டளை. தெரிமொழி - ஆராய்ந்த சொல் ;வினைத்தொகை. தெரிமொழியையுடைய நூலோடு என்க. நூல் - ஈண்டுப் பொருள் நூல் (அரசியல் நூல்) என்க. நுனிப்பியல்-நுணுகி ஆராயுந்தன்மை. நுனிப்பியல் வழாமைக் காலவகையானும் வழாமை ஆற்றா நின்ற கருமம் (ஆக்கத்தால்) பெரிது என்பது நூலிற் கூறப்படும் நீதியாகக் கொள்க. இதனை முறையே,
    'சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
     தாழ்ச்சியுள் தங்குதல் தீது'           (குரள் - 671)
என்றற் றொடக்கத்துத் திருக்குறள்களானும் உணர்க. நம்பாற் குறைவேண்டுவோனும் ஒப்பற்ற பெரியோனே என்பாள்''அண்ணல் இவன்'' என்றாள், குறையுறும் இவனும் அண்ணல் என மாறுக. ஆதலால் இவன் வேண்டுகுறை நன்றேயாதல் ஒருதலை; அங்ஙனமன்றாயினும் உடன்படலே நமது கடமை என்பாள், நன்றேயாயினும் தீதேயாயினும் ஒன்றாவலித்தல் உறுதியுடைத் தென்று துணிந்தாள் என்பது கருத்து. இங்ஙனமே அரக்கனுடைய அருஞ்சிறையிடத்தே முதன் முதலாக மாருதியைக் கண்ட சீதை அவனுடைய மொழியினாலே அவனைத்தூயன் என்று துணிந்து அவனோடு உரையாடத் தொடங்கினாள் எனக் கம்பநாடர் கூறுவதனையும் ஈண்டு எண்ணுக.
     'என்றவன் இறைஞ்ச நோக்கி இரக்கமும் முனிவும் எய்தி
      நின்றவன் நிருதன் அல்லன் நெறிநின்று பொறிகள் ஐந்தும்
      வென்றவன் அல்ல னாகின் விண்ணவன் ஆக வேண்டும்
      நன்றுணர் உரையன் தூயன் நவையிலன் போலும் என்னா'
                       (சுந்தர-உருக்காட்டு, 26)
    'அரக்கனே ஆக வேறோர் அமரனே ஆக அன்றிக்
     குரக்கினத் தலைவ னேதான் ஆகுக கொடுமை ஆக
     இரக்கமே ஆக வந்திங் கெம்பிரான் நாமஞ் சொல்லி
     உருக்கினன் உணர்வைத் தந்தான் உயிர்இதின் உதவியுண்டோ'
                      (சுந்தர-உருக்காட்டு, 27)
    'வினவுதற் குரியன் என்னா வீரநீ யாவன்? என்றாள்,' 
                      (சுந்தர-உருக்காட்டு, 28)
என வரும்.
    177. ஒன்றா வலித்தல் - ஒன்றித்துணிதல்.
    178, கைவரை நில்லாது - தன்வயத்தே நில்லாமல்.
    179. வெய்துயிர்ப்பு - வெப்பமுடையதாகிய பெருமூச்சு,