உரை
 
2. இலாவாண காண்டம்
 
17. தேவியைப் பிரித்தது
 
           வெய்துயிர்ப் படக்கிநீ வேண்டுயது வேண்டாக்
     180    குறிப்பெமக் குடைமை கூறலும் உண்டோ
           மறத்தகை மார்வன் மாய யானையிற்
           சிறைப்படு பொழுதிற் சென்றவற் பெயர்க்க
           மாய விறுதி வல்லை யாகிய
           நீதி யாளநீ வேண்டுவ வேண்டென
     185    முகிழ்நகைக் கிளவி முகமன் கூறி   
           அண்ணல் அரசற் காகுபொருள் வேண்டும்
           ஒண்ணுதன் மாதர் ஒருப்பா டெய்தி
           அரிதின் வந்த பெருவிருந் தாளரைச்
           சிறப்புப் பலியறாச் செல்வனிற் பேணும்
     190    பெறற்கரும் பெரும்பண் பெய்திய தெனக்கென
 
        {வாசவதத்தை யூகிக்கு முகமன் மொழிதல்}
          179 - 190 ; நீ வேண்டியது,......எனக்கென
 
(பொழிப்புரை) பின்னர் அவ்வியூகியை விளித்து 'நீதியாளனே! நீ விரும்பியதொன்றனை யாங்களும் விரும்பும் கருத்துடையே மாதல் அன்றி அதனை விரும்பாததொரு குறிப்பும் எம்முடைமை யாகக் கூறுதலும் உளதாமோ? ஆகாதன்றே! எனவே, மார்பன் மாய யானை காரணமாகச் சிறைப்பட்ட பொழுது அந்நகரத்தே சென்று பொய்ச் சாக்காட்டினால் அவனை மீட்கும் வலிமையுடையையாகிய நீ, வேண்டா நின்றன அனைத்தும் எம்முடைய வேண்டுகோளே ஆவன' என்று புன்சிரிப்புத் தோன்றுதற்குக் காரணமான மொழிகளாலே முகமன் கூறித் தன் தலைவனுக்கு ஆக்கத்தையே விரும்பாநின்ற அவ்வாசவதத்தை யூகியின் கருத்திற்கிணங்கிப் பின்னரும் 'அரிதாக எம்பால்எய்திய பெரியதொரு விருந்தினரை இறைவனைப் போற்றுமாறு போற்றுதல் ஆகிய பெறலரிய பெரும்பண்பு இப்பொழுது எனக்கு வந்து எய்தியது' என்று அசதியாடன் மொழிகளைக் கேட்போர்க்கு நயத்தல் வரும் படியாக இனிதே கூறி என்க.
 
(விளக்கம்) 179. நீ வேண்டியதனைத்தும் யாங்கள் ஆராயாமலே வேண்டுமியல்புடையேம், ஆகலின் நீ எம்பால் வேண்டுவது மிகையாயிற்று, நீ அங்ஙனம் வேண்டாநின்ற செயலே, நீ வேண்டியதனை ஒரோவழி யாங்கள் வேண்டாத குறிப்பும் உடையேம் ஆதலை வெளிப் படுத்தாநின்றது. அங்ஙனம் நீ கூறுதலும் உண்டோ என்று வினவினள் என்பது கருத்து,
    180. குறிப்பு - கொள்கை, எமக்கு என்றது உதயணனையும் உளப்படுத்தியபடியாம்.
    181, மறத்தகைமார்வன் - வீரத்தகுதியுடைய மார்பையுடைய உதயணன். பொய் யானை காரணமாகச் சிறை புக்க காலத்தே என்க. அவற் பெயர்க்க - அவனை மீட்கும் பொருட்டு.
    183. பொய்ச்சாவினை வெளிப்படுத்தி அவ்வுபாயத்தானே அச்செயலில் வல்லையாகிய நீ என்க,
  சாவினைக் காட்டி வல்லையாகினை முன்னர் ; இப்பொழுதும் எம் சாவினை எம்மிறைவற்குக் காட்டி அதன் வாயிலாய் எமக்கு ஆக்கம் அளிக்கவும் வல்லையாகுதல் ஒருதலை என்று பாராட்டியபடியாம்.
    184. வேண்டுவ-விரும்புவன. வேண்டு எம்முடைய விருப்பமும் ஆகும். வேண்டு -விருப்பம்,
    185. சதுரப்பாடுடைய இம்மொழியைக் கேட்க நேர்ந்த யூகிக்கும் சாங்கியத்தாய்க்கும் (இதனை ஓதாநின்ற எம்மனோர்க்கும்) நகை முகிழ்த்தலானே, முகிழ்நகைக் கிளவி என்றார்.
    நகை முகிழ்த்தற்குக் காரணமான சொல் என்க.
    186. அண்ணலரசன் ; இருபெயரொட்டு, ஆகுபொருள்; ஆக்கம்; உறுதிப் பொருள்.
    187, ஒள்ளிய நுதலையுடைய வாசவதத்தை என்க. ஒருப்பாடு - உடம்பாடு. இறந்துபட்டோர் என்றும் இவ்வுலகில் மீண்டு வருதல் இல்லை யாகலின் முன்னர் இறந்துபட்ட நீ என்பாள் அரிதின்வந்த பெருவிருந்தாளரை என்றாள், பெருவிருந்தாளர் ; முன்னிலைப் புறமொழி.
    189. சிறப்புப் பலியறாச் செல்வன் - அருகக் கடவுள், அருகக்கடவுளைப் போற்றுமாறு போற்றத் தகுந்த சிறந்த விருந்தினர் என்றவாறு. எனவே நீ எமக்குக் கடவுளையேஒக்கின்றனை என்று பாராட்டிய படியாதல் உணர்க.
           'இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
           வேளாண்மை செய்தற் பொருட்டு'   (குறள் - 81)    
என்பவாகலான் அவ்விருந்தாளர் தாமும் இறைவனை ஒத்த சிறப்புடையர் ஆயவழி அவரை ஓம்புதல் பெறற்கரும்பண்பு ஆமன்றோ அத்தகைய தொரு பேற்றினை இப்பொழுது யான் எய்தினேன் என்று பாராட்டியபடியாம்,
           'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
           பண்பும் பயனும் அது'            (குறள் -84)    
என்பவாகலின், விருந்தோம்பல் அறத்தைப் பெறலரும் பெரும்பண்பு என்றாள் என்க. 191. அசதிக்கிளவி -பரிகாசச்சொல். நயவர-கேட்போர்க்கு நயத்தல் வருமாறு. மிழற்றி - மொழிந்து,