உரை
 
2. இலாவாண காண்டம்
 
18. கோயில் வேவு
 
           இடுக்கண் தருதற் கேது வாகி
           இடக்கண் ஆடலுந் தொடித்தோள் துளங்கலும்
           ஆருயிர்க் கிழத்தி அகன்றனள் இவணிலள்
     35    நீர்மலர்ப் படலை நெடுந்தகை யாள
           காணா யாகி ஆனா இரக்கமொ
           டிழுக்கில் தோழரொ டியங்குவை இனியென
           ஒழுக்கும் புட்குரல் உட்படக் கூறிய
           நிமித்தழஞ் சகுனமு நயக்குணம் இன்மையும்
     40    நினைத்தனன் வரூஉ நேரத்து 
 
        32 - 40 :  இடுக்கண்...,...,,.,.நேரத்து
 
(பொழிப்புரை) அவ்வுதயண குமரன் தனக்குத் துன்பந்தருதற்குக் காரணமாகத் தன் இடக்கண்ணும் தோளும் துடித்தலையும், மேலும் ?நெடுந்தகையாள ! நின் உயிர்க்கிழத்தி நின்னினின்றும் பிரிந்து போயினள் ஆதலான் இனி அவளை நீ அரண்மனையகத்தே காணப் பெறாயாய், இரக்கத்தோட .நினது குற்றமற்ற தோழரோடு இயங்கா நிற்பை? என்று கூறாநின்ற பறவைக் குரலுட்பட உண்டான நிமித்தங்களும் சகுனங்களும் நயக் குணமில்லாமையையும் நெடிது நினைத்து நினைத்து வருந்தி வாராநின்ற பொழுது என்க,
 
(விளக்கம்) 32. இடுக்கண் - துன்பம். ஏது - காரணம்.
     33 இடக்கண் துடித்தலும் இடத்தோள் துடித்தலும்  ஆடவர்க்குத் தீ நிமித்தமாம் என்ப.  தொடி - தோள்வலயம். துளங்கலும் - துடித்தலும்.
     34. அரிய உயிர்போன்ற மனைக்கிழத்தி - (தலைவி).   இவண் இவ் வரண்மனையின்கண்,
     35. நீர்ப்பூவாற்றொடுத்த படலைமாலை. இதனை,
      ''தாமரைக் கொழுமுறித் தாதுபடு செழுமலர்க்
      காமரு குவளைக் கழுநீர் மாமலர்ப்
      பைந்தளிர்ப் படலை''
எனவரும் சிலப்பதிகாரத்தானும் உணர்க.  (4 ; 29. 41.)நெடுந்தகையாள ; விளி.
     36. காணாய் ஆகி-காணமாட்டாயாகி, ஆனா இரக்கம் - அமையாத துன்பம்.
     37, இழுக்கு - குற்றம்.
     38. ஒழுகும் எனற்பாலது ஒழுக்கும் என எதுகை   நோக்கி வலித்தல் விகாரம் பெற்றது. ஒழுகும் - இயங்கா   நின்ற. புட்.குரல் முதவியன. நிமித்தம் - சகுனம், செல்லுங்கால்   எதிர்ப்படும் பறவை விலங்கு முதலியவற்றாற் றோன்றுவன.   நினைத்தனன் ; முற்றெச்சம்.