உரை
 
2. இலாவாண காண்டம்
 
18. கோயில் வேவு
 
         
          கண்டா னாகித் திண்தேர் உதயணன்
     55   வண்டார் கோதை வாசவ தத்தை
          இருந்த இடமும் பரந்தெரி தோன்றஅவட்,
          கேதுகொல் உற்றதென் றெஞ்சிய நெஞ்சின்
          ஊறவண் உண்மை தேறின னாகிச்
          செல்லா நின்ற காலை
 
          54 - 59; கண்டானாகி..........காலை
 
(பொழிப்புரை) அவ்வுதயணகுமரன் அப்புகைப் படலத்தைக் கண்டதோடன்றி மேலும் வாசவதத்தை இருந்த மாடத்தின் மீதும் தீப்பரவித் தோன்றா நிற்பவும் கண்டு அவளுக்கு யாதுற்றதோ? என்று பெரிதும் கலங்காநிற்ப எஞ்சிய சிறு கூற்றையுடைய நெஞ்சாலே அவளிருந்த மாடத்தினும் இடையூறு உண்டாதலைத் தெளிந்து செல்லாநின்ற பொழுது என்க,
 
(விளக்கம்) 54. திண்ணிய தேரினையுடைய உதயணன் என்க.
     55. வண்டுகள் முரலாநின்ற மலர் மாலையினையுடைய
  வாசவதத்தை என்க.
     56, எரி பரந்துதோன்ற எனமாறுக. எரி - நெருப்பு.
     57.அவட்கு - அவ்வாசவதத்தைக்கு. உற்றதென்று கலங்கி
  அக்கலக்கத்தினின்றும் எஞ்சிய (கூறாகிய) நெஞ்சினாலே - நெஞ்சினைக் கலக்கமே பெரிதும  கவர்ந்துகொள்ள எஞ்சிய சிறு கூறாகிய நெஞ்சினாலே   தெளிந்து என்பது கருத்து,