உரை
 
2. இலாவாண காண்டம்
 
18. கோயில் வேவு
 
         
          எச்சார் மருங்கினும் எரிபுரை தாமரை
     65   கண்ணுற மலர்ந்த தெண்ணீர்ப் பொய்கையுள்
          நீப்பருஞ் சேவலை நிலைவயிற் காணாது
          பூக்கண் போழும் புள்ளிற் புலம்பி
          எரிதவழ் கோயில் எவ்வழி மருங்கினும்
          திரிதரல் ஓவாள் தீய்ந்துநிற மழுங்கிக்
     70   கட்டழற் கதிய நெட்டிருங் கூந்தல்
          புதையெரி பற்றப் புன்சொற் கேட்ட
          பரியோர் போலக் கருகி வாடிய
          தகையழி தாமமொடு தாழ்வன பரப்பித்
          தோழியைக் காணாள் சூழ்வளிச் சுழற்சியள்
     75   செவ்விய தன்கையின் அவ்வயி றதுக்கர் நிற்ப
 
        (காஞ்சன மாலையின் கலக்கம்)
        64 - 75 ; எச்சார்.........அதுக்கா
 
(பொழிப்புரை) காஞ்சனமாலை தாமரைப் பொய்கையின்கண் தன் சேவலைக் காணாமல் எல்லாப் பக்கங்களினும் அந்தாமரை மலர்களை ஊடறுத்துச் சென்று தேடாநின்ற பெடையன்னம் போன்று வருந்தித் தீத்தவழா நின்ற அவ்வரண்மனையகத்து எல்லாப் பக்கங்களினும் அத் தீப்பிழம்பினை ஊடறுத்துதுச் சென்று தேடித்திரிதல் ஒழியாளாய்த் தீயானே உடல் தீய்ந்து நிறங்கெட மழுங்கி அத்தீப்பற்றுதலானே தன்னெடிய கரியகூந்தலைப் புன்சொற் கேட்ட பெரியோர் உள்ளம்போலக் கருகுதலானே? வாடிப்போன அழகழிந்த மாலைகளோடு தாழும்படி விரித்துத் தன் தோழியாகிய வாசவதத்தையைக் காணப் பெறாதளாய்ச் சூறைக் காற்றுப்போலச் சுழலும் சுழற்சியையுடையளாய்த் தன் கையாலே தனது அழகிய வயிற்றைப் பிசைந்துகொண்டு என்க.
 
(விளக்கம்) 64 எச்சார் மருங்கினும் - எல்லாப் பக்கங்களினும். எரிபுரை தாமரை - தீப்பிழம்பை ஒத்த தாமரை மலர்.
     65.  கண்ணுற மலர்ந்த - இடமெல்லாம் நெருங்கும்படி   மலர்ந்த என்க பொய்கை - நீர்நிலை.
     66.  நீப்பருஞ்சேவல் - பிரிதலில்லாத தன் சேவலாகிய அன்னம் நிலைவயின் - இருப்பிடத்தில்.
     67,  பூக்களை ஊடறுத்துச் சென்று தேடாநின்ற என்க.   புள ்- ஈண்டுப் பெடையன்னம்,புலம்பி - வருந்தி
     68 கோயில் - அரண்மனை.
     69.  திரிதரல் - திரிதலை, ஓவா - ஒழியாத.
     70. கட்டழல் - மிக்க நெருப்பு. கதிய - கதுவிய, நெட்டிருங்கூந்தல் - நீண்ட கரிய கூந்தல். புன்சொல் - தீச்சொல். பெரியோர்   உள்ளம்போல என்க.
     71.  தகை-அழகு, தாமம்-மாலை,  (70) கூந்தல் (73) தாமமொடு தாழ்வனவாகப் பரப்பி என்க
     74. தோழி ; வாசவதத்தை, குழ்வளிச் சுழற்சியள் - சுற்றாநின்ற சூறைக் காற்றினதுசுழற்சியைப் போன்று சுழலும் சுழற்சியை    உடையவளாய் என்க.
     75. அவ்வயிறு - அழகிய வயிறு, அதுக்கா - அதுக்கி; பிசைந்து என்றவாறு. இதன்கண், நெருப்புக்குத் தாமரைமலரும் வாசவதத்தைக்குச் சேவலும், காஞ்சன மாலைக்குப் பெடையன்னமும  பொய்கை, அரண்மனைக்கும் கருகி வாடிய மாலைக்குப் பெரியோர்   உள்ளமும் உவமைககள் என்க.