உரை
 
2. இலாவாண காண்டம்
 
18. கோயில் வேவு
 
         
          நாவலந் தண்பொழில் நண்ணார் ஓட்டிய
          காவலன் மகளே கனங்குழை மடவோய்
          மண்விளக் காகி வரத்தின் வந்தோய்
          பெண்விளக் காகிய பெறலரும் பேதாய்
     80   பொன்னே திருவே அன்னே அரிவாய்
          நங்காய் நல்லாய் கொங்கார் கோதாய்
          வீணைக் கிழத்தீ வித்தக உருவீ
          தேனேர் கிளவீ சிறுமுதுக் குறைவீ
          உதயண குமரன் உயிர்த்துணைத் தேவீ
     85   புதையழல் அகவயின் புக்கனை யோவெனக்
          கானத் தீயிடைக் கணமயில் போலத்
          தானத் தீயிடைத் தானுழன் றேங்கிக்
          காணல் செல்லாள் காஞ்சனை புலம்பிப்
          பூசல் கொண்டு புறங்கடைப் புரளும
 
          76 - 89; நாவலந்தண்பொழில்........புரளும்
 
(பொழிப்புரை) காவலன் மகனே!மடவோய்!விளக்காகி வந்தோய்! விளக்காகிய பேதாய்!, பொன்னே! திருவே! அன்னே! அரிவாய்! நங்காய்! நல்லாய்! கோதாய்! வீணைக் கிழத்தீ! கிளவீ! முதுக்குறைவீ! தேவீ! தீயினுள்ளே புகுந்து மாண்டாயோ? என வாய்திறந்தரற்றிக் காட்டுத்தீயிடைப்பட்ட மயில்போல அத்தீயினுள்ளே கிடந்துழன்று, ஏங்கி வாசவதத்தையைக் காணப் பெறாதவளாய் அழுது அரற்தி முற்றத்திலே விழுந்து புரளா நின்றனள் என்க.
 
(விளக்கம்) 76-85. நாவலந் தீவினுள் தனக்குப் பகைவர் இல்லாதபடி துரத்திய பிரச்சோதன மன்னனின் மகளே! கனவிய குழையையும் மடப்பத்தையும் உடையோய்! உலகத்திற்கொரு விளக்காகி இவ்வுலகம் பெற்ற வரத்தினாலே பிறந்தோய்! மகளிர்க்கு விளக்குப் போன்றோய்! பொன்போன்ற நற்குணமுடையோய்! இலக்குமி போன்ற அழகுடையோய்!
     எவ்வுயிர்க்கும் தாய்போன்ற அன்புடையோயே! அரிவையே!மகளிருள் தலைசிறந்தவளே! நல்லொழுக்கமுடையோயே! மணம் பொருந்திய மாலையணிந்தவளே! வீணை வித்தையில்   மிக்க உரிமையுடையோயே! சித்திரம்.போன்ற உருவமுடையோயே! தேன்போன்றமொழி பேசுமியல்புடைப்யோய்! இளமைப்   பருவத்திலேயே பேரறிவுபடைத்தவளே! உதயணவேந்தனுக்கு   உயிர்போன்ற வாழ்க்கைத்துணைவியாகிய கோப்பெருந் தேவியே! என விரித்தோதுக.
     85. புக்கனையோ! புகுந்து மாண்டனையோ!
     86. கானத்தீ - காட்டுத்தீ. கணமயில் - கூட்டமாக வாழுமியல்புடைய மயில்.
     88. காணல் செல்லாள்;ஒருசொல்; காணாதவளாய் என்க.
     89. புறங்கடை - முன்றில். புரளும் - புரளாநின்றனள்.