உரை
 
2. இலாவாண காண்டம்
 
18. கோயில் வேவு
 
         
     90    ஆகுலத் திடையே அண்ணலுங் கதுமென
           வாயில் புகுந்து வளங்கெழு கோயில்
           தீயுண விளியுந் தேமொழிச் செவ்வாய்க்
           காஞ்சன மாலை கலக்கமுங் காணாப்
           பூங்குழை மாதர் பொச்சாப் புணர்ந்து
     95    கருவி யமைத்த காலிற் செலவிற்
           புரவியின் வழுக்கிப் பொறியறு பாவையின்
           முடிமிசை அணிந்த முத்தொடு பன்மணி
           விடுசுடர் விசும்பின் மீனெனச் சிதறச்
           சாந்துபுலர் ஆகத்துத் தேந்தார் திவளப்
     100    புரிமுத் தாரமும் பூணும் புரள
           எரிமணிக் கடகமுங் குழையும் இலங்க
           வாய்மொழி வழுக்கி வரையின் விழுந்தே
           தேமொழிக் கிளவியின் திறல்வே றாகி
           இருநில மருங்கிற் பெருநலந் தொலையச்
     105    சோரு மன்னணை ஆர்வத் தோழர்
           அடைந்தனர் தழீஇ
 
        (உதயணன் நினைவிழத்தல்)
     90 - 106; ஆகுலத்திடையே..........தழீஇ
 
(பொழிப்புரை) (பொழிப்புரை) இவ் வாரவாரத்தினிடையே அண்ணலும், வாயிலின்கண விரைந்து புகுந்து ஆண்டுத் தீயினூடே புரண்டு பூசலிடும் காஞ்சன மாலையின் துயரத்தையும் கண்டு வாசவதத்தையின் சோர்வின் காரணத்தையும் ஊகித்துணர்ந்த, அளவிலே, கருவிகள் அமைக்கப்பட்ட விரைந்த செலவினை யுடைய குதிரையினின்றும் வழுக்கிப் பொறியற்ற இயந்திரப்பாவைபோலத் தன் முடிமீது அணியப்பட்ட முத்தும் மணியும் விண்மீன் உதிருமாறு போல . உதிராநிற்பவும், மார்பிடத்தே மாலைகள் திவளா நிற்பவும், ஆரமும் அணிகலனும் புரளாநிற்பவும், மணிக் கடகமும் குழையும் பிறழ்ந்து விளங்கா நிற்பவம், மொழிகுழறி மலை வீழுமாறுபோல பெரிய நிலத்தின்மேற் சாய்ந். தனனாக, வாசவதத்தையின் பொருட்டு. இவ்வாறு தனது பெரிய நலமெல்லாம் அழியும்படி சோராநின்ற அவ் வுதயணகுமரனுடைய அன்புடைய தோழர் விரைந்தெய்தி அவனைத் தழுவிக்கொண்டு என்க,
 
(விளக்கம்)  90.ஆகுலம் - ஆரவாரம்; பூசல்.அண்ணலும்   என்புழி உன்மை இறந்து தழீஇயது.காஞ்சன மாலையே அன்றி அண்ணலும் என இயையும், கதும்; விரைவுக் குறிப்பு.
     91. வளம்பொருந்திய அரண்மனையின்கண் என்க.
     92 - 93, விளிவும் - பூசலிடாநின்ற. இனியமொழியினையும்  சிவந்த வாயினையும் உடைய காஞ்சனமாலை என்க, காணா - கண்டு.
     94, பூவேலையமைந்த குழையையுடைய அழகியாகிய வாசவதத்தை என்க. பொச்சாப்பு - தற்காத்தலின்கண் உற்ற  சோர்வு. எனவே வாசவதத்தை தற்காத்தலிற் சோர்வெய்தி   இறந்துபட்டாள் என ஊகித்துணர்ந்து என்பது கருத்து.
     95. கருவி-அங்குசம் வாள் குந்தம் அனை கடிவாளம்   முதலியன. காலியற் செலவின் - காற்றை ஒத்த செலவினையுடைய.
     96. பொறியறு பாவையின் - விசையற்ற இயந்திரப் பாவை   வீழ்வது போல.
     98. விடுசுடர் மீன், விசும்பின் மீன் எனத் தனித்தனி கூட்டுக.
     99. சந்தனம் பூசிப் புலர்ந்த மார்பின்கண் அணியப்பட்டதேன் துளிக்கும் மலர்மாலை திவள என்க. திவள்தல் - துவள்தல்.
     100. புரி - நூல். ஆரம் - வடம், பூண் - அணிகலன்.
     1o1. ஒளிருகின்ற மணிகளிழைத்த கடகம். கடகம் - ஒரு   தோளணிகலன். குழை - செவியணிகலன், இலங்க - விளங்க.
     102, மொழி வழுக்கி-மொழிகுழறி, வரையின் - மலை வீழ  வது போல.
     103. தேமொழிக் கிளவியின் ; (பன்மொழித் தொகை,) வாசவ  தத்தையின் பொருட்டென்க. திறல் - ஆற்றல்.
     104. பெருநலம்-அறிவுஅழகுமுதலியன,
     105. சோரும்-நினைவிழக்கும், மன்னனை ; அவ்வுதயணனை.   ஆர்வத் தோழர்- ஆர்வமுடைய நண்பர்.
     106. அடைந்தனர் ; முற்றெச்சம், தழீஇ - தழுவி.