உரை
 
2. இலாவாண காண்டம்
 
18. கோயில் வேவு
 
           அடைந்தனர் தழீஇ அவலந் தீர்க்கும்
           கடுங்கூட் டமைத்துக் கைவயிற் கொண்ட
           போகக் கலவை ஆகத் தப்பிச்
           சந்தனங் கலந்த அந்தண்  நறுநீர்த்
     110    தண்தளி சிதறி வண்டினம் இரியக்
           குளிரிமுதற் கலவையிற் கொடுபெறக் குலாஅய்
           ..........................................................யொண்மணி தட்டப்
           பவழப் பிடிகை பக்கங் கோத்த
           திகழ்பொன் அலகின் செஞ்சாந் தாற்றியிற்
     115    பன்முறை வீசத் தொன்முறை வந்த
           பிறப்பிடைக் கேண்மைப் பெருமனைக் கிழத்தியை
           மறப்படை மன்னன் வாய்சோர்ந் தரற்றாச்
           சேற்றெழு தாமரை மலரிற் செங்கண்
           எற்றெழுந் தனனால் இனியவ ரிடையென்
 
        (தோழர் உதவிச் செயலான் உதயணன் நினைவு மீளப்பெறுதல்)
             106 - 119 ; அவலம்.......இனியவரிடையென்
 
(பொழிப்புரை) நினைவிழப்பினை விரைந்தகற்றி உணர்ச்சிதரும் கடிய மருந்தினைக்கூட்டி இயற்றி அக்கூட்டு மருந்தினை உதயணன் மார்பின்கட் பூசிச் சந்தனங் கலந்த அழகிய பனிநீரைத் தெளித்துக் குளிரி முதலியவற்றை ஒழுங்குற வளைத்து................ஒள்ளிய மணிகளிழைக்கப்பட்ட தட்டத்தினையும் பவழக் கைப்பிடியினையும், பக்கங்களிலே கோக்கப்பட்ட பொன்னலகினையும், உடைய சாந்தாற்றியினாலே பலகாலும் விசாநிற்றலான் அம்மன்னவன் நினைவு மீளப்பெற்றவனாய் ''வாசவதத்தாய்! வாசவத்தாய்!''என வாய்விட்டு அரற்றி மலராநின்ற தாமரை மலர்போன்று தன் செங்கண் மலராநிற்ப அத்தோழரிடையே எழுந்தனன் என்க.
 
(விளக்கம்) அவலம் - நினைவிழப்பு;அவலம் கவலை கையாறு அழுங்கல் என்னும் துன்பத்தின் நால்வகை நிலையுள் ஈண்டு அவலம்   என்றது மூன்றா நிலையாகிய கையாற்றினை என்க, அதனைத் தீர்த்தலாவது  மீண்டும் உணர்ச்சிவரச் செய்தல். கடுங்கூட்டு - கடிதிற்றீர்க்கும் மருந்துக்   கூட்.டு. கையிலே கொண்ட அப்போகக் கலவையை என்க. (108) போகக்   கலவை - நுகர்ச்சிக்குக் காரணமான உணர்ச்சியை ஊட்டும் அக்   கூட்டுமருந்து. ஆகம்-மார்பு. அப்பி - பூசி.
     109, சந்தனங் கலந்த அழகிய குளிர்ந்த பனிநீர் என்க.
     110. தண்தளி - குளிர்ந்த துளி. வண்டின மிரிய (115) வீச   என இயைக்க.
     111. குளிரி - ஒரு நீர்ப்பூடு; அதனை இக்காலத்தார்  துளிரி எனவழங்குப, செங்கழு நீருமாம். கொடி - ஒழுங்கு.
     112. விசிறியின் பக்கங்கள் தட்டுப் போறலின் - தட்டம் எனப்பட்டன.
     113, பிடிகை - கைப்பிடி,
     114. பொன்னலகு - பொன்னாற் செய்த கதிர் (குஞ்சம்,   சாந்தாற்றி - ஒருவகை விசிறி;பூசிய சந்தனம் புலர்வதன் பொருட்டு  வீசப்படுவதொரு விசிறி என்க.
     115-17. தொன்முறை.......அரற்றா - பண்டும் பண்டும் முறையே   பிறவிகள் தோறும் தொடர்ந்து அடிப்பட்டு வந்த காதற்   கேண்மையையுடைய தன்மனைக் கிழத்தியினது பெயரை வாய்விட்டுச்  சொல்லிப் புலம்பியபடியே என்க.
     117. மறப்படை மன்னன்- வீரமிக்க படையையுடைய   உதயண மன்னன். அரற்றா - அரற்றி,
     118-119. இனியவரிடை செங்கண் ஏற்று எழுந்தனன் என மாறுக. இனியவர் - தோழர். தாமரை மலர் மலர்வது போலக் கண் மலர்ந்து எழுந்தனன் என்க.

                      18, கோயில் வேவு முற்றிற்று,