உரை
 
2. இலாவாண காண்டம்
 
19. தேவிக்கு விலாவித்தது
 
          காலங் கலக்கக் கலக்கமொ டுராஅய்
          ஞால முழுது நவைக்குற் றெழினும்
    30    ஊர்திரை யுடைய ஒலிகெழு முந்நீர்
          ஆழி இறத்தல் செல்லா தாங்குத்
          தோழரை இகவாத் தொடுகழற் குருசில்
          சூழ்வளை முன்கைச் சுடர்க்குழை மாதர்
          மழைக்கால் அன்ன மணியிருங் கூந்தல்
    35    அழற்புகை சூழ அஞ்சுவனள் நடுங்கி
          மணிக்கை நெடுவரை மாமலைச் சாரற்
          புனத்தீப் புதைப்பப் போக்கிடங் காணா
          தளைச்செறி மஞ்ஞையின் அஞ்சுவனள் விம்மி
          இன்னுயிர் அன்ன என்வயின் நினைஇத்
    40    தன்னுயிர் வைத்த மின்னுறழ் சாயல்
          உடப்புச் சட்டகம் உண்டெனிற் காண்கம்
          கடுப்பழல் அவித்துக் காட்டுமின் விரைந்தென
 
        28-42 ; காலம்........விரைந்தென
 
(பொழிப்புரை) காலம் தன்னைப பெரிதும் கலக்கிய விடத்தும் அலையெறியா நின்ற கடல்நீர் தன் எல்லையைக் கடவாதே அடங்குதல் போன்று தன்னைத் துயரம் கலக்கிய விடத்தும் நண்பர் கூற்றினைக் கடத்தல் இல்லாத அக் குருசில் அச் செயல் தவிர்ந்து நீலநிறமுடைய தன் கூந்தலின்கண் தீ பற்றா நின்ற பொழுது காட்டுத் தீ வளைத்துக் கோடலானே உய்ந்து போமிடங் காணப் பெறாமல் கூட்டின்கண் அடங்கி மாண்ட மயில் போன்று அஞ்சி நடுங்கி என்னை நினைந்து விம்மித் தன் உயிரை விட்டவளாகிய அம்மெல்லியல் நல்லாளுடைய உடம்புச் சட்டகமேனும் உளதாயின யாம் காண்பேம்; விரைந்து இத் தீயினை அவித்து அதனைக் கண்டு எமக்குக் காட்டுங்கோள் என்று கூறா நிற்ப என்க
 
(விளக்கம்)   28, காலம் ; ஈண்டு ஆகுபெயரான் சூறைக் காற்றைக் குறித்து நின்றது. உராய்-உலாவி. நவைக்குற்று0-துன்பத்திற்கு ஆளாகி.
    30. இயங்கா நின்ற அலைகளையுடைய ஆரவாரம் பொருந்திய முந்நீர் என்க. முந்நீர்-கடல் ; ஆற்றுநீர்  மழைநீர் ஊற்றுநீர் என மூன்றுவகை நீரையுமுடையது என்பது பொருள், உலகினை ஆக்கலும் அளித்தலும்    அழித்தலுமாகிய மூன்று நீர்மையையும் உடையதாகலின் முந்நீராயிற்று எனினுமாம்.
    31; ஆழி-கடல். கடல்நீர் அக் கடலை இறத்தல் செல்லா தானாற் போன்று என்க.    காலம் (காற்று) துன்பத்திற்கும் கடல்நீர் உதயணனுக்கும் கடலிடம தோழர்க்கும் உவமைகள்.
    32, தோழர் கூற்றைக் கடவாத கட்,டிய வீரக் கழலையுடைய உதயண குமரன் என்க.
    33, சூழாநின்ற வளையலணிந்த முன்கையினையும் ஒளிரு  கின்ற  குழையினையும் உடைய வாசவதத்தையை என்க.
    34. மழைக்கால் போன்றதும் நீலமணி போன்ற நிறமுடையது மாகிய கரிய கூந்தலை என்க.
    35. .அழலும் புகையும் சூழா நிற்ப என்க, அஞ்சுவனள் ; முற்றெச்சம்.
    36. மணிகளையுடைய பக்கங்களையும், நெடிய மூங்கிலையும்   உடைய பெரிய மலைச்சாரலின்கண் என்க .
    37. புனத்தீ- காட்டுத்தீ. புகைப்ப-வளைத்துக் கொள்ள.
    38, அளை-வளை; ஈண்டுக் கூட்டினைக் குறித்து நின்றது.   மஞ்ஞை-மயில்.
    39. அவட்கு இனிய உயிர் போன்ற என்னை நினைத்து என்க.
    40. உயிர் வைத்த-உயிர் விட்ட. மின்னலை ஒத்த சாயலையுடையாளது என்க. 
    41 உடம்பு சட்டம் - உடம்பின் உருவம். உளதாதலும் ஐயமே என்பான் உண்டெனில் என்றான். காண்கம்-காண்பேம்.
    41. கடுப்பழல்- விரைந்துபற்றும் நெருப்பு.