உரை
 
2. இலாவாண காண்டம்
 
19. தேவிக்கு விலாவித்தது
 
          கரிப்பிணங் காணார் காவலர் என்னும்
          மொழிப்பல காட்டவும் ஒழியான் அழிய
    45    முன்னையர் ஆதலின் முதற்பெருந் தேவி
          இன்னுயிர் இகப்ப விடாஅர் இவரென
          மன்ன குமரன் மதித்தனன் ஆயின்
          என்ணிய சூழ்ச்சிக் கிடையூ றாமெனத்
          தவலரும் பெரும்பொருள் நிலைமையின் எண்ணி
    50    உலைவில் பெரும்புகழ் உருமண் ணுவாவிரைந்
          தாய்புகழ் அண்ணல் மேயது விரும்பி
 
        43 - 59 . கரிப்பிணம்...........விரும்பி
 
(பொழிப்புரை) அது கேட்ட தோழர் அரசர் கரிந்த பிணத்தைக் காண்டல் வழக்கன்று என்னும வழக்கினையும் இன்னோரன்ன பிறமொழிகனையும் எடுத்துக் காட்டவும் தவிரானாய் நெஞ்சழியா நிற்ப, உருமண்னுவா என்னும் பெரிய புகழையுடைய அமைச்சன் இவ்வுதயண குமரன் நம் நண்பர் இந் நிகழ் தற்கு முன்பே இவ்விடத்திருந்தனராதலின் இவர் நங் கோப்பெருந்தேவி உயி ரிழக்கும்படி விட்டிரார்'' ஆகலின் அவள் உயிரோடிருத்தல் ஒருதலை என்று தனக்குள் கருதுவானாயின் அக்கருத்து நம் சூழ்ச்சியாற் செய்த செயலுக்கோர் இடையூறாகும் என்று எண்ணி அங்ஙனமாகாமல் இவனுக்கு மற்றோர் சூழ்ச்சியாலே வாசவதத்தையின் உடலைக் காட்டிவைத்தலே நன்றென்று துணிந்து உதயணன் விரும்பி யதனையே தானும் விரும்பி (விரும்புவான்போல்) விரைந்து அவ் வுதயணனுடன் நீண்ட அவ்வரண்மனைப் பகுதியைக் கடந்து ஞாயிலின் வழியாகச்சென்று அவ்வரண்மனை அகத்தேயுள்ள அழகு நன்மை நிரம்பிய பெரிய பள்ளியறையினது உள்ளே புகுந்து அங்குள்ள சுருங்கை வழியினை மட்டும் அவ்வுதயணன் காணாதபடி செய்து அவ்வறையினுன்ளே அகப்பட்டுத் துயரத்தோடு இறந்துபட்ட கள்வ ருடைய இரண்டு கரிப்பிணங்களையும் காட்டி, ''இவை செவிலித்தாயும் வாசவதத்தையுமாகிய அவ்விருவருடைய உடலங்கள் ஆகும், ஆகவே அவ்விருவரும் தீயினுள் பட்டு'' இறந்து போன நிகழ்ச்சி பொய்யன்று காண்'' என்று கூறி உதயணனை நம்பச்செய்து என்க.
 
(விளக்கம்) 42-43. கரிப்பிணம்-தீயில் வெந்து கரிதலை யுடைய பிணம். காவலர் - அரசர். அரசர் கரிப்பிணத்தைக்   காண்டல் கூடாது என்பதொரு வழக்கினையும் இன்னோரன்ன   பிறவற்றையும் எடுத்துக்காட்ட என்க,
    45. இந்நிகழ்ச்சிக்கு முன்னரே இங்கிருந்தாராதலின் என்க.   முதற்பெருந்தேவி ; வாசவதத்தை.
    46.  உயிர் இகப்ப - உயிர் நீங்க, இவர்-இத்தோழர்,
    47.  மதித்தனனாயின் - கருதுவானாயின்.
    48.  எண்ணிய சூழ்ச்சி-கருதிய செயல், அஃதாவது வாசவதத்தை இறந்தாளாகக்காட்டி உதயணனைத் தன் கடமையில்   ஈடுபடச்செய்தல், இடையூறு-தடை,
    49. தவல்-குற்றம், பெரும்பொருள்.மெய்ம்மை. நிலைமையின் எண்ணி - அச் குழ்நிலையோடு சார்த்தி ஆராய்ந்து என்க.
    50. கெடுதல் இல்லாத பெரிய புகழினையுடைய உருமண்ணுவா என்க,
    51. ஆய்புகழ்-பலரும் ஆராய்தற்குரிய பெரிய புகழ். அண்ணல்;
  உதயணன். மேயது-விரும்பியது, அஃதாவது வாசவதத்தையின்  உடம்பைக் காணல்வேண்டும் என்று விரும்பியது. விரும்பி-தானும்   விரும்புவான் போன்று என்க,
    52. நீள்புடை-நீண்டபக்கத்தை, இகந்துழி எதிர்ப்படும் ஞாயில்  வழியாகச் சென்று என்க. ஞாயில் ; ஒரு மதிலுறுப்பு.
    53, உள்ளிருந்து வெளியே உய்ந்து போதற்குரிய சுருங்கை   வழியை என்க. அதனை மறையாவிடத்துத் தஞ்சூழ்ச்சி வெளிப் படும் என்றஞ்சி அதனை அவன் காணாதபடி மறைத்து என்பது   கருத்து.
    56-57, தீயினுள் .அகப்பட்டமையான் மனம் விம்முதற்குக் காரணமான துயரத்தோடே பூசலிட்டு உயிர்விட்ட குய்ம்மனத்தா னருடைய குறைப்பிணங்களை என்க, விளிந்து - பூசலிட்டு ; இறந்து  எனினுமாம் குய்ம்மனத்தாளர்-வஞ்ச நெஞ்சுடைய கள்வர்:  இவர் அரசன் முடிக்கலனின் பொன்னைத் திருடிச் சிறைப்பட்டோர்.  இங்ஙனம் காட்டற்பொருட்டு இப்பள்ளியறையுள் சேர்க்கப்பட்டோர்;   இதனைப்   பதினேழாங் காதையில்,
          'பொய்ந்நில மமைத்த பொறியமை மாடத்        
           திரும்பும் வெள்ளியும் இசைத்துருக் குறீஇ
           அருங்கலம் ஆக்கி யாப்புப் பிணியுழக்கும்      
           கொலைச்சிறை யிருவரைப் பொருக்கெனப் புகீஇ'
எனக் கூறிப் போந்தமையானும் உணர்க.
     58.. தாய்-சாங்கியத்தாய், தையல் ; வாசவதத்தை. விளிக்தமை -   இறந்துபட்டமை.
     59. மாயம்-பொய். மன்னன் ; உதயணன்.