உரை |
|
2. இலாவாண காண்டம் |
|
19. தேவிக்கு விலாவித்தது |
|
ஒண்செந் தாமரை ஒள்ளிதழ்
அன்ன பண்கெழு விரலிற்
பன்முறை தொகுத்து
நான மண்ணி நீனிறங் கொண்டவை 70
விரித்துந் தொகுத்தும் வகுத்தும் வாரியும்
உளர்ந்தும் ஊறியும் அளந்துகூட்
டமைத்த அம்புகை கழுமிய
அணிமா ராட்டம் வெம்புகை
குழ்ந்து மேலெரி யூர
விளிந்தது நோக்கி ஒழிந்தனை ஆதலின் 75
நன்னுதன் மாதர் பின்னிருங் கூந்தற்
பொன்னரி மாலாய் பொருளிலை என்றும்
|
|
67 - 76; ஒண்செந்தாமரை..,...
.,..என்றும்
|
|
(பொழிப்புரை) அவற்றைக் கண்னுற்ற
உதயணகுமரன் அவற்றுள் பொன்னரிமாலை என்னும் கூந்தலணிகலனை
நோக்கி ''நல்ல நெற்றியினையுடைய வாசவதத்தையினது பின்னுதலுற்ற கரிய
கூந்தல் அணியாகிய பொன்னரிமாலாய் ! செந்தாமரைமலரின் ஒள்ளிய
இதழ்போன்றனவும் யாழ் வரு டுதல் பொருந்தியனவுமாகிய அவளுடைய விரல்களாலே
பலகாலும் தொகுக்கப்பட்டு நறுமணப்பொடியிட்டு முழுகித் தூய்மை
செய்யப்பட்ட நீலநிறமிக்கனவும் பன்முறை விரித்தும் தொகுத்தும் வகுத்தும்
வாரியும் கோதியும் தீண்டியும் பேணப் பட்டனவும் கூட்டாக இயற்றிய
நறுமணப்புகையை நிரம்ப ஊட்டப் பட்டனவும் மாராட்டம் என்னும் ஒப்பனையை
உடை யனவுமாகிய அவளுடைய கூந்தலை வெவ்விய புகை சூழ மேலும் தீயும்
பரவாநிற்ப அவள் இறந்தமை நோக்கி அவளைப் பி்ரிந்தனை ஆதலின் நீ
நற்பண்பில்லாய் காண் என்று அரற்றியும் என்க.
|
|
(விளக்கம்) 67-68.
ஒள்ளிய செந்தாமரையினது ஒள்ளிய. இதழை ஒத்த விரல், யாழிடத்தே
பொருந்திய விரல் எனத் தனித்தனி கூட்டுக. பண் ; யாழ் ; ஆகுபெயர்.
பன்முறை- பலகாலும். தொகுத்து -
சேர்த்து. 69.
நானம்-மணப்பொடி. மண்ணி-குளித்துக் கழுவி என்க. நீலநிறங்கொண்ட அவற்றை
என்க. ஐம்பால் என்னும் வழக்கு நோக்கிக் கூந்தற்குப் பன்மை
கூறினார்- 71-72, உளர்ந்தும் - கோதியும், ஊறியும் -
தீண்டியும். அளந்து கூட்டமைத்த அம்புகை - மணப்பொருள்களை
அளந்து கூட்டி இயற்றிய அழகிய மணப்புகை என்க. கழுமிய-விரம்பிய,
மாராட்ட அணி என மாறுக. மாராட்ட நாட்டினர் இயற்றிய ஓர்
அணிகலன் என்க. மாராட்டம் - மகாராட்டிரதேயம். 74.
விளிந்தது-இறந்தமை கண்டு. 75. மாதர் ; வாசவதத்தை, பின்னுதலுற்ற
கரிய கூந்தல் என்க. 76.பொன்னரி மாலாய் ; விளி
பொருள்-நன்மை நீண்டநாள் நண்புடையராயிருந்து உற்றுழித்
தீர்தல் தீயோர் செயலாம் என்பதுபடப் பொருளிலை என்றான்.
|