|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 19. தேவிக்கு விலாவித்தது | | கொடியு மலருங் கொழுந்துங்
குலாஅய் வடிவுபெற வகுத்த
மயிர்வினைச் சிப்பத்து
வத்தவ மகடூஉச் சித்திரத் தியற்றிய 80
பல்வினைப் பரிசரத் தெல்லை யாகி
மதிப்புறங் கவைஇய வானவிற்
போல நுதற்புறங் கவவி
மிகச்சுடர்ந் திலங்கும்
சிறப்புடைப் பட்டஞ் சிறியோர் போல
இறப்புக் காலத்துத் துறப்புத்தொழில் துணிந்த
85 வன்கண்மை பெரிதெனத் தன்கணு
நோக்கான் பட்டப்
பேரணி விட்டெறிந் திரங்கியும்
| | 77-86 ; கொடியும் ........... இரங்கியும்
| | (பொழிப்புரை) பின்னர்
நெற்றிப்பட்டம் என்னும் அணி கலனைத் தன் கையிலெடுத்துக் கொடியும் மலரும்
கொழுந்தும் உடையையாய் வளைந்து அழகுற வத்தவ நாட்டுப்
பணிமகளிராலே விசித்திரமாக இயற்றப்பட்டுப் பலவேறு தொழிற்
கூறுபாட்டையும் உடைய ஒப்பனைப் பொருட்கெல்லாம் உயர்ந்த எல்லையாகிய
திங்களைக் கவ்விக்கிடந்த வானவிற்போல வாச வதத்தையின்
நெற்றியைக் கவ்விக் கிடந்து மிகவும் விளங்கித் திகழாநின்ற சிறப்புடைய
பட்டமே! நீ சிறியோர் போன்று இறந்த இன்னாக் காலத்தே
துறந்துபோந் தொழிலைத் துணிந்த நின் தறுகண்மை மிகவும் பெரிதுகாண் என்று
கூறி அதனைத் தன் கண்ணால் நோக்கவும் பொறானாய் ஒருபுறம்
வீசியெறிந்து அரற்தியும் என்க.
| | (விளக்கம்) 77-78. கொடி மலர் கொழுந்து முதலியவற்றின் உருவம் பதிக்கப்பட்டு வளைந்து
அழகுறும்படி மகடூஉ சித்திரத்தொழிலோடே இயற்றப்பட்ட பட்டமே ஒப்பனைத்
தொழிற்கு எல்லையாகிய பட்டமே சிறப்புடைப் பட்டமே என்று
தனித்தனி கூட்.டி இயைக்க. 77. குலாய்-வளைந்து.
78. வடிவு-அழகு. மயிர்வினைச் சிப்பம்- கூந்தலை அணி செய்யும் சிற்பத்
தொழில் 79, வத்தவ மகடூஉ-வத்தவ நாட்டுப் பணிமகள்.
அந்நாட்டுப் பணிமகளிர் ஒப்பனைத் தொழிலில் சிறப்புடையோர்
என்பது பற்றி அங்ஙனம் கூறினார்,
'வத்தவநாட்டு வண்ணக் கம்மரும்' (58;44)
என்றார் உஞ்சைக் காண்டத்தும், 80, பரிசரம் - சேடியர்
செய்யும் ஒப்பனைத்தொழில்
. 81. திங்களை வளைத்துக்கிடந்த
வானவில்போல என்க. 82. கவவி - அகத்தீடாகக் கொண்டு; பொதிந்து
என்றவாறு. சுடர்ந்து - ஒளிர்ந்து, இலங்கும் - விளங்கா நின்ற,
83, பட்டம் ; விளி்.உறின் நட்டுஅறின் ஒரூஉம் சிறியோர் போல
என்பது கருத்து. 84, துறப்புத்தொழில் -
கைவிட்டுப்போதல், 85. தனகணும்-தன் கண்ணானும்.
86. பட்டமாகிய அப் பேரணிகலனை என்க.
|
|