உரை
 
2. இலாவாண காண்டம்
 
19. தேவிக்கு விலாவித்தது
 
          வெண்மதிக் கைப்புடை வியாழம் போல
          ஒண்மதி திகழ ஊச லாடிச்
          சீர்கெழு திருமுகத் தேரணி யாகிய
    95    வார்நலக் காதினுள் வனப்புவீற் றிருந்த
          நன்பொற் குழைநீ நன்னுதன் மாதரை
          அன்பிற் கரந்தே அகன்றனை யோவெனப்
          போதணி கூந்தற் பொற்பூம் பாவை
          காதணி கலத்தொடு கவன்றனன் கலங்கியும
 
        92 - 99 : வெண்மதி ..............கலங்கியும்
 
(பொழிப்புரை) பின்னர் மலரணிந்த கூந்தலையுடைய திரு மகளை ஒத்த வாசவதத்தையின் அழகிய பொற் குழையினை நோக்கித், ' திங்கள் மண்டிலத்தின் பக்கத்தே இருந்த வியாழக்கோள் போன்று, வாசவதத்தையின் முகத்தின் பக்கத்தே அத்திருமுகத்தி்ற்கு மேலும் ஓரழகாக அமைந்த நெடிய செவியின்கண் அம் முகமதி மேலும் திகழும்படி அழகோடே ஊசலாடி வீற்றிருந்த பொற்குழைய! நீ நினக்கு உறையுளாயிருந்த அவ் வாசவதத்தையை அன் பின்றிப் பிரிந்தனையோ!' என்று அரற்றித் துனபுற்றுக் கலங்கியும் என்க.
 
(விளக்கம்) 92. வெண்மதி - வெள்ளிய திங்கள் மண்டிலம். கைப்புடை - பக்கத்தில். வியாழம் ; ஒருகோள்,
    93-94. சீர்கெழு திருமுகத்து ஏர் அணியாகிய   வார்-நலக்காதினுள் (அம்முக) ஒண்மதி திகழ ஊசலாடி வனப்பு வீற்றிருந்த நன்பொற் குழையே! என மாறிக் கூட்டுக.
    93, ஒண்மதி- ஒள்ளிய முகமாகிய மதி என்க.
    94. சீர்கெழு திருமுகத்து ஏர் அணியாகிய காது, வார்நலக்காது எனத் தனித்தனி கூட்டுக, சீர் திரு என்பன ஒரு   பொருட் பன்மொழி; எனவே பேரழகு பொருந்திய முகத்தினது அழகிற்கு மேலும் அழகாக அமைந்த நீண்ட நன்றாகிய காதினுள் வனப்போடு வீற்றிருந்த குழையே! என்க ,
    95. வார்- நீண்ட, வனப்பு -அழகு. வீற்றிருத்தலாவது நெடிது நாள் அகலாது உறைதல்.
    96, குழை ; விளி.
    97, அன்பிற் கரந்து - அன்பு செலுத்துதலின்கண் உலோவி.
    98, பொற் பூம்பாவை - திருமகள் ; ஈண்டு வாசவதத்தை,
    99, கவன்றனன்: முற்றெச்சம்; துன்புற்றென்க.