உரை
 
2. இலாவாண காண்டம்
 
19. தேவிக்கு விலாவித்தது
 
         
    100   பொய்கையில் தீர்ந்து புன்கண் கூர
          எவ்வ மாந்தர் எரிவாய் உறீஇய
          பொருங்கயல் போல வருந்துபு மிளிராக்
          களைகண் பெறாஅக் கலக்க நோக்கமொடு
          தளையவிழ்ந் தகன்ற தாமரை நெடுங்கண்
    105   அகையற அருளா யாகிக் கலிழ்ந்து
          செவ்வழல் புதைத்திடச் சிதைந்தனை யோவென
          அவ்விழிக் கிரங்கி வெவ்வழல் உயிர்த்தும்
 
        100 - 107; பொய்கையில்..........புன்கண்கூர
 
(பொழிப்புரை) தாமரை மலர் போன்ற அழகிய நீண்ட விழிகளே.! நீயிர் நீர் நிலையினின்றும் எடுத்துக் கொடியோரானே தீயிலிடப்பட்ட கயல்மீன் போன்று வருந்திப் புகலிடமாவாரை நாடி அவரைக் காணப் பெறாமையானே அலமந்த பார்வையோடே எம்மை அருளாதீராகி அழுது, சிவந்த நெருப்பு மறைத்தலானே அழிந்தனிரோ! என்று அவற்றின் அழிவிற்கு இரங்கி அரற்றி வெய்தாக மூச்செறிந்தும் என்க.
 
(விளக்கம்) 100-101. எவ்வமாந்தரான் பொய்கையிற் றீர்ந்து அவரானே எரிவாய் இடப்பட்ட என விரிக்க, எவ்வத்தைச் செய்யும் மாந்தர் என்க. பிறவுயிர்க்குத்   துன்பஞ் செய்யும் தீவினை மாக்கள் என்பது கருத்து. புன்கண் கூர-துன்பமிகும்படி, எரிவாய்-தீயின்கண். உறீஇய-இடப்பட்ட; (உறுவித்த)
    102 ஒன்றனோடு ஒன்று போர் செய்யும் இரண்டு கயன்   மீன்கள் போலஎன்க. இஃது இரண்டு விழிகட்கும் உவமை. வருந்துபு-வருந்தி. மிளிரா- மிளிர்ந்து; பிறழ்ந்து.
    103. களைகண் - புகலிடமாவார். பெறாக்கலக்க நோக்கம்-   பெறாமையாளே உண்டான அலமரலையுடைய பார்வை என்க,
    104 கட்டவிழ்ந்து விரிந்த தாமரை மலர் போன்ற அழகுடைய நெடிய கண்களே! கண் ; விளி.
    105 அகையற - துன்பந்தீரும்படி- ' அகையேல் அமர்தோழி' 1524) எனவரும் சீவகசிந்தாமணியானும் அஃதப் பொருட்டாதல் உணர்க. என் துன்பந் தீரும்படி அருளாகிய என்றவாறு. கலிந்து < அழுது.
    106, சிதைந்தனையோ- அழிந்தனையோ!