உரை
 
2. இலாவாண காண்டம்
 
19. தேவிக்கு விலாவித்தது
 
          செஞ்சாந்து வரித்த சின்மெல் லாகத்
          தஞ்சாய் மருங்குல் வருந்த அடிபரந்து
    110    வீங்குபு செறிந்த வெங்கண் வனமுலை
          பூங்கொடிப் பொற்கலம் போழ்ந்துவடுப் பொறிப்ப
          மகிழ்ச்சி எய்தி மனம்ஒன் றாகிய
          புணர்ச்சிக் காலத்து மதர்த்துமுகஞ் சிவப்ப
          நோய்கூர்ந் தழியு நீயே அளியை
    115    வேக வெவ்வழல் வெம்புகை அணிந்த
          பொங்கழற் போர்வை போர்த்ததோ எனவும்
 
        108 - 116 : செஞ்சாந்து........எனவும்
 
(பொழிப்புரை) அழகிய முலையே ! நீ மகிழ்ச்சியுற்று மனம் ஒன்றாகிய புணர்ச்சிக் காலத்தும் பொற் கலம் நின்பாலழுந்தி வடுவுண்டாக்குதலானும் களித்து முகஞ் சிவந்து காமநோய் மிக்கு அழியா நிற்றலானும் இரங்கத் தக்கனையாயிருந்தனை! அத்தகைய நின்னை அழற் போர்வை போர்த்தது; ஆகலின் இப் பொழுதும் இரங்கத்தக்கனையாகவே ஆயினை என்று அரற்றியும் என்க.
 
(விளக்கம்) 108-110 பிறரை வருத்துதற்குச் சிறிதும் அஞ்சாயாய் இடை வருந்தும்படி செவ்விய சந்தனத்தானே தொய்யில்   எழுதப்பட்ட சிலவாகிய உரோமங்களையுடைய மெல்லிய
  மார்பின்கண் அடிப்பகுதி பரந்து பருத்து நெருங்கிய அழகிய முலையே ! என்க. 108 வரித்த - எழுதப்பட்ட. சில்மெல்லாகம்  - சிலவாகிய  உரோமங்களையுடைய மெல்லிய மார்பு என்க,
    110 வீங்குபு- வீங்கி; பருத்து. செறிந்த-நெருங்கிய. வனமுலை ; விளி.
    111. பூங்கொடி வடிவிற் செய்யப்பட்ட பொன் அணிகலன் என்க. புணர்ச்சிக் காலத்தும் பொறித்தாலானும் சிவத்தலானும் நோய் கூர்ந்  தழியும் நீ அளியையாயிருந்தாய். அத்தகைய நின்னை அழற் போர்வை போர்த்தது ஆகலான் இப்பொழுதும் அளியை ஆயினாய் என்று விரிக்க.
    113, மதர்த்து-களித்து.
    114. நோய்மிக்கு என்க. அளியை- அளிக்கத்தக்காய்.
    115, அழல்-அழற்சி
    116, பொங்கழல் -மிக்க நெருப்பு.