உரை
 
2. இலாவாண காண்டம்
 
19. தேவிக்கு விலாவித்தது
 
          இளைப்புறு ஞமலி நலத்தகு நாவிற்
          செம்மையு மென்மையுஞ் சிறந்துவனப் பெய்தி
          அம்மை முன்னம் அணிபெறப் பிணங்கி
          இலைபடக் குயிற்றிய எழிலொளிக் கம்மத்துத்
    180    தலைவிரற் சுற்றுந் தாதணி வளையமும்
          வட்ட ஆழியுங் கட்டுவடஇணையும்
          மகர வாயொடு நகைபெறப் புனைந்த
          விரலணி கவ்வி நிரலொளி எய்திப்
          பூவடர் மிதிப்பினும்  புகைந்தழ லுறூஉம்
    185    சேவடிக் கேற்ற செம்பொற்  கிண்கிணி
          பாடக் குரலொடு பரடுபிறழ்ந் தரற்றக்
          கழனிக் கண்பின் காயெனத் திரண்ட
          அழகணி சிறுதுடை அசைய ஒதுங்கி
          ஆயத் திறுதி அணிநடை மடப்பிடி
    190    கானத் தசைந்து தானத்தின் தளர்ந்தபின்
          கரிப்புற் பதுக்கையும் கடுநுனைப் பரலும்
          எரிப்புள் ளுறீஇ எஃகின் இயலவும்
          எற்கா முறலின் ஏதம் அஞ்சிக்
          கற்கால் பயின்ற காலவி சில்லதர்
    195    நடுக்கம் எய்தி நடப்பது நயந்தோய்
 
        176-195 ; இளைப்புறு,.,,,நயந்தோய்
 
(பொழிப்புரை) ஓடி இளைத்த நாயினது அழகு தக்கிருக்கின்ற நாப்போன்று செவ்விய நிறத்தானும்,மென்மையானும்,சிறப்புற்று அழகெய்தி அமைதியுடையவாய் மேலும், அணிகலன்களை அணியப் பெறுதலானே வருந்தி இலையுருவமுண்டாக இயற்றிய அழகிய ஒளியுடைய கம்மக் கலன்களுள் வைத்து, விரற் சுற்றும் வளையமும், ஆழியும், இரட்டை வடமும், மகர வாயும், ஒளி யுண்டாகச் செய்த விரலணியும் ஆகிய அணிகலன்களாற் கவ்வப் பட்டு ஒழுங்குபட்ட ஒளியெய்தி மலரிதழை மிதித்த விடத்தும் பொறாதே வருந்தி அழுதற்குக் காரணமானவும் ஆகிய நின் சிவந்த அடிகளுக்கேற்ற செம்பொன்னாலியன்ற கிண்கிணி, பாடகத்தின் ஒலி யோடே பரட்டின்கட் பிறழ்ந்து ஒலியா நிற்பச் சம்பங்கதிர் போன்று திரண்டுள்ள அழகுடைய நின் சிறிய துடைகள் அசையும்படி, நடந்து வந்து தோழியர் நின்றுவிட்ட இறுதிப் பொழுதில், பத்திராபதி என்னும் அப்பிடியானையை ஊர்ந்து அதுவும் காட்டின்கண் இறந்து வீழ்ந்த பின்னர்ப் பதுக்கையும், பரற்கற்களும் வெப்பத்தைத் தம் மகத்தே ஏற்றுக்கொண்டு வேல்போலத் துன்புறுத்தா நிற்பவும், எம்மைக் காதலித் தமையாலே எமக்கு உண்டாகும் துன்பத்திற்கே அஞ்சிக் கற்கள் காலைப். பொதுக்கும் காற்று வழக்கற்ற சிறிய வழிகளிடத்தே நடுக்கமுண்டாகியும் எம்மோடு நடந்து வருதலை விரும்பா நின்றனையே என்க,
 
(விளக்கம்) 176- இளைப்புறு ஞமலி -ஓடியிளைத்தலுற்ற நாயின் என்க.   நாவின்- நாப்போன்று.
    178. அம்மை-அமைதி, அ.ஃதப் பொருட்டாதல் 'அம்மை என்பது குணப்பெயர்.   அமைதிப்பட்டு நிற்றளின் அம்மை என்றா  யிற்று''. (தொல். செய். சூ. 547. உரை) எனவரும்   பேராசிரியர்   உரையானும், உணர்க,   முன்னும் என்றது மேலும் என்பதுபட நின்றது. அவ்வமைதியின்   மேலும் அணி பெறற்குப்   பிணங்கி என்றியைபு காண்க.  பிணங்கி - வருந்தி,
    179. கம்மம் ; ஆகுபெயர் ,'' அணிகலன்.
    180. விரற்சுற்று -ஓரணிகலன்.
    181. ஆழி-மோதிரம். கட்டுகின்ற இணைவடம் என்க.
    182, மகரவாய்-ஓரணிகலன், நகை -ஒளி.
    183. கவ்வப்பட்டு என்க,
    184. அடர்-இதழ்,. புகைந்து-நெஞ்சம் வருந்தி, அழுதற்குக்
  காரணமான சேவடி என்க,
    186. பாடகம் - ஒரு காலணிகலன். பரடு காலில் ஒருறுப்பு. அரற்ற - ஒலிக்கும்படி.
    கண்பு - சம்பங்கோரை, அதன் கதிர்க்கு ஆகுபெயர்.
    189. ஆயம்-தோழியர் கூட்டம். அத்தோழியர் கூட்டம் நின்று  விட்ட இறுதிப் பொழுதில் என்க,
    190, தானத்தில் -இடத்தில்.
    191. கரிந்த புல்லையுடைய பதுக்கை என்க. பதுக்கை-கற்குவியல்.   பரல்-பருக்கைக்கல். எரிப்பு-வெப்பம். எஃகின் -வேல்போன்று.
    194, கால்அவி -காற்றடங்கிய.