உரை
 
2. இலாவாண காண்டம்
 
19. தேவிக்கு விலாவித்தது
 
          இடுக்கண் யான்பட என்னையு நினையாது
          கடுப்பழல் அகவயிற் கரத்தியோ எனவும்
          படிகடந் தடர்ந்த பல்களிற் றியானை
          இடியுறழ் முரசின் இறைமகன் பணிப்ப
    200    நூலமை வீணைக் கோலமை கொளீஇக்
          கரணம் பயிற்றினுங் காந்தண் முகிழ்விரல்
          அரணங் காணா அஞ்சின போலப்
          பயத்தின் நீங்காச் சிவப்புள் ளுறுவின
          அடைதற் காகா ஆரழற் செங்கொடி
    205   தொடுதற் காற்றத் துணிந்தவோ எனவும்
 
        196 - 205 ; இடுக்கண் ..........துணிந்தவோ எனவும்
 
(பொழிப்புரை) தத்தாய் ! யாம் பெரிதும் துன்பம் எய்தும் படி எம்மையும் நினையாயாய்க் கடி.ய தீயின்கட்புக்கு மறைந்தாயோ என்றும் நின் தந்தையாகிய பிரச்சோதன மன்னன் பணியை மேற்கொண்டு வீணையினது நரம்பினைக் கொளுவிக் கரணஞ் செய்யினும் குவிந்த நின் விரல்கள் அஞ்சி அவ்வச்சத்தின் நீங்காதனவாய்ச் சிவந்தன வாயினவே, அத்தகைய மெல்விரல் இப்பெருந்தீயின் கொழுந்துகளை அஞ்சாது தொடத்துணிந்தனவோ என்றும் என்க,
 
(விளக்கம்) 197.கடுப்பழலகவயின், கடுமையுடைய தீயினூடே
    198 - 199, பகைவரைக் கடந்து வென்ற பலவாகிய களிற்று னைப்படைகளையும்  இடிபோல முழங்கும் வெற்றி முரசினையும், உடைய நின் தந்தையினது பணியை மேற்கொண்டென்க.  படி-பகை, 'படிமதம் சாம்ப' எனவரும் பரிபாடற்குப் பரிமேலழகர்   உரைத்த நல்லுரையானும் அஃதப் பொருட்டாதலறிக. இறைமகன் - வேந்தன் ; ஈண்டுப் பிரச்சோதனன்.
    200. இசை நூல் இலக்கணத்திற்குப் பொருந்திய வீணை என்க. கோல்-நரம்பு. கொளீஇ-கொளுவி. 201. கரணம்-கிரியை அவை எட்டு வகைப்படும். என்னை?
       'வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல்
       சீருடன் உருட்டல் தெருட்ட லள்ளல்
       ஏருடைப் பட்டடை என இசையோர் வகுத்த
       எட்டு வகையின் இசைக்கர ணத்து' (சிலப், 7 ; 12-15)
எனவரும் இளங்கோவடிகளார் கூற்றானும் உணர்க.
    202. அரணம் - புகலிடம்.
    203. உள்ளுறுவின -உள்ளுறுத்தின.
    204. அழற்செங்கொடி -தீயினது சிவந்த கொழுந்து,
    205. ஆற்ற-மிக.