உரை
 
2. இலாவாண காண்டம்
 
19. தேவிக்கு விலாவித்தது
 
           வடிக்கண் மாதர் முடிக்கல முதலா
          அடிக்கலந் தழீஇ முடித்தார் மார்பன்
          அரற்றியும் அயர்ந்தும் உரற்றியும் உயிர்த்தும்
          வீழ்ந்தும் எழுந்துந் தாழ்ந்துந் தளர்ந்தும்
    210    செருவடு செங்கண் தெண்பனி சிதறி
          உருவுடை அகலத் தூழூழ் உறைத்தரக்
          கோல இரும்பிடி குழிப்பட் டாழ
          நீல வேழ நினைந்துழன் றாங்கு
          மாலை மார்பன் மாதரைக் காணா
    215    தின்னவை பிறவும் பன்முறை அரற்ற்
 
        206-215 ; வடிக்கண்...................அரற்ற
 
(பொழிப்புரை) இங்ஙனம் மாவடுப்பிளவு போன்ற கண்ணையுடைய வாசவதத்தையின் முடியணிகலன் முதலாக அடியணிகலன் ஈறாக வுள்ள அணிகலன்கனை எடுத்து மார்போடணைத்துக் கொண்டு உதயணகுமரன் அழுதும், அயர்ந்தும், உரற்றியும், உயிர்த்தும், நிலத்தின்மேல் விழுந்தும் எழுந்தும் தாழ்ந்தும் தளர்ந்தும் போரினை வெல்லுதற்குக் காரணமான தனது செங் கண்ணிணின்றும் சிதறா நின்ற கண்ணீர்த்துளி அழகிய தனது மார்பின்கண் முறையே முறையே வீழாநிற்பவும், அழகியபிடியானை குழியின்கண் வீழ்ந்து ஆழக்கண்ட நீலக்களிற்றியானை அப்பிடியை நினைந்து நினைந்து வருந்தினாற் போன்று. அவ் வாசவதத்தையினைக் காணப் பெறானாய் இன்னோ ரன்ன பிறவும் கூறிப் புலம்பா நிற்ப என்க.
 
(விளக்கம்) 206. வடி-மாவடு. முடிக்கலம்-தலைக்கோலம் முதலியன.
    207, அடிக்கலம் - சிலம்பு முதலியன.
    208, உரற்றி - உரக்கக்கூவி.
    210. செரு- போர்.
    211. உரு-அழகு. உறைத்தர-துளிப்ப.
    212. குழி - யானைவேட்டுவர் அகழ்ந்த குழியின்கண் என்க
    213, நீலயானை - யானையினுள் ஒரு சாதி.
    214. மாதரை ; வாசவதத்தையை.