உரை
 
2. இலாவாண காண்டம்
 
19. தேவிக்கு விலாவித்தது
 
          செறுநர் முன்னர்ச் சீர்மை யன்றென
          உறுநர் சூழ்ந்த ஒருபால் ஒடுங்கித்
          தேரும் புரவியும் வார்கவுள் யானையும்
          மறப்படை இளையரொடு திறப்பட வகுத்துப்
    220    போரணி கலமும் பொருளு நல்கி
 
        216-220; செறுநர்.,,..,,நல்கி
 
(பொழிப்புரை) அதுகண்ட உருமண்னுவா முதலிய அமைச்சரும் தோழரும் மன்னன் இங்ஙனம் அரற்றுதலை நம் பகைவர் அறியின் அஃது ஏதந்தரும் என்று கருதித் தேர் புரவி யானை காலாள் என்னும் நால்வகைப் படையையும் திறம்பட அணிவகுத்துப் படைமறவர்க்குந் தலைவர்க்கும் போர் அணி கலன்களும் பொருளும் வழங்கி என்க.
 
(விளக்கம்) 216. செறுநர்-பகைவர். சீர்மை-நன்மை,
    217. உறுநர்-தோழர். சீர்மை அன்றெனச் சூழ்ந்த உறுநர் ஒருபால் ஒடுங்கி எனக் கூட்டுக.
    220 போர் அணிகலம்-போரில் வெற்றியுடைய வீரர்க்கு வழங்கும் பொற்பூ முதலியன.