உரை
 
2. இலாவாண காண்டம்
 
19. தேவிக்கு விலாவித்தது
 
          ஆருணி அரசன் அடுதிறல் ஆண்டகை
          அற்றம் அறியாச் செற்றச் செய்கையோடு
          மேல்வர வுண்டெனின் மீளி வாட்டிச்
          சென்று நெருங்காது பின்றியும் விடாது
    225    குன்றகம் அடுத்துக் கூழவண் ஒடுக்கி
          யாப்புற நிற்கெனக் காப்புறு பெரும்படை
          திசைசெலப் போக்கி அசைவில் ஆண்மை
          மன்பெருங் குமரனை மரபுளிக் காட்டித்
          துன்பந் தீரிய தொடங்கினர் துணிந்தென்.
 
        221-229 ; ஆருணி.......துணிந்தென்
 
(பொழிப்புரை) அப்போர் வீரர்களுக்கு 'நம் பகைவனாகிய ஆருணி வேந்தன் நம் மன்னனுடைய சோர்வினை யறிந்து போர்த்தொழிலை மேற்கொண்டு வருதலும் கூடும்; அங்ஙனம் வருவானாயின் அவனுடைய பெருமையைக் கெடுத்து அவனை நீயிரே வலிந்து சென்று போர்தொடுக் காமலும், புறங்கொடுத்து விடாமலும், மலைச்சாரலின்கண் எய்தி நுங்கட்கு வேண்டிய உணவுப் பொருள்களையும் அவ்விடத்திலேயே மறைத்து வைத்துக் கொண்டு எம்மோடு தொடர்புண்டாக நின்று காமின்' என்று கூறி அப் பெரும்படையை அத் திசை நோக்கிச் செலுத்திவிட்ட பின்னர் உதயணகுமரனுக்குப் பல்வேறு ஏதுக்களையும் எடுத்துக்காட்டி அவனது துயரத்தைப் போக்குதற்குத் துணிந்து அம்முயற்சியைத் தொடங்கினர் என்க.
 
(விளக்கம்) 221. ஆருணி அரசன்-கோசம்பியைக் கைப்பற்றி ஆளும் பாஞ்சால மன்னன்.அடுதிறல் ஆண்டகை என்றது உதயண குமரனை.
    222. அற்றம் - சோர்வு. செற்றச்செய்கை - போர்த்தொழில்.
    223. மீளி-பெருமை.
    225. கூழ் - உணவுப்பொருள்,
    226, யாப்புற - சேர.
    229, தீரிய - தீர்த்தற்கு. துணிந்து  தொடங்கினர் என மாறுக.


  

19. தேவிக்கு விலாவித்தது முற்றிற்று,