உரை
 
2. இலாவாண காண்டம்
 
20. சண்பையுள் ஒடுங்கியது
 
           வெற்றித் தானையொடு விசயம் பெருக்கிக்
      25   கொற்றம் வேண்டாய் பற்றொடு பழகிய
           ஆர்வப் புனலகத் தழுந்துவை யாயின்
           ஊர்கடல் வரைப்பின் ஆருயிர் நடுக்குறீஇப்
           பெரும்பே துற்று விளியுமற் றதனாற்
           கரும்பேர் கிளவிக் கனங்குழை திறவயிற்
      30   கழுமிய காதல் கைவிடல் பொருளெனக்
           காமத்துக் கடையுங் காதற் குற்றமும்
           ஏமாப் பிலவென எடுத்துரை நாட்டி
           அமைச்சத் தொழிலர் விலக்குபு காட்ட
 
        24 - 33 ; வெற்றி.....................காட்ட
 
(பொழிப்புரை) வேந்தர் பெருமானே! நீ நினக்குரிய கடமையாகிய வெற்றியினை நினது படைஞரோடு சென்று பெருக்கி நினது அரசவுரிமையை மீட்டுக்கோடலை விரும்பாயாய் இங்ஙனமே பற்றோடு மிகவும் பழகி ஆசைக் கடலிலே இன்னும் அழுந்தியே கிடப்பாய் எனின், இவ்வுலகத்தே வாழும் உயிர்கள் துன்புற்று நடுங்கி மயங்கி மாய்வன மன்; ஆதலாலேநீ கரும்பினை ஒத்த மொழியினையும் கனவிய குழையினையும் உடைய நின் பெருந்தேவியின்பாற் கொண்டுள்ள காமத்தினைக் கைவிடுதல் உறுதியுடைத்தாம், என்று கூறி மேலும் காமத்தினது இழதகவும், காதலானே உண்டாகும் குற்றங்களும் இன்பந்தருவன அல்ல என்றும் பல்லாற்றானும் எடுத்துக்காட்டி அவ்வுதயணனை அத் துன்ப நிலையினின்றும் நீக்கித் தேற்றா நிற்ப என்க.
 
(விளக்கம்) 24. விசயம் - வெற்றி. கொற்றம் - வெற்றி; இஃதாகு
  பெயராய் அரசவுரிமையைக் குறித்து நின்றது.
    25. பற்று - பற்றுதற்குரிய பொருள், பழகியதனாற் பெருகிய (26) ஆர்வப்புனல் என்க, ஆர்வப்புனல் - ஆசை வெள்ளம்,
    27, ஊர்கடல் ; வினைத்தொகை, நடுக்குறீஇ - நடுங்கி. 28, பெரும்பேது -   பெரிய மயக்கம். விளியும் - அழியும். 29. கரும்பேர் - கரும்புபோலத் தித்திக்கும், கனங்குழை ; வாசவதத்தை.
    30, கழுமிய - மிக்க. பொருள் - உறுதிப் பொருள்.
    31. கடையும் - இழிதகவும்.
    32, ஏமாப்பில - இன்பந்தருவன அல்ல; காவலாவன அல்ல எனினுமாம்.