உரை
 
2. இலாவாண காண்டம்
 
20. சண்பையுள் ஒடுங்கியது
 
          இகுப்பம் ஒடுங்கிய இயல்பினன் ஆகிய
     35   அண்ணல் நிலைமை திண்ணிதின் அறிந்து
          வண்ணக் கோதை வாசவ தத்தைக்குக்
          காதற் கணவன் ஏதம் இன்மை
          அறியக் கூறி அகல்வது பொருளெனப்
          பொறியமைத் தியற்றிய பொய்ந்நிலம் போகி
 
        [ யூகி முதலியோர் ஒரு மலைச்சாரலுக்குச் செல்லுதல் ]
                34 - 39 ; இகுப்பம்...................போகி
 
(பொழிப்புரை) துன்பம் நீங்கிய தன்மையுடையவனாகிய அவ்வுதயணனுடைய நிலைமையினை யூகி ஒற்றரானே திண்ணிதாக அறிந்து கொண்டு வாசவதத்தைக்கு அவளுடைய காதலுக்குக் காரணமான கணவனுக்குத் தீங்கில்லாமையை நன்கு அறிவித்துப் பின்னர் அவ்விடத்தினின்றும் அகன்று விடுதல் நன்றென்று நினைத்து அவ் வாசவதத்தையோடும் சாங்கியத்தாயோடும் ஒரு சுருங்கை வழியிற் சென்று என்க.
 
(விளக்கம்) 34. இகுப்பம் - தாழ்வு; என்பது துன்பத்தை.
    35. அண்ணல் ; உதயணன்.
    36. நிறமிக்க மாலையினையுடைய வாசவதத்தைக்கும் என உம்மை விரித்தோதுக, அங்ஙனம் அறிவியா விடத்து அவள் நெஞ்சமைதி கொள்ளல்   அரிதாகலின் அவட்கும் அறிவித்தான் என்பது கருத்து,
    39, பொய்ந்நிலம் - சுருங்கை.