உரை
 
2. இலாவாண காண்டம்
 
20. சண்பையுள் ஒடுங்கியது
 
         
     75   பள்ளியும் பதியு மலையுஞ் சேணிடத்
          துள்ளவை உரைத்துத் தள்ளாத் தவநெறி
          அற்றந் தீர உற்றுப்பிரிந் தொழுகிய
          உறுவுடை முதுமகள் ஒருவயிற் றியன்றமை
          நீப்பிடந் தோறும் யாப்புற அறிவுறீஇ
     80   நாட்ட ஒழுக்கொடு நன்னுதல் இவளை
          வேட்டோன் விட்டுக் காட்டக நீந்திக்
          குண்டுநீர்க் குமரித் தெண்திரை ஆடிய
          போயினன் என்னும் பொய்ம்மொழி பொத்தித்
          தீவினை யாளரைத் தெளியக் கூறி
     85   வாய்மொழி யாக வலித்தனள் வழங்கி
          மறுவின் மன்னற் குறுதி வேண்டித
          தண்டழை மகளிரொடு தலைநின் றொழுகக்
 
        [ சாங்கியத்தாயிண் செயல் ]
    75 - 87 : பள்ளியும்.................தலைநின்றெழுக
 
(பொழிப்புரை) அவருள் சாங்கியத்தாய் பிறர்க்கெல்லாம் சேய்மையிலுள்ள தவப்பள்ளியையாதல் ஊரினையாதல் மலையையாதல் தாம் பிறந்த விடமாகக் கூறியும், தம்மைப் பிரிந்து சென்று தவநெறியை மேற்கொண் டொழுகுமாறு மூதாட்டியின் வயிற்றில் தாம் மூவரும் பிறந்ததாகப் பிரிந்து சென்ற இடந்தோறும் அறிவுறுத்தியும் தீர்த்த யாத்திரை செய்தல் வேண்டும் என்னும் குறிக்கோளோடும் அதற்கியன்ற ஒழுக்கத்தோடும் இவ்விளையாளை மணந்த கணவன் இவளை எம்பால் விடுத்துக் காடு முதலியவற்றைக் கடந்து ஆழ்ந்த நீரையுடைய குமரிக்கடலில் ஆடுதற்குப் போயினன் என்னுமொரு பொய்ம் மொழியானே வாசவதத்தை வரலாற்றினை மறைத்துக் கயவர்களுக்கு அதனை அவர் மெய்ம்மொழியாக நம்பும்படி சொல்வன்மையினால் கூறியும் குற்றமற்ற உதயணகுமரனுக்கு ஆக்க முண்டாக்குதலை விரும்பி அத் தவப்பள்ளியிலுள்ள முனிவர் மகளிரோடு கூடி ஒழுகாநிற்ப என்க.
 
(விளக்கம்) 75 .பள்ளி - சேய்மையிலுள்ள தவப்பள்ளி. பதி - ஊர். சேணிடத்துள்ளவை(யாகிய) பள்ளியும் பதியும் மலையும்   உரைத்தென மாறுக.
    76. தள்ளாத் தவநெறி - குன்றாத தவவொழுக்கம்.
    77. அற்றம் - துன்பம் ; ஈண்டுப் பிறவித்துன்பம்.
    78, ஒருவயிற்றிற் பிறந்ததாக......................அறிவுறீஇ என்க.
    80. நாட்டவோழுக்கு - ஒருகுறிக்கோளோடு அதற்கெற்கு ஒழுகும் ஒழுக்கும்  என்க. நாட்டவொழுக்கம் - தேசாசாரம் என்பாருமுளர்
    81, வேட்டோன் - மணந்தவன்.