உரை |
|
2. இலாவாண காண்டம் |
|
20. சண்பையுள் ஒடுங்கியது |
|
கண்டனிர் உளிரோ காவலன் மகளையென்
றொண்தொடிக் காஞ்சனை உயிர்நனி நில்லாச்
90 செல்லல் நோக்கிச் செயற்பாற்
றிதுவென ஒல்லு
நண்பின் உருமண்ணுவா அவட்
கொண்டனன் வந்து கோமகட்
காட்டிக் கருமக்
காரணம் அவள்வயிற் பேசி
விண்டலர் கழுநீர் வென்ற கண்ணியொடு 95
தலைப்படுத் தனனாத் தானவட் போகி
வண்டுளர் ஐம்பால் வயங்கிழை
மாதரை ஆற்றுவித்
தோம்பிப் போற்றுபு
தழீஇ நீங்கல்
செல்லா நெறிமையின் ஓங்கி
|
|
[
காஞ்சனமாலையின் வரவு ] 88 - 98 ;
கண்டனிர்...................நெறிமையின் ஒங்கி
|
|
(பொழிப்புரை) இவர்கள் நிலைமை
இவ்வாறாக; இனி இலாவாணக நகரத்தே வாசவதத்தையை இழந்த காஞ்சனமாலை
என்னும் தோழி எதிர்வந்தோரையெல்லாம் எம்மன்னன் மகளைக்
கண்டீர் உளீரோ! என்றென்று வினவி உயிர் போதற்குக் காரணமான
பெருந்துயரம் எய்தாநிற்ப; அதுகண்ட உருமண்ணுவா அவட்கிரங்கி
இவள் திறத்து இப்பொழுது யான் செய்ய வேண்டிய தாகிய கடமையிஃதாம் என்று
துணிந்து அக்காஞ்சனமாலையை அங்க நாட்டுள்ள அத்
தவப்பள்ளிக்கு அழைத்துக் கொடுவந்து அங்கே உறைகின்ற
வாசவதத்தையையும் அவளுக்குக் காட்டி மேலும் அச்செயலுக்குச் காரணத்தையும்
கூறிப் (போயினனாக) இவ்வாறாகக் காஞ்சனமாலை வாசவதத்தையோடு
சேர்ந்தபின்னர் அவள் பெரிதும் மகிழ்ந்து வாசவதத்தையைத் தழுவிக்கொண்டு
தேற்றிப் பாதுகாத்து அவளைப் பிரியா ஒழுக்கின்கண் உயர்ந்தனள் ஆகப்
பின்னர் என்க.
|
|
(விளக்கம்) 87.
காவலன் - பிரச்சோதனன். உயிர்நில்லா நனி செல்லல் என மாறுக.
உயிர்நில்லாமைக்குக் காரணமாய் மிக்கதுன்பம் என்க. 90,
செல்லல் - துன்பம். ''உடுக்கை யிழந்தவன் கைபோல''. நண்பர்
உற்ற இடுக்கண் களைதல் அவரை நட்டோர் கடமையாதல் பற்றிச்
செயற்பாற்றிது வெனத்துணிந்து என்பது கருத்து. 91. நண்பின்
உருமண்ணுவா என்றது அவன் அங்ஙனம் செய்தமைக்குக் குறிப்பேதுவாய்
நின்றது. 92. கோமகள் ;
வாசவதத்தை. 93, கருமக்காரணம் - அரண்மனையில் தீயிட்டமை
முதலிய செயலுக்குறிய காரணம். 94, விண்டு - விரிந்து. கண்ணி
; வாசவதத்தை. 95. தலைப்படுத்தனனாக என்பது ஈற்றுயிர்
மெய்கெட்டுநின்றது. தானவண்போகி - இவ்வாற்றாற்றான்
அப்பள்ளியிற் சென்று என்க. 96. வண்டு கிண்டுதற்குக்காரணமான
மலர்மணம் பொருந்திய கூந்தலையும் விளங்குகின்ற அணிகலனையும் உடையவளாகிய
வாசவதத் தையை என்க. 98, ஒங்கி என்னும் எச்சத்தைச்
செயவெனெச்சமாகக் கொள்க.
|