உரை
 
2. இலாவாண காண்டம்
 
20. சண்பையுள் ஒடுங்கியது
 
          யாங்கினி  திருத்துமென் றறிவினிற் சூழ்ந்து
     100   பற்றார் ஆயினும் உற்றார் ஆயினும்
          ஒற்றுவர் உளரெனின் அற்றந் தருமென
          மற்றவண் ஒடுங்கார் மறைந்தனர் போகி
 
         99 - 102 : யாங்கு.......போகி
( யூகி முதலிய நால்வரும் அத் தவப்பள்ளியினின்றும் சண்பை
               நகர்க்குச் செல்லுதல். )
 
(பொழிப்புரை) பகைவராயினும், உறவினரேயாயினும், இரு திறத்தாருள்ளும் ஒரோவழி ஒற்றர் இருத்தலும் கூடும் அங்ஙனம் இருப்பராயின் நமக்குத் துன்பமுண்டாதல் ஒருதலை; ஆகலின் ஈண்டிருத்தல நன்றன்று என்றும் இனி எவ்விடத்தே சென்றிருத்தல் நன்றாம் என்றும் அந் நால்வரும் தம்முட் கூடி ஆராய்ந்து (ஓரிடத்தைத் துணிந்தனராய்) அத் தவப்பள்ளியினின்றும் பிறர் அறியாமல் புறப்பட்டுச் சென்று என்க.
 
(விளக்கம்) யாங்கு - எவ்விடத்து. இனிதிருத்தும் - இனிதே   சென்றிருப்போம்.
    100, பற்றார் - பகைவர், உற்றார் - உறவினர். பகைவருள் அல்லது உற்றாருள்ளும் ஒற்றுவர் இருத்தல் கூடும் அங்ஙனம் இருப்பாராயின் என்பது கருத்து.
    101. அற்றம் - துன்பம்.
    102. அவண் - அத் தவப்பள்ளியின்கண். ஒடுங்கார் - உறையாராய், மறைந்தனர் ; முற்றெச்சம்,