உரை
 
2. இலாவாண காண்டம்
 
20. சண்பையுள் ஒடுங்கியது
 
          உருமண் ணுவாவின் பெருமுது குரவன்
         அவமில் சூழ்ச்சித் தவறில் தோழன்
    105   பெரும்புனற் கங்கை பெருவளங் கொடுக்கும்
         அங்க நன்னாட் டணிபெற இருந்த
         தெங்குநிகர் இல்ல தெழிற்கிடங் கணிந்தது
         பொங்குமலர் நறுந்தார்ப் புனைமுடிப் பொற்கழல்
    110   அச்சங் கொள்ள ஆடுகொடி நுடங்கிச்
         சத்திக் குடத்தொடு தத்துறல் ஓம்பி
         விளங்குபு துளங்கும் வென்றித் தாகி
         அளந்துவரம் பறியா அரும்படை அடங்கும்
         வாயிலும் வனப்பு மேவிவீற் றிருந்து
    115   மதிலணி தெருவிற் றாகி மற்றோர்க்
         கெதிரில் போக வியல்பமை மரபொடு
         அடுதிறன் மள்ளரும் வடுவின்று காப்ப
         நெடுமுடி மன்னருண் மன்னன் நேரார்
    120   கடுமுரண் அழித்த காய்சின நெடுவேல்
         படுமணி யானைப் பைந்தார் வெண்குடை
         உக்கிர குலத்துள் அரசருள் அரசன்
         விற்றிறல் தானை விசயவரன் என்னும்
         நற்றிறன் மன்னன் நாளுங் காக்கும்
    125   சண்பைப் பெருநகர்ச் சால்பொடும் விளங்கிய
 
        [சண்பை நகரின் சிறப்பு]
     [103 முதல் 125 ஈறாக ஒரு தொடர்]
    103 - 125 ; உருமண்ணுவா........பெருநகர்
 
(பொழிப்புரை) முற்கூறப்பட்ட உருமண்ணுவாவின் தந்தையாகிய முனிவருடைய நண்பனும், (119) முடிமன்னருள்ளும் சிறந்த முடிமன்னனும், பகைவர் வலியை அழித்த நெடிய வேற்படையினையும் யானையினையும் கொற்றவெண் குடையினையும் உடையவனும், உக்கிர குலத்துத் தோன்றிய அரசருள்ளும் சிறந்த அரசனும், விரல்லாற்றல் மிக்க படையினையுடையோனும், ஆகிய. விசயவரன் என்னும் மன்னன் வீற்றிருந்து ஆட்சி செலுத்தும் தலைநகரமும், (105) மிக்க பேரியாறு பாய்ந்து பெருவளஞ் செய்யப்பெறுவதும், அவ்வங்க நாட்டிற்கே அழகுதருவதாய் அமைந்திருப்பதும், பிறநாட்டினும் தனக்கு ஒப்பாகும் நகரங்களில்லாததும், அழகிய அகழி சூழ்ந்ததும், வானத்தே இயங்கும் கந்தருவரும் தேவரும் அஞ்சுதற்குக் காரணமான வானுற உயர்ந்து நிற்கும் கொடிகள் ஆடா நிற்பதும், சூலம் நாட்டிய குடங்களோடு தன்பால் வாழ்வோர் துன்பத்தை அகற்றிப் பாதுகாக்கும் புகழான் விளங்கித் திசை தொறும் பரவும் வெற்றிப் புகழையும் உடையதும், எண்ணி எல்லைகாண வியலாத பெரும்படை அடங்கும் வாயிலையும் அழகினையும் மதில்களை அணிந்த தெருக்களையும் உடையவதும் மற்று அப்படைஞர் முதலிய தன்பால் வாழும் மக்கட்கு ஒப்பற்ற இன்பம் நல்கும் இயல்புடையதும் ஆற்றல்மிக்க நால்வகைப்படையானும் காக்கப்படுவதும் ஆகிய சண்பை என்னும் பெயரையுடைய பெரிய நகரத்தே என்க.
 
(விளக்கம்) 103 - 104. உருமண்ணுவாவின் பெருமுதுகுரவன்  தோழன், என்றது அம் முனிவனே இவர்க்கு அங்குச் சென்றுறைவீர் எனக் கூறச் செல்வாராயினர் என்றுணர்தற்குக் குறிப்பேதுவாய்  நிற்றல் நுண்ணிதினறிக,
    104. அவமில் குழ்ச்சி - வீண்போதலில்லாத முயற்சி, அவமில் குழ்ச்சித்  தவறு இல் தோழன் என்றது அவன் நகரத்தே உறைதலாற்றீங்கு நேராதென்று   அவர் துணிந்து சென்றனர் என்பதற்குக் குறிப்பேதுவாக நிற்றலும் உணர்க.
    107. கிடங்கு - அகழி.
    108 - 109. பெரிய மலர்களானாய நறிய மாலைகளணியப்டட்ட மூடியிலையும்   பொற்கழல் கட்டப்பட்ட அடியினையும் உடைய விச்சாதரரும் தேவகுமரரும் என்க.
    110. இக்கொடிகள் நம்மை ஊறுசெய்யுங் கொல் என்று அச்சங் கொள்ளக் காரணமாக அவர் இயங்கும் வானின்கண் உயர்ந்து நிற்கும் கொடிகள் என்பது கருத்து.
    111. சத்திக்குடம் - சூலம் நடப்பட்ட குடம் (கலசம்).    
    112. துளங்கும் வென்றி - பரவும் வெற்றிப்புகழ்.
    113, அரும்படை - பகைவர் வெல்லுதற்கரிய படை.
    115. தெருவிற்றாகி - தெருக்களை உடையதாய்.
    115. மற்றோர் - அப்படைஞர் முதலிய தன்பால் வாழ்வோர்க்கு.
    117. கொடுஞ்சி - தாமரைப்பூ வடிவமாகச் செய்து தேரின் முன் பக்கத்தே   நடப்படுவதோர் உறுப்பு.
    120. கடுமுரன் - கடிய வலிமை
    121. படுணி - ஓசைபடும் மணி
    122, உக்கிரகுலம்-ஐம்பெருங் குலத்துள் ஒன்று. அக்குலத்தே தோன்றிய அரசருள்ளும் சிறந்த அரசனாகிய என்க.
    124. நற்றிறல் - அரசற்கோதிய நல்ல திறமை எல்லாம் அமையப் பெற்ற என்க.