உரை
 
2. இலாவாண காண்டம்
 
20. சண்பையுள் ஒடுங்கியது
 
          முட்டில் வாழ்க்கைத் செட்டியர் பெருமகன்
          மித்திர காமன் மிக்குயர் பெருமனை
          வத்தவன் காதலி வாசவ தத்தையென்
          றத்தக வறிந்தோர் அவ்விடத் தின்மையின்
    130    ஆப்புடை நண்பின் அந்த ணாட்டியும்
          நீப்பருங் காதல் நிலைமைத் தோழியும்
          ஓங்கிய பெரும்புகழ் யூகியும் உகவாக்
          காப்பொடு புறநகர் மேற்படு பிழையாப்
          பூங்குழன் மாதரொடு புகுந்தன ராகி
    135   ஆங்கினி திருந்தனர் அவ்வழி மறைந்தென்.
 
         125 - 135 ; சால்பொடும்...................மறைந்தென்.
[ யூகி முதலியோர் அந்நகரத்தே மித்திரகாமன் என்னும் ஒரு
               வணிகன் வீட்டில் உறைதல் ]
 
(பொழிப்புரை) சான்றாண்மையோடு விளங்கா நின்றவனும் முட்டுப்பாடில்லாத வாழ்க்கையினை உடையவனும், வணிகர் குடியிற்றோன்றியவனும், மித்திர காமன் என்னும் பெயரையுடையவனுமாகிய ஒரு வணிகனுடைய மிக உயர்ந்த இல்லத்தின்கண், இவள் உதயணன் காதலியாகிய வாசவதத்தை என்னும் அவ் வுண்மையினை உணர்ந்தோர் யாரும் அங்கில்லா மையான் சாங்கியத்தாயும் பிரிதலியலாத அன்புடைத் தோழியாகிய காஞ்சன மாலையும் உயர்ந்த பெரிய புகழினையுடைய யூகியும் விரும்பித் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ளுதலோடு அப் புறநகர்ப் பகுதியில் தனது உயர்குலப் பண்பிற் றப்பாத இயல்புடைய வாசவதத்தையோடு புகுந்து அவ்விடத்திலேயே பிறர் அறியாதபடி மறைந்துறைவாராயினர் என்க.
 
(விளக்கம்) 125. சால்பு - பல நற்குணங்களான் நிறைந்து
  அக் குணங்களுக் கேற்ப ஒழுகும் இயல்பு. இதனை,
        'கடன்என்ப நல்லவை யெல்லாங் கடனறிந்து
         சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு'     (குறள் 981)
  என்றற் றொடக்கத்துத் திருக்குறள்களாலே உணர்க.
  வாசவதத்தை முதலிய மேன்மக்கள் இடையூறின்றி உறைதற்குத்தக்கது   என்றற்கு ஏதுக் கூறுவார், சால்பொடு விளங்கிய என்றும் முட்டில் வாழ்க்கை   என்றும் மிக்குயர் பெருமனை என்றும் விதந்தோதினார்.
    126, முட்டு - வறுமை,
    129. அத்தகவு - அத்தன்மை; ஈண்டு தகவு - உண்மை என்பதுபட நின்றது,
    130, ஆப்பு - யாப்பு; கட்டுதல், அந்தணாட்டி ; சாங்கியத்தாய்
    131. பிரிதல் இயலாத தலையன்பினையுடைய நிலைமையையுடைய
  காஞ்சனமாலை என்னும் தோழியும் என்க.
    132. உகவா - உகந்து; விரும்பி என்றவாறு.
    133, தம்மைத்தாமே காத்துக்கொள்ளும் காவலோடே என்க.
  ஈண்டுச்,
        'சிறைகாக்குங் காப்பெவன் செய்யும் மகளிர்
        நிறை காங்குங் காப்பே தலை.'         (குறள் 57)
  எனவரும் அருமைத் திருக்குறலையும்,
        'ஒருமை மகளிரே போலப் பெருமையுந்
        தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு' (குறள் - 974)
  எனவரும் திருக்குறளையும் நினைக.
  புறநகர் என்றது ஒரு நகரத்தினை அகநகர் இடைநகர் புறநகர் என்று பகுத்துக் கூறுவராகலின் இம் முக்கூற்றினுள் புறநகர் என்னும் கூற்றின்கண்   அமைந்த இடத்தில் (உள்ள அவ் வணிகன் மனையில்)  என்றவாறு. இதனைப்   புடைநகர் என்றலும் உண்டு.
  மேற்படி - மேன்மைக்குணம். படி - குணம். (சூடாமணி நிகண்டு  8 ; 79.)
        'இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச்
        செப்பமும் நாணும் ஒருங்கு'          (குறள் - 951)
  என்னும் குறளையும்,
       'ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம்முன்றும்
       இழுக்கார் குடிப்பிறந் தார்.'            (குறள் - 952)
  என்னும் குறளையும் இதனை ஓதும் நம்மனோர்க்கு நினைவூட்டுவார்
       'மேற்படி பிழையாப் பூங்குழன் மடந்தை'
  என வாசவதத்தையை விதந்து கூறினார்.
  (102) மறைந்தனர் போகி (125) சண்பைப்பெருநகர் மித்திரகாமன் பெருமனை
  (134) புகுந்தனராகி இனிதிருந்தனர் என இயைபு காண்க.

                 20. சண்பையுள் ஒடுங்கியது முற்றிற்று.


                                                                  இரண்டாவது
                                      இலாவாண காண்டம் முற்றுப்பெற்றது.

                     பெருங்கதை, இலாவாண காண்டத்திற்குப்
     பெருமழைப்புலவர், பொ. வே, சோமசுந்தரனார் எழுதிய
                     பொழிப்பும், விளக்கமும் முற்றும்
.