விசுவாமித்திரன் இராமனுக்குப் படைக்கலம் தருதல்

419.விண்ணவர் போய பின்றை
    விரிந்த பூ மழையினாலே
தண் எனும் கானம் நீங்கித்
    தாங்கரும் தவத்தின் மிக்கோன்
மண்ணவர் வறுமை நோய்க்கு
    மருந்து அன சடையன் வெண்ணெய்
அண்ணல் தன் சொல்லே
    அன்ன படைக்கலம் அருளினானே.
1

உரை
   
 
படைக்கலங்கள் இராமபிரானை அடைதல்

420.ஆறிய அறிஞன் கூறி அளித்தலும்,
    அண்ணல் தன் பால்
ஊறிய உவகை யோடும்
    உம்பர்தம் படைகள் எல்லாம்,
தேறிய மனத்தான் செய்த நல்
    வினைப் பயன்கள் எல்லாம்
மாறிய பிறப்பில் தேடி வருவ
    போல் வந்த அன்றே.
2

உரை
   
 
படைக்கலங்கள் இராமபிரானுக்குப் பணிபுரிய முன்வருதல்

421.‘மேவினம் பிரிதல் ஆற்றேம்; வீர!
    நீ விதியின் எம்மை
ஏவின செய்து நிற்றும் இளையவன்
    போல ‘என்று
தேவர் தம் படைகள் செப்பச் ‘செவ்விது‘
    என்று அவனும் நேரப்
பூவை போல் நிறத்தினாற்குப்
    புறம் தொழில் புரிந்த அன்றே.
3

உரை
   
 
இராமபிரான் வினாவும் விசுவாமித்திரன் விடையும்

422.இனையன நிகழ்ந்த பின்னர்க் காவதம்
    இரண்டு சென்றார்,
அனையவர் கேட்க ஆண்டு ஓர்
    அரவம் வந்து அணுகித் தோன்ற,
‘முனைவ! ஈது யாவது? ‘என்று
    முன்னவன் வினவப் பின்னர்
வினை அற நோற்று நின்ற மேலவன்
    விளம்பலுற்றான
4

உரை
   
 
விசுவாமித்திரனும் இராமலக்குமணரும் கோமதி நதியை அடைதல்

423.‘மானச மடுவில் தோன்றி
    வருதலால் சரயு என்றே
மேல் முறை அமரர் போற்றும்
    விழு நதி அதனினோடும்,
ஆன கோமதி வந்து எய்தும்
    அரவம் அது ‘என்ன அப்பால்
போனபின், பவங்கள் தீர்க்கும்
    புனித மா நதியை உற்றார்.
5

உரை
   
 
கௌசிகி நதியின் வரலாறு (424-433)

குசன் மக்கட்பேறு

424.‘சுரர் தொழுது இறைஞ்சற்கு ஒத்த
    தூ நதி யாவது? ‘என்று
வர முனிதன்னை அண்ணல்
    வினவுற, மலருள் வைகும்
பிரமன் அன்று அளித்த வென்றிப்
    பெரும் தகை குசன் என்று ஓதும்
அரசர் கோன், மனைவி தன் பால்
    அளித்தவர் நால்வர் ஆவர்.
6

உரை
   
 
குசனுடைய மைந்தர் பெயரும் அவர்
ஆண்ட நகரங்களின் பெயரும்

425.குசன், குசநாபன், கோது இல்
    குணத்தின் ஆதூர்த்தன், கொற்றத்து
இசை கெழு வசு என்று ஓதும்
    இவர் பெயர், இவர்கள் தம் உள்
குசன் கவுசாம்பி, நாபன்
    குளிர் மகோதயம், ஆதூர்த்தன்
வசை இல் தன்மம் வனம், மற்றை
    வசு கிரிவிரசம் வாழ்ந்தார
7

உரை
   
 
குசநாபற்கு நூறு பெண்கள் பிறந்தமை

426.அவர்களில் குசநாபற்கே ஐயிரு
    பதின்மர் அம் சொல்
துவர் இதழ்த் தரெிவை நல்லார்
    தோன்றினர், வளரும் நாளில்,
இவர், பொழில் தலைக்கண் ஆயத்து
    எய்துழி, வாயு எய்திக்,
கவர் மனத்தினன் ஆய், அந்தக்
    கன்னியர் தம்மை நோக்கி.
8

உரை
   
 
நூறு மகளிரும் வாயுதேவன் விருப்பிற்கு
இசையாது இடர் உறுதல்

427.‘கொடித் தனி மகரம் கொண்டான்
    குனி சிலைச் சரத்தால் நொந்தேன்;
வடித் தடம் கண்ணீர்! ‘என்னை மணத்திர்‘
    என்று உரைப்ப எந்தை
அடி தலத்து உரைத்து, நீரோடு
    அளித்திடின் அணைதும் ‘என்ன,
ஒடித்தனன் வெரிநை; வீழ்ந்தார்
    ஒளி வளை மகளிர் எல்லாம
9

உரை
   
 
குசநாபன் மகளிரைப் பிரமதத்தனுக்கு மணஞ்செய்வித்தல்

428.சமிரணன் அகன்ற பின்னர்த், தையலார்
    தவழ்ந்து சென்றே
அமிர்து உகு குதலை மாழ்கி,
    அரசன் மாட்டு உரைப்ப, அன்னான்
நிமிர் குழல் மடவார்த் தேற்றி,
    நிறை தவன் சூளி நல்கும்
திமிர் அறு பிரமதத்தற்கு அளித்தனன்,
    திரு அனாரை.
10

உரை
   
 
மகளிர் கூன்நீக்கமும் குசநாபன் புதல்வற்பேறும்

429.அவன் மலர்க் கைகள் தீண்டக், கூன்
    நிமிர்ந்து அழகு வாய்த்தார்;
புவனம் முற்று உடைய கோவும்
    புதல்வர் இல்லாமை, வேள்வி
தவர்களின் புரிதலோடும், தகை உறு
    அத் தழலின் நாப்பண்
கவன வேகத் துரங்கக் காதி
    வந்து உதயம் செய்தான
11

உரை
   
 
காதி அரசெய்தியதும் மக்களைப் பெற்றதும்

430.அன்னவன் தனக்கு வேந்தன்
    அரசொடு முடியும் ஈந்து,
பொன் நகர் அடைந்த பின்னர்ப்,
    புகழ் மகோதயத்தில் வாழும்
மன்னவன் காதிக்கு, யானும்
    கவுசிகி என்னும் மாதும்
முன்னர் வந்து உதிப்ப, அந்த
    முடி உடை வேந்தர் வேந்தன்.
12

உரை
   
 
கௌசிகியை இரிசிகன் மணந்து வாழ்ந்து
பிரமபதம் புகுதல்

431.பிருகுவின் மதலை ஆய
    பெரும் தகை பிதாவும் ஒவ்வா
இரிசிகன் என்பவற்கு மெல்
    இயலாளை ஈந்தான்;
அரு மறை அவனும் சில் நாள்
    அறம் பொருள் இன்பம் முற்றி
விரி மலர்த் தவிசோன் தன் பால்
    விழுத் தவம் செய்து மீண்டான்
13

உரை
   
 
இரிசிகன் பிரமனுலகிற் புகுதல்

432.காதலன் சேணில் நீங்கக்
    கௌசிகி தரிக்கல் ஆற்றாள்,
மீது உறப் படரல் உற்றாள்,
    விழு நதி வடிவம் ஆகி;
மா தவர்க்கு அரசும் நோக்கி,
    “மா நிலத்து உறுகண் நீக்கப்
போதுக நதியாய்‘‘ என்னாப்
    பூ மகன் உலகு புக்கான்.
14

உரை
   
 
கௌசிகி வரலாறு கேட்டு வியந்த
குமரர் வினாவும் முனிவன் விடையும்

433.‘எம் முனாள் நங்கை, இந்த
    இரு நதி ஆயினாள் ‘என்று
அம் முனி புகலக் கேளா
    அதிசயம் மிகவும் தோன்றச்
செம்மலும் இளைய கோவும்
    சிறிது இடம் தீர்ந்த பின்னர்
‘மை மலி பொழில் யாது? என்ன
    மாதவன் கூறல் உற்றான்.
15

உரை
   
 
சித்தாச்சிரமத்தின் பெருமை

434.‘தங்கள் நாயகரில், தயெ்வம்
    தான் பிறிது இல் ‘என்று எண்ணும்
மங்கைமார் சிந்தை போலத் தூயது;
    மற்றும் கேளாய்!
எம் கண் நால் மறைக்கும் தேவர்
    அறிவுக்கும் பிறர்க்கும் எட்டாச்
செம் கண் மால் இருந்து மேல் நாள்
    செய் தவம் செய்தது; அன்றே.
16

உரை
   
 
திருமால் தவஞ்செய்தமை

435.‘பாரின் பால் விசும்பின் பாலும்
    பற்று அறப் படிப்பது, அன்னான்
பேர் ‘என்பான், ‘அவன் செய் மாயப்
    பெரும் பிணக்கு ஓருங்கு தேர்வார்
ஆர்? ‘என்பான், அமல மூர்த்தி
    கருதியது, அறிதல் தேற்றாம்;
ஈர் ஐம்பான் ஊழிக் காலம்
    இரும் தவம் இயற்றி இட்டான
17

உரை
   
 
மாவலி வரலாறு (436-452)

மாவலி மூன்றுலகும் வௌவுதல்

436.ஆனவன் இங்கு உறைகின்ற
    அந் நாள் வாய்,
ஊனம் இல் ஞாலம் ஒடுங்கும்
    எயிற்று ஆண்
ஏனம் எனும் திறல் மாவலி
    என்பான்,
வானமும் வையமும் வௌவுதல்
    செய்தான்.
18

உரை
   
 
மாவலி வேள்வி முற்றித் தானம் வழங்கக் கருதுதல்

437.செய்தவன் வானவரும் செயல் ஆற்றா
நெய் தவழ் வேள்வியை முற்றினன் நின்றான்
ஐயம் இல் சிந்தையன் அந்தணர் தம்பால்
வையமும் யாவும் வழங்க வலித்தான்.
19

உரை
   
 
தேவர்முறையீடும் திருமால் அருளுதலும்

438.ஆயது அறிந்தனர் வானவர் அந்நாள்
மாயனை வந்து வணங்கி இரந்தார்;
‘தீயவன் வெம் தொழில் தீர் ‘என நின்றார்;
நாயகனும் அது செய்ய நயந்தான்.
20

உரை
   
 
திருமால் காசிபன் மகவாதல்

439.காலம் நுனித்து உணர் காசிபனுக்கும்
வால் அதிதிக்கும் ஒர் மா மகவு ஆகி
நீல நிறத்து நெடும் தகை வந்து ஓர்
ஆல் அமர் வித்தின் அரும் குறள் ஆனான்.
21

உரை
   
 
வாமனன் மாவலியிடம் செல்லுதல்

440.முப்புரி நூலினன் முஞ்சியன் விஞ்சை
கற்பது ஒர் நாவன் அனல் படு கையன்
அற்புதன் அற்புதரே அறியும் தன்
சித் பதம் ஒப்பது ஒர் மெய்க்கொடு சென்றான்.
22

உரை
   
 
மாவலி வாமனனை வரவேற்று முகமன் கூறுதல்

441.அன்று அவன் வந்தது
    அறிந்து, உலகு எல்லாம்
வென்று அவன் முந்தி
    வியந்து, எதிர் கொண்டான்;
‘நின் தனின் அந்தணர்
    இல்லை; நிறைந்தோய்
என் தனின் உய்ந்தவர்
    யார் உளர்? ‘என்றான
23

உரை
   
 
வாமனன் மாவலியைப் பாராட்டுதல்

442.ஆண் தகை அவ் வகை கூற அறிந்தோன்
‘வேண்டினர் வேட்கையின் மேல்பட வீசி
நீண்ட கையாய்! இனி நின் உழை வந்தோர்
மாண்டவர்; அல்லவர் மாண்பு இலர் ‘என்றான்.
24

உரை
   
 
மாவலி வழங்கலும் வெள்ளி தடுத்தலும்

443.சிந்தை உவந்து எதிர் ‘என் செய? ‘என்றான்
அந்தணன் ‘மூவடி மண் அருள் உண்டேல்
வெம் திறலோய்! தரவேண்டும் ‘எனா முன்
‘தந்தனன் ‘என்றனன் : வெள்ளி தடுத்தான்.
25

உரை
   
 
வெள்ளி கூறிய தடையுரை

444.‘கண்ட திறத்து இது கைதவம் ஐய!
கொண்டல் நிறக் குறள் என்பது கொள்ளேல்;
அண்டமும் முற்றும் அகண்டமும் மேல் நாள்
உண்டவன் ஆம் இது உணர்ந்து கொள்! ‘என்றான்.
26

உரை
   
 
வெள்ளியை நோக்கி மாவலி விளம்பல் (445-451)

445.‘நினக்கு இலை; என் கை
    நிமிர்ந்து இட, வந்து
தனக்கு இயலா வகை
    தாழ்வது, தாழ்வு இல்
கனக் கரி ஆனது
    கைத்தலம் என்னின்,
எனக்கு இதன் மேல் நலம்
    யாது கொல்? ‘என்றான்.
27

உரை
   
 
446.‘துன்னினர் துன்னலர் என்பது சொல்லார்
முன்னிய நல் நெறி நூலவர் முன் வந்து
உன்னிய தானம் உயர்ந்தவர் கொள்க
என்னின் இவன் துணை யாவர் உயர்ந்தார்?
28

உரை
   
 
447.‘வெள்ளியை ஆதல் விளம்பினை; மேலோர்
வள்ளியர் ஆக வழங்குவது அல்லால்
எள்ளுவ என் சில? இன் உயிரேனும்
கொள்ளுதல் தீது; கொடுப்பது நன்றால்.
29

உரை
   
 
448.‘மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கள்; மாயாது
ஏந்திய கை கொடு இரந்தவர்; எந்தாய்!
வீந்தவர் என்பவர்; வீந்தவரேனும்
ஈந்தவர் அல்லது இருந்தவர் யாரே?
30

உரை
   
 
449.‘அடுப்ப அரும் பழி செய்ஞ்ஞரும் அல்லர்
கொடுப்பவர் முன்பு ‘கொடேல் ‘என நின்று
தடுப்பவரே பகை; தம்மையும் அன்னார்
கெடுப்பவர்; அன்னது ஒர் கேடு இலை ‘என்றான்.
31

உரை
   
 
450.கட்டுரையில் ‘தம கைத்து உள போழ்தே
இட்டு இசை கொண்டு அறன் எய்த முயன்றோர்
உள் தறெு வெம் பகை ஆவது உலோபம்;
விட்டு இடல் ‘என்று விலக்கினர் தாமே.
32

உரை
   
 
451.‘எடுத்து, ஒருவருக்கு ஒருவர்
    ஈவதனின் முன்னே,
தடுப்பது, நினக்கு அழகிதோ?
    தகவு இல் வெள்ளி!
கொடுப்பது விலக்கு
    கொடியோர் தமது சுற்றம்,
உடுப்பதுவும் உண்பதுவும்
    இன்றி ஒழியும் காண்.
33

உரை
   
 
மாவலி வாமனனுக்கு மூன்றடி மண் தருதல்

452.முடிய இம் மொழி எலாம்
    மொழிந்து, மந்திரி
கொடியன், என்று உரைத்த சொல்
    ஒன்றும் கொண்டிலன்
‘அடி ஒரு மூன்றும் நீ
    அளந்து கொள்க ‘என,
நெடியவன் குறிய கை
    நீரில் நீட்டினான
34

உரை
   
 
குறளன் நெடியோனாதல்

453.கயம் தரும் நறும் புனல்
    கையில் தீண்டலும்,
பயந்தவர்களும் இகழ் குறளன்,
    பார்த்து, எதிர்
வியந்தவர், வெருக் கொள,
    விசும்பின் ஓங்கினான்;
உயர்ந்தவர்க்கு உதவிய
    உதவி ஒப்பவே.
35

உரை
   
 
திரிவிக்கிரமன் உலகளந்தமை

454.நின்ற கால், மண் எலாம்
    நிரம்பி, அப்புறம்
சென்று பாவிற்று இலை
    சிறிது பார் எனா,
ஒன்ற வான் அகம் எலாம்
    ஒடுக்கி, உம்பரை
வென்ற கால், மீண்டது,
    வெளி பெறாமையே
36

உரை
   
 
விசுவாமித்திரமுனிவன் வாமனனை வியத்தல்

455.‘உலகு எலாம் உள் அடி அடக்கி
    ஓர் அடிக்கு
அலகு இலாது அவ் அடிக்கு
    அன்பன் மெய்யதாம்;
இலை குலாம் துழாய் முடி
    ஏக நாயகன்,
சிலை குலாம் தோளினாய்!
    சிறியன் சாலவே!
37

உரை
   
 
வாமனன் இந்திரனுக்கு விண்ணுலகம் ஈந்து
தன் முன்னையிடம் சேர்தல்

456.‘உரியது இந்திரற்கு ‘என
    உலகம் ஈந்து போய்,
விரி திரைப் பால் கடல்
    பள்ளி மேவினான்;
கரியவன் உலகு எலாம்
    கடந்த தாள் இணை
திருமகள் கரம் தொடச்
    சிவந்து காட்டவே.
38

உரை
   
 
சித்தாச்சிரமத்தின் பெருமை

457.‘ஆதலால், அரு வினை
    அறுக்கும்; ஆரிய!
காதலால் கண்டவர் பிறவி
    காண்குறார்;
வேத நூல் முறைமையால்
    வேள்வி முற்றுவேற்கு
ஈது அலால் இல்லை வேறு
    இருக்கல் பாலதே
39

உரை
   
 
விசுவாமித்திரன் வேள்வி தொடங்குதல்

458.‘ஈண்டு இருந்து இயற்றுவென்,
    யாகம் யான், ‘ எனா,
நீண்ட பூம் பழுவத்து
    நெறியின் எய்திப், பின்
வேண்டுவ கொண்டு, தன்
    வேள்வி மேவினான்,
காண் தகு குமரரைக்
    காவல் ஏவியே.
40

உரை
   
 
வேள்வியை இராமலக்குமணர் காத்தல்

459.எண்ணுதற்கு ஆக்க அரிது; இரண்டு மூன்று நாள்
விண்ணவர்க்கு ஆக்கிய முனிவன் வேள்வியை
மண்ணினைக் காக்கின்ற மன்னன் மைந்தர்கள்
கண்ணினைக் காக்கின்ற இமையில் காத்தனர்.
41

உரை
   
 
இராமபிரான் அரக்கர் எப்பொழுது வருவர்
என முனிவனை வினவுதல்

460.காத்தனர் திரிகின்ற காளை வீரரில்
மூத்தவன் முழுது உணர் முனியை முன்னி “நீ
தீத் தொழில் இயற்றுவர் என்ற தீயவர்
ஏத்த அரும் குணத்தினாய்! வருவது என்று?“ என்றான்.
42

உரை
   
 
அரக்கர் வருதல்

461.வார்த்தை மாறு உரைத்திலன்
    முனிவன், மௌனியாய்ப்
போர்த் தொழில் குமரனும்
    தொழுது போந்த பின்
பார்த்தனன் விசும்பினைப்,
    பருவ மேகம் போல்
ஆர்த்தனர், இடித்தனர்,
    அசனி அஞ்சவே.
43

உரை
   
 
அரக்கர் சினந்து பொருதல் (462-463)

462.எய்தனர் எறிந்தனர் எரியும் நீருமா
பெய்தனர் பெரும் வரை பிடுங்கி வீசினர்
வைதனர் தழெித்தனர் மழுக் கொண்டு ஓச்சினர்
செய்தனர் ஒன்று அல தீய மாயமே.
44

உரை
   
 
463.ஊன் நகு படைக்கலம் உருத்து வீசின
கானகம் மறைத்தன கால மாரி போல்;
மீன் நகு திரைக் கடல் விசும்பு போர்த்து என
வானகம் மறைத்தன வளைந்த சேனையே.
45

உரை
   
 
வளைந்த சேனையின் தோற்றம்

464.வில்லொடு மின்னு வாள்
    மிடைந்து உலாவிடப்
பல் இயம் கடிப்பினின்
    இடிக்கும் பல் படை
ஒல் என உரறிய
    ஊழிப் பேர்ச்சியின்,
வல்லை வந்து எழுந்தது
    ஓர் மழையும் போன்றதே.
46

உரை
   
 
அரக்கர் படையினை
இராமபிரான் இலக்குவற்குக் காட்டுதல்

465.“கவர் உடை எயிற்றினர்,
    கடித்த வாயினர்,
துவர் நிறப் பங்கியர்,
    சுழல் கண் தீயினர்,
பவர் சடை அந்தணன்
    பணித்த தீயவர்,
இவர்‘‘ என இலக்குவற்கு
    இராமன் காட்டினான்.
47

உரை
   
 
இலக்குவன் இராமபிரானிடம் கூறுதல்

466.கண்ட அக் குமரனும்,
    கடைக் கண் தீ உக
விண் தனை நோக்கித் தன்
    வில்லை நோக்கினான்;
“அண்டர் நாயக! இனிக் காண்டி;
    ஈண்டு அவர்
துண்டம் வீழ்வன‘‘ எனத்
    தொழுது சொல்லினான்.
48

உரை
   
 
இராமபிரான் வேள்விச்சாலையைச் சரக்கூடமாக்குதல்

467.‘தூம வேல் அரக்கர் தம் நிணமும் சோரியும்
ஓம வெம் கனல் இடை உகும் ‘என்று உன்னி அத்
தாமரைக் கண்ணனும் சரங்களே கொடு
கோமுனி இருக்கை ஓர் கூடம் ஆக்கினான்.
49

உரை
   
 
சித்தாச்சிரம முனிவர் இராமபிரானிடம்
அடைக்கலம் புகுதல்

468.நஞ்சு அட எழுதலும் நடுங்கி நாள் மதிச்
செஞ் சடைக் கடவுளை அடையும் தேவர் போல்
வஞ்சனை அரக்கரை வெருவி மாதவர்
‘அஞ்சன வண்ண; நின் அபயம் யாம் ‘என்றார்.
50

உரை
   
 
இராமபிரான் அரக்கரொடு பொருதல்

469.கவித்தனன் கரதலம்;
    கலங்கலீர் எனச்
செவித் தலம் நிறுத்தினன்
    சிலையின் தயெ்வ நாண்;
புவித் தலம் குருதியின்
    புணரி ஆக்கினன்;
குவித்தனன் அரக்கர் தம்
    சிரத்தின் குன்றமே.
51

உரை
   
 
இராமபிரான் ஏவிய வாளி

470.திருமகள் நாயகன் தயெ்வ வாளி தான்.
வெரு வரு தாடகை பயந்த வீரர்கள்
இருவரில் ஒருவனைக் கடலின் இட்டது; அங்கு
ஒருவனை அந்தகன் புரத்தின் உய்த்ததே.
52

உரை
   
 
சுவாகுவைக் கொன்று மாரீசனைக்
கடலிலே தள்ளுதல்

471.துணர்த்த பூந் தொடையலான்
    பகழி தூவினான்,
கணத்து இடை விசும்பினைக்
    கவித்துத் தூர்த்தலால்,
பிணத்து இடை நடந்து ‘இவர்
    பிடிப்பர் ஈண்டு ‘எனா
உணர்த்தினர் ஒருவர் முன்
    ஒருவர் ஓடினார்.
53

உரை
   
 
அரக்கர் படை இரிந்து ஓடுதல்

472.ஓடின அரக்கரை உருமின் வெம் கணை
கூடின; குறைத்தலை மிறைத்துக் கூத்து நின்று
ஆடின; அலகையும் ஐயன் கீர்த்தியைப்
பாடின; பரந்தன பறவைப் பந்தரே.
54

உரை
   
 
போர்க்களத்தில் நிகழ்ந்தவை

473.பந்தரைக் கிழித்தது பரந்த பூ மழை;
அந்தர துந்துமி முகிலின் ஆர்த்தன;
இந்திரன் முதலிய அமரர் ஈண்டினர்
சுந்தர வில்லியைத் தொழுது வாழ்த்தினார்.
55

உரை
   
 
தேவர்கள் இராமபிரானைப் பாராட்டுதல்

474.புனித மா தவர், ஆசியின்
    பூ மழை பொழிந்தார்;
அனைய கானத்து மரங்களும்,
    அலர் மழை சொரிந்த;
முனியும், அவ் வழி வேள்வியை
    முறைமையின் முற்றி,
இனிய சிந்தையன், இராமனுக்கு
    இனையன இசைத்தான
56

உரை
   
 
475.“பாக்கியம் எனக்கு உளது என
    நினைவுறும் பான்மை
போக்கி, நிற்கு இது பொருள் என
    உணர்கிலென், புவனம்
ஆக்கி மற்று அவை அகிலமும்
    அணி வயிற்று அடக்கிக்
காக்கும் நீ, ஒரு வேள்வி
    காத்தனை எனும் கருத்தே.
57

உரை
   
 
விசுவாமித்திர முனிவன் இராமபிரானைப் பாராட்டுதல்

476.என்று கூறிய பின்னர், அவ்
    எழில் மலர்க் கானத்து
அன்று தான் உறைந்து,
    அருந்தவ முனிவரோடு இருந்த
குன்று போல் குணத்தான் எதிர்,
    கோசலை குரிசில்,
‘இன்று யான் செயும் பணி என் கொல்?
    பணி ‘என இசைத்தான்
58

உரை
   
 
இராமபிரான் முனிவன்பால் இன்று
யான்செய்யும் பணி என் எனல்

477.“அரிய யான் சொலின் ஐய! நின்கு
    அரியது ஒன்று இல்லை;
பெரிய காரியம் உள; அவை
    முடிப்பது பின்னர்;
விரியும் வார் புனல் மருதம் சூழ்
    மிதிலையர் கோமான்
புரியும் வேள்வியும் காண்டும் நாம்
    எழுக‘‘ எனப் போனார
59

உரை