மிதிலை வருணனை : கொடிகளின் தோற்றம்

564.மை அறு மலரின் நீங்கி, யான் செய்
    மா தவத்தின் வந்து,
செய்யவள் இருந்தாள் : என்று,
    செழு மணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி, அந்தக் கடி நகர்,
    கமலச் செங்கண்
ஐயனை ‘ஒல்லை வா ‘என்று
    அழைப்பது போன்றது அம்மா.
1

உரை
   
 
565.நிரம்பிய மாடத்து உம்பர்
    நீள்மணிக் கொடிகள் எல்லாம்,
தரம் பிறர் இன்மை உன்னித்
    தருமமே தூது செல்ல,
‘வரம்பு இல் பேர் அழகினாளை மணம் செய்வான்
    வருகின்றான்‘ என்று
அரம்பையர் விசும்பின் ஆடும் ஆடலின்
    ஆடக் கண்டார்.
2

உரை
   
 
மிதிலையுள் மூவரும் கண்ட காட்சிகள் (566-584)

யானைப் போர்

566.தயிர் உறு மத்தில் காம சரம் படத்
    தலைப்பட்டு ஊடும்
உயிர் உறு காதலாரின், ஒன்றை
    ஒன்று ஒருவகில்லாச்
செயிர் உறும் மனத்த ஆகித்,
    தீத் திரள் செங்கண் சிந்த,
வயிர வாள் மருப்பு யானை,
    மலை என மலைவ கண்டார்.
3

உரை
   
 
துகில் கொடித் தோற்றம்

567.பகல் கதிர் மறைய வானம்
    பால் கடல் கடுப்ப நீண்ட
துகில் கொடி, மிதிலை மாடத்து உம்பரில்
    துவன்றி நின்ற,
முகில் குலம் தடவும் தோறும் நனைவன;
    முகிலின் சூழ்ந்த
அகில் புகை கதுவும் தோறும் புலர்வன
    ஆடக், கண்டார
4

உரை
   
 
மூவரும் மிதிலை மா நகரின் உட்செல்லுதல்

568.ஆதரித்து அமுதில் கோல் தோய்த்து
    ‘அவயவம் அமைக்கும் தன்மை
யாது?‘ எனத் திகைக்கும் அல்லால்
    மதனற்கும் எழுத ஒண்ணாச்
சீதையைத் தருதலாலே திருமகள்
    இருந்த செய்ய
போது எனப் பொலிந்து தோன்றும்
    பொன் மதில் மிதிலை புக்கார்.
5

உரை
   
 
மூவரும் மிதிலை நகர் வீதியிற் செல்லுதல் (569-571)

569.சொல் கலை முனிவன் உண்ட
    சுடர் மணிக் கடலும், துன்னி
அல் கலந்து இலங்கு பல் மீன்
    அரும்பிய வானும் போல,
வில் கலை நுதலினாரும் மைந்தரும்
    வெறுத்து நீத்த
பொன் கலன் கிடந்த மாட
    நெடுந் தரெு அதனில் போனார்.
6

உரை
   
 
570.தாறு மாய் தறுகண் குன்றம்
    தட மத அருவி தாழ்ப்ப,
ஆறும் ஆய்க், கலின மா விலாழியால்
    அழிந்து ஓர் ஆறாய்ச்,
சேறும் ஆய்த், தேர்கள் ஓடத்
    துகளும் ஆய், ஒன்றோடு ஒன்று
மாறு மாறு ஆகி, வாளா
    கிடக்கிலா மறுகில் சென்றார்
7

உரை
   
 
571.தண்டுதல் இன்றி ஒன்றித் தலை
    தலை சிறந்த காதல்
உண்டபின், கலவிப் போரின்
    ஒசிந்த மென் மகளிரே போல்
பண் தரு கிளவியார் தம்
    புலவியில் பரிந்த கோதை,
வண்டொடு கிடந்து, தேன் சோர்
    மணி நெடும் தரெுவில் சென்றார்.
8

உரை
   
 
மகளிர் ஆடல்

572.நெய் திரள் நரம்பில் தந்த
    மழலையின் இயன்ற பாடல்,
தைவரு மகர வீணை தண்ணுமை
    தழுவித் தூங்கக்,
கை வழி நயனம் செல்லக்,
    கண் வழி மனமும் செல்ல,
ஐய நுண் இடையார் ஆடும்
    ஆடக அரங்கு கண்டார்.
9

உரை
   
 
மாதர்கள் ஊசலாடுதல்

573.பூசலின் எழுந்த வண்டு,
    மருங்கினுக்கு இரங்கிப் பொங்க,
மாசு உறு பிறவி போல
    வருவது போவது ஆகிக்,
காசு அறு பவளச் செங்காய்
    மரகதக் கமுகில் பூண்ட
ஊசலில், மகளிர், மைந்தர்
    சிந்தையோடு உலவக் கண்டார்.
10

உரை
   
 
கடைவீதிகளின் சிறப்பு

574.வரம்பு அறு மணியும் பொன்னும்
    ஆரமும் கவரி வாலும்
சுரத்து இடை அகிலும் மஞ்ஞைத்
    தோகையும் தும்பிக் கொம்பும்,
குரம்பு அணை நிரப்பும் மள்ளர்
    குவிப்பு உற, கரைகள் தோறும்
பரப்பிய பொன்னி அன்ன
    ஆவணம் பலவும் கண்டார்.
11

உரை
   
 
மூவரும் மகளிரிசைகேடு ஏகல்

575.வள் உகிர்த் தளிர் கை நோவ
    மாடகம் பற்றி, வார்ந்த
கள் என நரம்பு வீக்கிக்,
    கையொடு மனமும் கூட்டி,
வெள்ளிய முறுவல் தோன்ற
    விருந்து என, மகளிர் ஈந்த
தெள் விளி பாணித் தீம் தேன்,
    செவி மடுத்து இனிது சென்றார்.
12

உரை
   
 
குதிரைகள் சுழன்றோடுதல்

576.கொட்பு உறு கலினம் பாய்மா,
    குலால் மகன் முடுக்கி விட்ட
மண் கலம் திகிரி போல
    வாளியின் வருவ, மேலோர்
நட்பினின் இடை அறாவாய், ஞானியர்
    உணர்வின் ஒன்றாய்க்,
கண் புலத்து இனைய என்று
    தரெிவில திரியக் கண்டார்.
13

உரை
   
 
மாடங்களில் மாதர்கள் காட்சி

577.வாள் அரம் பொருத வேலும், மன்மதன்
    சிலையும், வண்டின்
கேெளாடு கிடந்த நீலச் சுருளும், செம்
    கிடையும் கொண்டு,
நீள் இரும் களங்கம் நீக்கி,
    நிரை மணி மாட நெற்றிச்
சாளரம் தோறும் தோன்றும்,
    சந்திர உதயம் கண்டார்.
14

உரை
   
 
மதுவருந்தி ஊடிய மகளிர் முகக்காட்சி

578.பளிக்கு வள்ளத்து வார்த்த
    பசு நறுந் தேறல் மாந்தி,
வெளிப்படு நகைய ஆகி,
    வெறியன மிழற்றுகின்ற,
ஒளிப்பினும் ஒளிக்க ஒட்டா
    ஊடலை உணர்த்துமா போல்
களிப்பினை உணர்த்தும் செவ்விக்
    கமலங்கள் பலவும் கண்டார்.
15

உரை
   
 
மகளிர் பந்தாடுங் காட்சி

579.மெய் வரு போகம் ஒக்க உடன் உண்டு
    விலையும் கொள்ளும்,
பை அரவு அல்குலார் தம் உள்ளமும்,
    பளிங்கும் போல
மை அரி நெடும் கண் நோக்கம்
    படுதலும் கருகி வந்து,
கை புகில் சிவந்து காட்டும்,
    கந்துகம் பலவும் கண்டார்.
16

உரை
   
 
மகளிர் வட்டாடும் இடங்கள்

580.கடகமும் குழையும் பூணும் ஆரமும்
    கலிங்க நுண் நூல்
வடகமும் மகர யாழும்
    வட்டினி கொடுத்து, வாசத்
தொடையல் அம் கோதை சோர,
    பளிங்கு நாய் சிவப்பத் தொட்டுப்,
படை நெடுங் கண்ணார் வட்டு ஆட்டு
    ஆடு இடம் பலவும் கண்டார்.
17

உரை
   
 
நீர்நிலைகளில் மகளிராடுங் காட்சி

581.பங்கயம் குவளை ஆம்பல்
    படர் கொடி வள்ளை நீலம்
செங் கிடை தரங்கக் கெண்டை
    சினை வரால் இனைய தேம்பத்,
தங்கள் வேறு உவமை இல்லா
    அவயவம் தழுவிச், சாலும்
மங்கையர் விரும்பி ஆடும்
    வாவிகள் பலவும் கண்டார்.
18

உரை
   
 
மைந்தர் வட்டாடும் இடங்கள்

582.இயங்குறு புலன்கள் அங்கும்
    இங்கும் கொண்டு ஏக ஏகி,
மயங்குபு திரிந்து நின்று
    மறுகுறும் உணர்வு இது, என்னப்
புயங்களில் கலவைச் சாந்தும்
    புணர் முலைச் சுவடும் நீங்காப்
பயம் கெழு குமரர் வட்டாட்டு
    ஆடிடம் பலவும் கண்டார்.
19

உரை
   
 
இளமைந்தர்களின் காட்சி

583.வெம் சுடர் உரு உற்று அன்ன
    மேனியர், வேண்டிற்று ஈயும்
நெஞ்சினர், ஈசன் கண்ணில்
    நெருப்பு உறா அனங்கன் அன்னார்
செம் சிலை கரத்தர், மாதர்
    புலவிகள் திருத்திச் சேந்த
குஞ்சியர், சூழ நின்ற
    மைந்தர்கள் குழாங்கள் கண்டார்.
20

உரை
   
 
பூஞ்சோலைகளின் காட்சி

584.பாகு ஒக்கும் சொல் பைங்கிளியோடும்
    பல பேசி,
மாகத்து உம்பர் மங்கையர் நாண
    மலர் கொய்யும்,
தோகைக் கொம்பின் அன்னவர்க்கு,
    அன்னம் நடை தோற்றுப்
போகக் கண்டு, வண்டு இனம் ஆர்க்கும்
    பொழில் கண்டார
21

உரை
   
 
அரண்மனையைச் சூழ்ந்துள்ள அகழி

585.உம்பர்க்கு ஏயும் மாளிகை ஒளி
    நிழல் பாய,
இம்பர்த் தோன்றும் நாகர் தம் நாட்டின்
    எழில் காட்டிப்,
பம்பிப் பொங்கும் கங்கையின் ஆழ்ந்த
    படை மன்னன்
அம் பொன் கோயில் பொன் மதில்
    சுற்றும் அகழ் கண்டார்.
22

உரை
   
 
கன்னிமாடத்தை அணுகி நிற்றல்

586.பொன்னின் சோதி, போதினின் நாற்றம்,
    பொலிவே போல்
தனெ் உண் தேனில் தீம் சுவை, செம் சொல்
    கவி இன்பக்
கன்னிம் மாடத்து உம்பரின் மாடே,
    களி பேடோடு
அன்னம் ஆடும் முன் துறை கண்டு
    அங்கு அயல் நின்றார்.
23

உரை
   
 
கன்னிமாடத்துள்ள சீதாதேவியின் சிறப்பு (587-593)

587.செப்பும் காலைச், செங்கமலத்தோன்
    முதல் யாரும்
எப் பெண்பாலும் கொண்டு
    உவமிப்போர் உவமிக்கும்
அப் பெண் தானே ஆயின போது,
    இங்கு அயல் வேறு ஓர்
ஒப்பு, எங்கே கொண்டு எவ் வகை
    நாடி உரை செய்வேம்.
24

உரை
   
 
588.உமையாள் ஒக்கும் மங்கையர்
    உச்சிக் கரம் வைக்கும்
கமை ஆள் மேனி கண்டவர்,
    காட்சிக் கரை காணார்,
இமையா நாட்டம் பெற்றிலம்
    என்றார், இரு கண்ணால்
அமையாது என்றார் அந்தர
    வானத்தவர் எல்லாம்.
25

உரை
   
 
589.வென்று அம் மானைத் தார் அயில்
    வேலும் கொலை வாளும்
பின்ற, மானப் பேர் கயல் அஞ்சப்,
    பிறழ் கண்ணாள்
குன்றம் ஆடக் கோவின் அளிக்கும்
    கடல் அன்றி,
அன்று அம் மாடத்து உம்பர் அளிக்கும்
    அமுது அன்னாள்.
26

உரை
   
 
590.பெரும் தேன் இன் சொல் பெண் இவள்
    ஒப்பாள் ஒரு பெண்ணைத்,
தரும் தான் என்றால், நான்முகன்
    இன்னும் தரலாமே?
அருந்தா அந்தத் தேவர் இரந்தால்,
    அமுது என்னும்
மருந்தே அல்லாது, என் இனி நல்கும்
    மணி ஆழி.
27

உரை
   
 
591.அனையாள் மேனி கண்டபின்,
    அண்டத்து அரசு ஆளும்
வினையோர் மேவும் மேனகை ஆதி,
    மிளிர் வேல் கண்
இனையோர் உள்ளத்து இன்னலின்
    ஓர் தம் முகம் என்னும்
பனி தோய் வானின் வெள் மதிக்கு
    என்றும் பகல் அன்றே
28

உரை
   
 
592.மலர் மேல் நின்று இம்
    மங்கை இவ் வையத்து இடை வைகப்,
பலகாலும் தம் மெய்
    நனி வாடும்படி நோற்றார்,
அலகு ஓ இல்லா
    அந்தணரோ, நல் அறமேயோ,
உலகோ, வானோ,
    உம்பர் கொல்லோ! ஈது உணரேமால
29

உரை
   
 
593.தம் நேர் இல்லா மங்கையர், செங்கைத்
    தளிர் மானே!
அன்னே! தேனே! ஆர் அமுதே என்று
    அடி போற்ற,
முன்னே முன்னே மொய் மலர் தூவி
    முறை சார,
பொன்னே சூழும் பூவின் ஒதுங்கிப்
    பொலிகின்றாள்.
30

உரை
   
 
594.பொன் சேர் மென் கால் கிண்கிணி ஆரம்,
    புனை ஆரம்,
கொன் சேர் அல்குல் மேகலை தாங்கும்
    கொடி அன்னார்,
தன் சேர் கோலத்து இன் எழில் காணச்,
    சத கோடி
மின் சேவிக்க, மின் அரசு என்னும்படி
    நின்றாள்.
31

உரை
   
 
595.கொல்லும் வேலும் கூற்றமும்
    என்னும் இவை எல்லாம்,
வெல்லும் வெல்லும் என்ன
    மதர்க்கும் விழி கொண்டாள்,
சொல்லும் தன்மைத்து அன்று அது;
    குன்றும் சுவரும் திண்
கல்லும் புல்லும் கண்டு உருகப்,
    பெண் கனி நின்றாள்.
32

உரை
   
 
596.வெம் களி விழிக்கு ஒரு
    விழவும் ஆய் அவர்,
கண்களில் காணவே
    களிப்பு நல்கலால்,
மங்கையர்க்கு இனியது ஓர்
    மருந்தும் ஆயவள்,
எங்கள் நாயகற்கு இனி
    யாவது ஆம் கொலோ.
33

உரை
   
 
597.இழைகளும் குழைகளும்
    இன்ன, முன்னமே
மழை பொரு கண் இணை
    மடந்தைமாரொடும்
பழகிய எனினும், இப்
    பாவை தோன்றலால்,
அழகு எனும் அவையும், ஓர்
    அழகு பெற்றவே.
34

உரை
   
 
இராமபிரானும் சீதாதேவியும் ஒருவரையொருவர்
கண்டுகொள்ளல்

598.எண் அரும் நலத்தினாள்
    இனையள் நின்றுழி,
கண்ணொடு கண் இணை
    கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலை பெறாது
    உணர்வும் ஒன்றிட,
அண்ணலும் நோக்கினான்!
    அவளும் நோக்கினாள்.
35

உரை
   
 
இருவரும் மிக்க காதல் கொள்ளல் (599-602)

599.நோக்கிய நோக்கு எனும்
    நுதி கொள் வேல் இணை,
ஆக்கிய மதுகையான் தோளின்
    ஆழ்ந்தன,
வீக்கிய கனை கழல்
    வீரன் செங்கணும்,
தாக்கு அணங்கு அனையவள்
    தனத்தில் தைத்தவே.
36

உரை
   
 
600.பருகிய நோக்கு எனும்
    பாசத்தால் பிணித்து,
ஒருவரை ஒருவர் தம்
    உள்ளம் ஈர்த்தலால்,
வரி சிலை அண்ணலும்
    வாள் கண் நங்கையும்
இருவரும் மாறிப் புக்கு
    இதயம் எய்தினார்.
37

உரை
   
 
601.மருங்கு இலா நங்கையும்,
    வசை இல் ஐயனும்,
ஒருங்கிய இரண்டு உடற்கு
    உயிர் ஒன்று ஆயினார்,
கருங் கடல் பள்ளியில்
    கலவி நீங்கிப் போய்ப்
பிரிந்தவர் கூடினால்,
    பேசல் வேண்டுமோ.
38

உரை
   
 
நின்றவர் நடத்தல்

602.அந்தம் இல் நோக்கு இமை
    அணைகிலாமையால்,
பைந்தொடி, ஓவியப் பாவை
    போன்றனள்,
சிந்தையும் நிறையும் மெய் நலனும்
    பின் செல,
மைந்தனும் முனியொடு
    மறையப் போயினான்.
39

உரை
   
 
காதல் விஞ்சிய சீதாபிராட்டியின் நிலை (603-607)

603.பிறை எனும் நுதலவள்
    பெண்மை என்படும்?
நறை கமழ் அலங்கலான்,
    நயன கோசரம்
மறைதலும், மனம் எனும்
    மத்த யானையின்
நிறை எனும் அங்குசம்,
    நிமிர்ந்து போயதே.
40

உரை
   
 
604.மால் உற வருதலும்,
    மனமும் மெய்யும் தன்
நூல் உறு மருங்குல்போல்
    நுடங்குவாள், நெடும்
கால் உறு கண் வழிப்
    புகுந்த காதல் நோய்,
பால் உறு பிரை எனப்,
    பரந்தது எங்குமே.
41

உரை
   
 
605.நோம் உறு நோய்
    நிலை நுவலகிற்றிலள்,
ஊமரின் மனத்து இடை
    உன்னி விம்முவாள்;
காமனும் ஒரு சரம்
    கருத்தில் எய்தனன்,
வேம் எரி அதன் இடை
    விறகு இட்டு என்னவே;
42

உரை
   
 
606.நிழல் இடு குண்டலம்
    அதனில் நெய் விடா
அழல் இடா மிளிர்ந்திடும்
    அயில் கொள் கண்ணினாள்,
சுழல் இடு கூந்தலும் துகிலும்
    சோர்தரத்
தழல் இடு வல்லியே
    போலச் சாம்பினாள்.
43

உரை
   
 
607.தழங்கிய கலைகளும் நிறையும் சங்கமும்
மழுங்கிய உள்ளமும் அறிவும் மாமையும்
இழந்தவள் இமையவர் கடைய யாவையும்
வழங்கிய கடல் என வறியள் ஆயினாள்.
44

உரை
   
 
சேடியர், பிராட்டியை அழைத்துச் செல்லுதல்

608.கலம் குழைந்து உக, நெடும்
    நாணும் கண் அற,
நலம் குழைதர, நகில்
    முகத்தின் ஏவுண்டு,
மலங்கு உழை என, உயிர்
    வருந்திச் சோர்தரப்,
பொலம் குழை மயிலைக் கொண்டு
    அரிதின் போயினார்.
45

உரை
   
 
சேடியர் சீதாபிராட்டியைச் சீதமலரமளிச் சேர்த்தல்

609.காதொடும் குழை பொரு
    கயல் கண் நங்கைதன்
பாதமும் கரங்களும் அனைய
    பல்லவம்
தாதொடும் குழையொடும் அடுத்த
    தண் பனிச்
சீத நுண் துளி மலர் அமளிச்
    சேர்த்தினார்.
46

உரை
   
 
அமளி நண்ணிய ஆரணங்கின் நிலை (610-613)

610.நாள் அறா நறு மலர்
    அமளி நண்ணினாள்,
பூளை வீ புரை பனிப்
    புயற்குத் தேம்பிய
தாள தாமரை மலர்
    ததைந்த பொய்கையும்
வாள் அரா நுங்கிய
    மதியும் போலவே.
47

உரை
   
 
611.மலை மிசைத் தடத்து உகு
    மழைக்கண் ஆலி போல்,
முலை முகட்டு உதிர்ந்திடும்
    நெடுங் கண் முத்து இனம்,
சிலை நுதல் கடை உறை
    செறித்த வேல் கணாள்
உலை முகப் புகை நிமிர்
    உயிர்ப்பின் மாய்ந்தவே.
48

உரை
   
 
612.கம்பம் இல் கொடு மனக்
    கான வேடன் கை
அம்பொடு சோர்வது ஓர்
    மயிலும் அன்னவள்,
வெம்பு உறு மனத்து அனல்
    வெதுப்ப, மெல் மலர்க்
கொம்பு என அமளியில்
    குழைந்து சாய்ந்தனள்.
49

உரை
   
 
613.சொரிந்தன நறுமலர் சுறுக்கொண்டு ஏறின
பொரிந்தன கலவைகள் பொறியின் சிந்தின
எரிந்தன கனல் சுட இழையில் கோத்த நூல்
பரிந்தன கரிந்தன பல்லவங்களே.
50

உரை
   
 
சீதாபிராட்டி நிலைகண்ட செவிலியர்
முதலியோர் செயல்

614.தாதியர் செவிலியர் தாயர் தவ்வையர்
மா துயர் உழந்து உழந்து அழுங்கி மாழ்கினார்
‘யாது கொல் இது? ‘என எண்ணல் தேற்றலர்
போது உடன் அயினி நீர் சுழற்றிப் போற்றினர்.
51

உரை
   
 
சீதாபிராட்டியின் மனநோய்

615.அருகில் நின்று அசைதரும் ஆலவட்டக் கால்
எரியினை மிகுத்திட இழையும் மாலையும்
கரிகுவ தீகுவ கனல்வ காட்டலால்
உருகு பொன் பாவையும் ஒத்துத் தோன்றினாள்.
52

உரை
   
 
காதல் நோயால் பிராட்டி புலம்பல் (616-622)

616.அல்லினை வகுத்தது ஓர்
    அலங்கல் காடு எனும்,
வல் எழு, அல்லவேல்
    மரகதப் பெருங்
கல் எனும் இரு புயம்,
    கமலம் கண் எனும்,
வில்லொடும் இழிந்தது ஓர்
    மேகம் என்னுமால்.
53

உரை
   
 
617.நெருக்கி, உள் புகுந்து, அரு
    நிறையும் பெண்மையும்
உருக்கி, என் உயிரொடும்
    உண்டு, போனவன்,
பொருப்பு உறழ் தோள்
    புணர் புண்ணியத்தது,
கருப்பு வில் அன்று; அவன்
    காமன் அல்லனே.
54

உரை
   
 
618.பெண்வழி நலனொடும்,
    பிறந்த நாணொடும்,
எண் வழி உணர்வும் நான்
    எங்கும் காண்கிலேன்,
மண் வழி நடந்து, அடி
    வருந்தப் போனவன்,
கண் வழி நுழையும் ஓர்
    கள்வனே கொல் ஆம்.
55

உரை
   
 
619.இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்
சந்திர வதனமும் தாழ்ந்த கைகளும்
சுந்தர மணி வரைத் தோளுமே அல
முந்தி என் உயிரை அம் முறுவல் உண்டதே.
56

உரை
   
 
620.படர்ந்து ஒளி பரந்து உயிர்
    பருகும் ஆகமும்,
தடம் தரு தாமரைத்
    தாளுமே அல,
கடம் தரு மா மதக் களி நல்
    யானை போல்
நடந்தது, கிடந்தது என் உள்ளம்
    நண்ணியே.
57

உரை
   
 
621.உரைசெயின் தேவர் தம்
    உலகு உளான் அலன்,
விரை செறி தாமரை
    இமைக்கும் மெய்ம்மையான்,
வரி சிலைத் தடக் கையன்,
    மார்பின் நூலினன்,
அரசு இளம் குமரனே
    ஆகல் வேண்டும் ஆல்.
58

உரை
   
 
622.பிறந்து உடை நலம் நிறை
    பிணித்த எந்திரம்
கறங்குபு திரியும் என்
    கன்னி மா மதில்,
எறிந்த அக் குமரனை,
    இன்னும் கண்ணில் கண்டு,
அறிந்து, உயிர் இழக்கவும்
    ஆகுமே கொல் ஆம்.
59

உரை
   
 
பிராட்டி பின்னும் வேட்கை மிகுதியாற் பிதற்றல்

623.என்று இவை இனையன
    விளம்பும் எல்வையில்,
‘நின்றனன் இவண்‘ எனும்,
    ‘நீங்கினான் ‘எனும்,
கன்றிய மனத்து உறு
    காம வேட்கையால்
ஒன்று அல, பல நினைந்து
    உருகும் காலையே.
60

உரை
   
 
சூரியன் அத்தமித்தல்

624.அன்ன மெல் நடை அவட்கு
    அமைந்த காமத் தீத்
தன்னையும் சுடுவது
    தரிக்கிலான் என,
நல் நெடும் கரங்களை
    நடுக்கி ஓடிப்போய்,
முன்னை வெங் கதிரவன்
    கடலில் மூழ்கினான்.
61

உரை
   
 
அந்திமாலை வருணனை (625-626)

625.விரி மலர்த் தனெ்றல் ஆம்
    வீசு பாசமும்,
எரி நிறச் செக்கரும்
    இருளும் காட்டலால்,
அரியவட்கு, அனல் தரும்
    அந்திமாலை ஆம்
கரு நிறச் செம்மயிர்
    காலன், தோன்றினான்.
62

உரை
   
 
626.மீது அறை பறவை ஆம் பறையும் கீழ் விளி
ஓதம் என் சிலம்பொடும் உதிரச் செக்கரும்
பாதக இருள் செய் கஞ்சுகமும் பற்றலால்
சாதகர் என்னவும் தகைத்து அம் மாலையே.
63

உரை
   
 
பிராட்டி வருந்திக் கூறல்

627.கயங்கள் என்னும் கனல் தோய்ந்து,
    கடி நாள் மலரின் விடம் பூசி,
இயங்கு தனெ்றல், மன்மத வேள்
    எய்த புண்ணின் இடை நுழைய,
உயங்கும் உணர்வும் நல் நலமும்
    உருகிச் சோர்வாள், உயிர் உண்ண
வயங்கும் மாலை வான் நோக்கி,
    ‘இதுவோ கூற்றின் வடிவு‘ என்றாள்.
64

உரை
   
 
அந்திமாலை வந்தமை

628.‘கடலோ மழையோ முழு நீலக்
    கல்லோ காயா நறும் போதோ
படர் பூ குவளை நறுமலரோ
    நீலோற்பலமோ பானலோ,
இடர் சேர் மடவார் உயிர் உண்பது யாதோ? ‘
    என்று தளர்வாள் முன்
அடல் சேர் அசுரர் நிறம் போலும்
    அந்தி மாலை வந்ததே.
65

உரை
   
 
மாலைப்பொழுது கண்டிரங்கல்

629.மை வான் நிறத்து மீன் எயிற்று வாடை
    உயிர்ப்பின், வளர் செக்கர்ப்
பைவாய் அந்திப் பட அரவே! என்
    நா வளைத்துப் பகைத்தியால்;
எய்வான் ஒருவன் கை ஓயான்;
    உயிரும் ஒன்றே இனி இல்லை;
உய்வான் உற இப் பழி பூண
    உன்னோடு எனக்குப் பகை உண்டோ.
66

உரை
   
 
இருளைநோக்கிப் புலம்பல்

630.ஆலம் உலகில் பரந்ததுவோ;
    ஆழி கிளர்ந்ததோ, அவர் தம்
நீல நிறத்தை எல்லோரும்
    நினைக்க அதுவாய் நிரம்பியதோ,
காலன் நிறத்தை அஞ்சனத்தில்
    கலந்து குழைத்துக் காயத்தின்
மேலும் நிலத்தும் மெழுகியதோ,
    விளைக்கும் இருள் ஆய் விளைந்தவே.
67

உரை
   
 
அன்றிற்பறவையை நோக்கி இரங்கியது

631.வெளி நின்றவரோ போய் மறைந்தார்,
    விலக்க ஒருவர் தமைக் காணேன்,
எளியள் பெண் என்று இரங்காதே,
    எல்லி யாமத்து இருள் ஊடே
ஒளி அம்பு எய்யும் மன்மதனார்
    உனக்கு இம் மாயம் உரைத்தாரோ,
அளியென் செய்த தீவினையே
    அன்றில் ஆகி வந்தாயோ.
68

உரை
   
 
சேடியர் உதவிபுரிதல்

632.ஆண்டு அங்கு அனையாள் இனைய நினைந்து
    அழுங்கும் ஏல்வை, அகல் வானம்
தீண்ட நிமிர்ந்த பெரும் கோயில்,
    சீத மணியின் வேதிகை வாய்
நீண்ட சோதி நெய் விளக்கம் வெய்ய
    என்று, அங்கு அவை நீக்கித்,
தூண்டல் செய்யா மணி விளக்கின்
    சுடரால் இரவைப் பகல் செய்தார்.
69

உரை
   
 
சந்திரோதயம் (633-634)

633.பெரும் திண் நெடு மால், வரை நிறுவிப்
    பிணித்த பாம்பின் மணி தாம்பின்
விரிந்த திவலை பொதிந்த மணி
    விசும்பின் மீனின் மேல் விளங்க
அருந்த அமரர் கலக்கிய நாள்,
    அமுதம் நிறைந்த பொன் கலசம்
இருந்தது, இடை வந்து எழுந்தது என
    எழுந்தது ஆழி வெண் திங்கள்.
70

உரை
   
 
634.வண்டாய் அயன் நால் மறை பாட,
    மலர்ந்தது ஒரு தாமரைப் போது,
பண்டு ஆல் இலையின் மிசைக் கிடந்து
    பாரும் நீரும் பசித்தான்போல்
உண்டான் உந்திக் கடல் பூத்தது,
    ஓதக் கடலும் தான் வேறு ஓர்
வெண் தாமரையின் மலர் பூத்தது
    ஒத்தது, ஆழி வெண் திங்கள்.
71

உரை
   
 
நிலாக்கற்றை பரவுதல் (635-637)

635.புள்ளிக் குறி இட்டு என ஒண் மீன்
    பூத்த வானம் பொலி கங்குல்
நள்ளில் செறிந்த இருள் பிழம்பை
    நக்கி நிமிர்ந்த நிலாக் கற்றை,
கிள்ளைக் கிளவிக்கு என் ஆம் கொல்!
    கீழ் பால் திசையின் மிசை வைத்த
வெள்ளிக் கும்பத்து இளம் கமுகின்
    பாளை போன்று விரிந்து உளதால்.
72

உரை
   
 
636.வண்ண மாலைக் கை பரப்பி, உலகை
    வளைந்த இருள் எல்லாம்
உண்ண எண்ணித், தண் மதியத்து
    உதயத்து எழுந்த நிலாக் கற்றை,
விண்ணும் மண்ணும் திசை அனைத்தும்
    விழுங்கிக் கொண்ட, விரி நல் நீர்ப்
பண்ணை வெண்ணெய்ச் சடையன் தன்
    புகழ் போல், எங்கும் பரந்து உளதால்.
73

உரை
   
 
637.நீத்தம் அதனில் முளைத்து எழுந்த
    நெடு வெண் திங்கள் எனும் தச்சன்,
மீத் தன் கரங்கள் அவை பரப்பி,
    மிகு வெண் நிலவு ஆம் வெண் சுதையால்,
காத்த கண்ணன் மணி உந்திக்
    கமல நாளத்து இடைப் பண்டு
பூத்த அண்டம் பழையது எனப்,
    புதுக்குவானும் போன்று உளதால்.
74

உரை
   
 
தாமரை குவிதலும் ஆம்பல் அலர்தலும்

638.விரை செய் கமலப் பெரும் போது
    விரும்பிப் புகுந்த திருவினொடும்,
குரை செய் வண்டின் குழாம் இரியக்
    கூம்பிச் சாம்பிக் குவிந்துளதால்,
உரை செய் திகிரி தனை உருட்டி
    ஒரு கோல் ஓச்சி உலகு ஆண்ட
அரசன் ஒதுங்கத் தலை எடுத்த
    குறும்பு போன்றது அரக்கு ஆம்பல்.
75

உரை
   
 
சந்திரோதயத்தைப் பழித்தல் (639-640)

639.நீங்கா மாயை அவர் தமக்கு
    நிறமே தோற்றுப் புறமே போய்
ஏங்காக் கிடக்கும் எறிகடற்கும்
    எனக்கும் கொடியை ஆனாயே,
ஓங்கா நின்ற இருளாய் வந்து
    உலகை விழுங்கி, மேன் மேலும்
வீங்கா நின்ற கரு நெருப்பின் இடையே
    எழுந்த வெள் நெருப்பே.
76

உரை
   
 
640.கொடியை அல்லை, நீ யாரையும்
    கொல்கிலாய்,
மடுவில் இன் அமுதத்தொடும்
    வந்தனை,
பிடியின் மெல் நடைப் பெண்ணொடு,
    என்றல் எனைச்
சுடுதியோ, கடல் தோன்றிய
    திங்களே.
77

உரை
   
 
காமவேதனை (641-644)

641.மீது மொய்த்து எழு வெண்
    நிலவின் கதிர்
மோது மத்திகை, மென்
    முலை மேல் பட,
ஓதிமப் பெடை வெம் கனல்
    உற்று எனப்,
போது மொய்த்து அமளிப்,
    புரண்டாள் அரோ.
78

உரை
   
 
642.நீக்கம் இன்றி நிமிர்ந்த நிலாக் கதிர்
தாக்க வெந்து தளர்ந்து சரிந்தனள்;
சேக்கை ஆகி அலர்ந்த செம் தாமரைப்
பூக்கள் பட்டன பூவையும் பட்டனள்.
79

உரை
   
 
643.வாச மென் கலவைக் களி வாரி மேல்
பூசப் பூசப் புலர்ந்து புழுங்கினள்
வீச வீச வெதும்பினள் மென் முலை
ஆசை நோய்க்கு மருந்தும் உண்டாம் கொலோ!
80

உரை
   
 
644.தாயரின் பரி சேடியர் தாது உகு
வீ அரித் தளிர் மெல் அணை மேனியில்
காய் எரிக் கரியக் கரியக் கொணர்ந்து
ஆயிரத்தின் இரட்டி அடுக்கினார்.
81

உரை
   
 
கவிக்கூற்று

645.கன்னி நல் நகரில் கமழ் சேக்கை உள்
அன்னம் இன்னணம் ஆயினள் ஆயவள்
மின்னின் மின்னிய மேனி கண்டான் எனச்
சொன்ன அண்ணலுக்கு உற்றது சொல்லுவாம்.
82

உரை
   
 
மூவரும் சனகன் எதிர்கொளச்சென்று தங்குதல்

646.ஏகி மன்னனைக் கண்டு எதிர்கொண்டு அவன்
ஓகையோடும் இனிது கொண்டு உய்த்திடப்
போக பூமியில் பொன் நகர் அன்னது ஓர்
மாக மாடத்து அனையவர் வைகினார்.
83

உரை
   
 
சதானந்த முனிவர் வருதல்

647.வைகும் அவ் வழி மாதவம் யாவும் ஓர்
செய்கை கொண்டு நடந்தனெத் தீது அறு
மொய் கொள் வீரன் முளரி அம் தாளினால்
மெய் கொள் மங்கை அருள் முனி மேவினான்.
84

உரை
   
 
வணங்கிய இராமனை வாழ்த்திச் சதானந்த
முனிவன் கோசிகன் பக்கம் சார்தல்

648.வந்து எதிர்ந்த முனிவனை வள்ளலும்
சிந்தை ஆர வணங்கலும் சென்று எதிர்
அந்தம் இல் குணத்தான் நெடிது ஆசிகள்
தந்து கோசிகன்தன் மருங்கு எய்தினான்.
85

உரை
   
 
சதானந்தன் முகமன் கூறுதல்

649.கோதமன் தரு கோ முனி கோசிக
மாதவன் தனை மா முகம் நோக்கி ‘இப்
போது நீ இவண் போத இப் பூதலம்
ஏது செய்த தவம் ‘என்று இயம்பினான்.
86

உரை
   
 
விசுவாமித்திரன் கூறுதல்

650.பூந் தண் சேக்கைப் புனிதனையே பொரு
ஏய்ந்த கேண்மைச் சதானந்தன் என்று உரை
வாய்ந்த மாதவன் மாமுகம் நோக்கி நூல்
தோய்ந்த சிந்தைக் கவுசிகன் சொல்லுவான்.
87

உரை
   
 
சதானந்தருக்கு இராமனது பெருமையைக்
கௌசிகர் கூறுதல்

651.‘வடித்த மாதவ! கேட்டி; இவ்
    வள்ளல் தான்,
இடித்த வெம் குரல்
    தாடகை யாக்கையும்,
அடுத்து என் வேள்வியும், நின்
    அன்னை சாபமும்
முடித்து, என் நெஞ்சத்து இடர்
    முடித்தான் ‘என்றான்.
88

உரை
   
 
சதானந்தர் கோசிகனைப் பாராட்டுதல்

652.என்று கோசிகன் கூறிட ஈறு இலா
வன் தபோதனன் ‘மாதவ! நின் அருள்
இன்று தான் உளதேல் அரிது யாது இந்த
வென்றி வீரர்க்கு ‘எனவும் விளம்பி மேல்.
89

உரை
   
 
சதானந்தர் இராமபிரானை நோக்கி விசுவாமித்திரர்
வரலாறு கூறுதல்

653.எள் இல் பூவையும் இந்திர நீலமும்
அள்ளல் வேலையும் அம்புத சாலமும்
விள்ளும் வீ உடைப் பானலும் மேவும் மெய்
வள்ளல் தன்னை மதி முகம் நோக்கியே.
90

உரை
   
 
விசுவாமித்திரன் வரலாறு (654-700)

அரசாளுகை

654.‘நறு மலர்த் தொடை நாயக! நான் உனக்கு
அறிவுறுத்துவென் கேள் இவ் அருந்தவன்
இறை எனப் புவிக்கு ஈறு இல் பல் ஆண்டு எலாம்
முறையினில் புரந்தே அருள் முற்றினான்.
91

உரை
   
 
கோசிகன் வசிட்டன் உறைவிடத்தை அடைதல்

655.அரசின் வைகி அறனின் அமைந்துழி
விரசு கான் இடைச் சென்றனன் வேட்டை மேல்
உரை செய் மாதவத்து ஓங்கு வசிட்டனாம்
பரசு வானவன்பால் அணைந்தான் அரோ.
92

உரை
   
 
வசிட்டன் ஆணைப்படி காமதேனு விருந்தளித்தல்

656.அருந்ததி கணவன், வேந்தற்கு
    அருங்கடன் முறையின் ஆற்றி,
‘இருந்து அருள் தருதி ‘என்ன,
    இருந்துழி, ‘இனிது நிற்கு
விருந்து இனி அமைப்பென் ‘என்னாச்,
    சுரபியை விளித்து, ‘நீயே
சுரந்து அருள் அமிர்தம் ‘என்ன,
    அருள் முறை சுரந்தது அனறே.
93

உரை
   
 
காமதேனுவின் விருந்துபசாரத்தைக் கோசிகராசன்
சேனையோடும் பெறுதல்

657.‘அறு சுவைத்து ஆய உண்டி,
    அரச! நின் அனிகத்தோடும்
பெறுக ‘என அளித்து, வேந்தோடு
    யாவரும் துய்த்த பின்னர்,
நறு மலர்த் தாரும் வாசக்
    கலவையும் நல்கலோடும்,
உறு துயர் தணிந்து, மன்னன் உய்த்து
    உணர்ந்து உரைக்கல் உற்றான்.
94

உரை
   
 
கோசிகன் சுரபியைத் தருக என, வசிட்டன்
கூறுதல் (658-659)

658.‘மாதவ! எழுந்திலாய் நீ; வயப் பெரும்
    படைகட்கு எல்லாம்,
கோது அறும் அமிர்தம், இக்கோ உதவிய
    கொள்கை தன்னால்,
தீது அறு குணத்தால் மிக்க செழுமறை
    தரெிந்த நூலோர்,
‘மேதகு பொருள்கள் யாவும் வேந்தருக்கு‘
    என்கை தன்னால்.
95

உரை
   
 
659.‘நிற்கு இது தகுவது அன்றால்,
    நீடு அரும் சுரபி தன்னை
எற்கு அருள் ‘என்றலோடும்,
    இயம்பலன் யாதும்; பின்னர்
‘வற்கலை உடையென், யானோ
    வழங்கலென்; வருவது ஆகில்
கொல் கொள் வேல் உழவ! நீயே
    கொண்டு அகல்க ‘என்று கூற.
96

உரை
   
 
காமதேனுவைக் கோசிகன் கைப்பற்ற
அது வசிட்டனை உசாவுதல்

660.‘பணித்தது புரிவென் ‘என்னாப்,
    பார்த்திபன் எழுந்து பொங்கிப்
பிணித்தனன் சுரபி தன்னைப்
    பெயர்வுழிப், பிணியை வீட்டி,
‘மணித் தடம் தோளினாற்குக்
    கொடுத்தியோ மறைகள் யாவும்
கணித்த எம் பெரும! ‘என்னக்
    கலை மறை முனிவன் சொல்வான்.
97

உரை
   
 
வசிட்டன் மொழி கேட்ட காமதேனு
சினந்து மயிர் சிலிர்த்தல்

661.‘கொடுத்திலென் யானே மற்று அக்
    குடைகெழு வேந்தன், தானே
பிடித்து அகல்வுற்றது ‘என்னப்
    பெரும் சினம் கதுவும் நெஞ்சோடு
‘இடித்து எழும் முரச வேந்தன்
    சேனையை யானே இன்று
முடிக்குவென் காண்டி ‘என்னா,
    மொய்ம் மயிர் சிலிர்த்தது அன்றே.
98

உரை
   
 
கோசிகன் சேனை அழிதலும் ,
கோசிகன் புதல்வர்கள் வெகுளுதலும்

662.பப்பரர் எயினர் சீனர்
    சோனகர் முதல பல்லோர்,
கை படை அதனினோடும்
    கபிலை மாட்டு உதித்து, வேந்தன்
துப்பு உடைச் சேனை யாவும்
    தொலைவு உறத் துணித்தலோடும்,
வெப்பு உடைக் கொடிய மன்னன்
    தனயர்கள் வெகுண்டு மிக்கார
99

உரை
   
 
வசிட்டனை எதிர்த்த கோசிகன்புதல்வர் இறத்தல்

663.‘சுரபியின் வலி இது அன்றால்;
    சுருதி நூல் உணர வல்ல
வரமுனி வஞ்சம் ‘என்னா, ‘மற்றவன்
    சிரத்தை இன்னே
அரிகுவம் ‘என்னப் பொங்கி அடர்த்தனர்,
    அடர, அன்னான்
எரி எழ விழித்தலோடும், இறந்தனர்
    குமரர் எல்லாம்.
100

உரை
   
 
கோசிகன் அம்பெய்ய வசிட்டன் பிரம தண்டத்தை
எதிருமாறு ஏவுதல்

664.ஐயிரு பதின்மர் மைந்தர்
    அவிந்தமை அரசன் காணா,
நெய் பொழி கனலில் பொங்கி,
    நெடுங் கொடித் தேர் கடாவிக்
கை தொடர் கணையினோடும்
    கார் முகம் வளைய வாங்கி,
எய்தனன்; முனியும், தன் கைத்
    தண்டினை ‘எதிர்க ‘என்றான்.
101

உரை
   
 
கோசிகன் சிவபிரானைத் துதித்துப் படை பெறுதல்

665.கடவுளர் படைகள் ஈறாக்
    கற்றன படைகள் யாவும்,
விடவிட, முனிவன் தண்டம்
    விழுங்கி மேல் விளங்கல் காணா,
வட வரை வில்லி தன்னை
    வணங்கினன் வழுத்தலோடும்,
அடல் உறு படை ஒன்று ஈயா
    அன்னவன் அகன்றான் அன்றே.
102

உரை
   
 
கோசிகன் உருத்திரப்படையை ஏவ வசிட்டன்
அதனை உண்டு விளங்குதல்

666.விட்டனன் படையை வேந்தன்,
    விண்ணுேளார், உலகை எல்லாம்
சுட்டனன் என்ன அஞ்சித்
    துளங்கினர்; முனியும் தோன்றிக்
கிட்டிய படையை உண்டு
    கிளர்ந்தனன்; கிளரும் மேனி
முட்ட வெம் பொறிகள் சிந்தப்
    பொரு படை முரண் அது இற்றே.
103

உரை
   
 
பிரமதேசு பெறக் கோசிகன் தவமேற் செல்லுதல்

667.கண்டனன் அரசன், காணாக்
    ‘கலை மறை முனிவர்க்கு அல்லால்
திண் திறல் வலியும் தேசும்
    உள எனல் சீரிது அன்றால்,
மண் தலம் முழுதும் காக்கும்
    மொய்ம்பு ஒரு வலி அன்று ‘என்னா
ஒண் தவம் புரிய எண்ணி,
    உம்பர் கோன் திசையை உற்றான்.
104

உரை
   
 
கோசிகன் தவத்தைச் சிதைக்குமாறு இந்திரன்
திலோத்தமையை ஏவுதல்

668.மாண்ட மா தவத்தோன் செய்த
    வலனையே மனத்தின் எண்ணிப்,
பூண்ட மா தவத்தன் ஆகி,
    அரசர் கோன் பொலியும் நீர்மை
காண்டலும், அமரர் வேந்தன்,
    துணுக்கு உறு கருத்தினோடும்
தூண்டினன், அரம்பைமாருள்
    திலோத்தமை எனும் சொல் மானை.
105

உரை
   
 
கோசிகன் திலோத்தமையோடு கலவியின்
மூழ்கிப் பின்பு வெறுப்புறுதல்

669.அன்னவள் மேனி காணா,
    அனங்கவேள் சரங்கள் பாயத்
தன் உணர்வு அழிந்து, காதல்
    சலதியின் அழுந்தி, வேந்தன்,
பன் அரும் பகல் தீர்வு உற்றுப்,
    பரிணதர் தரெிந்த நூலின்
நல் நயம் உணர்ந்தோன் ஆகி,
    நஞ்சு எனக் கனன்று நக்கான்.
106

உரை
   
 
திலோத்தமையை விட்டுக் கோசிகன் தவம்புரியத்
தனெ்றிசை சார்தல்

670.விண் முழுது ஆளி செய்த
    வினை என வெகுண்டு, நீ போய்
மண் மகள் ஆதி என்று
    மடவரல் தன்னை ஏவிக்,
கண் மலர் சிவப்ப உள்ளம்
    கறுப்பு உறக் கடிதின் ஏகி,
எண்மரில் வலியன் ஆய
    எமன் திசை தன்னை உற்றான்.
107

உரை
   
 
திரிசங்கு உடலொடு துறக்கம் செல்ல அருளுமாறு வேண்ட
வசிட்டன் மறுத்துக் கூறல்

671.தனெ் திசை அதனை நண்ணிச்
    செய்தவம் செய்யும் செவ்வி,
வன் திறல் அயோத்தி வாழும்
    மன் திரிசங்கு என்பான்,
தன் துணைக் குருவை நண்ணித்,
    ‘தனுவொடும் துறக்கம் எய்த
இன்று எனக்கு அருளுக ‘என்ன,
    ‘யான் அறிந்திலன் அது‘ என்றான்.
108

உரை
   
 
திரிசங்குவை வசிட்டன் சபித்தல்

672.‘நினக்கு ஒலாது ஆகின், ஐய!
    நீள் நிலத்து யாவர் ஏனும்
மனக்கு இனியாரை நாடி
    வகுப்பல் யான் வேள்வி ‘என்னச்
சினக் கொடுந் திறலோய்! முன்னர்த்
    தேசிகன் பிழைத்து வேறு ஓர்
நினக்கு இதன் நாடி நின்றாய்,
    நீசன் ஆய் விடுதி ‘என்றான்.
109

உரை
   
 
திரிசங்கு சண்டாளனாதல்

673.மலர் உேளான் மைந்தன், மைந்த!
    வழங்கிய சாபம் தன்னால்,
அலரியோன் தானும் நாணும்
    வடிவு இழந்து, அரசர் கோமான்
புலரி அம் கமலம் போலும்
    பொலிவு ஒரீஇ வதனம், பூவில்
பலரும் ஆங்கு இகழ்தற்கு ஒத்த
    படிவம் வந்து உற்றது அன்றே.
110

உரை
   
 
திரிசங்கு யாவராலும் இகழப்படுதல்

674.காசொடு முடியும் பூணும்
    கரியது ஆம் கனகம் போன்றும்,
தூசொடும் அணியும் முந்நூல்
    தோல் தரும் தோற்றம் போன்றும்,
மாசொடு கருகி மேனி
    வனப்பு அழிந்திட ஊர் வந்தான்,
‘சீசி ‘என்று யாரும் எள்ளத்,
    திகைப்பொடு பழுவம் சேர்ந்தான்.
111

உரை
   
 
திரிசங்கு கோசிகன்பால் தன்செய்தி தரெிவித்தல்

675.கான் இடைச் சிறிது வைகல்
    கழித்து ஓர் நாள், கௌசிகப்பேர்க்
கோன் இனிது உறையும் சோலை
    குறுகினன், குறுக, அன்னான்,
‘ஈனன் நீ யாவன்? என்னை நேர்ந்தது?
    இவ் இடையின் ‘என்ன,
மேல் நிகழ் பொருள்கள் எல்லாம்
    விளம்பினன் வணங்கி வேந்தன்.
112

உரை
   
 
திரிசங்கு விரும்பியவாறு கோசிகன் இசைதலும்
வசிட்டகுமாரர் மறுத்தலும்

676.‘இற்றிதோ ‘என நக்கு, அன்னான், ‘யான்
    இரு வேள்வி முற்றி
மற்று உலகு அளிப்பென் ‘என்னா,
    மாதவர் தம்மைக் கூவச்,
சுற்று உறு முனிவர் யாரும்
    தொக்கனர்; வசிட்டன் மைந்தர்,
‘கற்றிலம், அரசன் வேள்வி
    கனல் துறை புலையற்கு ஈவான
113

உரை
   
 
கோசிகன் வசிட்டன் மைந்தரைச் சபித்துவிட்டு
வேள்வி தொடங்கல்

677.என்று உரைத்து, ‘யாங்கள் ஒல்லோம் ‘
    என்றனர்; என்னப் பொங்கிப்
‘புன் தொழில் கிராதர் ஆகிப்
    போக ‘எனப் புகறலோடும்,
அன்று அவர் எயினர் ஆகி,
    அடவிகள் தோறும் சென்றார்,
நின்று வேள்வியையும் முற்றி,
    ‘நிராசனர் வருக ‘என்றான்.
114

உரை
   
 
கோசிகன் திரிசங்குவைத் தன் தவமகிமையால்
வானத்து ஏற்றுதல்

678.‘அரசன், இப் புலையற்கு என்னே
    அனல் துறை முற்றி, எம்மை
‘விரசுக வல்லை ‘என்பான், ‘விழுமிது ‘
    என்று இகழ்ந்து நக்கார்;
புரைசை மா களிற்று வேந்தைப்
    ‘போக நீ துறக்கம் : யானே
உரைசெய்தேன், தவத்தின் ‘என்ன
    ஓங்கினன் விமானத்து உம்பர்.
115

உரை
   
 
தேவர்களால் தள்ளுண்ட திரிசங்குவைக்
கோசிகன் வானத்தில் நிற்குமாறு செய்தல்

679.ஆங்கு அவன் துறக்கம் எய்த,
    அமரர்கள் வெகுண்டு, ‘நீசன்
ஈங்கு வந்திடுவது என்னே?
    இரு நிலத்து இழிக ‘என்னத்,
தரங்கலில் வீழ்வான், மற்றுத்
    ‘தாபத சரணம் ‘என்ன,
ஓங்கினன் ‘நில் நில் ‘என்ன
    உரைத்து, உரும் ஒக்க நக்கான்.
116

உரை
   
 
கோசிகன் வேறாக உலகம் முதலிய படைக்கத்
தொடங்கல்

680.‘பேணலாது இகழ்ந்த விண்ணோர்
    பெரும் பதம் முதலா மற்றைச்
சேண் முழுதும் அமைப்பல் ‘என்னாச்
    ‘செழும் கதிர் கோள் நாள் திங்கள்
மாண் ஒளி கெடாது, தறெ்கு
    வடக்கவாய் வருக ‘என்று
தாணுவோடு ஊர்வ எல்லாம்
    சமைக்குவென் என்னும் வேலை.
117

உரை
   
 
தேவர்கள் கோசிகனைச் சாந்தப்படுத்தல்

681.நறைத் தரு உடைய கோனும்,
    நான்முகக் கடவுள் தானும்,
கறைத் தரு களனும், மற்றைக்
    கடவுளர் பிறரும் தொக்குப்,
‘பொறுத்து அருள் முனிவ! நின்னைப்
    புகல் புகுந்தவனைப் போற்றும்
அறம் திறன் நன்று, தாரா
    கணத்தொடும் அமைக அன்னான்.
118

உரை
   
 
கோசிகன் மேற்றிசை சென்று தவமியற்றல்

682.‘அரச மாதவன் நீ ஆதி :
    ஐந்து நாள் தனெ்பால் வந்து உன்
புரை விளக்கிடுக ‘என்னாக்,
    கடவுளர் போய பின்னர்,
நிரைதவன் விரைவின் ஏகி,
    நெடுங் கடற்கு இறைவன் வைகும்
உர இடம் அதனை நண்ணி
    உறு தவம் உஞற்றும் காலை.
119

உரை
   
 
அம்பரீடன் நரமேதத்திற்குத் தக்க
மைந்தனைத் தேடிச்செல்லல்

683.குதை வரி சிலை வாள் தானைக்
    கோமகன் அம்பரீடன்,
சுதை தரு மொழியன், வையத்து
    உயிர்க்கு உயிர் ஆய தோன்றல்,
வதை புரி புருடமேதம் வகுப்ப
    ஓர் மைந்தன் கொள்வான்
சிதைவு இலன் கனகம் தேர் கொண்டு
    அடவிகள் துருவிச் சென்றான்.
120

உரை
   
 
அம்பரீடற்கு ரிசீகன் மகற்கொடை நேர்தல்

684.நல் தவ ரிசிகன் வைகும்
    நனை வரும் பழுவம் நண்ணிக்
கொற்றவன் வினவலோடும், இசைந்தனர்,
    குமரர் தம்முள்,
பெற்றவள், ‘இளவல் எற்கே ‘என்றனள்;
    ‘பிதாமுன் ‘என்றான் :
மற்றைய மைந்தன் நக்கு,
    மன்னவன் தன்னை நோக்கி.
121

உரை
   
 
அம்பரீடன் சுனச்சேபனைப் பெற்றுக்கொண்டு
செல்லுகையில் உச்சிப்போதாதல்

685.‘கொடுத்து அருள் வெறுக்கை வேண்டிற்று,
    ஒற்கமாம் விழுமம் குன்ற
எடுத்து எனை வளர்த்த தாதைக்கு ‘
    என்று அவன் தொழுது, வேந்தன்
தடுப்பு அரும் தேரின் ஏறித்
    தடை இலர் படர்தலோடும்,
சுடர்க் கதிர்க் கடவுள் வானத்து
    உச்சி அம் சூழல் புக்கான்.
122

உரை
   
 
சுனச்சேபன் கோசிகனைக் கண்டு வணங்குதல்

686.அவ்வயின் இழிந்து வேந்தன்
    அரும் கடன் முறையின் ஆற்றச்,
செவ்விய குரிசில் தானும்,
    சென்றனன் நியமம் செய்வான்,
அவ்வியம் அவித்த சிந்தை
    முனிவனை ஆண்டுக் காணாக்,
கவ்வையினோடும், பாத
    கமலம் அது உச்சி சேர்த்தான்.
123

உரை
   
 
சுனச்சேபன் தன் குறையைக் கோசிகனிடம் கூறல்

687.விறப்பொடு வணக்கம் செய்த
    விடலையை இனிது நோக்கிச்
சிறப்பு உடை முனிவன், ‘என்னே
    தரெுமரல்? செப்புக ‘என்ன,
‘அறம் பொருள் உணர்ந்தோய்! என்றன்
    அன்னையும் தாதை தானும்
உறப் பொருள் கொண்டு, வேந்தற்கு
    உதவினர் ‘என்றான் உற்றோன்.
124

உரை
   
 
கோசிகன் சுனச்சேபனுக்குப் பிரதியாகத் தன் மக்களில்
ஒருவனைச் செல்லுமாறு கூறல்

688.மைத்துனனோடு முன்னோள் வழங்கிய
    முறைமை கேளாத்
‘தத்துறல் ஒழி நீ, யானே தடுப்பென்
    நின் உயிரை ‘என்று,
புத்திரர் தம்மை நோக்கிப் ‘போக
    வேந்தோடும் ‘என்னா
அத்தகு முனிவன் கூற, அவர் மறுத்து
    அகறல் காணா.
125

உரை
   
 
மறுத்த மைந்தர்களைக் கோசிகன் சபித்தல்

689.எழும் கதிரவனும் நாணச் சிவந்தனன்
    இரு கண்; நெஞ்சம்
புழுங்கினன், வடவை தீய மயிர்ப்
    புறம் பொறியில் துள்ள,
‘அழுங்கலில் சிந்தையீர் நீர்
    அடவிகள் தோறும் சென்றே,
ஒழுங்கு அறு புளிஞர் ஆகி
    உறு துயர் உறுக ‘என்றான்.
126

உரை
   
 
சுனச்சேபனுக்குக் கோசிகன் இரண்டு
மந்திரங்களை உபதேசித்தல்

690.மாமுனி வெகுளி தன்னால்
    மடிகலா மைந்தர் நால்வர்!
தாம் உறு சவரர் ஆகச்
    சபித்து எதிர் ‘சலித்த சிந்தை
ஏம் உறல் ஒழிக; இன்னே
    பெறுக ‘என இரண்டு விஞ்சை
கோ மருகனுக்கு நல்கிப்
    பின்னரும் குறிக்கல் உற்றான்
127

உரை
   
 
சுனச்சேபனுக்குக் கோசிகன் விடைகொடுத்தல்

691.அரசனோடு ஏகி, யூபம் அத்து
    அணைக்குபு, இம் மறையை ஓதின்,
விரசுவர் விண் உேளாரும்
    விரிஞ்சனும் விடை வலோனும்;
உரை செறி வேள்வி முற்றும்;
    உன் உயிர்க்கு ஈறு உண்டாகா
பிரசம் மென் தாராய்! என்னப்,
    பழிச்சொடும் பெயர்ந்து போனான்.
128

உரை
   
 
அம்பரீடன் வேள்வி முடிதலும் கோசிகமுனிவன்
வடதிசை செல்லுதலும்

692.மறை முனி உரைத்த வண்ணம்,
    மனத்து உற மைந்தன் ஆயச்,
சிறை உறு கலுழன் அன்னம்
    சே முதல் பிறவும் ஊரும்
இறைவர் தொக்கு, அமரர் சூழ,
    இளவல் தன் உயிரும் வேந்தன்
முறைதரு மகமும் காத்தார், வடதிசை
    முனியும் சென்றான்.
129

உரை
   
 
கோசிகன் தவத்தால் எல்லா உலகும் சலித்தல்

693.வடாதிசை முனியும் நண்ணி,
    மலர்க் கரம் நாசி வைத்து, ஆங்கு
இடாவு பிங்கலையால் நைய,
    இதயத்து ஊடு எழுத்து ஒன்று எண்ணி,
விடாது பல் பருவம் நிற்ப,
    மூலமா முகடு விண்டு,
தடாது இருள் படலை மூடச்
    சலித்தது எத் தலமும் தாவி.
130

உரை
   
 
கோசிகன் தவக்கனலால் புகை விம்முதல் (694-695)

694.எயில் எரித்தவன் யானை உரித்த நாள்
பயில் உறுத்து உரி போர்த்த நன் பண்பு எனப்
புயல் விரித்து எழுந்தால் எனப் பூதலம்
குயில் உறுத்திக் கொழும் புகை விம்மவே.
131

உரை
   
 
695.தமம் திரண்டு உலகு யாவையும் தாவுற
நிமிர்ந்த வெங்கதிர்க் கற்றையும் நீங்குறக்
கமந்த மாதிரக் காவலர் கண்ணொடும்
சுமந்த நாகமும் கண் சும்புளித்தவே.
132

உரை
   
 
கோசிகன் தவத்தால் உலகத்துத் தோன்றிய மாறுபாடு

696.திரிவ நிற்ப செகதலத்து யாவையும்
வெருவல் உற்றன வெங்கதிர் மீண்டன
கருவி உற்ற ககனம் எலாம் புகை
உருவி உற்றிட உம்பர் துளங்கினார்.
133

உரை
   
 
தேவர்கள் கோசிகனைச் சந்தித்தல்

697.புண்டரீகனும் புள் திருப் பாகனும்
குண்டை ஊர்தி குலிசியும் மற்று உள
அண்டர் தாமும் வந்து அவ் வயின் எய்தி வேறு
எண் தபோதனன் தன்னை எதிர்ந்தனர்.
134

உரை
   
 
தேவர்கள் கோசிகனை நீ பிரமவிருடியாவாய் எனல்

698.பாதி மா மதி சூடியும் பைந் துழாய்ச்
சோதியானும் அத் தூய் மலர் ஆளியும்
‘வேத பாரகர் வேறு இலர் நீ அலால்
மா தபோதன! என்ன வழங்கினர்.
135

உரை
   
 
தேவர்கள் தம்மிடஞ் சார்தல்

699.அன்ன வாசகம் கேட்டு உணர் அந்தணன்
‘சென்னி தாழ்த்து இரு செங்கமலம் குவித்து
உன்னும் நல் வினை உற்றது‘ என்று ஓங்கினான்;
துன்னு தேவர் தம் சூழலுள் போயினார்.
136

உரை
   
 
கோசிகன் வரலாற்றைச் சதானந்தர் முடித்தல்

700.‘ஈது முன்னர் நிகழ்ந்தது; இவன் துணை
மா தவத்து உயர் மாண்பு உடையார் இலை;
நீதி வித்தகன் தன் அருள் நேர்ந்தனிர்
யாது உமக்கு அரிது? ‘என்றனன் ஈறு இலான்.
137

உரை
   
 
சதானந்தர் குமாரர்களை வாழ்த்திச் செல்லல்

701.என்று கோதமன் காதலன் கூறிட
வென்றி வீரர் வியப்பொடு உவந்து எழா
ஒன்றும் மாதவன் தாள் தொழுது ஓங்கிய
பின்றை ஏத்திப் பெயர்ந்தனன் தன்னிடம்.
138

உரை
   
 
இராமன் சீதையை எண்ணியவண்ணமாயிருத்தல்

702.முனியும் தம்பியும் போய் முறையால் தமக்கு
இனிய பள்ளிகள் எய்தினர் பின் இருள்
கனியும் போல்பவன் கங்குலும் திங்களும்
தனியும் தானும் அத் தையலும் ஆயினான்.
139

உரை
   
 
சீதையின் உருவெளிப்பாடுகண்டு இராமபிரான்
தன்னுட்கூறுதல் (703-710)

703.விண்ணின் நீங்கிய மின்
    உரு, இம்முறை
பெண்ணின் நல் நலம்
    பெற்றது உண்டே கொலோ!
எண்ணின் ஈது அலது
    ஒன்று அறியேன், இரு
கண்ணின் உள்ளும்
    கருத்தினும் காண்பனால்.
140

உரை
   
 
704.வள்ளச் சேக்கைக் கரியவன் வைகுறும்
வெள்ளப் பால் கடல் போல் மிளிர் கண்ணினாள்
அள்ளல் பூ மகள் ஆகுங் கொலோ! எனது
உள்ளத் தாமரையுள் உறைகின்றதால்.
141

உரை
   
 
705.அருள் இலாள் எனினும்,
    மனத்து ஆசையால்,
வெருளும் நோய் விடக்
    கண்ணின் விழுங்கலால்,
தரெுள் இலா உலகில்
    சென்று நின்று வாழ்
பொருள் எலாம், அவள்
    பொன் உரு ஆயவே.
142

உரை
   
 
706.பூண் உலாவிய பொன் கலசங்கள் என்
ஏண் இல் ஆகத்து எழுதல என்னினும்
வாள் நிலா முறுவல் கனி வாய் மதி
காணல் ஆவது ஒர் காலம் உண்டாம் கொல்லோ.
143

உரை
   
 
707.வண்ண மேகலைத் தேர் ஒன்று வாள் நெடுங்
கண் இரண்டு கதி முலை தாம் இரண்டு
உள் நிவந்த நகையும் என்று ஒன்று உண்டால்
எண்ணும் கூற்றினுக்கு இத்தனை வேண்டுமோ!
144

உரை
   
 
708.கன்னல் இன் கருப்புச்
    சிலையான், விரைப்
பொன்னை முன்னிய,
    பூங் கணை மாரியால்
என்னை எய்து, தொலைக்கும்
    என்றால், இனி
வன்மை என்னும் இது,
    ஆர் இடை வைகுமே?
145

உரை
   
 
709.கொள்ளை கொள்ளக் கொதித்து எழு பாற்கடல்
பள்ள வெள்ளம் எனப் படரும் நிலா
உள்ள உள்ள உயிரைத் துருவிட
வெள்ளை வண்ண விடமும் உண்டாங் கொல்லோ.
146

உரை
   
 
710.ஆகும் நல் வழி அல் வழி என் மனம்
ஆகுமோ அதற்கு ஆகிய காரணம்
பாகு போல் மொழிப் பைந் தொடி கன்னியே
ஆகும் வேறு இதற்கு ஐயுறவு இல்லையே.
147

உரை
   
 
சந்திரன் மறைதல் (711-712)

711.கழிந்த கங்குல் அரசன் கதிர்க் குடை
விழுந்தது என்னவும் மேல் திசையாள் சுடர்க்
கொழுந்து சேர் நுதல் கோது அறு சுட்டி போய்
அழிந்தது என்னவும் ஆழ்ந்தது திங்களே.
148

உரை
   
 
712.வீசுகின்ற நிலாச் சுடர் வீந்ததால்
ஈசனாம் மதி ஏகவும் சோகத்தால்
பூசு வெண் கலவைப் புனை சாந்தினை
ஆசை மாதர் அழித்தனர் என்னவே.
149

உரை
   
 
கதிரவன் தோன்றுதல்

713.ததையும் மலர்த் தார் அண்ணல்
    இவ் வண்ணம் மயல் உழந்து தளரும் ஏல்வை,
சிதையும் மனத்து இடர் உடையச்,
    செங்கமலம் முகம் மலரச், செய்ய வெய்யோன்,
புதை இருளின் எழுகின்ற
    புகர்முக யானையின் உரிவைப் போர்வை போர்த்த
உதயகிரி எனும் கடவுள்
    நுதல் கிழித்த விழியே போல், உதயம் செய்தான
150

உரை
   
 
வெயில் பரவுதல்

714.விசை ஆடல் பசும் புரவிக் குரம் மிதிப்ப,
    உதய கிரி விரிந்த தூளி
பசை ஆக மறையவர் கை நறை மலரும்
    நிறை புனலும் பரந்து பாய,
அசையாத நெடு வரையின் முகடுதொறும்
    இளங்கதிர் சென்று அளைந்து வெய்யோன்,
திசை ஆளும் மதகரியைச் சிந்தூரம்
    அப்பிய போல், சிவந்த மாதோ.
151

உரை
   
 
பொய்கைகளில் தாமரை மலர்தல்

715.பண்டு வரும் குறி பகர்ந்து, பாசறையில்
    பொருள் வயினில் பிரிந்து போன
வண்டு தொடர் நறும் தரெியல் உயிர் அனைய
    கொழுநர் வர, மணித் தேரோடும்
கண்டு, மனம் களி சிறப்ப ஒளி சிறந்து
    மெலிவு அகலும் கற்பினார் போல்,
புண்டரிகம் முகம் மலர, அகம் மலர்ந்து
    பொலிந்தன, பூம் பொய்கை எல்லாம்.
152

உரை
   
 
சூரியகிரணங்கள் விரிதல்

716.எண் அரிய மறையினொடு கின்னரர்கள்
    இசை பாட, உலகம் ஏத்த,
விண்ணவரும் முனிவர்களும் வேதியரும்
    கரம் குவிப்ப, வேலை என்னும்
மண்ணும் அணி முழவு அதிர, வான் அரங்கின்
    நடம்புரி வாள், இரவி ஆன
கண் நுதல் வானவன், கனகச் சடை விரிந்தால்
    என, விரிந்த கதிர்கள் எல்லாம்.
153

உரை
   
 
இராமபிரான் பள்ளியெழுதல்

717.கொல் ஆழி நீத்து அங்கு ஓர்
    குனி வயிரச் சிலை தடக்கைக் கொண்ட கொண்டல்,
எல் ஆழித் தேர் இரவி இளங்
    கரத்தால் அடி வருடி அனந்தல் தீர்ப்ப,
அல் ஆழிக் கரை கண்டான் :
    ஆயிர வாய் மணி விளக்கம் அழலும் சேக்கைத்
தொல் ஆழித் துயிலாதே,
    துயர் ஆழி நெடுங்கடலுள் துயில் கின்றானே.
154

உரை
   
 
இராமன்முதலியோர் சனகனது வேள்விச்சாலை சார்தல்

718.ஊழி பெயர்ந்து எனக் கங்குல்
    ஒரு வண்ணம் புடை பெயர, உறக்கம் நீத்த
சூழி யானையின் எழுந்து,
    தொல் நியமத் துறை முடித்துச், சுருதி அன்ன
வாழி மாதவன் பணிந்து,
    மனக்கு இனிய தம்பியொடும், வம்பின் மாலை
தாழும் மா மணி மௌலித்
    தார்ச் சனகன் பெருவேள்விச் சாலை சார்ந்தான்.
155

உரை
   
 
சனகன் வீற்றிருத்தல்

719.முடிச் சனகர் பெருமானும் முறையாலே
    மறை வேள்வி முற்றிச், சுற்றும்
இடிக் குரலின் முரசு இயம்ப,
    இந்திரன் போல் சந்திரன் தோய் கோயில் எய்தி,
எடுத்த மணி மண்டபத்துள்
    எண் தவத்து முனிவரொடும் இருந்தான் : பைந் தார்
வடித்த குனி வரி சிலைக்கை
    மைந்தனும் தம்பியும் மருங்கின் இருப்ப மாதோ.
156

உரை
   
 
இராமலக்குமணர்களை யாவரென்று
சனகன் வினவ முனிவன் கூறுதல்

720.இருந்த குலக் குமரர்தமை இரு கண்ணும்
    முகந்து அழகு பருக நோக்கி,
அருந்தவனை அடி வணங்கி, ‘யார் இவரை
    உரைத்திடுமின் ‘அடிகள் என்ன,
‘விருந்தினர்கள், நின்னுடைய வேள்வி காணிய
    வந்தார், வில்லும் காண்பார்
பெருந் தகைமைத் தயரதன்தன் புதல்வர் ‘என
    அவர் தகைமை பேசல் உற்றான்.
157

உரை