வீதியில் மகளிர் வந்து கூடிய தன்மை (1148-1152)

1148.மான் இனம் வருவ போன்றும்,
    மயில் இனம் திரிவ போன்றும்,
மீன் இனம் மிளிர்வ போன்றும்,
    மின் இனம் மிடைவ போன்றும்,
தேன் இனம் சிலம்பி ஆர்ப்பச்,
    சிலம்பு இனம் புலம்ப, எங்கும்,
பூநனை கூந்தல் மாதர்
    பொம்மெனப் புகுந்து மொய்த்தார்.
1

உரை
   
 
1149.விரிந்து வீழ் கூந்தல் பாரார்,
    மேகலை அற்ற நோக்கார்,
சரிந்த பூம் துகில்கள் தாங்கார்,
    இடை தடுமாறத் தாழார்,
நெருங்கினர், நெருங்கிப் புக்கு,
    ‘நீங்குமின்! நீங்குமின்! ‘என்று
அரும் கலம் அனைய மாதர்
    தேன் நுகர் அளியின் மொய்த்தார்.
2

உரை
   
 
1150.‘கண்ணினால் காதல் என்னும் பொருளையே
    காண்கின்றோம்! இப்
பெண்ணின் நீர்மையினால் எய்தும்
    பயன் இன்று பெறுதும்! ‘என்பார்,
மண்ணின் நீர் உலர்ந்து வானம்
    மழை அற வறந்த காலத்து
உண்ணும் நீர் கண்டு வீழும்
    உழைக் குலம் பலவும் ஒத்தார்.
3

உரை
   
 
1151.பள்ளம் அத்து பாயும் நல் நீர்
    அனையவர் பானல் பூத்த
வெள்ளத்துப் பெரிய கண்ணார்
    மென் சிலம்பு அலம்ப மென் பூத்
தள்ளத் தம் இடைகள் நோவத்
    தமை வலித்து அவன்பால் செல்லும்
‘உள்ளத்தைப் பிடித்தும் நாம்! ‘என்று
    ஓடுகின்றாரும் ஒத்தார்.
4

உரை
   
 
1152.அரத்தம் உண்டு அனைய மேனி
    அகலிகைக்கு அளித்த தாளும்,
விரைக் கருங்குழலிக்கு ஆக
    வில் இற நிமிர்ந்து வீங்கும்
வரைத் தடம் தோளும் காண,
    மறுகினின் வீழும் மாதர்,
இரைத்து வந்து அமிழ்தின் மொய்க்கும்
    ஈ இனம் என்னல் ஆனர்.
5

உரை
   
 
கண்ணன் என்னும் பெயர்

1153.வீதி வாய்ச் செல்கின்றான் போல்,
    விழித்து இமையாது நின்ற
மாதரார் கண்கள் ஊடே வாவும்
    மான் தேரில் செல்வான்,
யாதினும் உயர்ந்தோர் தன்னை
    யாவர்க்கும் கண்ணன் என்றே
ஓதிய பெயர்க்குத் தானே
    உறு பொருள் உணர்த்தி விட்டான்.
6

உரை
   
 
இராமனைக் கண் கடவாது காத்த காரிகை

1154.‘எண் கடந்து அலகு இலாது இன்று
    ஏகுறும் இவன் தேர், ‘ என்று,
பெண்கள் தம் தம்மில் நொந்து
    பேதுறு கின்ற காலை,
மண் கடந்து அமரர் வைகும்
    வான் கடந்தானைத் தான் தன்
கண் கடவாது காத்த
    காரிகை பெரியளே காண்!
7

உரை
   
 
ஒரு தரெிவை எல்லாவற்றையும் உகுத்து நிற்றல்

1155.பயிர், ஒன்று கலையும், சங்கும்,
    பழிப்பு அறு நலனும், பண்பும்,
செயிர் இன்றி அலர்ந்த பொற்பும்,
    சிந்தையும், உணர்வும், தேசும்,
வயிரம் செய் பூணும், நாணும்,
    மடனும், தன் நிறையும், மற்றும்,
உயிர் ஒன்றும் ஒழிய, எல்லாம்
    உகுத்து ஒரு தரெிவை நின்றாள்.
8

உரை
   
 
காமன் சரங்களால் ஒருத்தி வருந்துதல்

1156.குழை உறா மிளிரும் கெண்டை
    கொண்டலின் ஆலி சிந்தத்,
தழை உறாக் கரும்பின் சாபத்து
    அனங்கன் வேள் சரங்கள் பாய,
இழை உறாப் புண் அறாத
    இள முலை ஒருத்தி, சோர்ந்து,
மழை உறா மின்னின் அன்ன
    மருங்குல் போல், நுடங்கி நின்றாள்.
9

உரை
   
 
இராமன் நிறமும் மகளிர் கண்ணின் கருமையும்

1157.பஞ்சு இவர் விரலினார் தம்
    படை நெடும் கண்கள் எல்லாம்
செஞ்செவே ஐயன் மெய்யில்
    கருமையைச் சேர்ந்தவோ தாம்?
மஞ்சு அன மேனியான் தன்
    மணி நிறம் மாதரார் தம்
அஞ்சன நோக்கம் போக்க
    இருண்டதோ? அறிகிலேமால்.
10

உரை
   
 
ஒருத்தி மன்மதனை நொந்து கூறல்

1158.மாந்தளிர் மேனியாள் ஓர் வாள் நுதல்
    மதனன் எங்கும்
பூம் துணர் வாளி மாரி பொழிகின்ற
    பூசல் நோக்கி,
‘வேந்தர் கோன் ஆணை நோக்கான்,
    வீரன் வில் ஆண்மை பாரான்,
ஏந்து இழையாரை எய்வான்
    யாவனோ ஒருவன்? ‘என்றாள்.
11

உரை
   
 
ஒருத்தி துகில் ஒன்றை மட்டும் தாங்குதல்

1159.சொல் நலம் கடந்த காமச்
    சுவையை ஓர் உருவம் ஆக்கி,
இன் நலம் தரெிய வல்லார்
    எழுதியது என்ன நின்றாள்;
பொன்னையும் பொருவும் நீராள்,
    புனைந்தன எல்லாம் போகத்,
தன்னையும் தாங்கலாதாள்,
    துகில் ஒன்றும் தாங்கி நின்றாள்.
12

உரை
   
 
ஒருத்தி இராமன் தமியனோ எனல்

1160.வில் தங்கு புருவம் நெற்றி
    வெயர் வரப், பசலை விம்மச்,
சுற்று எங்கும் எறிப்ப, உள்ளம்
    சோர, ஓர் தோகை நின்றாள்,
கொற்றம் செய் கொலை வேல் என்னக்
    கூற்று எனக் கொடிய கண்ணாள்,
மற்று ஒன்றும் காண்கிலாதாள்
    ‘தமியனோ வள்ளல்? ‘என்றாள்.
13

உரை
   
 
ஒருத்தி கண்களை அடைத்து அமளியை நாடுதல்

1161.மைக் கருங்கூந்தல் செவ்வாய்
    வாள் நுதல் ஒருத்தி உள்ளம்
நெக்கனள் உருகுகின்றாள்,
    ‘நெஞ்சு இடை வஞ்சன் வந்து
புக்கனன், போகாவண்ணம்,
    கண் எனும் புலம் கொள் வாயும்
சிக்கென அடைத்தேன், தோழி!
    சேருதும் அமளி ‘என்றாள்.
14

உரை
   
 
ஒருத்தி இராமனைக் காணும் பிறரைச் சினத்தல்

1162.தாக்கு அணங்கு அனைய மேனி
    தைத்த வேள் சரங்கள் பாராள்,
வீக்கிய கலனும் தூசும்
    வேறு வேறு ஆனது ஓராள்,
ஆக்கிய பாவை அன்னாள் ஒருத்தி,
    ஆண்டு அமலன் மேனி
நோக்கு உறுவாரை எல்லாம்,
    எரி எழ, நோக்குகின்றாள்.
15

உரை
   
 
ஒருத்தி வெதுப்பொடு போதல்

1163.களிப்பன, மதர்ப்ப, நீண்டு
    கதுப்பினை அளப்ப, கள்ளம்
ஒளிப்பன, வெளிப்பட்டு ஓடப்
    பார்ப்பன, சிவப்பு உள் ஊற
வெளிர்ப்பன, கறுப்ப ஆன
    வேல் கணாள் ஒருத்தி உள்ளம்
குளிர்ப்பொடு காண வந்தாள்,
    வெதுப்பொடும் கோயில் புக்காள்.
16

உரை
   
 
ஒருத்தி பெண்கள் இடைகளின் வெளிகளூடே பார்த்தல்

1164.கருங்குழல் பாரம் வார் கொள்
    கன முலை, கலை சூழ் அல்குல்,
நெருங்கின மறைப்ப, ஆண்டு ஓர்
    நீக்கு இடம் பெறாது, விம்மும்
பெரும் தடம் கண்ணி, காணும்
    பேர் எழில் ஆசை தூண்ட,
மருங்குலின் வெளிகள் ஊடே,
    வள்ளலை நோக்குகின்றாள்.
17

உரை
   
 
வீதிகளின் தன்மை

1165.வரிந்த வாள் அனங்கன் வாளி
    மனம் கழன்றனவும், மாதர்
எரிந்த பூண் இனமும், கொங்கை
    வெயர்த்த போது இழிந்த சாந்தும்,
சரிந்த மேகலையும், முத்தும்,
    சங்கமும், தாழ்ந்த கூந்தல்
விரிந்த பூந் தொடையும் அன்றி,
    வெள் இடை அரிது அவ் வீதி.
18

உரை
   
 
இராமனது முழு வடிவை எவரும் கண்டிலர் என்றல்

1166.தோள் கண்டார் தோளே கண்டார்;
    தொடு கழல் கமலம் அன்ன
தாள் கண்டார் தாளே கண்டார்;
    தடக் கை கண்டாரும் அஃதே;
வாள் கண்ட கண்ணார் யாரே
    வடிவினை முடியக் கண்டார்?
ஊழ் கண்ட சமயத்து அன்னான்
    உருவு கண்டாரை ஒத்தார்.
19

உரை
   
 
ஒருத்தி தன் உள்ளத்து இராமனை ஒடுக்குதல்

1167.தையல் சிற்று இடையாள் ஒரு தாழ் குழல்
உய்ய மற்று அவள் உள்ளத்து ஒடுங்கினான்;
வையம் முற்றும் வயிற்றின் அடக்கிய
ஐயனில் பெரியார் இனி யாவரே?
20

உரை
   
 
ஒருத்தி தோழியர் கைத்தாங்கலில் செல்லுதல்

1168.அலம்பு பாரக் குழலி ஓர் ஆய் இழை
சிலம்பும் மேகலையும் ஒலி செய்திட
நலம் பெய் கொம்பின் நடந்து வந்து எய்தினாள்
புலம்பு சேடியர் கை மிசைப் போயினாள்.
21

உரை
   
 
ஒருத்தி இராமனைக் கரும்பு வில் ஒடிக்க வேண்டுதல்

1169.அருப்பு மெல் முலையாள்,
    அங்கு, ஓர் ஆய் இழை,
‘இருப்பு நெஞ்சினையேனும்,
    ஓர் ஏழைக்காப்
பொருப்பு வில்லைப்
    பொடி செய்த புண்ணியா!
கருப்பு வில் இறுத்து ஆள்
    கொண்டு கா! ‘என்றாள்.
22

உரை
   
 
ஒருத்தி இராமனைத் தேரிலன்றிக் கண்ணெதிரே காண்டல்

1170.மை தவழ்ந்த கருங்கண் ஒர் வாள் நுதல்
‘செய் தவன் தனித் தேர் மிசைச் சேறல் விட்டு
எய்த வந்து எதிர் நின்றமைதான் இது
கைதவம் கொல்? கனவு கொலோ? ‘என்றாள்.
23

உரை
   
 
ஒருத்தி சீதையின் தவத்தை நினைந்து சோர்தல்

1171.மாது ஒருத்தி மனத்தினை அல்லது ஓர்
தூது பெற்றிலள் இன் உயிர் சோர்கின்றாள்
‘போது அரிக் கண் பொலன் குழைப் பூண் முலைச்
சீதை எத் தவம் செய்தனேளா? ‘என்றாள்.
24

உரை
   
 
மன்மதனால் இராமனை எழுதலாமோ எனல்

1172.பழுது இலா ஒரு
    பாவை அன்னாள் பதைத்து
அழுது வெய்து உயிர்த்து,
    அன்பு உடைத் தோழியைத்
தொழுது சோர்ந்து அயர்வாள்
    ‘இந்தத் தோன்றலை
எழுதல் ஆகும் கொல்
    மன்மதனால்? ‘என்றாள்.
25

உரை
   
 
ஒருத்தி இராமன் கண்ணனே எனல்

1173.வண்ண வாய் ஒரு வாள் நுதல் ‘மானிடற்கு
எண்ணுங்கால் இவ் இலக்கணம் எய்திட
ஒண்ணுமோ? இது உணர்த்துகின்றேன் இவன்
கண்ணனே! இது கண்டிரும் பின்! ‘என்றாள்.
26

உரை
   
 
ஒருத்தி இராமன் மிதிலை வருதல் சனகன் தவம் எனல்

1174.கனக நூபுரம் கை வளையோடு உக
மனன் நெகும்படி வாடி ஒர் வாள் நுதல்
‘அனகன் இந் நகர் எய்தியது ஆதியில்
சனகன் செய்த தவப் பயனால்! ‘என்றாள்.
27

உரை
   
 
ஒருத்தி ‘கனவில் இராமன் தனி வருமோ ‘எனல்

1175.நனி வருந்தி நலம் குடி போயிட
பனி வரும் கண் ஒர் பாசிழை அல்குலாள்
‘முனிவரும் குல மன்னரும் மொய்ப்பு அறத்
தனி வரும் கொல் கனவின் தலை? என்றாள்.
28

உரை
   
 
முகக் குறிகளால் ஒருத்தி காதல் புலப்படுதல்

1176.புனம் கொள் கார் மயில் போலும் ஒர் பொன் கொடி
மனம் கொள் காதல் மறைத்தலை எண்ணினாள்;
அனங்க வேள் அது அறிந்தனன்; அற்றம் தான்
மனங்கள் போல முகமும் மறைக்குமே?
29

உரை
   
 
ஒருத்தி பூவணையில் நெட்டுயிர்த்தல்

1177.இணை நெடும் கண் ஒர் இந்து முகத்தி பூ
அணை அணைந்து இடி உண்ட அரா எனப்
புணர் நலம் கிளர் கொங்கை புழுங்கிட
உணர்வு அழுங்க உயிர்த்தனள் ஆவியே.
30

உரை
   
 
கவிக் கூற்று

1178.ஆம்பல் ஒத்து அமுது ஊறு செவ் வாய்ச்சியர்
தாம் பதைத்து உயிர் உள் தடுமாறுவார் :
தேம்பு சிற்றிடைச் சீதையைப் போல் சிறிது
ஏம்பல் பெற்றிலர் எங்ஙனம் உய்வரே?
31

உரை
   
 
ஒருத்தி ‘இராமன் உள்ளன்பு
இலாதவனோ? ‘எனல்

1179.வேர்த்து மேனி தளர்ந்து உயிர் விம்மலோடு
‘ஆர்த்தி உற்ற மடந்தையர் ஆரையும்
தீர்த்தன் இத்தனை சிந்தையில் செங்கணில்
பார்த்திலான் உள் பரிவு இலனோ? ‘என்றாள்.
32

உரை
   
 
மன்மதன் உடைவாளினும் கை வைத்தல்

1180.வையம் பற்றிய மங்கையர் எண் இலர்;
ஐயன் பொற்புக்கு அளவு இலை; ஆதலால்
எய்யும் பொன் சிலை மாரனும் என்செய்வான்?
கை அம்பு அற்று உடைவாளினும் கை வைத்தான்.
33

உரை
   
 
வான நாடியரும் இராமனைக் காதலித்தல்

1181.நான வார் குழல் நாரியரோடு அலால்
வேனல் வேெளாடு மேல் உறைவார்கேளாடு
ஆன பூசல் அறிந்திலம்; அம்பு போய்
வான நாடியர் மார்பினும் தைத்தவே.
34

உரை
   
 
ஒருத்தி இராமனைப் படுகொலையான் எனல்

1182.‘மருள் மயங்கும் மடந்தையர் மாட்டு ஒரு
பொருள் நயந்திலன் போகின்றதே? இவன்
கருணை என்பது கண்டு அறியான் பெரும்
பருணிதன் கொல்? படுகொலையான்! ‘என்றாள்.
35

உரை
   
 
ஒருத்தி தளர்ந்து ஓய்தல்

1183.தொய்யில் வெய்ய முலைத் துடி போல் இடை
நையும் நொய்ய மருங்குல் ஒர் நங்கைதான்
கையும் மெய்யும் அறிந்திலள் கண்டவர்
‘உய்யும்? உய்யும்? ‘எனத் தளர்ந்து ஓய்வு உற்றாள்.
36

உரை
   
 
ஒருத்தி இராமன் தேரின்பின் போவதும்
வருவதுமாய் இருத்தல்

1184.பூக ஊசல் புரிபவர் போல் ஒரு
பாகு போல் மொழியாள் மலர்ப் பாதங்கள்
சேகு சேர்தரச் சேவகன் தேரின் பின்
ஏகும் மீளும்; இது என் செய்த ஆறு அரோ?
37

உரை
   
 
ஒருத்தி நாணிழந்து பேசுதல்

1185.பெருத்த காதலில் பேது உறும் மாதரின்
ஒருத்தி மற்று அங்கு ஒருத்தியை நோக்கி ‘என்
கருத்தும் அவ் வழிக் கண்டது உண்டோ? ‘என்றாள்;
அரு த்தி உற்ற பின் நாணம் உண்டாகுமோ?
38

உரை
   
 
ஒருத்தி இராமனுக்குள்ள கொடுமையைக் கூறல்

1186.நங்கை அங்கு ஒரு பொன் ‘நயந்தார் உயத்
தங்கள் இன் உயிரும் கொடுத்தார் தமர்;
எங்கள் இன் உயிர் எங்களுக்கு ஈகலா
வெங்கண் எங்கண் விளைந்தது இவற்கு? ‘என்றாள்.
39

உரை
   
 
ஒருத்தி இராமன் காமமற்றவன் எனல்

1187.நாமத்தால் அழிவாள் ஒரு நல் நுதல்
‘சேமத்து ஆர் வில் இறுத்தது தேருங்கால்
தூமத்து ஆர் குழல் தூ மொழித் தோகைபால்
காமத்தால் அன்று கல்வியினால் ‘என்றாள்.
40

உரை
   
 
ஒருத்தி மாரனின் வன்மையைக் கூறல்

1188.ஆரமும் துகிலும் கலன் யாவையும்
சோர இன் உயிர் சோரும் ஒர் சோர் குழல்
‘கோர வில்லி முனே எனைக் கொல்கின்ற
மாரவேளின் வலியவர் யார்? ‘என்றாள்.
41

உரை
   
 
இராமன் மண்டபம் அடைதல்

1189.மாதர் இன்னணம் மொய்த்திட வள்ளல் போய்க்
கோது இல் சிந்தை வசிட்டனும் கோசிக
வேத பாரனும் மேவிய மண்டபம்
ஏதி மன்னர் குழாத்தொடும் எய்தினான்.
42

உரை
   
 
வசிட்டனையும் கோசிகனையும் இராமன் வணங்குதல்

1190.திருவின் நாயகன் மின் திரிந்தால் எனத்
துருவு இன் மா மணி ஆரம் துயல்வரப்
பருவ மேகம் படிந்தது போல் படிந்து
இருவர் தாளும் முறையின் இறைஞ்சினான்.
43

உரை
   
 
இராமன் இருக்கையில் அமர்தல்

1191.இறைஞ்ச அன்னவர் ஏத்தினர் ஏவ ஓர்
நிறைஞ்ச பூந்தவிசு ஏறி நிழற்கள் போல்
புறம் செய் தம்பியருள் பொலிந்தான் அரோ
அறம் செய் காவற்கு அயோத்தியில் தோன்றினான்.
44

உரை
   
 
தசரதனும் வருதல்

1192.ஆன மா மணி மண்டபம் அன்னது
தானை மன்னன் தமரொடும் சார்ந்தனன்
மீன் எலாம் தன பின் வர வெண் மதி
வான் நிலா உற வந்தது மானவே.
45

உரை
   
 
தசரதன் இருக்கையில் அமர்தல்

1193.வந்து மாதவர் பாதம் வணங்கி மேல்
சிந்து தேன் மலர் மாரி சிறந்திட
அந்தணாளர்கள் ஆசியொடு ஆசனம்
இந்திரன் முகம் நாண் உற ஏறினான்.
46

உரை
   
 
பல நாட்டு மன்னர்களும் வருதல் ((1194-1196))

1194.கங்கர் கொங்கர் கலிங்கர் குலிங்கர்கள்
சிங்கள அதிபர் சேரலர் தனெ்னவர்
அங்கராசர் குலிந்தர் அவந்திகர்
வங்கர் மாளவர் சோழர் மராடரே.
47

உரை
   
 
1195.மான மாகதர் மச்சர் மிலேச்சர்கள்
ஏனை வீர இலாடர் விதர்ப்பர்கள்
சீனர் தஙெ்கணர் செம்சகர் சோமகர்
சோனக ஈசர் துருக்கர் குருக்களே.
48

உரை
   
 
1196.ஏதி யாதவர் ஏழ் திறல் கொங்கணர்
சேதி ராசர் தலெுங்கர் கருநடர்
ஆதி வானம் கவிந்த அவனி வாழ்
சோதி நீள் முடி மன்னரும் துன்னினார்.
49

உரை
   
 
தசரதனுக்குச் சாமரை வீசுதல்

1197.தீங் கரும்பினும் தித்திக்கும் இன் சொலார்
தாங்கு சாமரை மாடு தயங்குவ
ஓங்கி ஓங்கி வளர்ந்து உயர் சீர்த்தியின்
பூங் கொழுந்து பொலிவன போன்றவே.
50

உரை
   
 
தசரதனுக்குப் பல்லாண்டு பாடுதல்

1198.சுழலும் வண்டும் மிஞிறும் சுரும்பும் சூழ்ந்து
உழலும் தும்பியும் பம்பு அறல் ஓதியர்
குழலினோடு உறக் கூறு பல்லாண்டு ஒலி
மழலை யாழ் இசையோடு மலிந்தவே.
51

உரை
   
 
தசரதன் வெண்குடை விளங்குதல்

1199.வெம் கண் ஆனையினான் தனி வெண் குடை
திங்கள் தங்கள் குலக் கொடிச் சீதை ஆம்
மங்கை மா மணம் காணிய வந்து அருள்
பொங்கி ஓங்கித் தழைப்பது போன்றதே.
52

உரை
   
 
தசரதன் படைகளின் பெருக்கம்

1200.ஊடு பேர்வு இடம் இன்றி ஒன்று ஆம் வகை
நீடு மா கடல் தானை நெருங்கலால்
ஆடல் மா மத ஆனைச் சனகர் கோன்
நாடு எலாம் ஒரு நல் நகர் ஆயதே.
53

உரை
   
 
சனகன் யாவரையும் ஒப்ப உபசரித்தல்

1201.ஒழிந்த என் இனி? ஒள் நுதல் தாதை தன்
பொழிந்த காதல் தொடரப் பொருள் எலாம்
அழிந்து உவந்து கொண்டாடலின் அன்புதான்
இழிந்து உளார்க்கும் இராமற்கும் ஒத்ததே.
54

உரை