இராவணன் அமைச்சர் முதலாயினோரை வெகுண்டுரைத்தல் (7857-7862)

7857.கொழுந்துவிட்டு அழன்று எரி மடங்கல் கூட்டு அற
எழுந்து எரி வெகுளியான் இரு மருங்கினும்
தொழும்தகை அமைச்சரைச் சுளித்து நோக்கு உறா
மொழிந்தனன் இடியொடு முகிலும் சிந்தவே.
1

உரை
   
 
7858.‘ஏகுதிர் எம் முகத்து எவரும் என்னுடை
யோக வெஞ்சேனையும் உதவ உம்முடைச்
சாகரத் தானையும் தழுவச் சார்ந்து அவர்
வேக வெஞ்சிலைத் தொழில் விலக்கி மீள்கிலீர்.
2

உரை
   
 
7859.“எடுத்தவர் இருந்துழி எய்தி யாரையும்
படுத்து இவண் மீள்தும் “ என்று உரைத்த பண்பினீர்!
தடுத்திலீர் எம்பியை; தாங்க கிற்றிலீர்;
கொடுத்திலீர் உம் உயிர்; வீரக் கோட்டியீர்.
3

உரை
   
 
7860.உம்மையினின்று நான் உலகம் மூன்றும் என்
வெம்மையின் ஆண்டது; நீர் என் வென்றியால்
இம்மையின் நெடுந்திரு எய்தினீர்; இனிச்
செம்மையின் நின்று உயிர் தீர்ந்து தீர்திரால்.
4

உரை
   
 
7861.“‘ஆற்றலம் ” என்றிரேல் என்மின்; யான் அவர்
தோற்று அலம்வந்து உகத்துரந்து தொல் நெடுங்
கூற்று அலமர உயிர் குடிக்கும் கூர்ந்த என்
வேல் தலை மானிடர் வெரிநில் காண்பெனால்.
5

உரை
   
 
7862.‘அல்லதும் உண்டு உமக்கு உரைப்பது; “ஆர் அமர்
வெல்லும் “ என்றிரேல் மேல் செல்வீர்; இனி
வல்லது மடிதலே என்னின் மாறுதிர்;
சொல்லும் நும் கருத்து ‘என முனிந்து சொல்லினான்.
6

உரை
   
 
அதிகாயன் தன் வீரத்தை எடுத்துரைத்தல் (7863-7866)

7863.நதி காய் நெடு மானமும் நாணும் உறா
மதி காய் குடை மன்னனை வைது உரையா
விதி காயினும் வீரம் வெலற்கு அரியான்
அதிகாயன் எனும் பெயரான் அறைவான்.
7

உரை
   
 
7864.‘வான் அஞ்சுக; வையகம் அஞ்சுக; மா-
லான் அஞ்சு முகத்தவன் அஞ்சுக; “மேல்
நான் அஞ்சினென் “ என்று உனை நாணுக; போர்
யான் அஞ்சினென் என்றும் இயம்புவதோ?
8

உரை
   
 
7865.‘வெம்மைப் பொரு தானவர் மேல் வலியோர்
தம்மைத் தளையில் கொடு தந்திலெனோ?
உம்மைக் குலையப் பொரும் உம்பரையும்
கொம்மைக் குய வட்டு அணை கொண்டிலெனோ?
9

உரை
   
 
7866.‘காய்ப்பு உண்ட நெடும் படை கை உளதாத்
தேய்ப் புண்டவனும் சில சில் கணையால்
ஆய்ப் புண்டவனும் அவர் சொல் வலதால்
ஏய்ப் புண்டவனும் என எண்ணினையோ?
10

உரை
   
 
அதிகாயன் வஞ்சினங்கூறி, தான் போருக்குச் செல்ல விடை தருமாறு இராவணனை வேண்டுதல் (7867-7869)

7867.‘உம்பிக்கு உயிர் ஈறு செய்தான் ஒருவன்
தம்பிக்கு உயிர் ஈறு சமைத்து அவனைக்
கம்பிப்பது ஒர் வன்துயர் கண்டிலெனேல்
நம்பிக்கு ஒரு நன்மகனோ இனி நான்?
11

உரை
   
 
7868.‘கிட்டிப் பொருது அக் கிளர் சேனை எலாம்
மட்டித்து உயர் வானரர் வன் தலையை
வெட்டித் தரை இட்டு இரு வில்லினரைக்
கட்டித் தருவென்; இது காணுதியால்.
12

உரை
   
 
7869.“‘சேனைக் கடலோடு இடை செல்க ” எனினும்
யான் ‘இப்பொழுதே தனி ஏக ‘எனினும்
தான் ஒத்தது சொல்லுதி; தா விடை ‘என்-
றான்; இத்திறம் உன்னி அரக்கர்பிரான்.
13

உரை
   
 
அதிகாயன் கூறியது கேட்டு மகிழ்ந்த இராவணன் பெருஞ்சேனையுடன் போர்க்குச் செல்லுமாறு அவனுக்கு விடை கொடுத்தல் (7870-7874)

7870.‘சொன்னாய் இது நன்று துணிந்தனை; நீ
அன்னான் உயிர் தந்தனையாம் எனின் யான்
பின்நாள் அ(வ்) இராமன் எனும் பெயரான்
தன் ஆருயிர் கொண்டு சமைக்குவெனால்.
14

உரை
   
 
7871.‘போவாய் இதுபோது பொலங் கழலோய்!
மூவாயிர கோடியரோடு முரண்
கா ஆர் கரி தேர் பரி காவலின் நின்று
ஏவாதன யாவையும் ஏவினனால்.
15

உரை
   
 
7872.‘கும்பக் கொடியோனும் நிகும்பனும் வேறு
அம் பொன் கழல் வீரன் அகம்பனும் உன்
செம்பொன் பொலி தேர் அயல் செல்குவரால்
உம்பர்க்கும் வெலற்கு அரியார் உரவோர்.
16

உரை
   
 
7873.‘ஓர் ஏறு சிவற்கு உளது ஒப்பு உளவாம்
வார் ஏறு வயப் பரி ஆயிரம் வன்
போர் ஏறிட ஏறுவ பூண் உறு திண்
தேர் ஏறுதி தந்தனென் வெந் திறலோய்!
17

உரை
   
 
7874.‘ஆம் அத்தனை மாவுடை அத்தனை தேர்
சேமத்தன பின்புடை செல்ல அடும்
கோ மத்த நெடுங் கரி கோடியொடும்
போம் அத்தனை வெம் புரவிக் கடலே.
18

உரை
   
 
அதிகாயன் போர்க்கோலம் பூண்டு பகைவர்மேற் சேறல்
(7875-7876)

7875.என்றே விடை நல்க இறைஞ்சி எழா
வன்தாள் வயிரச் சிலை கைக் கொடு வாள்
பொன்தாழ் கவசம் புகுதா முகிலின்
நின்றான்; இமையோர்கள் நெளிந்தனரால்.
19

உரை
   
 
7876.பல்வேறு படைக்கலம் வெம் பகலோன்
எல் வேறு தரெிப்ப கொடு ஏகினனால்
சொல் வேறு தழெிக்குநர் சுற்றுறு அ(ம்)மா
வில் வேறு தரெிப்புறும் மேனியினான்.
20

உரை
   
 
அதிகாயனுடன் சென்ற சேனைகள் (7877-7881)

7877.இழை அஞ்சன மால்களிறு எண் இல் அரி
முழை அஞ்ச முழங்கின; மும்முறை நீர்
உழை அஞ்ச முழங்கின; நாண் ஒலி; கோள்
மழை அஞ்ச முழங்கின மா முரசே.
21

உரை
   
 
7878.ஆர்த்தார் நெடு வானம் நடுங்க; அடி
பேர்த்தார் நில மா மகள் பேர்வள் என;
தூர்த்தார் நெடு வேலைகள் தூளியினால்;
வேர்த்தார் அது கண்டு விசும்பு உறைவோர்.
22

உரை
   
 
7879.அடி ஓடும் மதக் களி யானைகளின்
பிடியோடு நிகர்த்தன பின்புறம்; முன்
தடியோடு துடக்கிய தாரைய வெண்
கொடியோடு துடக்கிய கொண்மு எலாம்.
23

உரை
   
 
7880.தாறு ஆடின மால் கரியின் புடை தாழ்
மாறாடின மா மதம் மண்டுதலால்
ஆறு ஆடின பாய் பரி; யானைகளும்
சேறு ஆடின சேண் நெறி சென்ற எலாம்.
24

உரை
   
 
7881.தேர் சென்றன செம் கதிரோனொடு சேர்
ஊர் சென்றன போல்; ஒளி ஓடைகளின்
கார் சென்றன கார் நிறை சென்றன போல்;
பார் சென்றில சென்றன பாய் பரியே.
25

உரை
   
 
போர்க்களத்திற் புக்க அதிகாயன் மனம் புழுங்கியவனாய், கும்பருணனது தலையற்ற உடலைக் கண்டு வருந்துதல் (7882-7885)

7882.மேருத்தனை வெற்பு இனம் மொய்த்து நெடும்
பாரில் செலுமாறு படப் படரும்
தேர் சுற்றிடவே கொடு சென்று முரண்
போர் முற்று களத்திடை புக்கனனால்.
26

உரை
   
 
7883.கண்டான் அ(வ்) இராமன் எனும் களிமா
உண்டாடிய வெங்களன்; ஊடுருவ
புண்தான் உறு நெஞ்சு புழுக்கம் உறத்
திண்டாடினன் வந்த சினத் திறலோன்.
27

உரை
   
 
7884.மலை கண்டன போல் வரு தோெளாடு தாள்
கலை கண்ட கருங்கடல் கண்டு உளவாம்
நிலை கண்டன கண்டு ஒரு தாதை நெடுந்
தலை கண்டிலன் நின்று சலித்தனனால்.
28

உரை
   
 
7885.‘மிடல் ஒன்று சரத்தொடு மீது உயர் வான்
திடல் அன்று; திசைக் களிறு அன்று ஒரு திண்
கடல் அன்று; இது என்? எந்தை கடக்க அரியான்
உடல் ‘என்று உயிரோடும் உருத்தனனால்.
29

உரை
   
 
சினமுற்ற அதிகாயன் வஞ்சினங் கூறி, மயிடன் என்பானை நோக்கி, ‘இலக்குவன்பால் தூதுசென்று அவனைத் தனிநின்று போர்செய்ய அழைத்துவருக ‘எனச் சொல்லி அனுப்புதல் (7886-7892)

7886.‘எல்லே! இவை காணிய எய்தினெனோ?
வல்லே உளராயின மானுடரைக்
கொல்லேன் ஒரு நான் உயிர்கோள் நெறியில்
செல்லேன் எனின் இவ் இடர் தீர்குவெனோ?
30

உரை
   
 
7887.என்னா முனியா ‘இது இழைத்துளவன்
பின்னானையும் இப்படி செய்து பெயர்ந்து
அன்னான் இடர் கண்டு இடர் ஆறுவென் ‘என்று
உன்னா ஒருவற்கு இது உணர்த்தினனால்.
31

உரை
   
 
7888.‘வா நீ மயிடன்! ஒரு வல் விசையில்
போ நீ அ(வ்) இலக்குவனில்; புகல்வாய்;
நான் ஈது துணிந்தனென் நண்ணினெனால்;
மேல் நீ இது உணர்ந்து விளம்பிடுவாய்.
32

உரை
   
 
7889.“‘அம் தார் இளவற்கு அயர்வு எய்தி அழும்
தம் தாதை மனத்து இடர் தள்ளிடுவான்
உந்து ஆர் துயரோடும் உருத்து எதிர்வான்
வந்தான் “ என முன்சொல் வழங்குதியால்;
33

உரை
   
 
7890.‘கோள் உற்றவன் நெஞ்சு சுடக் குழைவான்
நாள் உற்ற இருக்கையில் யான் ஒரு தன்
தாள் அற்று உருளக் கணை தள்ளிடுவான்
சூளுற்றதும் உண்டு; அது சொல்லுதியால்.
34

உரை
   
 
7891.‘தீது என்றது சிந்தனை செய்திலெனால்;
ஈது என்று திறம் மன் நெறியாம் ‘என; நீ
தூது என்று இகழாது உன சொல் வலியால்
“போது ” என்று உடனே கொடு போதுதியால்.
35

உரை
   
 
7892.‘செரு ஆசையினார் புகழ் தேடுறுவார்
இருவோரையும் நீ வலிவுற்று “எதிரே
பொருவோர் நமனார் பதி புக்கு உறைவோர்;
வருவோரை எலாம் வருக “ என்னுதியால்.
36

உரை
   
 
இலக்குவனை என்முன் அழைத்துவரின் உனக்குப் பரிசுகள் பல தருவேன் ‘என, அதிகாயன் மயிடனுக்குக் கூறுதல் (7893-7900)

7893.‘சிந்தாகுலம் எந்தை திருத்திடுவான்
“வந்தான் ” என என் எதிரே மதியோய்!
தந்தாய் எனின் யான் அலது யார் தருவார்
உந்த அரிய உள்ள உயர்ந்த எலாம்?
37

உரை
   
 
7894.‘வேறே அ(வ்) இலக்குவன் என்ன விளம்பு
ஏறே வருமேல் இமையோர் எதிரே
கூறே பல செய்து உயிர் கொண்டு உனையும்
மாறே ஒரு மன் என வைக்குவெனால்.
38

உரை
   
 
7895.‘விண் நாடியர் விஞ்சையர் அம் சொலினார்
பெண் ஆர் அமுது அன்னவர் பெய்து எவரும்
உண்ணாதன கூர் நறவு உண்ட தசும்பு
எண் ஆயிரம் ஆயினும் ஈகுவெனால்.
39

உரை
   
 
7896.‘உறை தந்தன செங் கதிரோன் உருவின்
பொறை தந்தன காசு ஒளிர்பூண் இமையோர்
திறை தந்தன தயெ்வ நிதிக் கிழவன்
முறை தந்தன தந்து முடிக்குவெனால்.
40

உரை
   
 
7897.‘மாறா மத வாரிய வண்டினொடும்
பாறு ஆடு முகத்தன பல் பகலும்
தேறாதன செங் கண வெங் களிமா
நூறாயிரம் ஆயினும் நுந்துவெனால்.
41

உரை
   
 
7898.‘செம் பொன்னின் அமைந்து சமைந்தன தேர்
உம்பர் நெடு வானினும் ஒப்பு உறழா;
பம்பும் மணி தார் அணி பாய் பரிமா
இம்பர் நடவாதன ஈகுவெனால்.
42

உரை
   
 
7899.‘நிதியின் நிரை குப்பை நிறைத்தனவும்
பொதியின் மிளிர் காசு பொறுத்தனவும்
மதியின் ஒளிர் தூசு வகுத்தனவும்
அதிகம் சகடு ஆயிரம் ஈகுவெனால். ‘
43

உரை
   
 
7900.‘மற்றும் ஒரு தீது இல் மணிப் பணி தந்து
உற்ற உன் நினைவு யாவையும் உந்துவெனால்
பொன்திண் கழலாய்! நனி போ ‘எனலோடு
எற்றும் திரள் தோளவன் ஏகினனால்.
44

உரை
   
 
மயிடன் இராமனையடைந்தபொழுது, வானர வீரர் அவன்மேற் சினந்து பற்ற முயலுதலும் அவன் தான் கொண்டு வந்த செய்தியைக் குறிப்பிடுதலும்

7901.ஏகி தனி சென்று எதிர் எய்தலுறும்
காகுத்தனை எய்திய காலையின் வாய்
வேகத்தொடு வீரர் விசைத்து எழலும்
‘ஓகைப் பொருள் உண்டு ‘என ஒதினனால்.
45

உரை
   
 
தூதனை விடுமின் ‘என்று இராமன் வானர
வீரரை விலக்கல்

7902.போதம் முதல் ‘வாய்மொழியே புகல்வோன்
ஏதும் அறியான்; வறிது ஏகினனால்;
தூதன்; இவனைச் சுளியன்மின் ‘எனா
வேதம் முதல் நாதன் விலக்கினனால்.
46

உரை
   
 
நீ வந்தது எது கருதி ‘என இராமன் மயிடனை வினவ அவன் ‘இலக்குவனிடமே அது சொல்லத்தக்கது ‘எனல்

7903.‘என் வந்த குறிப்பு? அது இயம்பு ‘எனலும்
மின் வந்த எயிற்றவன் ‘வில்வல! உன்
பின் வந்தவனே அறி பெற்றியதால்
மன் வந்த கருத்து ‘என ‘மன்னர் பிரான்!
47

உரை
   
 
அது சொல்லிடு ‘என இலக்குவன் வினவத் தூதன் தான் வந்த செய்தியை அறிவித்தல் (7904-7907)

7904.‘சொல்லாய்; அது சொல்லிடு சொல்லிடு ‘எனா
வில்லாளன் இளம் கிளையோன் வினவ
‘பல் ஆயிரகோடி படைக் கடல் முன்
நில்லாய் ‘என நின்று நிகழ்த்தினனால்.
48

உரை
   
 
7905.‘உன்மேல் அதிகாயன் உருத்துளனாய்
நல் மேருவின் நின்றனன் நாடி; அவன்
தன்மேல் எதிரும் வலி தக்குளையேல்
பொன் மேனிய! என்னொடு போதுதியால்.
49

உரை
   
 
7906.‘சையப் படிவம் அத்து ஒரு தந்தையை முன்
மெய் எப்படி செய்தனன் நும்முன் விரைந்து
ஐயப்படல் அப்படி இப் படியில்
செய்யப் படுகிற்றி; தரெித்தனனால்.
50

உரை
   
 
7907.“‘கொன்றான் ஒழிய கொலை கோள் அறியா
நின்றானொடு நின்றது என் நேடி? ‘எனின்
தன் தாதை படும் துயர் தந்தையை முன்
வென்றானை இயற்றும் அ(வ்) வேட்கையினால்.
51

உரை
   
 
இராமன் மூவுலகோர் அறியத் தன் இசைவினைத் தரெிவித்தல்

7908.‘வானோர்களும் மண்ணின் உேளார்களும் மற்று
ஏனோர்களும் இவ் உரை கேண்மின்; இவன்
தானே பொருவான்; அயலே தமர் வந்து
ஆனோரும் உடன் பொருவான் அமைவான்.
52

உரை
   
 
தூதனது பிதற்றுரை கேட்டு இராமன் இலக்குவனைத் தழுவிப் போர்க்குச் செல்லுமாறு பணித்தல் (7909-7910)

7909.என்றே உலகு ஏழினொடு ஏழினையும்
தன் தாமரை போல் இரு தாள் அளவா
நின்றான் உரைசெய்ய நிசாசரனும்
பின்றா உரை ஒன்று பிதற்றினனால்.
53

   
 
7910.‘எழுவாய் இனி என்னுடன் ‘என்று எரியும்
மழு வாய் நிகர் வெஞ் சொல் வழங்குதலும்
தழுவா ‘உடன் ஏகுதி தாழல் ‘எனத்
தொழுவார் தொழு தாள் அரி சொல்லுதலும்.
54

உரை
   
 
கவிக் கூற்று

7911.‘எல்லாம் உடன் எய்திய பின் இவனே
வில்லானொடு போர் செய வேண்டும் ‘எனா
நல் ஆறு உடை வீடணன் நாரணன் முன்
சொல்லாடினன்; அன்னவை சொல்லுதுமால்.
55

உரை
   
 
அதிகாயனது பேராற்றலையும், முற்பிறப்பின் தொன்மை வரலாற்றையும் வீடணன் விரித்துக் கூறுதல் (7912-7932)

7912.‘வார் ஏறு கழல் சின வாள் அரி எம்
போர் ஏறொடு போர் புரிவான் அமையா
தேர் ஏறு சினக் கடு வெந் தறுகண்
கார் ஏறு என வந்த கதத் தொழிலோன்.
56

உரை
   
 
7913.‘ஓவா நெடு மாதவம் ஒன்று உடையான்
தேவாசுரர் ஆதியர் செய் செருவில்
சாவான் இறையும் சலியா வலியான்
மூவா முதல் நான்முகனார் மொழியால்.
57

உரை
   
 
7914.‘கடம் ஏய் கயிலைக் கிரி கண்ணுதலோடு
இடம் ஏற எடுத்தனன் ‘என்று இவனைத்
திடம் மேலுலகில் பல தேவரொடும்
வட மேரு எடுக்க வளர்த்தனனால்.
58

உரை
   
 
7915.‘மாலாரொடு மந்தரம் மாசுணமும்
மேலாகிய தேவரும் வேண்டும்? ‘எனா
ஆலாலமும் ஆர் அமிழ்தும் அமைய
காலால் நெடு வேலை கலக்கிடுமால்.
59

உரை
   
 
7916.‘ஊழிக்கும் உயர்ந்து ஒரு நாள் ஒருவாப்
பாழித் திசை நின்று சுமந்த பணைச்
சூழிக் கரி தள்ளுதல் தோள் வலியோ?
ஆழிக் கிரி தள்ளும் ஒர் அங்கையினால்.
60

உரை
   
 
7917.‘காலங்கள் கணக்கு இல கண் இமையா
ஆலம் கொள் மிடற்றவன் ஆர் அழல்வாய்
வேல் அங்கு எறிய கொடு ‘விட்டது நீள்
சூலம்கொல்? ‘எனப் பகர் சொல் உடையான்;
61

உரை
   
 
7918.‘பகை ஆடிய வானவர் பல்வகை ஊர்
புகை ஆடிய நாள் புனை வாகையினான்;
“மிகையார் உயிர் உண் ” என வீசிய வெந்
தகை ஆழி தகைந்த தனுத் தொழிலான்;
62

உரை
   
 
7919.‘உயிர் ஒப்புறு பல் படை உள்ள எலாம்
செயிர் ஒப்புறும் இந்திரர் சிந்திய நாள்
அயிர் ஒப்பன நுண் துகள் செய்து அவர்தம்
வயிரப் படை தள்ளிய வாளியினான்.
63

உரை
   
 
7920.‘கற்றான் மறை நூலொடு கண்ணுதல்பால்;
முற்றாதன தேவர் முரண் படைதாம்
மற்று ஆரும் வழங்க வ(ல்)லார் இ(ல்)லவும்
பெற்றான்; நெடிது ஆண்மை பிறந்துடையான்.
64

உரை
   
 
7921.‘அறன் அல்லது நல்லது மற்று அறியான்;
மறன் அல்லது பல்பணி மாறு அணியான்;
திறன் அல்லது ஒர் ஆர் உயிரும் சிதையான்;
“உறல் நல்லது பேர் இசை ” என்று உணர்வான்;
65

உரை
   
 
7922.‘காயத்து உயிரே விடு காலையினும்
மாயத்தவர் கூடி மலைந்திடினும்
தேயத்தவர் செய்யல செய்திடினும்
மாயத் தொழில் செய்ய மதித்திலனால்.
66

உரை
   
 
7923.‘மது கைடவர் என்பவர் வானவர்தம்
பதி கைகொடு கட்டவர் பண்டு ஒரு நாள்
அதி கைதவர் ஆழி அநந்தனையும்
விதி கைம்மிக முட்டிய வெம்மையினார்.
67

உரை
   
 
7924.‘நீர் ஆழி இழிந்து நெடுந்தகையை
“தாராய் அமர் ” என்றனர் தாம் ஒரு நாள்;
ஆர் ஆழிய அண்ணலும் அஃது இசையா
“வாரா அமர் செய்கு ” என வந்தனனால்.
68

உரை
   
 
7925.‘வல்லார் உரு ஆயிரம் ஆய் வரினும்
நல்லார் முறை வீசி நகும் திறலார்
மல்லால் இளகாது மலைந்தனன் மால்;
அல் ஆயிரம் ஆயிரம் அஃகினவால்.
69

உரை
   
 
7926.‘தன் போல்பவர் தானும் இலாத தனிப்
பொன்போல் ஒளிர் மேனியனை “புகழோய்!
என் போல்பவர் சொல்லுவது எண் உடையார்
உன் போல்பவர் யார் உளர்? “ என்று உரையா
70

உரை
   
 
7927.‘ஒருவோம் உலகு ஏழையும் உண்டு உமிழ்வோம்;
இருவோமொடு நீ தனி இத்தனை நாள்
பொருவோமொடு நேர் பொருதாய்; புகழோய்!
தருவோம் நின் மனத்தது தந்தனமால்;
71

உரை
   
 
7928.“‘ஒல்லும்படி நல்லது உனக்கு உதவச்
சொல்லும்படி “ என்று அவர் சொல்லுதலும்
“வெல்லும்படி நும்மை விளம்பும் ” எனக்
கொல்லும் படியால் அரி கூறுதலும்.
72

உரை
   
 
7929.“இடையில் படுகிற்கிலம் யாம்; ஒரு நின்
தொடையின் படுகிற்றும் “ எனத் துணியா
“அடையச் செயகிற்றி; அது ஆணை ” எனா
நடையில் படு நீதியர் நல்குதலும்.
73

உரை
   
 
7930.‘விட்டான் உலகு யாவையும் மேலொடு கீழ்
எட்டா ஒருவன் தன் இடத் தொடையை;
ஒட்டாதவர் ஒன்றினர் ஊழ் வலியால்
பட்டார்; இது பட்டது பண்டு ஒரு நாள்.
74

உரை
   
 
7931.‘தனி நாயகன் வன்கதை தன் கைகொளா
நனி சாட விழுந்தனர் நாள் உலவா
பனியா; மது மேதை படப் படர் மே-
தினி ஆனது பூவுலகு எங்கணுமே.
75

உரை
   
 
7932.‘விதியால் இ(வ்) உகம்தனில் மெய் வலியான்
மது ஆனவன் எம்முன் மடிந்தனனால்;
கதிர்தான் நிகர் கைடவன் இக் கதிர் வேல்
அதிகாயன்; இது ஆக அறிந்தனனால்.
76

உரை
   
 
வீடணன் கூறியது கேட்ட இராமன், இலக்குவனது பெருவன்மையை அவனுக்கு அறிவுறுத்தல் (7933-7937)

7933.என்றான் அவ் இராவணனுக்கு இளையான்;
‘நன்று ஆகுக ‘என்று ஒரு நாயகனும்
மின்தான் உமிழ் வெண் நகை வேறு செயா
நின்றான் இது கூறி நிகழ்த்தினனால்.
77

உரை
   
 
7934.‘எண்ணாயிர கோடி இராவணரும்
விண் நாடரும் வேறு உலகத்து எவரும்
நண்ணா ஒரு மூவரும் நண்ணிடினும்
கண்ணால் இவன் வில் தொழில் காணுதியால்.
78

உரை
   
 
7935.‘வான் என்பது என்? வையகம் என்பது என்? மால்
தான் என்பது என்? வேறு தனிச் சிலையோர்
யான் என்பது என்? ஈசன் என்? இன்று இமையோர்
கோன் என்பது என்? எம்பி கொதித்திடுமேல்.
79

உரை
   
 
7936.‘தயெ்வப் படையும் சினமும் திறனும்
மையல் தொழில் மாதவம் மற்றும் எலாம்
எய்தற்கு உளவோ இவன் இச் சிலையில்
கைவைப்பு அளவே? இறல் காணுதியால்.
80

உரை
   
 
7937.‘என் தேவியை வஞ்சனை செய்து எழுவான்
அன்றே முடிவான்; இவன் “அன்னவள் சொல்
குன்றேன் “ என எய்திய கொள்கையினால்
நின்றான் உளன் ஆகி; நெடுந் தகையாய்.
81

உரை
   
 
‘நீயும் உடன்சென்று, இவனது போர்வன்மையைக் காணுக ‘என இராமன் வீடணனை ஏவுதல் (7938-7942)

7938.‘ஏகாய் உடன் நீயும்; எதிர்ந்துளனாம்
மாகாயன் நெடுந்தலை வாளியொடும்
ஆகாயம் அளந்து விழுந்ததனைக்
காகாதிகள் நுங்குதல் காணுதியால்.
82

உரை
   
 
7939.‘நீரைக் கொடு நீர் எதிர் நிற்க ஒ(ண்)ணுமோ?
தீரக் கொடியாரொடு தேவர் பொரும்
போரைக் கொடு வந்து புகுந்தது நாம்
ஆரைக் கொடு? நீ அது அறிந்திலையோ?
83

உரை
   
 
7940.‘சிவன்; அல்லன் எனில் திருவின் பெருமான்;
அவன் அல்லன் எனில் புவி தந்தருளும்
தவன்; அல்லன் எனில் தனியே வலியோன்
இவன்; அல்லன் எனில் பிறர் யார் உளரோ?
84

உரை
   
 
7941.‘ஒன்றாயிர வெள்ளம் ஒருங்கு உள ஆம்
வன் தானைகள் வந்து வளைந்த எலாம்
கொன்றான் இவன் அல்லது கொண்டு உடனே
நின்றார் பிறர் உண்மை நினைந்தனையோ?
85

உரை
   
 
7942.‘கொல்வானும் இவன்; கொடியோரை எலாம்
வெல்வானும் இவன்; அடல் விண்டு என
ஒல்வானும் இவன்; உடனே ஒரு நீ
செல்வாய் ‘என ஏவுதல் செய்தனனால்.
86

உரை
   
 
இலக்குவன் இராமனை வலங்கொண்டு வீடணன் உடன்வரப் போர்க்களம் புகுதல்

7943.அக் காலை இலக்குவன் ஆரியனை
முக்காலும் வலங்கொடு மூதுணர்வின்
மிக்கான் மதி வீடணன் மெய் தொடரப்
புக்கான் அவன் வந்து புகுந்த களம்.
87

உரை
   
 
அரக்கர் சேனைகளும் வானர சேனைகளும் நெருங்கிப் பொருதல் (7944-7956)

7944.சேனைக் கடல் சென்றது தனெ் கடல்மேல்
ஏனைக் கடல் வந்தது எழுந்தது எனா;
ஆனைக் கடல் தேர் பரி ஆள் மிடையும்
தானைக் கடலோடு தலைப் படலும்
88

உரை
   
 
7945.பசும் படு குருதியின் பண்டு சேறுபட்டு
அசும்பு உற உருகிய உலகம் ஆர்த்து எழ
குசும்பையின் நறுமலர்ச் சுண்ணக் குப்பையின்
விசும்பையும் கடந்தது விரிந்த தூளியே.
89

உரை
   
 
7946.தாம் இடித்து எழும் பணை முழக்கும் சங்கு இனம்
ஆம் இடிக் குமுறலும் ஆர்ப்பின் ஓதையும்
ஏம் உடைக் கொடுஞ் சிலை இடிப்பும் அஞ்சி தம்
வாய் மடித்து ஒடுங்கின மகர வேலையே.
90

உரை
   
 
7947.உலைதொறும் குருதி நீர் அருவி ஒத்து உக
இலை துறு மரம் எனக் கொடிகள் இற்று உக
மலைதொறும் பாய்ந்து என மான யானையின்
தலைதொறும் பாய்ந்தன குரங்கு தாவியே.
91

உரை
   
 
7948.கிட்டின கிளை நெடுங் கோட்ட கீழ் உகு
மட்டின அருவியின் மதத்த வானரம்
விட்டன நெடு வரை வேழம் வேழத்தை
முட்டின ஒத்தன முகத்தின் வீழ்வன.
92

உரை
   
 
7949.இடித்தன; உறுக்கின; இறுக்கி ஏய்ந்தன;
தடித்தன; எயிற்றினால் தலைகள் சந்து அறக்
கடித்தன; கவிக்குலம் கால்கள் மேல் படத்
துடித்தன குருதியில் துரக ராசியே.
93

உரை
   
 
7950.அடைந்தன கவிக்குலம் எற்ற அற்றன
குடைந்து எறிகால் பொர பூட்கைக் குப்பைகள்;
இடைந்தன முகில் குலம் இரிந்து சாய்ந்து என
உடைந்தன; குல மருப்பு உகுத்த முத்தமே.
94

உரை
   
 
7951.தோல் படத் துதைந்து எழு வயிரத் தூண் நிகர்
கால் பட கை பட கால பாசம் போல்
வால் பட புரண்டனர் நிருதர்; மற்று அவர்
வேல் படப் புரண்டனர் கவியின் வீரரே.
95

உரை
   
 
7952.மரவமும் சிலையொடு மலையும் வாள் எயிற்று
அரவமும் கரிகளும் பரியும் அல்லவும்
விரவின கவிக்குலம் வீச விம்மலால்
உரவரும் கான் எனப் பொலிந்தது உம்பரே.
96

உரை
   
 
7953.தட வரை கவிக்குலத் தலைவர் தாங்கின
அடல் வலி நிருதர்தம் அனிக ராசிமேல்
விடவிட விசும்பிடை மிடைந்து வீழ்வன
படர் கடல் இன மழை படிவ போன்றவே.
97

உரை
   
 
7954.இழுக்கினர் அடிகளின் இங்கும் அங்குமா
மழுக்களும் அயில்களும் வாளும் தோள்களும்
முழுக்கினர் உழக்கினர் மூரி யாக்கையை
ஒழுக்கினர் நிருதரை உதிர ஆற்றினே.
98

உரை
   
 
7955.மிடல் உடை கவிக் குலம் குருதி வெள்ள நீர்
இடை இடை நீந்தின எய்த்த யானையின்
திடர் இடை சென்று அவை ஒழுகச் சேர்ந்தன
கடலிடைப் புக்கன கரையும் காண்கில.
99

உரை
   
 
7956.கால் பிடித்து ஈர்த்து இழி குருதிக்கண்ண கண்
சேல் பிடித்து எழு திரை ஆற்றில் திண் நெடுங்
கோல் பிடித்து ஒழுகுறு குருடர் கூட்டம் போல்
வால் பிடித்து ஒழுகின கவியின் மாலையே.
100

உரை
   
 
வானர சேனை எதிர்க்கலாற்றாது சாய்தல்

7957.பாய்ந்தது நிருதர்தம் பரவை; பல்முறை
காய்ந்தது கடும்படை கலக்கி; கைதொறும்
தேய்ந்தது சிதைந்தது சிந்திச் சேண் உறச்
சாய்ந்தது தகைப்ப அரும் கவியின் தானையே.
101

உரை
   
 
வானரர்க்குத் தேறுதல் கூறி இலக்குவன் விற்போர் விளைத்தல் (7958-7962)

7958.அத் துணை இலக்குவன் ‘அஞ்சல் அஞ்சல்! ‘என்று
எத் துணை மொழிகளும் இயம்பி ஏற்றினன்
கைத் துணை வில்லினை; காலன் வாழ்வினை
மொய்த்து எழு நாண் ஒலி முழங்கத் தாக்கினான்.
102

உரை
   
 
7959.நூல் மறைந்து ஒளிப்பினும் நுவன்ற பூதங்கள்
மேல் மறைந்து ஒளிப்பினும் விரிஞ்சன் வீயினும்
கால் மறைந்து ஒளிப்பு இலாக் கடையின் கண் அகல்
நான் மறை ஆர்ப்பு என நடந்தது அவ் ஒலி.
103

உரை
   
 
7960.துரந்தன சுடுசரம்; துரந்த தோன்றல
கரந்தன நிருதர்தம் கரை இல் யாக்கையின்;
நிரந்தன நெடும்பிணம் விசும்பின் நெஞ்சு உற
பரந்தன குருதி அப் பள்ள வெள்ளத்தின்.
104

உரை
   
 
7961.யானையின் கரம் துமித்து இரத வீரர்தம்
வான் உயர் முடித் தலை தடிந்து வாசியின்
கால் நிரை அறுத்து வெம் கறை கண் மொய்ம்பரை
ஊன் உடை உடல் பிளந்து ஒடும் அம்புகள்;
105

உரை
   
 
7962.வில் இடை அறுத்து வேல் துணித்து வீரர்தம்
எல்லிடு கவசமும் மார்பும் ஈர்ந்து எறி
கல் இடை அறுத்து மாக் கடிந்து தேர் அழீஇ
கொல் இயல் யானையைக் கொல்லும் கூற்றினே.
106

உரை
   
 
இலக்குவனது அம்பினால் அழிந்துபட்ட போர்க்களத்தின் நிலை (7963-7976)

7963.வெற்றி வெங் கரிகளின் வளைந்த வெண்மருப்பு
அற்று எழு விசைகளின் உம்பர் அண்மின
முற்று அரு முப்பகல் திங்கள் வெண்முளை
உற்றன விசும்பிடைப் பலவும் ஒத்தன.
107

உரை
   
 
7964.கண்டகர் நெடுந் தலை கனலும் கண்ணன
துண்ட வெண்பிறைத் துணை கவ்வி தூக்கிய;
குண்டல மீன் குலம் தழுவி கோள் மதி
மண்டலம் விழுந்தன போன்ற மண்ணினே.
108

உரை
   
 
7965.கூர் மருப்பு இணையன குறைந்த கையன
கார் மதக் கனம் வரை கவிழ்ந்து வீழ்வன
போர் முகக் குருதியின் புணரி புக்கன
பார் எடுக்குறு நெடும் பன்றி போன்றன.
109

உரை
   
 
7966.புண் உற உயிர் உகும் புரவி பூட்டு அற
கண் அகன் தேர்க் குலம் மறிந்த காட்சிய
எண் உறு பெரும்பதம் வினையின் எஞ்சிட
மண் உற விண்ணின் வீழ் மானம் போன்றன.
110

உரை
   
 
7967.அட கருங் கவந்தம் நின்று ஆடுகின்றன
விடற்கு அரும் வினை அறச் சிந்தி மெய் உயிர்
கடக்க அருந் துறக்கமே கலந்தவாம் என
உடற் பொறை உவகையின் குனிப்ப ஒத்தன.
111

உரை
   
 
7968.‘ஆடுவ கவந்தம் ஒன்று ஆறு எண்ணாயிரம்
வீடிய பொழுது ‘எனும் பனுவல் மெய்யதேல்
கோடியின்மேல் உள குனித்த; கொற்றவன்
பாடு இனி ஒருவரால் பகரற் பாலதோ?
112

உரை
   
 
7969.ஆனையின் குருதியும் அரக்கர் சோரியும்
ஏனை வெம் புரவியின் உதிரத்து ஈட்டமும்
கானினும் மலையினும் பரந்த கார்ப்புனல்
கானயாறு ஆம் எனக் கடல் மடுத்தவே.
113

உரை
   
 
7970.தாக்கிய சரங்களின் தலைகள் நீங்கிய
ஆக்கைய புரசையோடு அளைந்த தாளன
மேக்கு உயர் அங்குசக் கைய வெங்கரி
நூக்குவ கணிப்பு இல அரக்கர் நோன் பிணம்.
114

உரை
   
 
7971.கோள் உடை கணைபட புரவி கூத்து அயர்
தோளுடை நெடுந்தலை துமிந்தும் தீர்கில
ஆளுடைக் குறைத்தலை அதிர ஆடுவ
வாளுடைத் தடக்கைய வாசி மேலன.
115

உரை
   
 
7972.வைவன முனிவர் சொல் அனைய வாளிகள்
கொய்வன தலைகள் தோள்; குறைத்தலைக் குழாம்
கை வளை வரி சிலைக் கடுப்பின் கைவிடா
எய்வன எனை பல; இரத மேலன.
116

உரை
   
 
7973.தாதையை தம்முனை தம்பியை தனிக்
காதலை பெயரனை மருகனை களத்து
ஊதையின் ஒரு கணை உருவ மாண்டனர்
சீதை என்று ஒரு கொடுங் கூற்றம் தேடினார்.
117

உரை
   
 
7974.தூண்டு அருங் கணை படத் துமிந்து துள்ளிய
தீண்ட அரு நெடுந் தலை தழுவிச் சேர்ந்தன
பூண்டு எழு கர தலம் பொறுக்கலாதன
ஆண்டலை நிகர்த்தன; எருவை ஆடுவ.
118

உரை
   
 
7975.ஆயிரம் ஆயிரம் கோடியாய் வரும்
தீ உமிழ் கடுங் கணை மனத்திற் செல்வன
பாய்வன புகுவன; நிருதர் பல் உயிர்
ஓய்வன நமன் தமர் கால்கள் ஓயவே.
119

உரை
   
 
7976.விளக்கு வான் கணைகளால் விளிந்து மேருவைத்
துளக்குவார் உடல் பொறை துணிந்து துள்ளுவார்;
இளக்குவார் அமரர் தம் சிரத்தை; ஏண் முதுகு
உளுக்குவாள் நிலமகள் பிணத்தின் ஓங்கலால்.
120

உரை
   
 
தாருகன் என்பான் இலக்குவனுடன் பொருது இறத்தல் (7977-7979)

7977.தாருகன் என்று உளன் ஒருவன் தான் நெடு
மேருவின் பெருமையான் எரியின் வெம்மையான்
போர் உவந்து உழக்குவான் புகுந்து தாங்கினான்
தேரினன் சிலையினன் உமிழும் தீயினன்.
121

உரை
   
 
7978.துரந்தனன் நெடுஞ் சரம் நெருப்பின் தோற்றத்த;
பரந்தன விசும்பிடை ஒடுங்க; பண்டு உடை
வரம்தனின் வளர்வன அவற்றை வள்ளலும்
கரந்தனன் கணைகளால் முனிவு காந்துவான்.
122

உரை
   
 
7979.அண்ணல்தன் வடிக் கணை துணிப்ப அற்று அவன்
கண் அகல் நெடுந் தலை விசையின் கார் என
விண் இடை ஆர்த்தது விரைவில் மெய் உயிர்
உண்ணிய வந்த வெங் கூற்றும் உட்கவே.
123

உரை
   
 
இலக்குவன் தன்னை எதிர்த்து வந்த காலன் முதலிய ஐவர்களுடைய தலையைத் துணித்து அவர்தம் சேனையைச் சிதற அடித்தல் (7980-7981)

7980.காலனும் குலிசனும் கால சங்கனும்
மாலியும் மருத்தனும் மருவும் ஐவரும்
சூலமும் கணிச்சியும் கடிது சுற்றினார்;
பாலமும் பாசமும் அயிலும் பற்றுவார்.
124

உரை
   
 
7981.அன்னவர் எய்தன எறிந்த ஆயிரம்
துன் அரும் படைக்கலம் துணித்து தூவினான்
நல் நெடுந் தலைகளைத் துணித்து நால்வகைப்
பல் நெடுந் தானையைப் பாற நூறினான்.
125

உரை
   
 
அதிகாயனுடைய படை வீரர்கள் இலக்குவனைச் சுற்றிநின்று பொருதல் (7982-7984)

7982.ஆண்டு அதிகாயன் தன் சேனை ஆடவர்
ஈண்டின மத கரி ஏழ் எண்ணாயிரம்
தூண்டினர் மருங்கு உறச் சுற்றினார்; தொகை
வேண்டிய படைக்கலம் முறையின் வீசுவார்.
126

உரை
   
 
7983.போக்கு இலா வகை புறம் வளைத்துப் பொங்கினார்
தாக்கினார் திசை தொறும் தடக்கை மால்வரை
நூக்கினார்; படைகளால் நுறுக்கினார் குழம்பு
ஆக்கினார் கவிகள்தம் குழுவை; ஆர்ப்பினார்.
127

உரை
   
 
7984.எறிந்தன எய்தன எய்தி ஒன்றொடு ஒன்று
அறைந்தன அசனியின் விசையின் ஆசைகள்
நிறைந்தன மழை என நெருக்கி நிற்றலால்
மறைந்தன உலகொடு திசையும் வானமும்.
128

உரை
   
 
இலக்குவன் தன்னை எதிர்த்தாரைத் தாக்கி அவர்தம் யானைப் படையை அழித்து ஒழித்தல் (7985-7993)

7985.அப் படை அனைத்தையும் அறுத்து வீழ்த்து அவர்
துப்புடைத் தடக் கைகள் துணித்து சுற்றிய
முப் புடை மத மலைக் குலத்தை முட்டினான்
எப் புடை மருங்கினும் எரியும் வாளியான்.
129

உரை
   
 
7986.குன்று அன மத கரி கொம்பொடு கரம் அற
வன் தலை துமிதர மஞ்சு என மறிவன
ஒன்று அல; ஒருபதும் ஒன்பதும் ஒரு கணை
சென்று அரிதர மழை சிந்துவ மத மலை.
130

உரை
   
 
7987.ஒரு தொடை விடுவன உரும் உறழ் கணைபட
இரு தொடை புரசையொடு இறுபவர் எறிபடை
விருது உடை நிருதர்கள் மலை என விழுவர்கள்;
பொருது உடைவன மத மழையன புகர் மலை.
131

உரை
   
 
7988.பருமமும் முதுகு இடு படிகையும் வலி படர்
மருமமும் அழிபட நுழைவன வடி கணை
உருமினும் வலியன; உருள்வன திசை திசை
கருமலை நிகர்வன; கத மலை கனல்வன.
132

உரை
   
 
7989.இறுவன கொடியவை எறிவன இடை இடை
துறுவன சுடுகணை துணிவன மதகரி;
அறுவன அவை அவை கடவினர் அடி தலை;
வெறுமைகள் கெடுவன விழி குழி கழுதுகள்.
133

உரை
   
 
7990.மிடலொடு விடு கணை மழையினும் மிகை உள
படலொடும் உரும் எறி பரு வரை நிலையன
உடலொடும் உருள் கரி உதிரம் அது உருகெழு
கடலொடு பொருதது கரியொடு கரி என.
134

உரை
   
 
7991.மேலவர் படுதலின் விடும் முறை இல மிடல்
ஆலமும் அசனியும் அனையன அடு கரி
மால் உறு களியன மறுகின மத மழை
போல்வன தமதம எதிர் எதிர் பொருவன.
135

உரை
   
 
7992.கால் சில துணிவன; கரம் அறுவன; கதழ்
வால் சில துணிவன; வயிறுகள் வெளிபட
நால் சில குடரன; நகழ்வன சில வரு
தோல் சில கணை பல சொரிவன மழையன.
136

உரை
   
 
7993.முட்டின முட்டு அற முரண் உறு திசை நிலை
எட்டினும் எட்ட அரு நிலையன எவை? அவன்
விட்டன விட்டன விடுகணை படுதொறும்
பட்டன பட்டன படர் பணை குவிவன.
137

உரை
   
 
அரக்கர் மீண்டும் யானைப்படை கொண்டு எதிர்க்க, இலக்குவன் அவற்றை அழித்து வெற்றி கொள்ளுதல் (7994-8003)

7994.அறுபதின் முதலினோடு ஆறு அமை ஆயிரம்
இறுதிய மதகரி இறுதலும் எரி உமிழ்
தறுகணர் தகை அறு நிலையினர் சலம் உறு
கறுவினர் அவன் எதிர் கடவினர் கடல் என.
138

உரை
   
 
7995.எல்லை இல் மதகரி இரவினது இனம் நிகர்
செல்வன முடிவு இல தறெு தொழில் மறவனை
வில்லியை இனிது உற விடுகணை மழையினர்
‘கொல்லுதி ‘என எதிர் கடவினர் கொடியவர்.
139

உரை
   
 
7996.வந்தன மதகரி வளைதலின் மழை பொதி
செந்தனி ஒரு சுடர் என மறை திறலவன்
இந்திர தனு என எழு சிலை குனிவுழி
தந்தியின் நெடுமழை சிதறின தரையன.
140

உரை
   
 
7997.மையல் தழை செவி முன் பொழி
    மழை பெற்றன, மலையின்
மெய் பெற்றன, கடல் ஒப்பன,
    வெயில் உக்கன விழியின்
மொய் பெற்று உயர் முதுகு இற்றன;
    முகம் உக்கன; முரண் வெம்
கை அற்றன; மதம் முற்றிய
    கதம் அற்றில களிமா.
141

உரை
   
 
7998.உள் நின்று அலை அலைநீர் உக
    இறுதிக் கடை உறு கால்
எண்ணின் தலை நிமிர்கின்றன
    இகல் வெங்கணை, இரணப்
பண்ணின் படர் தலையில் பட,
    மடிகின்றன பல ஆம்,
மண்ணின் தலை உருள்கின்றன
    மழை ஒத்தன மதமா.
142

உரை
   
 
7999.பிறை பற்றிய எனும் நெற்றிய,
    பிழை அற்றன பிறழ,
பறை அற்றம் இல் விசை பெற்றன,
    பரியக்கிரி, அமரர்க்கு
இறை, அற்றைய முனிவு இல் படை
    எறியப் புடை எழு பொன்
சிறை அற்றன என, இற்றன
    சினம் முற்றிய மதமா.
143

உரை
   
 
8000.கதிர் ஒப்பன கணை பட்டுள,
    கதம் அற்றில, கதழ் கார்
அதிரத் தனி அதிர் கைக் கரி
    அளவு அற்றன உளவால்;
எதிர்பட்டு அனல் பொழிய,
    கிரி இடறி, திசை எழு கார்
உதிரத்தொடும் ஒழுகி, கடல் நடு
    உற்றவும் உளவால்.
144

உரை
   
 
8001.கண்ணின் தலை அயில் வெங்கணை
    பட நின்றன, காணா,
எண்ணின்தலை நிமிர் வெங் கதம்
    முதிர்கின்றன, இன மா,
மண்ணின்தலை நெரியும்படி
    திரிகின்றன, மலைபோல்
உள் நின்று அலை நிருதர் கடல்
    உலறிட்டன உளவால்.
145

உரை
   
 
8002.ஓர் ஆயிரம் அயில் வெங்கணை,
    ஒருகால் விடு தொடையில்,
கார் ஆயிரம் விடு தாரையின்
    நிமிர்கின்றன; கதுவுற்று,
ஈராயிரம் மத மால்கரி
    விழுகின்றன! இனிமேல்
ஆராய்வது என்? அவன் வில் தொழில்
    அமரேசரும் அறியார்.
146

உரை
   
 
8003.தேரும், தறெு கரியும், பொரு
    சின மள்ளரும், வய வெம்
போரின்தலை உகள்கின்றன
    புரவிக் குலம் எவையும்,
பேரும் திசை பெறுகின்றில
    பணையின் பிணை மத வெங்
காரின் தரு குருதிப்
    பொரு கடல் நின்றன கடவா.
147

உரை
   
 
மூன்றாம் முறையாக இராவணனால் அனுப்பப்பட்ட யானைப் படைகளையும் இலக்குவன் அழித்தொழித்தல் (8004-8011)

8004.நூறு ஆயிரம் மத வெங் கரி,
    ஒரு நாழிகை நுவல,
கூறு ஆயின; பயமுற்று ஒரு
    குலைவு ஆயின உலகம்;
தேறாதன, மலைநின்றன,
    தரெியாதன சின மா
வேறு ஆயின அவை யாவையும்
    உடனே வர விட்டான்.
148

உரை
   
 
8005.ஒரு கோடிய மத மால்கரி,
    உள வந்தன உடன் முன்
பொரு கோடியில் உயிர் உக்கன
    ஒழிய, பொழி மத யாறு
அருகு ஓடுவ, வர உந்தினர்
    அசனிப் படி கணை கால்
இரு கோடு உடை மத வெஞ்சிலை
    இள வாள் அரி எதிரே.
149

உரை
   
 
8006.உலகத்து உள மலை எத்தனை,
    அவை அத்தனை உடனே
கொல நிற்பன, பொருகிற்பன,
    புடை சுற்றின குழுவாய்;
அலகு அற்றன, சினம் முற்றிய,
    அனல் ஒப்பன, அவையும்;
தலை அற்றன, கரம் அற்றன,
    தனி வில் தொழில் அதனால்.
150

உரை
   
 
8007.நாலாயின நவ யோசனை
    நனிவன் திசை எவையும்
மால் ஆயின மத வெங் கரி
    திரிகின்றன வரலும்,
தோல் ஆயின உலகு எங்கணும்
    என அஞ்சின; துகளே
போல் ஆயின வய வானமும்
    அளறு ஆனது புவியே.
151

உரை
   
 
8008.கடை கண்டில, தலை கண்டில,
    கழுதின் திரள், பிணமா
இடை கண்டன, மலை கொண்டென
    எழுகின்றன; திரையால்
புடை கொண்டு எறி குருதிக் கடல்
    புணர்கின்றன, பொறி வெம்
படை கொண்டு இடை படர்கின்றன
    மத யாறுகள் பலவால்.
152

உரை
   
 
8009.ஒற்றைச் சரம் அதனோடு
    ஒரு கரி பட்டு உக, ஒளி வாய்
வெற்றிக் கணை, உரும் ஒப்பன,
    வெயில் ஒப்பன, அயில் போல்
வற்றக் கடல் சுடுகிற்பன,
    மழை ஒப்பன பொழியும்
கொற்றக் கரி பதின் ஆயிரம்
    ஒரு பத்தியில் கொல்வான்.
153

உரை
   
 
8010.மலை அஞ்சின; மழை அஞ்சின;
    வனம் அஞ்சின; பிறவும்
நிலை அஞ்சின; திசை வெங்கரி;
    நிமிர்கின்றன கடலின்
அலை அஞ்சின; பிறிது என் சில?
    தனி ஐங்கர கரியும்,
கொலை அஞ்சுதல் புரிகின்றது
    கரியின் படி கொளலால்.
154

உரை
   
 
8011.கால் ஏறின சிலை நாண் ஒலி,
    கடல் ஏறுகள் பட வான்
மேல் ஏறினர் மிசையாளர்கள்;
    தலை மெய் தொறும் உருவ,
கோல் ஏறின உரும் ஏறுகள்
    குடியேறின எனலாய்
மால் ஏறின களி யானைகள்
    மழை ஏறு என மறிய.
155

உரை
   
 
அப்பொழுது அனுமனும் அங்கே விரைந்து வந்து யானைப் படையை அழித்தல் (8012-8020)

8012.இவ் வேலையின், அனுமான், முதல்
    எழு வேலையும் அனையார்
வெவ் வேலவர், செல ஏவிய
    கொலை யானையின் மிகையைச்
செவ்வே உற நினையா, ‘ஒரு
    செயல் செய்குவென் ‘என்பான்,
தவ்வேல் என வந்தான், அவன்
    தனிவேல் எனத் தகையான்.
156

உரை
   
 
8013.ஆர்த்து அங்கு அனல் விழியா,
    முதிர் மத யானையை அனையான்,
தீர்த்தன் கழல் பரவா, முதல்
    அரி போல் வரு திறலான்,
வார்த் தங்கிய கழலான், ஒரு
    மரன் நின்றது, நமனார்
போர் தண்டினும் வலிது ஆயது,
    கொண்டான் புகழ் கொண்டான்.
157

உரை
   
 
8014.கருங் கார் புரை நெடுங் கையன
    களி யானைகள் அவை சென்று
ஒருங்கு ஆயின, உயிர் மாய்ந்தன;
    பிறிது என், பல உரையால்?
வரும் காலமும் பெரும் பூதமும்
    மழை மேகமும், உடன் ஆய்
பொரும் காலையில் மலைமேல் விழும்
    உரும் ஏறு எனப் புடைத்தான்.
158

உரை
   
 
8015.மிதியால் பல, விசையால் பல,
    மிடலால் பல, இடறும்
கதியால் பல, காலால் பல,
    வாலால் பல, வானின்
நுதியால் பல, நுதலால் பல,
    நொடியால் பல, பயிலும்
குதியால் பல, குமையால் பல,
    கொன்றான் அறன் நின்றான்.
159

உரை
   
 
8016.பறித்தான் சில, பகிர்ந்தான் சில,
    வகிர்ந்தான் சில, பணை போன்று
இறுத்தான் சில, இடந்தான் சில,
    பிளந்தான் சில, எயிற்றால்
கறித்தான் சில, கவர்ந்தான் சில,
    கரத்தால் சில பிடித்தான்,
முறித்தான் சில, திறத்து ஆனையின்
    நெடுங் கோடுகள் முனிந்தான்.
160

உரை
   
 
8017.வாரிக் குரை கடலில் புக
    விலகும்; நெடு மரத்தால்
சாரித்து அரைத்து உருட்டும்; நெடுந்
    தலத்தில் படுத்து அரைக்கும்;
பாரில் பிடித்து அடிக்கும்; குடர்
    பறிக்கும்; படர் விசும்பின்
ஊரில் செல, எறியும்; மிதித்து
    உழக்கும்; முகத்து உதைக்கும்.
161

உரை
   
 
8018.வாலால் வர வளைக்கும், நெடு
    மலைப் பாம்பு என, வளையா,
மேல் ஆெளாடு பிசையும், முழு
    மலைமேல் செல விலகும்;
ஆலாலம் உண்டவனே என,
    அகல் வாயின் இட்டு அதுக்கும்;
தோல் ஆயிரம் இமைப் போதினின்
    அரி ஏறு எனத் தொலைக்கும்;
162

உரை
   
 
8019.சையத்தினும் உயர்வுற்றன
    தறுகண் களி மதமா,
நொய்தின் கடிது எதிர் உற்றன,
    நூறாயிரம், மாறா
மையல் கரி, உகிரின் சில
    குழை புக்கு உரு மறைய,
தொய்யல் படர் அழுவக் கொழுஞ்
    சேறாய் உகத் துகைத்தான்.
163

உரை
   
 
8020.வேறு ஆயின மத வெங் கரி
    ஒரு கோடியின், விறலோன்,
நூறாயிரம் படுத்தான்; இது
    நுவல்காலையின், இளையோன்,
கூறாயின என அன்னவை
    கொலை வாளியின் கொன்றான்;
தேறாதது ஓர் பயத்தால் நெடுந்
    திசை காவலர் இரிந்தார்.
164

உரை
   
 
அரக்கர் சிதறி ஓடத் தேவாந்தகன் சினந்து வந்து அனுமனொடு பொருது மடிதல் (8021-8027)

8021.இரிந்தார், திசை திசை எங்கணும்
    யானைப் பிணம் எற்ற,
நெரிந்தார்களும், நெரியாது உயிர்
    நிலைத்தார்களும், நெருக்கால்
எரிந்தார்; நெடுந் தடந்தேர் இழிந்து
    எல்லாரும் முன் செல்ல,
திரிந்தான் ஒரு தனியே, நெடுந்
    தேவாந்தகன், சினத்தான்.
165

உரை
   
 
8022.உதிரக் கடல், பிண மால் வரை,
    ஒன்று அல்லன பலவா
எதிர, கடு நெடும் போர்க்களத்து
    ஒரு தான் புகுந்து ஏற்றான்
கதிர் ஒப்பன சில வெங்கணை
    அனுமான் உடல் கரந்தான்,
அதிரக் கடல் நெடுந் தேரினன்
    மழை ஏறு என ஆர்த்தான்.
166

உரை
   
 
8023.அப்போதினின், அனுமானும், ஓர்
    மரம் ஓச்சி நின்று ஆர்த்தான்,
‘இப்போது இவன் உயிர் போம் ‘என,
    உரும் ஏறு என எறிந்தான்;
வெப்போ என வெயில் கால்வன
    அயில் வெங்கணை விசையால்,
‘துப்போ ‘என துணியாம் வகை,
    தேவாந்தகன் துரந்தான்.
167

உரை
   
 
8024.மாறு ஆங்கு ஒரு மலை வாங்கினன்,
    வய வானரக் குலத்தோர்க்கு
ஏறு; ஆங்கு அது எறியாத முன்,
    முறியாய் உக எய்தான்;
கோல் தாங்கிய சிலையானுடன்
    நெடு மாருதி கொதித்தான்,
பாறு ஆங்கு எனப் புகப் பாய்ந்து
    அவன் நெடு வில்லினைப் பறித்தான்.
168

உரை
   
 
8025.பறித்தான் நெடும் படை, வானவர்
    பலர் ஆர்த்திட, பலவா
முறித்தான்; அவன் வலி கண்டு உயர்
    தேவாந்தகன் முனிந்தான்,
மறித்து ஆங்கு ஒரு சுடர்த் தோமரம்
    வாங்கா, மிசை ஓங்கா,
செறித்தான், அவன் இடத் தோள்மிசை;
    இமையோர்களும் திகைத்தார்.
169

உரை
   
 
8026.சுடர்த் தோமரம் எறிந்து ஆர்த்தலும்,
    கனல் ஆம் எனச் சுளித்தான்,
அடல் தோமரம் பறித்தான், திரிந்து
    உரும் ஏறு என ஆர்த்தான்,
புடைத்தான்; அவன் தடந் தேரொடு
    நெடுஞ் சாரதி புரண்டான்;
மடல் தோகையர் வலி வென்றவன்
    வானோர் முகம் மலர்ந்தார்.
170

உரை
   
 
8027.சூலப் படை தொடுவான்தனை
    இமையாதமுன் தொடர்ந்தான்;
ஆலத்தினும் வலியானும் வந்து
    எதிரே புகுந்து அடர்த்தான்;
காலற்கு இரு கண்ணான் தன்
    கையால் அவன் கதுப்பின்
மூலத்திடைப் புடைத்தான் உயிர்
    முடித்தான், சிரம் மடித்தான்.
171

உரை
   
 
அதுகண்டு வெகுண்டு தேரில் வந்த அதிகாயன் அனுமனுடன் வீரவுரை பகர்தல் (8028-8031)

8028.கண்டான் எதிர் அதிகாயனும்,
    கனல் ஆம் எனக் கனன்றான்,
புண்தான் எனப் புனலோடு இழி
    உதிரம் விழி பொழிவான்,
‘உண்டேன் இவன் உயிர் இப்பொழுது;
    ஒழியேன் ‘என உரையா,
‘திண்தேரினைக் கடிது ஏவு ‘என,
    சென்றான், அவன் நின்றான்.
172

உரை
   
 
8029.அன்னான் வரும் அளவின்தலை,
    நிலை நின்றன அனிகம்,
பின் ஆனதும் முன் ஆனது;
    பிறிந்தார்களும் செறிந்தார்;
பொன்னால் உயர் நெடுமால் வரை
    போல்வான் எதிர் புக்கான்,
சொன்னான் இவை, அதிகாயனும்,
    வட மேருவைத் துணிப்பான்.
173

உரை
   
 
8030.‘தேய்த்தாய், ஒரு தனி எம்பியைத்
    தலத்தோடு; ஒரு திறத்தால்
போய்த் தாவினை நெடு மாகடல்,
    பிழைத்தாய்; கடல் புகுந்தாய்,
வாய்த்தானையும் மடித்தாய்; அது
    கண்டேன், எதிர் வந்தேன்;
ஆய்த்து ஆயது முடிவு, இன்று உனக்கு;
    அணித்தாக வந்து அடுத்தாய்.
174

உரை
   
 
8031.‘இன்று அல்லது, நெடுநாள் உனை
    ஒரு நாளினும் எதிரேன்;
ஒன்று அல்லது செய்தாய் எமை;
    இளையோனையும் உனையும்
வென்று அல்லது மீளாத என்
    மிடல் வெங்கணை மழையால்
கொன்று அல்லது செல்லேன்; இது
    கொள் ‘என்றனன், கொடியோன்.
175

உரை
   
 
அவ்வுரை கேட்டுச் சிரித்த அனுமன், திரிசிரனை நான் கொல்லும்படி இங்கு அழை எனக் கூறுதல்

8032.‘பிழையாது; இது பிழையாது ‘எனப
    பெருங் கைத்தலம் பிசையா,
மழை ஆம் எனச் சிரித்தான் வடமலை
    ஆம் எனும் நிலையான்
‘முழை வாள் அரி அனையானையும்
    எனையும் மிக முனிவாய்;
அழையாய் திரிசிரத்தோனையும்
    நிலத்தோடும் இட்டு அரைக்க. ‘
176

உரை
   
 
அதுகேட்டுத் திரிசிரன் ஆரவாரித்து வர, அனுமன் அவனைத் தரையிலிட்டு அரைத்து மேல் திசை வாயிலுக்குப் போதல் (8033-8034)

8033.‘ஆம், ஆம்! ‘என, தலை மூன்றுடையவன்
    ஆர்த்து வந்து, அடர்த்தான்;
கோமான் தனிப் பெருந் தூதனும்,
    எதிரே செருக் கொடுத்தான்,
‘காமாண்டவர், கல்லாதவர்,
    வல்லீர்! ‘எனக் கழறா,
நா மாண்டனர் அயல் நின்று உற,
    நடுவே புக நடந்தான்.
177

உரை
   
 
8034.தேர்மேல் செலக் குதித்தான், திரி
    சிரத்தோனை ஒர் திறத்தால்,
கார்மேல் துயில் மலை போலியைக்
    கரத்தால் பிடித்து எடுத்தான்,
பார்மேல் படுத்து அரைத்தான்,
    அவன் பழி மேற்படப் படுத்தான்,
‘போர் மேல்திசை நெடுவாயிலின்
    உளதாம் ‘என, போனான்.
178

உரை
   
 
அனுமனது ஆற்றலை வியந்த அதிகாயன் தன் வஞ்சினத்தை யெண்ணி இலக்குவனுடன் பொரக் கருதியவனாய்த் தன் தேரை அவன்முன் செலுத்தச் செய்தல் (8035-8037)

8035.இமையிடை ஆகச் சென்றான்;
    இகல் அதிகாயன் நின்றான்,
அமைவது ஒன்று ஆற்றல் தேற்றான்,
    அருவியோடு அழல் கால் கண்ணான்,
‘உமையொறு பாகனேயும், இவன்
    முனிந்து உருத்த போது,
கமையிலன் ஆற்றல் ‘என்னா,
    கதத்தொடும் குலைக்கும் கையான்.
179

உரை
   
 
8036.‘பூணிப்பு ஒன்று உடையன் ஆகிப்
    புகுந்த நான் புறத்து நின்று
பாணித்தல் வீரம் அன்றால்;
    பருவலி படைத்தோர்க்கு எல்லாம்
ஆணிப் பொன் ஆனான் தன்னைப்
    பின்னும் கண்டு அறிவென் ‘என்னா,
தூணிப் பொன் புறத்தான், திண்தேர்
    இளவல்மேல் தூண்டச் சொன்னான்
180

உரை
   
 
8037.தேர் ஒலி கடலைச் சீற,
    சிலை ஒலி மழையைச் சீற,
போர் ஒலி முரசின் ஓதை
    திசைகளின் புறத்துப் போக,
தார் ஒலி கழற்கால் மைந்தன்,
    தானையும் தானும் சென்றான்;
வீரனும் எதிரே நின்றான்,
    விண்ணவர் விசயம் சொல்ல.
181

உரை
   
 
அங்கதன் வேண்டியவாறு இலக்குவன் அவன் தோள்மேல் ஏறியமர்ந்து, அதிகாயனொடு பொருதல் (8038-8043)

8038.வல்லையின் அணுக வந்து
    வணங்கிய வாலி மைந்தன்,
‘சில்லி அம் தேரின் மேலான் அவன்;
    அமர்ச் செலவு இது அன்றால்;
வில்லியர் திலதம் அன்ன
    நின் திருமேனி தாங்கப்
புல்லிய எனினும் என் தோள்,
    ஏறுதி, புனித! ‘என்றான்.
182

உரை
   
 
8039.‘ஆம் ‘என, அமலன் தம்பி,
    அங்கதன் அலங்கல் தோள்மேல்
தாமரைச் சரணம் வைத்தான்;
    கலுழனின் தாங்கி நின்ற
கோமகன் ஆற்றல் நோக்கி,
    குளிர்கின்ற மனத்தர் ஆகி,
பூமழை பொழிந்து வாழ்த்திப்
    புகழ்ந்தனர், புலவர் எல்லாம்.
183

உரை
   
 
8040.ஆயிரம் புரவி பூண்ட
    அதிர்குரல் அசனித் திண் தேர்
போயின திசைகள் எங்கும்,
    கறங்கு எனச் சாரி போமால்;
மீ எழின் உயரும்; தாழின்
    தாழும்; விண் செல்லின் செல்லும்;
தீ எழ உவரி நீரைக்
    கலக்கினான் சிறுவன் அம்மா!
184

உரை
   
 
8041.அத்தொழில் நோக்கி, ஆங்கு
    வானரத் தலைவர் ஆர்த்தார்;
‘இத்தொழில் கலுழற்கேயும்
    அரிது ‘என, இமையோர் எல்லாம்
கைத்தலம் குலைத்தார் ஆக,
    களிற்றினும் புரவி மேலும்
தைத்தன, இளைய வீரன்
    சரம் எனும் தாரை மாரி.
185

உரை
   
 
8042.முழங்கின முரசம்; வேழம்
    முழங்கின; மூரித் திண் தேர்
முழங்கின; முகரப் பாய்மா
    முழங்கின; முழுவெண் சங்கம்
முழங்கின; தனுவின் ஓதை
    முழங்கின; கழலும் தாரும்
முழங்கின; தழெிப்பும் ஆர்ப்பும்
    முழங்கின, முகிலின் மும்மை.
186

உரை
   
 
8043.கரிபட, காலாள் வெள்ளம்
    களம்பட, கலினக் கால் பொன்
பரிபட, கண்ட கூற்றும்
    பயம்பட, பைம்பொன் திண் தேர்
எரிபட, பொருத பூமி
    இடம்பட, எதிர்ந்த எல்லாம்
முரிபட, பட்ட வீரன்
    முரண் கணை மூரி மாரி.
187

உரை
   
 
என் உனக்கு இச்சை? என இலக்குவன் வினவ அதிகாயன் மறுமொழி பகர்தல் (8044-8046)

8044.மன்னவன் தம்பி, மற்று அவ்
    இராவணன் மகனை நோக்கி,
‘என் உனக்கு இச்சை? நின்ற
    எறிபடைச் சேனை எல்லாம்
சின்ன பின்னங்கள் பட்டால்,
    பொருதியோ? திரிந்து நீயே
நல் நெடுஞ் செருச் செய்வாயோ?
    சொல்லுதி, நயந்தது ‘என்றான்.
188

உரை
   
 
8045.‘யாவரும் பொருவர் அல்லர்,
    எதிர்ந்துள யானும் நீயும்,
தேவரும் பிறரும் காண, செய்வது,
    செய்வது எல்லாம்;
காவல் வந்து உன்னைக் காப்பார்
    காக்கவும் அமையும்; வேறே
கூவியது அதனுக்கு அன்றோ? ‘
    என்றனன் கூற்றின் வெய்யோன்.
189

உரை
   
 
8046.‘உமையனே காக்க; மற்று அங்கு
    உமை ஒரு கூறன் காக்க,
இமையவர் எல்லாம் காக்க;
    உலகம் ஓர் ஏழும் காக்க;
சமையும் உன் வாழ்க்கை இன்றோடு
    என்று, தன் சங்கம் ஊதி,
அமை உருக் கொண்ட கூற்றை
    நாண் எறிந்து, உருமின் ஆர்த்தான்.
190

உரை
   
 
அதிகாயன் கூறியவற்றைக் கேட்ட இலக்குவன் புன்முறுவல் செய்து அதிகாயன்மேல் அம்பு தொடுத்தல்

8047.அன்னது கேட்ட மைந்தன், அரும்பு
    இயல் முறுவல் தோன்ற,
‘சொன்னவர் வாரார்; யானே
    தோற்கினும் தோற்கத் தக்கேன்;
என்னை நீ பொருது வெல்லின்,
    அவரையும் வென்றி ‘என்னா,
மின்னினும் மிளிர்வது ஆங்கு ஓர்
    வெஞ்சரம் கோத்து விட்டான்.
191

உரை
   
 
இலக்குவனும் அதிகாயனும் தம்முட் பெரும்போர் புரிதல்
(8048-8060)

8048.விட்ட வெம் பகழிதன்னை,
    வெற்பினை வெதுப்பும் தோளான்,
சுட்டது ஓர் கணையினாலே
    விசும்பிடைத் துணித்து நீக்கி,
எட்டினோடு எட்டு வாளி,
    ‘இலக்குவ விலக்காய் ‘என்னா,
திட்டியின் விடத்து நாகம்
    அனையன சிந்தி ஆர்த்தான்.
192

உரை
   
 
8049.ஆர்த்து அவன் எய்த வாளி
    அனைத்தையும் அறுத்து மாற்றி
வேர்த்து, ஒலி வயிர வெங்கோல்,
    மேருவைப் பிளக்கற்பால,
தூர்த்தனன், இராமன் தம்பி;
    அவை எலாம் துணித்துச் சிந்தி,
கூர்த்தன பகழி கோத்தான்
    குபேரனை ஆடல் கொண்டான்.
193

உரை
   
 
8050.எய்தனன் எய்த எல்லாம்,
    எரி முகப் பகழியாலே,
கொய்தனன் அகற்றி, ஆர்க்கும்
    அரக்கனைக் குரிசில் கோபம்
செய்தனன் துரந்தான் தயெ்வச்
    செயல் அன்ன கணையை; வெங்கோல்
நொய்து அவன் கவசம் கீறி
    நுழைவன; பிழைப்பு இலாத.
194

உரை
   
 
8051.நூறு கோல் கவசம் கீறி
    நுழைதலும், குழைவு தோன்றத்
தேறல் ஆம் துணையும், தயெ்வச்
    சிலை நெடுந் தேரின் ஊன்றி
ஆறினான்; அது காலத்து அங்கு
    அவனுடை அனிகம் எல்லாம்
கூறு கூறாக்கி அம்பால்,
    கோடியின் மேலும் கொன்றான்.
195

உரை
   
 
8052.புடை நின்றார் புரண்டவாறும்,
    போகின்ற புங்க வாளி
கடை நின்று கணிக்க ஆங்கு ஓர்
    கணக்கு இலாவாறும் கண்டான்;
இடை நின்ற மயக்கம் தீர்த்தான்;
    ஏந்திய சிலையின் காந்தி,
தொடை நின்ற பகழி மாரி
    மாரியின் மும்மை தூர்த்தான்.
196

உரை
   
 
8053.வான் எலாம் பகழி, வானின்
    வரம்பு எலாம் பகழி, மண்ணோ
தான் எலாம் பகழி, குன்றின்
    தலை எலாம் பகழி, சார்ந்தோர்
ஊன் எலாம் பகழி, நின்றோர்
    உடல் எலாம் பகழி, வேலை
மீன் எலாம் பகழி ஆக
    வித்தினன் வெகுளி மிக்கோன்.
197

உரை
   
 
8054.மறைந்தன திசைகள் எல்லாம்;
    வானவர் மனமே போலக்
குறைந்தன, சுடரின் மும்மைக்
    கொழுங் கதிர்; குவிந்து ஒன்று ஒன்றை
அறைந்தன, பகழி; வையம்
    அதிர்ந்தது; விண்ணும் அஃதே;
நிறைந்தன, பொறியின் குப்பை;
    நிமிர்ந்தன நெருப்பின் கற்றை.
198

உரை
   
 
8055.‘முற்றியது இன்றே அன்றோ
    வானர முழங்கு தானை?
மற்று இவன் தன்னை வெல்ல
    வல்லனோ வள்ளல் தம்பி?
கற்றது காலனோடோ,
    கொலை இவன்? ஒருவன் கற்ற
வில் தொழில் என்னே! ‘என்னா,
    தேவரும் வெருவல் உற்றார்.
199

உரை
   
 
8056.அங்கதன் நெற்றிமேலும்
    தோளினும் ஆகத்துள்ளும்
புங்கமும் தோன்றா வண்ணம்
    பொரு சரம் பலவும் போக்கி,
வெங்கணை இரண்டும் ஒன்றும்
    வீரன்மேல் ஏவி, மேகச்
சங்கமும் ஊதி, விண்ணோர்
    தலை பொதிர் எறிய ஆர்த்தான்.
200

உரை
   
 
8057.வாலி சேய் மேனிமேலும்
    மழை பொரு குருதி வாரி,
கால் உயர் வரையின் செங்கேழ்
    அருவிபோல் ஒழுகக் கண்டான்;
கோல் ஒரு பத்து நூற்றால்
    குதிரையின் தலைகள் கொய்து,
மேலவன் சிரத்தைச் சிந்தி,
    வில்லையும் துணித்தான் வீரன்.
201

உரை
   
 
8058.மாற்று ஒரு தடந்தேர் ஏறி,
    மாறு ஒரு சிலையும் வாங்கி,
ஏற்ற வல் அரக்கன் தன்மேல்,
    எரிமுதற் கடவுள் என்பான்
ஆற்றல் சால் படையை விட்டான்,
    ஆரியன்; அரக்கன் அம்மா,
வேற்றுள, ‘தாங்க! ‘என்னா,
    வெய்யவன் படையை விட்டான்.
202

உரை
   
 
8059.பொரு படை இரண்டும் தம்மில்
    பொருதன; பொருதலோடும்,
எரிகணை, உருமின் வெய்ய,
    இலக்குவன் துரந்த, மார்பை
உருவின, உலப்பு இலாத;
    உளைகிலன், ஆற்றல் ஓயான்
சொரிகணை மழையின் மும்மை
    சொரிந்தனன், தழெிக்கும் சொல்லான்.
203

உரை
   
 
8060.பின் நின்றார் முன் நின்றாரைக்
    காணலாம் பெற்றித்து ஆக,
மின் நின்ற வயிர வாளி
    திறந்தன, மேனி முற்றும்;
அந் நின்ற நிலையின், ஆற்றல்
    குறைந்திலன், ஆவி நீங்கான்
பொன் நின்ற வடிம்பின் வாளி
    மழை எனப் பொழியும் வில்லான்.
204

உரை
   
 
அந்நிலையில் வாயுதேவன் தோன்றி ‘இவன் பிரமாத்திரத்தாலன்றி இறக்கமாட்டான் ‘எனக் கூற, இலக்குவன் அதனைச் செலுத்த அதிகாயன் தலையறுபடுதல் (8061-8062)

8061.கோல் முகந்து, அள்ளி அள்ளி,
    கொடுஞ் சிலை நாணில் கோத்து,
கால் முகம் குழைய வாங்கி,
    சொரிகின்ற காளை வீரன்
பால் முகம் தோன்ற நின்று,
    காற்றினுக்கு அரசன், ‘பண்டை
நான்முகன் படையால் அன்றிச்
    சாகிலன் நம்ப! ‘என்றான்.
205

உரை
   
 
8062.‘நன்று ‘என உவந்து, வீரன்,
    நான்முகன் படையை வாங்கி,
மின் தனி திரண்டது என்னச்
    சரத்தொடும் கூட்டி விட்டான்,
குன்றினும் உயர்ந்த தோளான்
    தலையினைக் கொண்டு அ(வ்) வாளி,
சென்றது, விசும்பின் ஊடு;
    தேவரும் தரெியக் கண்டார்.
206

உரை
   
 
வானோர் பூமழை பொழிய இலக்குவன் அங்கதன் தோளினின்றும் இறங்குதல்

8063.பூமழை பொழிந்து, வானோர்,
    ‘போயது எம் பொருமல் ‘என்றார்;
தாம் அழைத்து அலறி எங்கும்
    இரிந்தனர், அரக்கர் தள்ளி;
தீமையும் தகைப்பும் நீங்கித்
    தெளிந்தது குரக்குச் சேனை
கோமகன் தோளின் நின்றும்
    குதித்தனன், கொற்ற வில்லான்.
207

உரை
   
 
இலக்குவனது வெற்றியைக் கண்டு வியந்த வீடணன், ‘இந்திரசித்து இறப்பது திண்ணம் ‘என்றல்

8064.வெந்திறல் சித்தி கண்ட
    வீடணன், வியந்த நெஞ்சன்,
அந்தரச் சித்தர் ஆர்ப்பும்
    அமலையும் கேட்டான்; ‘ஐயன்
மந்திர சித்தி அன்ன
    சிலைத் தொழில் வலி இது ஆயின்,
இந்திர சித்தினார்க்கும்
    இறுதியே இயைவது ‘என்றான்.
208

உரை
   
 
அதிகாயனாகிய தன் தமையன் கொல்லப்பட்டதறிந்து வெகுண்ட நராந்தகன் இலக்குவனை நோக்கி, ‘போகலை போகல் ‘என்று போர் செய்யத் தொடர்தல் (8065-8066)

8065.‘ஏந்து எழில் ஆகத்து எம்முன்
    இறந்தனன் என்று, நீ நின்
சாந்து அகல் மார்பு, திண்தோள்,
    நோக்கி, நின் தனுவை நோக்கி,
போம் தகைக்கு உரியது அன்றால்;
    போகலை, போகல்! ‘என்னா,
நாந்தகம் மின்ன தேரை
    நராந்தகன் நடத்தி வந்தான்.
209

உரை
   
 
8066.தேரிடை நின்று, கண்கள்
    தீ உக, சீற்றம் பொங்க,
பாரிடைக் கிழியப் பாய்ந்து,
    பகலிடைப் பருதி என்பான்.
ஊரிடை நின்றான் என்ன,
    கேடகம் ஒருகை தோன்ற,
நீரிடை முகிலின் மின்போல்
    வாள் இடை நிமிர வந்தான்.
210

உரை
   
 
அதுகண்ட அங்கதன் நராந்தகனொடு பொருது, அவன் கையிலுள்ள வாளினாலேயே அவனை வீழ்த்துதல் (8067-8070)

8067.வீசின மரமும் கல்லும்
    விலங்கலும், வீற்று வீற்று
ஆசைகள் தோறும் சிந்த,
    வாளினால் அறுத்து மாற்றி,
தூசியும், இரண்டு கையும்,
    நெற்றியும், சுருண்டு, நீர்மேல்
பாசியின் ஒதுங்க வந்தான்;
    அங்கதன் அதனைப் பார்த்தான்.
211

உரை
   
 
8068.மரம் ஒன்று விரைவின் வாங்கி,
    வாய் மடித்து உருத்து, வள்ளல்
சரம் ஒன்றின் கடிது சென்று,
    தாக்கினான்; தாக்கினான் தன்
கரம் ஒன்றில் திரிவது ஆரும்
    காண்கிலாது அதனைத் தன் கை
அரம் ஒன்று வயிர வாளால்
    ஆயிரம் கண்டம் கண்டான்.
212

உரை
   
 
8069.அவ் இடை வெறுங்கை நின்ற
    அங்கதன், ‘ஆண்மை அன்றால்
இவ் இடை பெயர்தல் ‘என்னா,
    இமை இடை ஒதுங்கா முன்னர்,
வெவ் விடம் என்னப் பொங்கி,
    அவன் இடை எறிந்த வீச்சுத்
தவ்விட, உருமின் புக்கு,
    வாெளாடும் தழுவிக் கொண்டான்
213

உரை
   
 
8070.அத் தொழில் கண்ட வானோர்
    ஆவலம் கொட்டி ஆர்த்தார்;
‘இத் தொழில் இவனுக்கு அல்லால்
    ஈசற்கும் இயலாது ‘என்பார்;
குத்து ஒழித்து அவன் கைவாள் தன்
    கூர் உகிர்த் தடக்கை கொண்டான்,
ஒத்து இரு கூறாய் வீழ வீசி,
    வான் உலைய ஆர்த்தான்
214

உரை
   
 
போர்மத்தன் நீலனொடு பொருது இறத்தல் (8071-8083)

8071.கூர்மத்தின் வெரிநின் வைத்து
    வானவர் அமுதம் கொண்ட
நீர் மத்தின் நிமிர்ந்த தோளான்,
    நிறை மத்த மதுவைத் தேக்கி
ஊர் மத்தம் உண்டால் அன்ன
    மயக்கத்தான், உருமைத் தின்பான்,
போர் மத்தன் என்பான் வந்தான்
    புகர் மத்தப் பூட்கை மேலான்.
215

உரை
   
 
8072.காற்று அன்றேல், கடுமை என்னாம்?
    கடல் அன்றேல், முழக்கம் என்னாம்?
கூற்று அன்றேல், கொலை மற்று என்னாம்?
    உரும் அன்றேல், கொடுமை என்னாம்?
சீற்றம்தான் அன்றேல், சீற்றம்
    வேறு ஒன்று தரெிப்பது எங்கே?
மாற்று அன்றே, மலை; மற்று என்னே?
    மத்தன் தன் மத்த யானை
216

உரை
   
 
8073.வேகமாக் கவிகள் வீசும்
    வெற்பு இனம் விழுவ, மேன்மேல்,
பாகர் கால் சிலையின் தூண்டும்
    உண்டையாம் எனவும் பற்றா;
மாக மா மரங்கள் எல்லாம்
    கடாத்திடை வண்டு சோப்பி
ஆகிலும் ஆம்; அது அன்றேல்,
    கரும்பு என்றே அறையலாமால்.
217

உரை
   
 
8074.காலிடைப் பட்டும், மானக்
    கையிடைப் பட்டும், கால
வாலிடைப் பட்டும், வெய்ய
    மருப்பிடைப் பட்டும், மாண்டு,
நாலிடைப் பட்ட சேனை,
    நாயகன் தம்பி எய்த
கோலிடைப் பட்டது எல்லாம்
    பட்டது குரக்குச் சேனை
218

உரை
   
 
8075.தன்படை உற்ற தன்மை
    நோக்கினான், தரிக்கிலாமை
அன்பு அடை உள்ளத்து அண்ணல்
    அனலன்தன் புதல்வன், ஆழி
வன் படை அனையது ஆங்கு ஓர்
    மராமரம் சுழற்றி வந்தான்
பின்படை செல்ல, நள்ளார்
    பெரும்படை இரிந்து போ.
219

உரை
   
 
8076.சேறலும், களிற்றின் மேலான்,
    திண்திறல் அரக்கன், செவ்வே,
ஆறு இரண்டு அம்பினால் அந்
    நெடும் மரம் அறுத்து வீழ்த்தான்;
வேறு ஒரு குன்றம் நீலன்
    வீசினான்; அதனை விண்ணில்
நூறு வெம்பகழி தன்னால்,
    நுறுக்கினான், களிறு நூக்கி.
220

உரை
   
 
8077.பின், நெடுங் குன்றம் தேடிப்
    பெயர்குவான் பெயரா வண்ணம்,
பொன் நெடுங் குன்றம் சூழ்ந்த
    பொறி வரி அரவம் போல,
அந் நெடுங் கோப யானை,
    அமரரும் வெயர்ப்ப, அங்கி
தன் நெடு மகனைப் பற்றிப்
    பிடித்தது, தடக்கை நீட்டி.
221

உரை
   
 
8078.‘ஒடுங்கினன், உரமும், ஆற்றல்
    ஊற்றமும், உயிரும் ‘என்ன,
கொடும் படை வயிரக் கோட்டால்
    குத்துவான் குறிக்குங் காலை,
நெடுங் கையும் தலையும் பிய்ய,
    நொய்தினின் நிமிர்ந்து போனான்;
நடுங்கினர், அரக்கர்; விண்ணோர்,
    ‘நன்று, நன்று ‘என்ன நக்கார்.
222

உரை
   
 
8079.‘தறைத்தலை உற்றான் நீலன் ‘
    என்பது ஓர் காலம் தன்னில்,
நிறைத் தலை வழங்குஞ் சோரி
    நீத்தத்து நெடுங்குன்று என்னக்
குறை தலை வேழம் வீழ,
    விசும்பின்மேல் கொண்டு நின்றான்,
பிறைத்தலை வயிர வாளி
    மழை எனப் பெய்யும் கையான்.
223

உரை
   
 
8080.வாங்கிய சிரத்தின் மற்றை
    வயிர வான் கோட்டை வவ்வி,
வீங்கிய விசையின், நீலன்,
    அரக்கன்மேல் செல்ல விட்டான்;
ஆங்கு, அவன், அவற்றை ஆண்டு
    ஓர் அம்பினால் அறுத்து, ஓர் அம்பால்
ஓங்கல் போல் புயத்தினான்தன்
    உரத்திடை ஒளிக்க எய்தான்.
224

உரை
   
 
8081.எய்த அது காலமாக,
    ‘விளிந்திலது யானை ‘என்ன,
கையுடை மலை ஒன்று ஏறி,
    காற்று எனக் கடாவி வந்தான்,
வெய்யவன்; அவனைத் தானும்
    மேற்கொளா, வில்லினோடு
மொய் பெருங்களத்தின் இட்டான்,
    மும்மதக் களிற்றின் முன்னர்.
225

உரை
   
 
8082.இட்டவன் அவனி நின்றும்
    எழுவதன் முன்னம், யானை
கட்டு அமை வயிரக் கோட்டால்
    களம்பட வீழ்த்தி, காலால்
எட்டி, வன் தடக்கை தன்னால்
    எடுத்து, எங்கும் விரைவின் வீச,
பட்டிலன், தானே தன் போர்க்
    கரியினைப் படுத்து வீழ்த்தான்
226

உரை
   
 
8083.தன் கரி தானே கொன்று,
    தடக் கையால் படுத்து வீழ்த்தும்
மின் கரிது என்ன மின்னும்
    எயிற்றினான் வெகுளி நோக்கி,
பொன் கரிது என்னும் கண்கள்
    பொறி உக, நீலன் புக்கான்,
வன்கரம் முறுக்கி, மார்பில்
    குத்தினன்; மத்தன் மாண்டான்
227

உரை
   
 
வயமத்தன் விரைந்து போர்க்குவர, இடபன் அவனை எதிர்த்தல் (8084-8086)

8084.உன்மத்தன் வயிர மார்பின் உரும்
    ஒத்த கரம் சென்று உற்ற
வன்மத்தைக் கண்டும், மாண்ட
    மதமத்த மலையைப் பார்த்தும்,
சன்மத்தின் தன்மையானும்,
    தருமத்தைத் தள்ளி வாழ்ந்த
கன்மத்தின் கடைக் கூட்டானும்,
    வயமத்தன் கடிதின் வந்தான்
228

உரை
   
 
8085.பொய்யினும் பெரிய மெய்யான்;
    பொருப்பினைப் பழித்த தோளான்;
‘வெய்யன் ‘என்று உரைக்கச்
    சாலத்திண்ணியான்; வில்லின் செல்வன்;
பெய்கழல் அரக்கன், சேனை
    ஆர்த்து எழ, பிறங்கு பல் பேய்
ஐ இருநூறு பூண்ட ஆழி
    அம் தேரின் மேலான்
229

உரை
   
 
8086.ஆர்க்கின்றான், உலகை எல்லாம்
    அதிர்க்கின்றான், உருமும் அஞ்சப்
பார்க்கின்றான், பொன்றினாரைப்
    பழிக்கின்றான், பகழி மாரி
தூர்க்கின்றான், குரங்குச் சேனை
    துரக்கின்றான், துணிபை நோக்கி,
‘ஏற்கின்றார் இல்லை ‘என்னா, இடபன்
    வந்து அவனோடு ஏற்றான்.
230

உரை
   
 
வயமத்தனும் இடபனும் தம்முள் வீரவுரை பகர்தல்
(8087-8088)

8087.சென்றவன் தன்னை நோக்கி,
    சிரித்து, ‘நீ சிறியை; உன்னை
வென்று அவம்; உம்மை எல்லாம்
    விளிப்பெனோ? விரிஞ்சன் தானே
என்றவன் எதிர்ந்த போதும்,
    இராவணன் மகனை இன்று
கொன்றவன் தன்னைக் கொன்றே
    குரங்கின்மேல் கொதிப்பென் ‘என்றான்
232

உரை
   
 
8088.‘வாய் கொண்டு சொற்றற்கு ஏற்ற
    வலிகொண்டு, பலி உண் வாழ்க்கைப்
பேய்கொண்டு வெல்ல வந்த
    பித்தனே! மிடுக்கைப் பேணி
நோய் கொண்டு மருந்து, செய்யா
    ஒருவ! நின் நோன்மை எல்லாம்
ஓய்கின்றாய் காண்டி! ‘என்னா,
    உரைத்தனன், இடபன், ஒல்கான்.
232

உரை
   
 
இருவரும் தம்முட் பொருதநிலையில் வயமத்தன் இறந்து வீழ்தல் (8089-8092)

8089.“‘ஓடுதி “ என்ன, ஓடாது
    உரைத்தியேல், உன்னோடு இன்னே
ஆடுவென் விளையாட்டு ‘என்னா,
    அயில் எயிற்று அரக்கன், அம்பொன்
கோடு உறு வயிரப் போர்வில்
    காலொடு புருவம் கோட்டி,
ஈடு உற, இடபன் மார்பத்து
    ஈர் ஐந்து பகழி எய்தான்.
233

உரை
   
 
8090.அசும்புடைக் குருதி பாயும்
    ஆகத்தான், வேகத்தால் அத்
தசும்புடைக் கொடுந் தேர்தன்னைத்
    தடக்கையால் எடுத்து வீச,
பசுங்கழல் கண்ண பேயும்
    பறந்தன, பரவை நோக்கி;
விசும்பிடைச் செல்லும் காரின்
    தாரைபோல் நான்ற மெய்யான்
234

உரை
   
 
8091.தேரோடும் கடலின் வீழ்ந்து,
    சிலையும் தன் தலையும் எல்லாம்
நீரிடை அழுந்தி, பின்னும்
    நெருப்பொடு நிமிர வந்தான்;
பாரிடைக் குதியா முன்னம்,
    இடபனும், ‘பதக! நீ போய்
ஆரிடைப் புகுதி! ‘என்னா,
    அந்தரத்து ஆர்த்துச் சென்றான்
235

உரை
   
 
8092.அல்லினைத் தழுவி நின்ற
    பகல் என, அரக்கன்தன்னை,
கல்லினும் வலிய தோளால்,
    கட்டியிட்டு இறுக்கும் காலை,
பல்லுடைப் பில வாயூடு
    பசும் பெருங் குருதி பாய,
வில்லுடை மேகம் என்ன,
    விழுந்தனன், உயிர் விண் செல்ல.
236

உரை
   
 
சுக்கிரீவனும் கும்பனும் பொருதல் (8093-8102)

8093.குரங்கினுக்கு அரசும், வென்றிக்
    கும்பனும், குறித்த வெம் போர்
அரங்கினுக்கு அழகு செய்ய,
    ஆயிரம், சாரி போந்தார்,
மரம் கொடும், தண்டு கொண்டும்,
    மலை என மலையா நின்றார்;
சிரங்களும் கரமும் எல்லாம்
    குலைந்தனர், கண்ட தேவர்
237

உரை
   
 
8094.கிடைத்தார் உடலில் கிழி சோரியை வாரித்
துடைத்தார் விழியில் தழல் மாரி சொரிந்தார்
உடைத் தாரொடு பைங்கழல் ஆர்ப்ப உலாவிப்
புடைத்தார் பொருகின்றனர் கோள் அரி போல்வார்.
238

உரை
   
 
8095.தண்டம் கையின் வீசிய தக்க அரக்கன்
அண்டங்கள் வெடிப்பன என்ன அடித்தான்;
கண்டு அங்கு அது மா மரமே கொடு காத்தான்;
விண்டு அங்கு அது தீர்ந்தது; மன்னன் வெகுண்டான்.
239

உரை
   
 
8096.‘பொன்றப் பொருவேன், இனி ‘
    என்று, பொறாதான்,
ஒன்றப் புகுகின்றது ஒர்
    காலம் உணர்ந்தான்,
நின்று அப்பெரியோன்
    நினையாத முன் நீலன்
குன்று ஒப்பது ஓர் தண்டு
    கொணர்ந்து கொடுத்தான்.
240

உரை
   
 
8097.அத்தண்டு கொடுத்தது கைக்கொடு அடைந்தான்
ஒத்து அண்டமும் மண்ணும் நடுங்க உருத்தான்
பித்தன் தட மார்பொடு தோள்கள் பிளந்தான்;
சித்தங்கள் நடுங்கி அரக்கர் திகைத்தார்.
241

உரை
   
 
8098.அடியுண்ட அரக்கன் அருங் கனல் மின்னா
இடியுண்டது ஒர் மால்வரை என்ன விழுந்தான்!
‘முடியும் இவன் ‘என்பது ஒர்முன்னம் வெகுண்டான்
‘ஒடியும் உன தோள் ‘என மோதி உடன்றான்.
242

உரை
   
 
8099.தோளில் புடையுண்டு அயர் சூரியன் மைந்தன்
தாளில் தடுமாறல் தவிர்ந்து தகைந்தான்
வாளிக் கடு வல் விசையால் எதிர் மண்டி
ஆளித் தொழில் அன்னவன் மார்பின் அறைந்தான்.
243

உரை
   
 
8100.அடி ஆயிர கோடியின் மேலும் அடித்தார்;
‘முடியார் இனி யார்? ‘என வானவர் மொய்த்தார்;
இடியோடு இடி கிட்டியது என்ன இரண்டும்
பொடி ஆயின தண்டு; பொருந்தினர் புக்கார்.
244

உரை
   
 
8101.மத்தச் சின மால் களிறு என்ன மலைந்தார்;
பத்துத் திசையும் செவிடு எய்தின; பல்கால்
தத்தித் தழுவி திரள் தோள்கொடு தள்ளி
குத்தி தனி ‘குத்து ‘என மார்பு கொடுத்தார்.
245

உரை
   
 
8102.நிலையில் சுடரோன் மகன் வன்கை நெருங்க
கலையில் படு கம்மியர் கூடம் அலைப்ப
உலையில் படு இரும்பு என வன்மை ஒடுங்க
மலையின் பிளவுற்றது தீயவன் மார்பம்.
246

உரை
   
 
சுக்கிரீவன் கும்பனது நாவினைப் பறித்தலால் கும்பன் இறத்தல்

8103.‘செய்வாய் இகல்? ‘என்று அவன் நின்று சிரித்தான்;
ஐ வாய் அரவம் முழை புக்கு என ஐயன்
கை வாய் வழி சென்று அவன் ஆருயிர் கக்க
பை வாய் நெடு நாவை முனிந்து பறித்தான்.
247

உரை
   
 
அப்பொழுது நிகும்பன் உருத்துவர, அங்கதன் எதிர்த்தல்
(8104-8105)

8104.அக்காலை நிகும்பன் அனல் சொரி கண்ணன்
புக்கான் ‘இனி எங்கு அட போகுவது? ‘என்னா
மிக்கான் எதிர் அங்கதன் உற்று வெகுண்டான்;
எக்காலமும் இல்லது ஒர் பூசல் இழைத்தார்.
248

உரை
   
 
8105.சூலப் படையான் இடை வந்து தொடர்ந்தான்
ஆலத்தினும் வெய்யவன்; அங்கதன் அங்கு ஓர்
தாலப் படை கைக் கொடு சென்று தடுத்தான்
நீலக் கிரிமேல் நிமிர் பொன் கிரி நேர்வான்.
249

உரை
   
 
நிகும்பன் அங்கதனைக் கொல்லுதற்குச் சூலப்படையினை எடுத்தபொழுது அனுமன் விரைந்துவந்து அதனைத் தடுத்து நிகும்பனை அறைந்து கொல்லுதல் (8106-8107)

8106.எறிவான் இகல் சூலம் எடுத்தலும் ‘இன்னே
முறிவான் இகல் அங்கதன் ‘என்பதன் முன்னே
அறிவான் அடல் மாருதி அற்றம் உணர்ந்தான்
பொறி வான் உகு தீ என வந்து புகுந்தான்.
250

உரை
   
 
8107.தடை ஏதும் இல் சூலம் முனிந்து சலத்தால்
விடையே நிகர் அங்கதன்மேல் விடுவானை
இடையே தடைகொண்டு தன் ஏடு அவிழ் அம் கைப்
புடையே கொடு கொன்று அடல் மாருதி போனான்.
251

உரை
   
 
அரக்கர் அஞ்சியோடுதல் (8108-8116)

8108.நின்றார்கள் தடுப்பவர் இன்மை நெளிந்தார்
பின்றாதவர் பின்றி இரிந்து பிரிந்தார்;
வன்தாள் மரம் வீசிய வானர வீரர்
கொன்றார்; மிகு தானை அரக்கர் குறைந்தார்.
252

உரை
   
 
8109.ஓடிப் புகுவாயில் நெருக்கின் உலந்தார்
கோடிக்கு அதிகத்தினும் மேல் உளர்; குத்தால்
பீடிப்புறு புண் உடலோடு பெயர்ந்தார்
பாடித் தலை உற்றவர் எண் இலர் பட்டார்.
253

உரை
   
 
8110.‘தண்ணீர் தருக ‘என்றனர் தாவுற ஓடி
உள்நீர் அற ஆவி உலந்தனர் உக்கார்;
கண்ணீரொடும் ஆவி கலுழ்ந்தனர் காலால்
மண் ஈரம் உற கடிது ஊர்புக வந்தார்.
254

உரை
   
 
8111.விண்மேல் நெடிது ஓடினர் ஆருயிர் விட்டார்
மண்மேல் நெடுமால் வரை என்ன மறிந்தார்;
எண் மேலும் நிமிர்ந்துளர் ஈருள் தயங்கப்
புண் மேலுடை மேனியினார் திசை போனார்.
255

உரை
   
 
8112.அறியும்மவர் தங்களை ‘ஐய இவ் அம்பைப்
பறியும் ‘என வந்து பறித்தலும் ஆவி
பிறியும் அவர் எண் இலர்; தம் மனை பெற்றார்
குறியும் அறிகின்றிலர் சிந்தை குறைந்தார்.
256

உரை
   
 
8113.பரி பட்டு விழ சிலர் நின்று பதைத்தார்;
கரி பட்டு உருள சிலர் கால்கொடு சென்றார்;
நெரிபட்டு அழி தேரிடையே பலர் நின்றார்
எரிபட்ட மனைக்குள் இருந்தவர் என்ன.
257

உரை
   
 
8114.மண்ணின்தலை வானர மேனியர் வந்தார்
புண்நின்ற உடற் பொறையோர் சிலர் புக்கார்
‘கண்நின்ற குரங்கு கலந்தன ‘என்னா
உள்நின்ற அரக்கர் மலைக்க உலந்தார்.
258

உரை
   
 
8115.இருகணும் திறந்து நோக்கி,
    அயல் இருந்து இரங்குகின்ற
உருகு தம் காதலோரை,
    ‘உண்ணும் நீர் உதவும் ‘என்றார்,
வருவதன் முன்னம் மாண்டார்
    சிலர்; சிலர் வந்த தண்ணீர்
பருகுவார் இடையே பட்டார்;
    சிலர் சிலர் பருகிப் பட்டார்.
259

உரை
   
 
8116.மக்களைச் சுமந்து செல்லும்
    தாதையர், வழியின் ஆவி
உக்கனர் என்ன வீசி,
    தம்மைக் கொண்டு ஓடிப் போனார்;
கக்கினர் குருதி வாயால்,
    கண்மணி சிதற, காலால்
திக்கொடு நெறியும் காணார்,
    திரிந்து சென்று, உயிரும் தீர்ந்தார்.
260

உரை
   
 
அதிகாயன் முதலியோர் இறந்த செய்தியைத் தூதர் இராவணனிடம் சென்று அறிவித்தல் (8117-8118)

8117.இன்னது ஓர் தன்மை எய்தி,
    இராக்கதர் இரிந்து சிந்தி,
பொன் நகர் புக்கார்; இப்பால்
    பூசல் கண்டு ஓடிப் போன
துன்ன அருந் தூதர் சென்றார்,
    தொடு கழல் அரக்கர்க்கு எல்லாம்
மன்னவன் அடியில் வீழ்ந்தார்,
    மழையின் நீர் வழங்கு கண்ணார்
261

உரை
   
 
8118.நோக்கிய இலங்கை வேந்தன்,
    ‘உற்றது நுவல்மின் ‘என்றான்;
‘போக்கிய சேனை தன்னில்
    புகுந்து உள இறையும் போதா;
ஆக்கிய போரின், ஐய!
    அதிகாயன் முதல்வர் ஆய
கோக்குலக் குமரர் எல்லாம்
    கொடுத்தனர், ஆவி ‘என்றார்.
262

உரை
   
 
மைந்தர்கள் இறந்தமை கேட்டு மனங் கலங்கிய இராவணனது நிலை (8119-8121)

8119.ஏங்கிய விம்மல் மானம்,
    இரங்கிய இரக்கம் வீரம்,
ஓங்கிய வெகுளி துன்பம்
    என்று இவை, ஒன்றிற்கு ஒன்று
தாங்கிய தரங்கம் ஆகக்
    கரையினைத் தள்ளித் தள்ளி,
வாங்கிய கடல் போல் நின்றான்
    அருவி நீர் வழங்கு கண்ணான்.
263

உரை
   
 
8120.‘திசையினை நோக்கும்; நின்ற
    தேவரை நோக்கும்; வந்த
வசையினை நோக்கும்; கொற்ற
    வாளினை நோக்கும்; பற்றிப்
பிசையுறும் கையை; மீசை
    சுறுக் கொள உயிர்க்கும்; பேதை
நசை இடை கண்டான் என்ன,
    நகும், அழும், முனியும், நாணும்.
264

உரை
   
 
8121.மண்ணினை எடுக்க எண்ணும்;
    வானினை இடிக்க எண்ணும்;
எண்ணிய உயிர்கள் எல்லாம்
    ஒரு கணத்து எற்ற எண்ணும்;
‘பெண் எனும் பெயர எல்லாம்
    பிளப்பென் ‘என்று எண்ணும்; எண்ணிப்
புண்ணிடை எரிபுக் கென்ன,
    மானத்தால் புழுங்கு கின்றான்.
265

உரை
   
 
அதிகாயன் தாய் தானியமாலி, தன் மைந்தன் இறந்தமை கேட்டுப் புலம்பி இராவணன் அடிகளில் வீழ்ந்து முறையிட்டு அரற்றுதல் (8122-8129)

8122.ஒருவரும் உரையார் வாயால்,
    உயிர்த்திலர், உள்ளம் ஓய்வார்
வெருவருந் தகையர் ஆகி,
    விம்மினர் இருந்த வேலை,
தருவனம் அனைய தோளான்தன்
    எதிர் தானி மாலி
இரியல் இட்டு அலறி, ஓயாப்
    பூசல் இட்டு, ஏங்கி வந்தாள்.
266

உரை
   
 
8123.மலை குவட்டு இடி வீழ்ந்தனெ்ன,
    வளைகேளாடு ஆரம் ஏங்க,
முலைக் குவட்டு எற்றும் கையாள்;
    முழை திறந்தன்ன வாயாள்;
தலைக் குவட்டு அணைந்த செக்கர்
    சரிந்தன குழல்கள் தத்தி
உலைக் குவட்டு உருகும் செம்பு ஒத்து
    உதிரம் நீர் ஒழுகும் கண்ணாள்.
267

உரை
   
 
8124.வீழ்ந்தனள் அரக்கன் தாள்மேல்,
    மென்மைத் தோள் நிலத்தை மேவப்
போழ்ந்தனள், பெரும் பாம்பு என்னப்
    புரண்டனள், பொருமிப் பொங்கி,
‘சூழ்ந்தனை கொடியாய்! ‘என்னா,
    துடித்து, அருந் துயர வெள்ளத்து
ஆழ்ந்தனள், புலம்பலுற்றாள்,
    அழக் கண்டும் அறிந்திலாதாள்.
268

உரை
   
 
8125.‘மாட்டாயோ, இக்காலம்
    வல்லோர் வலி தீர்க்க?
மீட்டாயோ, வீரம்?
    மெலிந்தாயோ, தோள் ஆற்றல்?
கேட்டாய், உணர்ந்திலையோ?
    என் உரையும் கேளாயோ?
காட்டாயோ, என்னுடைய
    கண்மணியைக் காட்டாயோ?
269

உரை
   
 
8126.“‘இந்திரற்கும் தோலாத நன்மகனை
    ஈன்றாள் “ என்று
அந்தரத்து வாழ்வாரும் ஏத்தும்
    அளியத்தேன்
மந்தரத் தோள் என்மகனை
    மாட்டா மனிதன்தன்
உந்து சிலைப் பகழிக்கு
    உண்ணக் கொடுத்தேனே. ‘
270

உரை
   
 
8127.‘அக்கன் உலந்தான்; அதிகாயன்தான் பட்டான்
மிக்க திறத்து உள்ளார்கள் எல்லோரும் வீடினார்;
மக்களின் இன்று உள்ளான் மண்டோதரி மகனே
திக்கு விசயம் இனி ஒருகால் செய்வாயோ?
271

உரை
   
 
8128.‘ஏது ஐயா சிந்தித்து இருக்கின்றாய் ” எண் இறந்த
கோதை ஆர் வேல் அரக்கர் பட்டாரைக் கூவாயோ?
பேதை ஆய்க் காமம் பிடிப்பாய் பிழைப்பாயோ?
சீதையால் இன்ன வருவ சிலவேயோ?
272

உரை
   
 
8129.‘உம்பி உணர்வு உடையான் சொன்ன உரை கேளாய்
நம்பி குலக் கிழவன் கூறும் நலம் ஓராய்;
கும்பகருணனையும் கொல்வித்து என் கோமகனை
அம்புக்கு இரை ஆக்கி ஆண்டாய் அரசு ஐய!
273

உரை
   
 
உருப்பசியும் மேனகையும் தானியமாலியை அரண்மனைக்குக் கொண்டு செல்லுதல்

8130.என்று பலபலவும் பன்னி எடுத்து அழைத்து
கன்றுபடப் பிழைத்த தாய்போல் கவல்வாளை
நின்ற உருப்பசியும் மேனகையும் நேர்ந்து எடுத்து
குன்று புரையும் நெடுங்கோயில் கொண்டு அணைந்தார்.
274

உரை
   
 
இலங்கை நகரத்தார் யாவரும் வருந்துதல் (8131-8132)

8131.தானை நகரம் தளரத் தலைமயங்கி
போன மகவு உடையார் எல்லாம் புலம்பினார்
ஏனை மகளிர்நிலை என் ஆகும்? எண் இறந்த
வான மகளிரும் தம் வாய்திறந்து மாழ்கினார்.
275

உரை
   
 
8132.தார் அகலத்து அண்ணல் தனிக் கோயில் தாசரதி
பேர உலகு உற்றது உற்றதால் பேர் இலங்கை;
ஊர் அகலம் எல்லாம் அரந்தை; உவா உற்ற
ஆர்கலியே ஒத்தது அழுத குரல் ஓசை.
276

உரை