இந்திரசித்து முதலியோர்க்கு இராவணன் நேர்ந்துள்ள நிலைமையைச் சொல்லுதல்

8973.மைந்தனும் மற்றுேளாரும்
    மகோதரன் முதலோர் ஆய
தந்தித் தலைமையோரும், முதியரும்,
    தழுவத் தக்க
மந்திரர் எவரும், வந்து,
    மருங்கு உறப் படர்ந்தார்; பட்ட
அந்தரம் முழுதும் தானே
    அனையவர்க்கு அறியச் சொன்னான்.
1

உரை
   
 
மாலியின் அறிவுரை (8974-8980)

8974.நம்கிளை உலந்தது எல்லாம்
    உய்ந்திட நணுகும் அன்றே,
வெங்கொடுந் தீமை தன்னால்
    வேலையில் இட்டிலேமேல்?
இங்குள எல்லாம் மாள்தற்கு
    இனிவரும் இடையூறு இல்லை;
பங்கயத்து அண்ணல் மீளாப்
    படை பழுதுற்ற பண்பால்
2

உரை
   
 
8975.இலங்கையின் நின்று, மேரு
    பின் பட, இமைப்பில் பாய்ந்து,
வலம்கிளர் மருந்து, நின்ற
    மலையொடும் கொணர வல்லான்
அலங்கலம் தடந்தோள் அண்ணல்
    அனுமனே ஆதல் வேண்டும்
கலங்கல் இல் உலகுக்கு எல்லாம்
    காரணம் கண்ட ஆற்றால்.
3

உரை
   
 
8976.‘நீரினைக் கடக்க வாங்கி,
    இலங்கையாய் நின்ற குன்றைப்
பாரினில் கிழிய வீசின்,
    ஆருளர், பிழைக்கற் பாலார்?
போரினிப் பொருவது எங்கே?
    போயின அனுமன் பொன் மா
மேருவைக் கொணர்ந்து, இவ் ஊர் மேல்
    இடுமெனின், விலக்கல் ஆமோ?
4

உரை
   
 
8977.முறைகெட வேண்டின் முன்பு
    நினைந்ததே முடிப்பன், முன்பின்
குறை இலை குணங்கட்கு; என்னோ
    கோது இலா வேதம் கூறும்
இறைவர்கள் மூவர் என்பது?
    எண் இலார் எண்ணமே தான்;
அறைகழல் அனுமனோடும்
    நால்வரே முதல்வர் அம்மா.
5

உரை
   
 
8978.‘இறந்தனர் இறந்து தீர;
    இனி ஒரு பிறவி வந்து
பிறந்தனம் ஆகி உள்ளேம்;
    உய்ந்தனம்; பிழைக்கும் பெற்றி
மறந்தனம்; எனினும், இன்னம்
    சனகியை மரபின் ஈந்து, அவ்
அறம்தரு சிந்தையோரை
    அடைக்கலம் புகுதும் ஐய
6

உரை
   
 
8979.‘மறிகடல் குடித்து, வானை
    மண்ணொடும் பறிக்க வல்ல
எறிபடை அரக்கர் எல்லாம்
    இறந்தனர்; இலங்கை ஊரும்,
சிறுவனும் நீயும் அல்லால்
    ஆருளர் ஒருவர்? தீர்ந்தார்;
வெறிது நம் வீரம் என்றான்,
    மாலி, மேல் விளைவது ஓர்வான்.
7

உரை
   
 
8980.‘வாலியை வாளி ஒன்றால்
    வானிடை வைத்து வாரி
வேலையை வென்று, கும்ப
    கருணனை வீட்டினானை,
ஆலியின் மொக்குள் அன்ன
    அரக்கரோ, அமரின் வெல்வார்?
சூலியைப் பொருப் பினோடும்
    தூக்கிய விசயத் தோளாய்!
8

உரை
   
 
மாலியவான் சொல்லியது கேட்டு இராவணன் சினத்தல்

8981.என்று மாலியவான் கூற;
    பிறை எயிற்று எழிலி நாப்பண்
மின்தரெிந் தனெ்ன நக்கு,
    வெருவர உரப்பி, பேழ்வாய்
ஒன்றின் ஒன்று அசனி என்ன
    உருத்து, நீ, உரைத்த மாற்றம்
நன்று, நன்று! ‘என்று சீறி,
    உரைத்தனன், நலத்தை ஓரான்.
9

   
 
இராவணனது வீரமொழி

8982.கட்டுரை அதனைக் கேளா,
    கண் எரி கதுவ நோக்கி,
பட்டனர் அரக்கர் என்னில்,
    படைக்கலம் படைத்த எல்லாம்
கெட்டன என்னில் வாட்கை
    கெடாது எனில், கிளி அனாளை
விட்டிட எண்ணியோ யான்
    பிடித்தது, வேட்கை வீய?
10

உரை
   
 
8983.‘மைந்தன் என்? மற்றையோர் என்?
    அஞ்சினிர் வாழ்க்கை வேட்டீர்!
உயந்துநீர் போவீர்; நாளை
    ஊழிவெந் தீயின் ஓங்கி,
சிந்தனை மனித்தரோடு அக்
    குரங்கினைத் தீர்ப்பேன் ‘என்றான்,
வெந்திறல் அரக்கர் வேந்தன்;
    மகன் இவை விளம்பலுற்றான்.
11

உரை
   
 
இந்திரசித்து கூறுகிறான்

8984.உளதுநான் உணர்த்தற் பாலது,
    உணர்ந்தனை கோடல் உண்டேல்;
தள மலர் கிழவன் தந்த
    படைக்கலம் தழலின் சார்த்தி
அளவு இலது அமைய விட்டது
    இராமனை நீக்கி அன்றால்
விளைவு இலது அனையன் மேனி
    தீண்டில மீண்டது அம்மா!
12

உரை
   
 
8985.மானிடன் அல்லன்; தொல்லை
    வானவன்; அல்லன்; மற்றும்
மேனியான் முனிவன் அல்லன்;
    வீடணன் மெய்யின் சொன்ன
யான் எனது எண்ணல் தீர்ந்தார்
    எண்ணுறும் ஒருவன் என்றே
தேன் உகு தரெியல் மன்னா!
    சேகு அறத் தரெிந்தது அன்றே.
13

உரை
   
 
8986.‘அனையது வேறு நிற்க;
    அன்னது பகர்தல் ஆண்மை
வினை எனின் அன்று; நின்று
    வீழ்ந்தவர் வீழ்க! வீர!
இனையல்நீ; மூண்டு யான்போய்
    நிகும்பலை விரைவின் எய்தி,
துனி அறு வேள்வி வல்லை
    இயற்றினால் முடியும் துன்பம்.
14

உரை
   
 
இராவணன் உடன்பட்டு நிகும்பலை வேள்வியை இடையூறு இன்றி முடிக்கும் உபாயம் யாது? எனல்

8987.‘அன்னது நல்ல தேயால்;
    அமைதி ‘என்று அரக்கன் சொன்னான்,
நல்மகன், ‘உம்பி கூற,
    நண்ணலார் கண்டு நண்ணி,
முன்னிய வேள்வி முற்றா
    வகைசெரு முயல்வர் ‘என்றான்;
‘என், அவர் எய்தா வண்ணம்
    இயற்றலாம் உறுதி? ‘என்றான்.
15

உரை
   
 
இந்திரசித்து உபாயம் கூறல்

8988.‘சானகி உருவ மாகச்
    சமைத்து, அவள் தன்மை கண்ட
வானுயர் அனுமன் முன்னே,
    வாளினால் கொன்று மாற்றி,
யான்நெடுஞ் சேனையோடும்
    அயோத்திமேல் எழுந்தேன் என்னப்
போனபின், புரிவது ஒன்றும்
    அறிகிலர், துயரம் பூண்பர்.
16

உரை
   
 
8989.“இத்தலைச் சீதை மாண்டாள்;
    பயன் இவண் இல்லை “ என்பார்,
அத் தலை, தம்பிமாரும்
    தாயரும் அடுத்து உேளாரும்,
உத்தம நகர் உேளாரும்
    ஒழிவரென்று உள்ளத்து உள்ளி,
பொத்திய துன்பம் மூளச்
    சேனையும் தாமும் போவார்.
17

உரை
   
 
8990.‘போகிலர் என்ற போதும்,
    அனுமனை ஆண்டுப் போக்கி,
ஆகியது அறிந்தால் அன்றி,
    அருந்துயர் ஆற்றல் ஆற்றார்;
ஏகிய கருமம் முற்றி,
    யான் அவண் விரைவின் எய்தி,
வேகவெம் படையின் கொன்று,
    தருகுவென் வென்றி ‘என்றான்.
18

உரை
   
 
மாயா சீதை அமைக்க இந்திரசித்து போதல்

8991.‘அன்னது புரிதல் நன்று என்று
    அரக்கனும் அமைய, அம்சொல்
பொன்னுரு அமைக்கும் மாயம்
    இயற்றுவான் மைந்தன் போனான்;
இன்னது இத்தலையது ஆக,
    இராமனுக்கு, இரவி செம்மல்,
‘தொல்நகர் அதனை வல்லைக்
    கடிகெடச் சுடுதும் ‘என்றான்.
19

உரை
   
 
சுக்கிரீவன் இலங்கையை எரியூட்ட இராமன் இசைவு பெற்றுக் கோபுரத்தையடைய வானரங்கள் எல்லாம்கையில்கொள்ளி கொள்ளுதல்

8992.‘அத்தொழில் புரிதல் நன்று‘ என்று
    அண்ணலும் அமைய, எண்ணி;
தத்தினன், இலங்கை மூதூர்க்
    கோபுரத்து உம்பர்ச் சார்ந்தான்;
பத்துடை ஏழு சான்ற
    வானரப் பரவை பற்றிக்
கைத்தலத்து ஓரோர் கொள்ளி
    எடுத்தது எவ் உலகும் காண.
20

உரை
   
 
வானரங்கள் கொள்ளியை வீசுதல்

8993.எண்ணின கோடிப் பல்படை யாவும்
மண்ணுறு காவல் திண்மதில் வாயில்
வெண்நிற மேகம் மின்னினம் வீசி
நண்ணினபோல தொல்நகர் நண்ணி.
21

உரை
   
 
குரங்குகள் கொள்ளியை வீசுதல்

8994.ஆசைகள் தோறும் அள்ளின கொள்ளி
மாசு அறு தானை மர்க்கட வெள்ளம்
‘நாசம் இவ்வூருக்கு உண்டு’என நள்ளின்
வீசின வானின் மீன்விழல் அன்ன.
22

உரை
   
 
கொள்ளிகள் மேன்மேல் செல்லுதல்

8995.வஞ்சனை மன்னன் வாழும் இலங்கை
குஞ்சரம் அன்னார் வீசிய கொள்ளி
அஞ்சன வண்ணன் ஆழியில் ஏவும்
செஞ்சரம் என்னச் சென்றன மென்மேல்.
23

உரை
   
 
இலங்கை எரிதல்

8996.கை அகல் இஞ்சிக் காவல் கலங்க
செய்ய கொழுந்தீச் சென்று நெருங்க
ஐயன் நெருங்கார் ஆழியை அம்பால்
எய்ய எரிந்தால் ஒத்தது இலங்கை.
24

உரை
   
 
தீப்பற்றலால் பறவைகள் விண்ணில் எழுந்து பறத்தல்

8997.பரல்துறு தொல் பழுவத்து எரிபற்ற
நிரல்துறு பல்பறவைக் குலம் நீளம்
உரற்றின விண்ணின் ஒலித்து எழும்வண்ணம்
அரற்றி எழுந்தது அடங்க இலங்கை.
25

உரை
   
 
இராமன் அம்பினால் இலங்கை மதிற்கோபுரம் விழுதல்

8998.மூஉல கத்தவரும் முதலோரும்
மேவின வில்தொழில் வீரன் இராமன்
தீவம் எனச் சில வாளி செலுத்த
கோவுரம் இற்று விழுந்தது குன்றின்.
26

உரை
   
 
அனுமன் மீண்டு வருதல்

8999.இத்தலை இன்ன நிகழ்ந்திடும் எல்லை
கைத்தலையில் கொடு காலின் எழுந்தான்
உய்த்த பெருங்கிரி மேருவின் உப்பால்
வைத்த நெடுந்தகை மாருதி வந்தான்.
27

உரை
   
 
அனுமன் ஆர்ப்பொலி கேட்டு இலங்கை நடுங்குதல்

9000.அறை அரவக் கழல் மாருதி ஆர்த்தான்
உறை அரவம் செவி உற்றுளது அவ் ஊர்;
சிறை அரவக் கலுழன் கொடுசீறும்
இறை அரவக் குலம் ஒத்தது இலங்கை.
28

உரை
   
 
மேலைவாயிலில் அனுமனை இந்திரசித்து நெருங்குதல்

9001.மேல்திசை வாயிலை மேவிய வெங்கண்
காற்றின் மகன்தனை வந்து கலந்தான்
மாற்றல் இல் மாயம் வகுக்கும் வலத்தான்
கூற்றையும் வென்று உயர் வட்டணை கொண்டான்.
29

உரை
   
 
மாயா சீதையின் கூந்தலை ஒருகையில் பற்றிக்கொண்டு சினந்து இந்திரசித்து சொல்லுதல்

9002.சானகி ஆம்வகை கொண்டு சமைத்து ஓர்
மான் அனையாளை வடிக்குழல் பற்றா
ஊன்நகு வாள் ஒரு கைக்கொடு உருத்தான்
ஆனவன் அந்நிலை இன்ன அறைந்தான்.
30

உரை
   
 
சீதையைக் கொல்வேன் என்ற இந்திரசித்தின் சொல்லைக்கேட்டு அனுமன் அஞ்சிச் சோர்தல்

9003.‘வந்து இவள் காரணம் ஆக மலைந்தீர்;
எந்தை இகழ்ந்தனன்; யான் இவள் ஆவி
சிந்துவென் ‘என்று செறுத்து உரைசெய்தான்;
அந்தமில் மாருதி அஞ்சி ‘அயர்ந்தான்.
31

உரை
   
 
இந்திரசித்தின் கையில் சீதையைக் கண்ட அனுமன் நிலை

9004.‘கண்டவளே இவள் ‘என்பது கண்டான்
‘விண்டது போலும் நம்வாழ்வு’என வெந்தான்;
கொண்டு இடைதீர்வது ஒர்கோள் அறிகில்லான்
‘உண்டு உயிரோ’என வாயும் உலர்ந்தான்.
32

உரை
   
 
இந்திரசித்துக்கு அனுமன் நீதி கூறல்

9005.‘யாதும் இனிச்செயல் இல்’என எண்ணா
நீதி உரைப்பது நேர்’என ஓரா
கோது இல் குலத்து ஒரு நீ குணம் மிக்காய்!
மாதை ஒறுத்தல் வசைத் திறம் அன்றோ?
33

உரை
   
 
9006.‘நான்முகனுக்கு ஒரு நால்வரின் வந்தாய்;
நூல்முகம் முற்றும் நுணங்க உணர்ந்தாய்;
பால்முகம் உற்ற பெரும்பழி அன்றோ
மால்முகம் உற்று ஒருமாதை வதைத்தல்?
34

உரை
   
 
9007.‘மண்குலை கின்றது; வானும் நடுங்கிக்
கண்குலை கின்றது; காணுதி கண்ணால்;
எண்குலை கின்றது; இரங்கல் துறந்தாய்!
பெண்கொலை செய்கை பெரும்பழி அன்றோ?
35

உரை
   
 
9008.‘என்வயின் நல்கினை ஏகுதி என்றால்
நின்வயம் ஆம்; உலகு யாவையும்; நீநின்
அன்வயம் ஏதும் அறிந்திலை; ஐயா!
புன்மை தொடங்கல் புகழ்க்கு அழிவு என்றான்.
36

உரை
   
 
இந்திரசித்தின் மறுமொழி

9009.என்றனன் மாருதி; இந்திர சித்தும்
‘ஒன்று உரை கேள்; எனது எந்தையும் ஊரும்
பொன்றுதல் தீரும்; இதின் புகழ் உண்டோ?
நன்றுரை! ‘என்று பின்நக்கு உரைசெய்தான்.
37

   
 
9010.‘எந்தையும் இந்த இலங்கை உேளாரும்
உய்ந்திட வானவர் யாவரும் ஓட
சிந்துவென் வாளினில் என்று செறுத்தான்
இந்திர சித்தவன் இன்ன இசைத்தான்.
38

உரை
   
 
இந்திரசித்து அயோத்திமேலும் செல்வேன் எனல்

9011.‘போமின் அடா! வினை போயது போலாம்?
ஆம் எனில் இன்னும் அயோத்தியை அண்மி
காமின்; அது இன்று கனல்கரி ஆக
வேம்; இது செய்து இனி மீள்குவென் ‘என்றான்.
39

உரை
   
 
இந்திரசித்து இராமன் தம்பியரையும் தாயரையும்
கொல்வேன் எனல்

9012.தம்பியர் தம்மொடு தாயரும் ஆயோர்
உம்பர் விலக்கிடினும் இனி உய்யார்;
வெம்பு கடுங்கனல் வீசிடும் என்கை
அம்புகேளாடும் அவிந்தனர் அம்மா!
40

உரை
   
 
9013.‘இப்பொழுதே கடிது ஏகுவென்; யானிப்
புட்பக மானம் அதில்புக நின்றேன்;
தப்புவரே அவர் சங்கை இலா என்
வெப்புறு வாளிகள் இன்று விரைந்தால்?
41

உரை
   
 
மாயா சீதையை வெட்டிவிட்டு இந்திரசித்து சேனையொடு விரைதல்

9014.‘ஆளுடையாய்! அருளாய் அருளாய்! ‘என்று
ஏழை வழங்குறு சொல்லின் இரங்கான்
வாளின் எறிந்தனன்; மாகடல் போலும்
நீளுறு சேனையினோடு நிமிர்ந்தான்.
42

உரை
   
 
இந்திரசித்து சீதையைக் கொன்றுவிட்டுப் புறப்பட்டவுடன் அனுமன் அலறி விழுதல்

9015.தனெ்திசை நின்று வடாது திசைக்கண்
பொன்திகழ் புட்பகம் மேல்கொடு போனான்;
ஒன்றும் உணர்ந்திலன் மாருதி உக்கான்
வென்றி நெடுங்கிரி போல விழுந்தான்.
43

உரை
   
 
வடதிசைக்கண் போன இந்திரசித்து நிகும்பலை புகலும் அனுமன் நிலையும்

9016.போயவன் மாறி நிகும்பலை புக்கான்;
தூயவன் நெஞ்சு துயர்ந்து சுருண்டான்
ஓய்வரு மாரி ஒருங்க உணர்ந்தான்;
ஏயன பன்னினன் இன்னன சொன்னான்.
44

உரை
   
 
அனுமன் சீதையை நோக்கி அரற்றுதல்

9017.‘அன்னமே! ‘என்னும்; ‘பெண்ணின்
    அருங் குலக் கலமே! ‘என்னும்
‘என்னமே! ‘என்னும்; ‘தயெ்வம்
    இல்லையோ யாதும்? ‘என்னும்;
‘சின்னமே ‘செய்யக் கண்டும்
    தீவினை நெஞ்சம் ஆவி
பின்னமே ஆயது இல்லை
    என்னும் பேர் ஆற்றல் பேர்ந்தான்.
45

உரை
   
 
அனுமன் படும் அல்லல்

9018.எழுந்து அவன் மேலே பாய
    எண்ணும்; பேர் இடரைத் தள்ளி;
விழுந்துவெய்து உயிர்த்து விம்மி
    வீங்கும்; போய் மெலியும்; வெந் தீக்
கொழுந்துகள் உயிர்க்கும்; யாக்கை
    குலைவுறும்; தலையே கொண்டு உற்று
உழும்தரை தன்னை; பின்னை
    இனையன உரைப்பது ஆனான்.
46

உரை
   
 
அனுமன் அவலஉரைகள்

9019.“முடிந்தது நம்தம் எண்ணம்;
    மூவுல கிற்கும் கங்குல்
விடிந்தது ‘‘ என்று இருந்தேன்; மீள
    வெந்துயர் இருளின் வெள்ளம்
படிந்தது; வினையச் செய்கை
    பயந்தது; பாவி வாளால்
தடிந்தனன் திருவை! அந்தோ
    தவிர்ந்தது தருமம் அம்மா ‘
47

உரை
   
 
9020.‘பெருஞ்சிறைக் கற்பினாளைப்
    பெண்ணினைக் கண்ணின் கொல்ல,
இருஞ்சிறை அற்ற புள்போல்,
    யாதும் ஒன்று இயற்றல் ஆற்றேன்;
இருஞ்சிறை அமுங்கு கின்றேன்;
    எம்பிரான் தேவி பட்ட
அருஞ்சிறை மீட்ட வண்ணம்
    அழகிது பெரிதும் அம்மா.
48

உரை
   
 
9021.பாதக அரக்கன், தயெ்வப்
    பத்தினி, தவத்துளாளை,
பேதையை குலத்தின் வந்த
    பிழைப்பு இலாதாளை, பெண்ணை,
சீதையை, திருவை, தீண்டிச்
    சிறைவைத்த தீயோன் சேயே
காதவும், கண்டு நின்ற
    கருமமே பெருமைத்து அம்மா!
49

உரை
   
 
9022.கல்விக்கும் நிமிர்ந்த கீர்த்திக்
    காகுத்தன் தூதன் ஆகிச்
சொல்விக்க வந்து போனேன்,
    ஆய இத்துயர் செய்தாரை
வெல்விக்க வந்தேன்; உன்னை
    மீட்பிக்க அன்று; வெய்தின்
கொல்விக்க வந்தேன் என்று ஓர்
    கொடும்பழி கூட்டிக் கொண்டேன்.
50

உரை
   
 
9023.வஞ்சியை எங்கும் காணாது,
    உயிரினை மறந்தான் என்ன,
செஞ்சிலை உரவோன் தேடித்
    திரிகின்றான் உள்ளம் தேற,
“அம்சொலாள் இருந்தாள்; கண்டேன் “
    என்ற யான், “அரக்கன் கொல்லத்
துஞ்சினாள் ‘என்றும் சொல்லத்
    தோன்றினேன்; தோற்றம் ஈதால்!
51

உரை
   
 
9024.‘அருங்கடல் கடந்து, இவ் ஊரை
    அள் எரி மடுத்து, வெள்ளக்
கருங்கடல் கட்டி, மேருக்
    கடந்து ஒரு மருந்து காட்டி,
“குரங்கு இனி உன்னோடு ஒப்பது
    இல் “ எனக் களிப்புக் கொண்டேன்;
பெருங்கடல் கோட்டம் தேய்த்து
    ஆயது, என் அடிமைப் பெற்றி!
52

உரை
   
 
9025.விண்டுநின்று ஆக்கை சிந்தப்
    புல் உயிர் விட்டிலாதேன்,
கொண்டு நின்றானைக் கொல்லக்
    கூசினேன்! எதிரே கொல்லக்
கண்டுநின்றேன்! மற்று இன்னும்
    கையினால் கனிகள் வெவ்வேறு
உண்டுநின்று உய்ய வல்லேன்;
    எளியனோ? ஒருவன் உள்ளேன்!
53

உரை
   
 
இரங்கிய அனுமன் இனிச் செய்வது யாதனெச் சிந்தித்தல்

9026.என்னநின்று இரங்கி, ‘கள்வன்
    “அயோத்திமேல் எழுவேன் “ என்று
சொன்னதும் உண்டு; போன
    சுவடு உண்டு; தொடர்ந்து செல்லின்,
மன்னன் இங்கு உற்ற தன்மை
    உணர்கிலன்; வருவது ஓரான்;
பின் இனி முடிப்பது யாது? ‘என்று
    இரங்கினான், உணர்வு பெற்றான்.
54

உரை
   
 
சொன்னவாறு செய்வேன் என அனுமன்
இராமனையடைதல்

9027.‘உற்றதை உணர்த்தி, பின்னை
    உலகுடை ஒருவனோடும்,
இற்று உறின், இற்று மாள்வென்;
    அன்று எனின், எண்ணம் எண்ணி,
சொற்றது செய்வென்; வேறு ஓர்
    பிறிது இலேன்; துணிவு இது என்னா,
பொன்தடந் தோளான், வீரன்
    பொன் அடி மருங்கில், போனான்.
55

உரை
   
 
இராமனடியில் வீழ்ந்து பொருமுதல்

9028.சிங்க ஏறு அனைய வீரன்
    செறிகழல் பாதம் சேர்ந்தான்,
அங்கமும் மனமும் கண்ணும்
    ஆவியும் அலக்கண் உற்றான்,
பொங்கிய பொருமல் வீங்கி,
    உயிர்ப்பொடு புறத்தைப் போர்ப்ப,
வெங்கண் நீர் அருவி சோர,
    மால்வரை என்ன வீழ்ந்தான்.
56

உரை
   
 
இந்திரசித்து சீதையை வெட்டினான் என்பதைக் கூறி அனுமன் தரையில் புரளுதல்

9029.வீழ்ந்தவன் தன்னை, வீரன்,
    ‘விளைந்தது விளம்பு ‘கென்னா,
தாழ்ந்து, இரு தடக்கை பற்றி
    எடுக்கவும், தரிக்கிலாதான்,
‘ஆழ்ந்து அழு துன்பத் தாளை,
    அரக்கன், இன்று, அயில்கொள் வாளால்
போழ்ந்தனன் ‘என்னக் கூறி,
    புரண்டனன், பொருமுகின்றான்.
57

உரை
   
 
சீதை கொல்லப்பட்டது கேட்ட இராமன் நிலை

9030.துடித்திலன்; உயிர்ப்பும் இல்லன்;
    இமைத்திலன்; துள்ளிக் கண்ணீர்
பொடித்திலன்; யாதும் ஒன்றும்
    புகன்றிலன்; பொருமி, உள்ளம்
வெடித்திலன்; விம்மிப் பாரில்
    வீழ்ந்திலன்; வியர்த்தான் அல்லன்;
அடுத்து உள துன்பம் யாவும்
    அறிந்திலர் அமரரேயும்.
58

உரை
   
 
வானர வீரர்களின் நிலை

9031.சொற்றது கேட்டலோடும்,
    துணுக்குற, உணர்வு சோர,
நல்பெரு வாடை உற்ற
    மரங்களின் நடுக்கம் எய்தா,
கற்பகம் அனைய வள்ளல்
    கருங்கழல் கமலக் கால்மேல்,
வெற்பு இனம் என்ன வீழ்ந்தார்,
    வானர வீரர் எல்லாம்.
59

உரை
   
 
இராமன் உயிரற்றவன்போல் தரையில் சாய்தல்

9032.சித்திரத் தன்மை உற்ற
    சேவகன், உணர்வு தீர்ந்தான்,
மித்திரர் வதனம் நோக்கான்,
    இளையவன் வினவப் பேசான்,
பித்தரும் இறை பொறாத
    பேரபிமானம் என்னும்
சத்திரம் மார்பில் தைக்க,
    உயிரிலன் என்னச் சாய்ந்தான்.
60

உரை
   
 
இலக்குவனும் உணர்வழிந்து சாய்தல்

9033.நாயகன் தன்மை கண்டும்,
    தமக்கு உற்ற நாணம் பார்த்தும்,
ஆயின கருமம் மீள
    அழிவுற்ற அதனைப் பார்த்தும்,
வாயொடு மனமும் கண்ணும்
    யாக்கையும் மயர்ந்து சாம்பி,
தாயினை இழந்த கன்றின்,
    தம்பியும் தலத்தன் ஆனான்.
61

உரை
   
 
இந்திரசித்து சீதையைக் கொல்லுதலும் கூடும் என
வீடணன் ஐயுறுதல்

9034.தொல்லையது உணரத் தக்க
    வீடணன், துளக்கம் உற்றான்,
எல்லை இல் துன்பம் ஊன்ற,
    இடை ஒன்றும் தரெிகிலாதான்,
“வெல்லவும் அரிது; நாசம்
    இவள் தானால் விளைந்தது “ என்னா,
கொல்வதும் அடுக்கும் என்று
    மனத்தின் ஓர் ஐயம் கொண்டான்.
62

உரை
   
 
9035.சீத நீர் முகத்தின் அப்பி,
    சேவகன் மேனி தீண்டி,
போதம் வந்து எய்தற் பால
    யாவையும் புரிந்து, பொன்பூம்
பாதமும் கையும் மெய்யும்
    பற்றினன் வருடலோடும்,
வேதமும் காணா வள்ளல்
    விழித்தனன், விழியை மெல்ல.
63

உரை
   
 
இராமனைத் தேற்ற இலக்குவன் சொல்வது

9036.ஊற்றுவார் கண்ணீரோடும்
    உள் அழிந்து, உற்றது எண்ணி,
ஆற்றுவான் அல்லன் ஆகி,
    அயர்கின்றான் எனினும், ஐயன்,
மாற்றுவான் அல்லன்; மானம்
    உயிர் உக வருந்தும், என்னா,
தேற்றுவான் நினைந்து, தம்பி
    இவை இவை செப்பலுற்றான்.
64

உரை
   
 
9037.முடியும் நாள்தானே வந்து
    முற்றினால், துன்ப முந்நீர்
படியுமாம், சிறியோர் தன்மை;
    நினக்கு இது பழியிற்று ஆமால்;
குடியும் மாசு உண்டது என்னின்,
    அறத்தொடும் உலகைக் கொன்று,
கடியுமாறு அன்றிச் சோர்ந்து
    கழிதியோ, கருத்து இலார்போல்?
65

உரை
   
 
அறத்தினை வெறுத்துக் கூறுவது

9038.‘தையலை, துணை இலாளை
    தவத்தியை, தருமக் கற்பின்
தயெ்வதம் தன்னை, மற்று உன்
    தேவியை, திருவை, தீண்டி,
வெய்யவன் கொன்றான் என்றால்,
    வேதனை உழப்பது இன்னும்
உய்யவோ? கருணை யாலோ?
    தருமத்தோடு உறவும் உண்டோ?
66

உரை
   
 
உலகை வெறுத்துக் கூறுவது

9039.‘அரக்கர் என், அமரர் தாம் என்,
    அந்தணர் தாமென், அந்தக்
குருக்கள் என், முனிவர் தாம் என்,
    வேதத்தின் கொள்கை தான் என்;
செருக்கினர் வலியராகி,
    நெறிநின்றார் சிதைவர் என்றால்,
இருக்குமிது என்னாம், இம் மூன்று
    உலகையும் எரி மடாதே?
67

உரை
   
 
உலகையும் அறத்தையும் அழிக்காமல் சோர்ந்து வருந்துவது நன்றன்று என்பது (9040-9043)

9040.‘முழுவது ஏழுலகம் இன்ன
    முறைமுறை செய்கை மேல்மூண்டு,
எழுவதே! அமரர் இன்னம்
    இருப்பதே! அறம் உண்டு என்று
தொழுவதே! மேகம் மாரி
    சொரிவதே! சோர்ந்து நாம் வீழ்ந்து
அழுவதே! நன்று, நம்தம்
    வில்தொழில் ஆற்றல் அம்மா!
68

உரை
   
 
9041.‘புக்கு, இவ்வூர் இமைப்பின் முன்னம்
    பொடிபடுத்து, அரக்கன் போன
திக்கு எலாம் சுட்டு, வானோர்
    உலகு எலாம் தீர்த்து, தீரத்
தக்க நாம், கண்ணீர் ஆற்றி,
    தலைசுமந்து இருகை நாற்றி,
துக்கமே உழப்பம் என்றால்,
    சிறுமையாய்த் தோன்றும் அன்றே?
69

உரை
   
 
9042.‘அங்கும், இவ் அறமே நோக்கி,
    அரசு இழந்து, அடவி எய்தி
மங்கையை வஞ்சன் பற்ற,
    வரம்பு அழியாது வாழ்ந்தோம்;
இங்கும், இத் துன்பம் எய்தி
    இருத்துமேல், எளிமை நோக்கி,
பொங்குவன் தளையில் பூட்டி,
    ஆள் செய புகல்வர் அன்றே? ‘
70

உரை
   
 
9043.‘மன்றலம் கோதை யாளைத்
    தம்மெதிர் கொணர்ந்து, வாளின்
கொன்றவர் தம்மைக் கொல்லும்
    கோளிலர், நாணம் கூரப்
பொன்றினர் ‘என்பர், ஆவி
    போக்கினால்; பொதுமை பார்க்கின்,
அன்று இது கருமம்; என், நீ
    அயர்கின்றது, அறிவு இலார்போல்? ‘
71

உரை
   
 
சுக்கிரீவன் எழுந்து, அரக்கன் மார்பில்
குதிப்போம் எனல்

9044.அனையன இளவல் கூற,
    அருக்கன் சேய், அயர்கின்றான், ஓர்
கனவு கண்டனனே என்னக்
    கதும் என எழுந்து, காணும்
வினை இனி உண்டே? வல்லை,
    விளக்கின்வீழ் விட்டில் என்ன,
மனை உறை அரக்கன் மார்பில்
    குதித்தும், நாம்; வம்மின் ‘என்றான்.
72

உரை
   
 
அரக்கரைக் குலங்கேளாடு அழிப்போம் எனல்

9045.‘இலங்கையை இடந்து, வெங்கண்
    இராக்கதர் என்கின்றாரைப்
பொலங்குழை மகளிரோடும்,
    பால்நுகர் புதல்வரோடும்,
குலங்கேளாடு அடங்கக் கொன்று,
    கொடுந்தொழில் புரிதும்; நம்மேல்
விலங்குவார் என்னின், தேவர்
    விண்ணையும் மண்ணில் வீழ்த்தும்.
73

உரை
   
 
9046.‘அறம்கெடச் செய்தும் என்றே
    அமைந்தனம் ஆகின், ஐய!
புறம்கிடந்து உழைப்பது என்னே?
    பொருது இனிப் புவனம் மூன்றும்
கறங்கு எனத் திரிந்து, தேவர்
    குலங்களைக் கட்டும் ‘என்னா,
மறம்கிளர் வயிரத் தோளான்
    இலங்கைமேல் வாவல் உற்றான்.
74

உரை
   
 
மற்றை வானரரும் ஏகலுற்றபோது அனுமன் அயோத்திமேல் அரக்கன் சென்றதை உரைத்தல்

9047.மற்றைய வீரர் எல்லாம்
    மன்னனின் முன்னம் தாவி,
‘எற்றுதும், அரக்கர் தம்மை
    இல்லொடும் எடுத்து‘ என்று, ஏகல்
உற்றனர்; உறுதலோடும்,
    உணர்த்துவது உளது‘ என்று உன்னா,
சொற்றனன் அனுமன், வஞ்சன்
    அயோத்திமேல் போன சூழ்ச்சி.
75

உரை
   
 
அயோத்திமேல் அரக்கன் சென்றமை கேட்ட இராமன் சீதையை யிழந்த துயரை மறத்தல்

9048.தாயரும் தம்பி மாரும்
    தவம்புரி நகரம் சாரப்
போயினன் என்ற மாற்றம்
    செவித்தொளை புகுதலோடும்,
மேயின வடிவின் உற்ற
    வேதனை, கனைய வெந்த
தீயிடைத் தணிந்தது என்ன,
    சீதைபால் துயரம் தீர்ந்தான்.
76

உரை
   
 
துன்பத்தை மறந்த இராமன் அயோத்திக்கு விரையு நினைவால் கலங்குதல்

9049.அழுந்திய பாலின் வெள்ளத்து
    ஆழிநின்று, அனந்தர் நீங்கி
எழுந்தனன் என்ன, துன்பக்
    கடலின் நின்று ஏறி, ஆறாக்
கொழுந்துறு கோபத் தீயும்
    நடுக்கமும் மனத்தைக் கூட,
உழுந்து உருள் பொழுதும் தாழா
    விரைவினான், மறுக்கம் உற்றான்.
77

உரை
   
 
இராமன் அயோத்தியர்க்கு நேர்ந்துள்ள நிலைமை நினைந்து வருந்துதல் (9050-9053)

9050.தீரும் இச் சீதையோடும்
    என்கிலது அன்று என் தீமை
வேரொடும் முடிப்பதாக
    விளைந்தது; வேறும் இன்னும்
ஆரொடும் தொடரும் என்பது
    அறிந்திலேன்; இதனை ஐய
பேர் உறு கதியும் உண்டோ?
    எம்பியர் பிழைக்கின்றாரோ?
78

உரை
   
 
9051.நினைவதன் முன்னம் செல்லும்
    மானத்தில் நெடிது போனான்
வினை ஒரு கணத்தின் முற்றி
    மீள்கின்றான்; வினையேன் வந்த
மனைபொடி பட்டது அங்கு;
    மாண்டது தாரம் ஈண்டும்
எனையன தொடரும் என்பது
    உணர்கிலேன்! இறப்பும் காணேன்!
79

உரை
   
 
9052.தாதைக்கும் சடாயு வான
    தந்தைக்கும் தமியள் ஆய
சீதைக்கும் கூற்றம் காட்டித்
    தீர்ந்திலது ஒருவென் தீமை;
பேதைப்பெண் பிறந்து பெற்ற
    தாயர்க்கும் பிழைப்பு இலாத
காதல் தம்பியர்க்கும் ஊர்க்கும்
    நாட்டிற்கும் காட்டிற்று அன்றே.
80

உரை
   
 
9053.உற்றது ஒன்று உணரகில்லார்;
    உணர்ந்துவந்து உருத்தாரேனும்
வெற்றி வெம் பாசம் வீசி
    விசித்து அவன் கொன்று வீழ்த்தால்
மற்றை வெம் புள்ளின் வேந்தன்
    வருகிலன்; மருந்து நல்கக்
கொற்ற மாருதி அங்கு இல்லை;
    யாருயிர் கொடுக்கற் பாலார்?
81

உரை
   
 
விண்வழியே அயோத்திக்கு விரைய உபாயமுண்டோ என இராமன் கேட்டல்

9054.மாக ஆகாயம் செல்ல,
    வல்லையின் வயிரத் தோளாய்!
ஏகுவான் உபாயம் உண்டேல்,
    இயம்புதி, நின்ற எல்லாம்
சாக; மற்று இலங்கைப் போரும்
    தவிர்க; அச் சழக்கன் கண்கள்
காகம் உண்டதற்பின், மீண்டும்
    முடிப்பெனென் கருத்தை என்றான்.
82

உரை
   
 
இலக்குவன் பரதனது ஆற்றலைப் புகழ்தல் (9055-9056)

9055.அவ்விடத்து, இளவல் ‘ஐய!
    பரதனை அமரின் ஆர்க்க
எவ்விடற்கு உரியான் போன
    இந்திர சித்தே அன்று;
தவெ்விடத்து அமையின் மும்மை
    உலகமும் தீர்ந்து அறாவோ?
வெவிடர்க் கடலில் வைகல்
    கேள் என விளம்பல் உற்றான்.
83

உரை
   
 
9056.தீக்கொண்ட வஞ்சன் வீச,
    திசைமுகன் பாசம் தீண்ட
வீக்கொண்டு வீழ, யானோ
    பரதனும்? வெய்ய கூற்றைக்
கூய்க் கொண்டு குத்துண்டு அன்னான்
    குலத்தொடு நிலத்தன் ஆதல்,
போய்க் கண்டு கோடி அன்றே?
    என்றனன் புழுங்கு கின்றான்.
84

உரை
   
 
அனுமன் இராம இலக்குவரைத் தன்தோள்மேல் ஏற வேண்டுதல் (9057-9060)

9057.அக்கணத்து அனுமன் நின்றான்,
    ‘ஐய! என் தோளின் ஆதல்
கைத்துணைத் தலத்தின் ஆதல்,
    ஏறுதிர்; காற்றும் தாழ
இக்கணத்து அயோத்தி மூதூர்
    எய்துவென்; இடமுண்டு என்னின்
திக்கு அனைத்திலும் செல்வென்,
    யானே போய்ப் பகையும் தீர்வென்.
85

உரை
   
 
9058.‘எழுபது வெள்ளத்தோடும்
    இலங்கையை இடந்து, என் தோள்மேல்
தழுவுற வைத்து, “இன்று ஏகு “ என்று
    உரைத்தியேல், சமைவென்; தக்கோய்!
பொழுது இறை தாழ்ப்பது என்னோ?
    புட்பகம் போதல் முன்னம்,
குழுவொடும் கொண்டு போவென்;
    கணத்தினில் குதிப்பென், கூற்றின்.
86

   
 
9059.‘கொல்ல வந்தானை நீதி
    கூறினென், விலக்கிக் கொள்வான்,
சொல் அவம் சொல்லி நின்றேன்;
    கொன்றபின் துன்பம் என்னை
வெல்லவும் தரையில் வீழ்வுற்று
    உணர்ந்திலென்; விரைந்து போனான்;
இல்லையேல், உணரில், தீயோன்
    பிழைக்குமோ? இழுக்கம் உற்றேன்.
87

உரை
   
 
9060.‘மனத்தின்முன் செல்லும் மானம்
    போனது வழியது ஆக,
நினைப்பின்முன் அயோத்தி எய்தி,
    வருநெறி பார்த்து நிற்பேன்?
இனிச்சில தாழ்ப்பது என்னே?
    ஏறுதிர் இரண்டு தோளூம்,
புனத்துழாய் மாலை மார்பீர்!
    புட்பகம் போதல் முன்னம்.
88

உரை
   
 
அனுமன் தோள்மேல் இராம இலக்குவர் ஏறும்போது, வீடணன் தன் ஐயத்தைத் தரெிவித்தல் (9061-9062)

9061.‘ஏறுதும் ‘என்னா, வீரர்
    எழுதலும் இறைஞ்சி ஈண்டுக்
கூறுவது உளது; துன்பம்
    கோள் உறக் குலுங்கி, உள்ளம்
தேறுவது அரிது; செய்கை
    மயங்கினென்; திகைத்து நின்றேன்;
ஆறினென்; அதனை ஐய!
    மாயமென்று அயிர்க்கிறேனால்.
89

உரை
   
 
9062.‘பத்தினி தன்னைத் தீண்டிப்
    பாதகன் படுத்த போது,
முத்திறத்து உலகும் வெந்து
    சாம்பராய் முடியும் அன்றே?
அத்திறம் ஆனதேனும்,
    அயோத்திமேல் போன வார்த்தை
சித்திரம்; இதனை எல்லாம்
    தரெியலாம் சிறிது போழ்தின்.
90

உரை
   
 
சீதையின் இருப்பிடத்தைப் பார்த்தபின் முடிவு செய்யலாம் என்ற வீடணன் யோசனையை இராமன் உடன்பட வீடணன் செல்லுதல்

9063.‘இமை இடை யாக யான்சென்று,
    ஏந்திழை இருக்கை எய்தி,
அமைவுற நோக்கி, உற்றது
    அறிந்துவந்து அறைந்த பின்னர்ச்
சமைவது செய்வது ‘என்று
    வீடணன் விளம்ப, ‘தக்கது;
அமைவது; ‘என்று இராமன் சொன்னான்;
    அந்தரத்து அவனும் சென்றான்.
91

உரை
   
 
9064.வண்டினது உருவம் கொண்டான்,
    மானவன் மனத்தின் போனான்;
தண்டலை இருக்கை தன்னைப்
    பொருக்கெனச் சார்ந்து, தானே
கண்டனன் என்ப மன்னோ,
    கண்களால் கருத்தால், ‘ஆவி
உண்டு, இலை ‘என்ன நின்ற
    ஓவியம் ஒக்கின்றாளை.
92

உரை
   
 
9065.‘தீர்ப்பது துன்பம், யான் என்
    உயிரொடு‘ என்று உணர்ந்த சிந்தை
பேர்ப்பன செஞ்சொலாள், அத்
    திரிசடை பேசப் பேர்ந்தாள்,
கார்ப்பெரு மேகம் வந்து
    கடை யுகம் கலந்தது அன்ன
ஆர்ப்பொலி அமிழ்தம் ஆக,
    ஆருயிர் ஆற்றினாளை.
93

உரை
   
 
சீதையைக் கொன்றான் என்பது வஞ்சனை என்பதை உணர்ந்து மகிழ்ந்த வீடணன், இந்திரசித்து நிகும்பலை வேள்வியான் என்பதை உணர்தல்

9066.வஞ்சனை என்பது உன்னி,
    வான் உயர் உவகை வைகும்
நெஞ்சினன் ஆகி உள்ளம்
    தள்ளுறல் ஒழிந்து நின்றான்,
‘வெஞ்சிலை மைந்தன் போனான்.
    நிகும்பலை வேள்வியான் ‘என்று,
எஞ்சல் இல் அரக்கர் சேனை
    எழுந்து எழுந்து ஏகக் கண்டான்.
94

உரை
   
 
இந்திரசித்தின் சூழ்ச்சியிதுவென உணர்ந்து வீடணன் இராமனை அடைதல்

9067.‘வேள்விக்கு வேண்டற்பால
    கலப்பையும் விறகும் நெய்யும்
வாழ்விக்கும் தாழ்வில் ‘என்னும்
    வானவர் மறுக்கம் கண்டான்,
‘சூழ்வித்த வண்ணம், ஈதோ?
    நன்று; ‘ எனத் துணிவு கொண்டான்,
தாழ்வித்த முடியன், வீரன்
    தாமரைச் சரணம் சார்ந்தான்.
95

உரை
   
 
வீடணன் தான் கண்டதை இராமனுக்குச் சொல்வது

9068.‘இருந்தனள், தேவி; யானே
    எதிர்ந்தனென், என்கண் ஆர;
அருந்ததி கற்பினாளுக்கு
    அழிவு உண்டோ? அரக்கன் நம்மை
வருந்திட மாயம் செய்து,
    நிகும்பலை மருங்கு புக்கான்;
முருங்கு அழல் வேள்வி முற்றி,
    முதல் அற முடிக்க மூண்டான். ‘
96

உரை
   
 
வானரசேனையின் ஆரவாரம்

9069.என்றலும், ‘உலகம் ஏழும்
    ஏழுமாத் தீவும், எல்லை
ஒன்றிய கடல்கள் ஏழும்
    ஒருங்கு எழுந்து ஆர்க்கும் ஓதை
அன்று‘ என ‘ஆகும் ‘என்ன
    அமரரும் அயிர்க்க, ஆர்த்து,
குன்று இனம் இடியத் துள்ளி,
    ஆடின குரங்கின் கூட்டம்.
97

உரை