9070.வீரனும் ஐயம் தீர்ந்தான்;
    வீடணன் தன்னை மெய்யோடு
ஆர்வமும் உயிரும் ஒன்ற
    அழுந்துறத் தழுவி, ‘ஐய!
தீர்வது பொருேளா, துன்பம்?
    நீ உளை; தயெ்வம் உண்டு;
மாருதி உளன்; நாம் செய்த
    தவம் உண்டு; மறையும் உண்டால்.
1

உரை
   
 
இலக்குவனுடன் சென்று இந்திரசித்தின் வேள்வியைச் சிதைத்தற்கு விடைதரும்படி வீடணன் இராமனை வேண்டுதல்

9071.என்றலும், இறைஞ்சி, ‘யாகம்
    முற்றுமேல், யாரும் வெல்லார்;
வென்றியும் அரக்கர் மேற்றே;
    விடை அருள்; இளவலோடும்
சென்று, அவன் ஆவி உண்டு,
    வேள்வியும் சிதைப்பென் ‘என்றான்;
‘நன்று, அது புரிதிர் ‘என்னா,
    நாயகன் நவில்வது ஆனான்.
2

உரை
   
 
இராமன் இலக்குவனைத் தழுவி, இந்திரசித்துடன் செய்யும் போரில் நடந்துகொள்ள வேண்டிய முறையினை அறிவுறுத்தல்

9072.தம்பியைத் தழுவி, ‘ஐய!
    தாமரைத் தவிசின் மேலான்
வெம்படை தொடுக்கும் ஆயின்,
    விலக்குவது அன்றி, வெய்தின்
அம்பு நீ துரப்பாய் அல்லை;
    அனையது துரந்த காலை,
உம்பரும் உலகும் எல்லாம்
    விளியும்; அஃது ஒழிதி ‘என்றான்.
3

உரை
   
 
9073.முக்கணான் படையும், ஆழி
    முதலவன் படையும், முன்நின்று
ஒக்கவே விடுமே; விட்டால்,
    அவற்றையும் அவற்றால் ஓயத்
தக்கவாறு இயற்றி, மற்று உன்
    சிலைவலித் தருக்கினாலே
புக்கவன் ஆவி கொண்டு,
    போதுதி புகழின் மிக்கோய்!
4

உரை
   
 
9074.‘வல்லன மாய விஞ்சை
    வகுத்தன அறிந்து, மாள,
கல்லுதி, தருமம் என்னும்
    கண் அகன் கருத்தைக் கண்டு;
பல் பெரும் போரும் செய்து
    வருந்தலை; அற்றம் பார்த்து,
கொல்லுதி, அமரர் தங்கள்
    கூற்றினைக் கூற்றம் ஒப்பாய்!
5

உரை
   
 
9075.‘பதைத்து அவன், வெம்மை ஆடி,
    பல்பெரும் பகழி மாரி
விதைத்தன விதையா நின்று
    விலக்குதி; மெலிவு மிக்கால்,
உதைத்த வன் சிலையின் வாளி
    மருமத்தைக் கழிய ஓட்டி,
வதைத் தொழில் புரிதி சாப
    நூல்நெறி மறப்பிலாதாய்!
6

உரை
   
 
9076.‘தொடுப்பதன் முன்னம், வாளி
    தொடுத்து, அவை துறைகள் தோறும்
தடுப்பன தடுத்தி; எண்ணம்
    குறிப்பினால் உணர்ந்து, தக்க
கடுப்பினும், அளவு இலாத
    கதியினும், கணைகள் காற்றின்
விடுப்பன அவற்றை நோக்கி
    விடுதியால் விரைவு இலாதாய்!
7

உரை
   
 
இலக்குவனுக்கு இராமன் திருமாலின் வில்லும் கவசம் முதலியனவும் அளித்தல்

9077.என்பன முதல் உபாயம்
    யாவையும் இயம்பி, ஏற்ற
முன்பனை நோக்கி, ‘ஐய!
    மூவகை உலகும் தான் ஆய்,
தன் பெருந் தன்மை தானும்
    அறிகிலா ஒருவன் தாங்கும்
வன்பெருஞ் சிலை ஈது ஆகும்;
    வாங்குதி; வலமும் கொள்வாய்.
8

உரை
   
 
9078.‘இச் சிலை இயற்கை மேல் நாள்
    தமிழ்முனி இயம்பிற்று எல்லாம்
அச்சு எனக் கேட்டாய் அன்றே?
    ஆயிரம் மௌலி அண்ணல்
மெய்ச் சிலை விரிஞ்சன் தானே
    வேள்வியில் வேட்டுப் பெற்ற
கைச் சிலை கோடி ‘என்று
    கொடுத்தனன், கவசத் தோடும்.
9

உரை
   
 
9079.ஆணி, இவ் உலகுக்கு ஆன
    ஆழியான், புறத்தின் ஆர்த்த
தூணியும் கொடுத்து, மற்றும்
    உறுதிகள் பலவும் சொல்லி,
தாணுவின் தோற்றத்தானைத்
    தழுவினன், தழுவலோடும்,
சேண் உயர் விசும்பில் தேவர்,
    ‘தீர்ந்தது எம் சிறுமை, என்றார்.
10

உரை
   
 
போர்க்கோலங்கொண்ட இலக்குவன் இராமன்பால் விடை பெற்று வானரத்தலைவர்களுடன் நிகும்பலை நோக்கிச் செல்லுதல்

9080.மங்கலம் தேவர் கூற
    வானவர் மகளிர் வாழ்த்தி,
பங்கம் இல் ஆசி கூறி,
    பல ஆண்டு இசை பரவப் பாகத்
திங்களின் மௌலி அண்ணல்
    திரிபுரம் தீக்கச் சீறிப்
பொங்கினன் என்ன, தோன்றிப்
    பொலிந்தனன் போர்மேல் போவான்.
11

உரை
   
 
9081.‘மாருதி முதல்வர் ஆய
    வானரத் தலைவரோடும்,
வீர! நீ சேறி, என்று
    விடை கொடுத்தருளும் வேலை,
ஆரியன் கமல பாதம்
    அகத்தினும் புறத்துமாக,
சீரிய சென்னி சேர்த்து,
    சென்றனன், தருமச் செல்வன்.
12

உரை
   
 
9082.பொலங் கொண்டல் அனைய மேனிப்
    புரவலன், பொருமி, கண்ணீர்
நிலம் கொண்டு படர நின்று,
    நெஞ்சு அழிவானை, தம்பி
வலம் கொண்டு, வயிர வல்வில்
    இடம் கொண்டு, வஞ்சன் மேலே,
சலம் கொண்டு கடிது சென்றான்,
    ‘தலைகொண்டு வருவென் ‘என்றே.
13

உரை
   
 
இலக்குவன் பிரியத் தனித்து நிற்கும் இராமனது நிலை

9083.தான் பிரிகின்றிலாத தம்பி
    வெங் கடுப்பின் செல்வான்,
ஊன் பிரிகின்றிலாத
    உயிர் என, மறைதலோடும்,
வான் பெருவேள்வி காக்க,
    வளர்கின்ற பருவ நாளில்
தான் பிரிந்து ஏகக் கண்ட
    தயரதன் தன்னை ஒத்தான்.
14

உரை
   
 
நிகும்பலையை அடைந்த வானரர்கள் அரக்கர் சேனையைக் காணுதல்

9084.சேனாபதியே முதல் சேவகர்தாம்
ஆனார் நிமிர் கொள்ளி கொள் அங்கையினார்
கான் ஆர் நெறியும் மலையும் கழியப்
போனார்கள் நிகும்பலை புக்கனரால்.
15

உரை
   
 
9085.உண்டாயது ஓர் ஆல் உலகுள் ஒருவன்
கொண்டான் உறைகின்றது போல் குலவி
விண்தானும் விழுங்க விரிந்ததனைக்
கண்டார் அவ் வரக்கர் கருங்கடலை.
16

உரை
   
 
9086.நேமிப் பெயர் யூகம் நிரைத்து நெடுஞ்
சேமத்தது நின்றது தீவினையோன்
ஓமம் அத்து அனல் வெவ் வடவைக்கு உடனே
பாமக்கடல் நின்றது ஓர் பான்மையதை.
17

உரை
   
 
9087.கார் ஆயின காய் கரி தேர் பரிமா
தார் ஆயிரகோடி தழீஇயதுதான்
நீர் ஆழியொடு ஆழி நிறீஇயதுபோல்
ஓர் ஆயிரம் யோசனை உள்ளதனை.
18

உரை
   
 
9088.பொன் தேர் பரிமா கரிமா பொருதார்
எற்றே படைவீரரை எண்ணிலமால்
உற்று ஏவிய யூகம் உலோகமுடன்
சுற்று ஆயிரம் ஊடு சுலாயதனை.
19

உரை
   
 
9089.வண்ணக் கரு மேனியின் மேல் மழை வாழ்
விண்ணைத் தொடு செம்மயிர் வீசுதலால்
அண்ணல் கரியான் அனல் அம்பு அட வெம்
பண்ணைக்கடல் போல்வது ஓர் பான்மையதை.
20

உரை
   
 
ஆரவாரமின்றி வேள்விக் களத்தைக் காத்துநின்ற அரக்கர் சேனையைக் கண்டு வானரர் ஆரவாரித்தல்

9090.வழங்காசிலை நாணொலி வானில் வரும்
பழங் கார்முகம் ஒத்த; பணைக்குலமும்
தழங்கா கடல் வாழ்வனபோல்; தகைசால்
முழங்கா முகில் ஒத்தன மா முரசே.
21

உரை
   
 
9091.வலியான் அ(வ்)இராகவன் வாய்மொழியால்
சலியாத நெடுங் கடல்தான் எனலாய்
ஒலியாது உறுசேனையை உற்று ஒருநாள்
மெலியாதவர் ஆர்த்தனர் விண்கிழிய.
22

உரை
   
 
அரக்கர் சேனையுடன் வானரர் பொருதல்

9092.ஆர்த்தார் எதிர் ஆர்த்த அரக்கர்குலம்;
போர்த்தார் முரசங்கள் புடைத்த புகத்
தூர்த்தார் இவர் கல் படை; சூல் முகிலின்
நீர்த்தாரையின் அம்பு அவர் நீட்டினரால்.
23

உரை
   
 
9093.மின்னும் படை வீசினர் வெம்படைமேல்
பன்னும் கவிசேனை படிந்து உளதால்
துன்னும் துறைநீர் நிறைவாவி தொடர்ந்து
அன்னங்கள் படிந்தனவாம் எனவாய்.
24

உரை
   
 
9094.வில்லும் மழுவும் எழுவும் மிடலோர்
பல்லும் தலையும் உடலும் படியில்
செல்லும்படி சிந்தின சென்றனவால்
கல்லும் மரமும் கரமும் கதுவ.
25

உரை
   
 
9095.வாலும் தலையும் உடலும் வயிறும்
சாலும் கரமும் தரை கண்டனவால்
கோலும் மழுவும் எழுவும் கொழுவும்
வேலும் கணையும் வளையும் விசிற.
26

உரை
   
 
வேள்வியைச் சிதைக்காமல் காலம் நீட்டித்தலாகாது என வீடணன் இலக்குவனுக்கு உரைத்தல்

9096.வென்றிச் சிலை வீரனை வீடணன் ‘நீ
நின்று இக்கடை தாழுதல் நீதியதோ?
சென்று இக்கடி வேள்வி சிதைத்திலையேல்
என்று இக்கடல் வெல்லுதும் யாம்? ‘எனலும்
27

உரை
   
 
இலக்குவன் தேவர் முதலியோர் வியந்து காண அரக்கர் சேனையை யழித்தல்

9097.தேவ அசுரரும் திசை நான்முகனும்
மூவாமுதல் ஈசனும் மூஉலகின்
கோ ஆகிய கொற்றவனும் முதலோர்
மேவாதவர் இல்லை விசும்பு உறைவோர்.
28

உரை
   
 
9098.பல்லார்படை நின்றது; பல் அணியாய்
பல்லார்படை நின்றது; பல் பிறைவெண்
பல்லார்படை நின்றது; பல்லியமும்
பல்லார்படை நின்றது பல்படையே.
29

உரை
   
 
9099.அக் காலை இலக்குவன் அப் படையுள்
புக்கான் அயில் அம்பு பொழிந்தனனால்;
உக்கார் அவ் வரக்கர் தம் ஊர் ஒழிய
புக்கார் நமனார் உறை தனெ்புலமே.
30

உரை
   
 
9100.தேறாமத மால்கரி தேர் பரிமா
நூறாயிர கோடியின் நூழில்பட
சேறு ஆர் குருதிக் கடலில் திடராய்க்
கூறு ஆய் உக ஆவி குறைத்தனனால்.
31

உரை
   
 
அழிவுற்ற அரக்கர் சேனைகளின் தோற்றம்

9101.வாமக் கரிதான் அழி வார்குழியின்
தீ மொய்த்த அரக்கர்கள் செம்மயிரின்
தாமத் தலை உக்க தழங்கு எரியின்
ஓமத்தை நிகர்ப்ப உலப்பு இலவால்.
32

உரை
   
 
9102.சிலையின் கணை ஊடு திறந்தன திண்
கொலை வெங்களி மால்கரி செம்புனல் கொண்டு
உலைவு இன்று கிடந்தன ஒத்தனவால்
மலையும் சுனையும் வயிறும் உடலும்.
33

உரை
   
 
9103.வில் தொத்திய வெங்கணை எண்கின் வியன்
பல் தொத்திய போல் படியப் பலவும்
முற்றச் சுடர் மின்மினி மொய்த்துள வன்
புற்று ஒத்த முடித்தலை பூழியன.
34

உரை
   
 
9104.படுமாரி நெடுங் கணை பாய்தலினால்
விடுமாறு உதிரம் புனல் வீழ்வனவால்
தடுமாறு நெடுங் கொடி தாழ்கடல்வாய்
நெடு மா முகில் வீழ்வ நிகர்த்தனவால்.
35

உரை
   
 
9105.மின் ஆர்கணை தாள் அற வீச விழுந்து
அன்னார் உதிரத்துள் அழுந்துதலால்
ஒன்னார் முழு வெண் குடை ஒத்தனவால்
செந் நாகம் விழுங்கிய திங்களினை.
36

உரை
   
 
9106.கொடு நீள் கரி கையொடு தாள்குறைய
படுநீள் குருதிப் படர்கின்றனவால்
அடு நீள் உயிர் இன்மையின் ஆழ்கிலவால்
நெடு நீரின் இடங்கர் நிகர்த்தனவால்.
37

உரை
   
 
9107.கரி உண்ட களத்திடை உற்றன கார்
நரி உண்டி உகப்பன நட்டனவால்;
இரி உண்டவர் இன் இயம் இட்டிடலால்
மரி உண்ட உடல் பொறை மானினவால்.
38

உரை
   
 
9108.வாயில் கனல் வெங்கடு வாளி இனம்
பாய பருமம் குலம் வேவனவால்
வேய் உற்ற நெடுங்கிரி மீவெயில் ஆம்
தீ உற்றன ஒத்த சினக் கரியே.
39

உரை
   
 
9109.அலைவேலை அரக்கரை எண்கு அணுகி
தலைமேல் முடியைத் தரை தள்ளுதலால்
மலைமேல் உயர் புற்றினை வள் உகிரால்
நிலைபேர மறிப்ப நிகர்த்தனவால்.
40

உரை
   
 
9110.மா வாளிகள் மா மழைபோல் வரலால்
மா ஆளிகள் போர் தறெு மா மறவோர்
மா ஆளிகள் வன் தலையின்தலை வாழ்
மா ஆளிகேளாடு மறிந்தனரால்.
41

உரை
   
 
9111.அங்கம் கிழியத் துணிபட்டதனால்
அங்கு அங்கு இழிகுற்ற அமர்த் தலைவர்
அங்கம் கழி செம்புனல் பம்ப அலைந்து
அங்கங்கள் நிரம்பி அலம்பியதால்.
42

உரை
   
 
9112.வன்தானையை வார்கணை மாரியினால்
முன் தாதை ஒர் தேர்கொடு மொய் பலதேர்
பின்றா எதிர் தானவர் பேர் அணியைக்
கொன்றான் என எய்து குறைத்தனனால்.
43

உரை
   
 
இலக்குவனது போரினால் இந்திரசித்தின் யாகம் சிதைதல்

9113.மலைகளும் மழைகளும் வான மீன்களும்
அலைய வெங்கால் பொர அழிந்தவாம் என
உலைகொள் வெங்கனல் பொதி ஓமம் உற்றவால்
தலைகளும் உடல்களும் சரமும் தாவுவ.
44

உரை
   
 
9114.வாரணம் அனையவன் துணிப்ப வான் படர்
தார் அணி முடிப்பெருந் தலைகள் தாக்கலால்
ஆரண மந்திரம் அமைய ஓதிய
பூரண மணிக் குடம் உடைந்து போயதால்.
45

உரை
   
 
9115.தாறுகொள் மதகரி சுமந்து தாமரை
சீறிய முகத் தலை உருட்டி செந்நிறத்து
ஊறுகள் சொரிந்த பேர் உதிரத்து ஓங்கு அலை
ஆறுகள் எழும் கனல் அவியச் சென்றவால்.
46

உரை
   
 
9116.தரெிகணை விசும்பிடைத் துணித்த செம்மயிர்
வரிகழல் அரக்கர்தம் தடக்கை வாெளாடும்
உரும் என விழுதலின் அனலிக்கு ஓக்கிய
எருமைகள் மறிந்தன; மறியும் ஈர்ந்தவால்.
47

உரை
   
 
9117.அம்கடம் கழிந்த பேர் அருவிக் குன்றின்நின்று
அம்கடம் கழிந்திலர் அழிந்த ஆடவர்
அங்கு அடங்கலும் படர்குருதி ஆழியின்
அங்கு அடங்கினர் தொடர்பகழி அஞ்சினார்.
48

உரை
   
 
9118.கால் தலத்தொடு துணிந்து அழிய காய்கதிர்க்
கோல் தலைத்தலை உற மறுக்கம் கூடினார்
வேல் தலத்து ஊன்றினார் துளங்கு மெய்யினார்
நாறு அலைக் குடரினர் பலரும் நண்ணினார்.
49

உரை
   
 
9119.பொங்கு உடல் துணிந்த தம் புதல்வர்ப் போக்கிலார்
தொங்கு உடல் தோள்மிசை இருந்து சோர்வுற
அங்கு உடல் தம்பியைத் தழுவி அண்மினார்
தம் குடர் முதுகு இடைச் சொரியத் தள்ளுவார்.
50

உரை
   
 
9120.மூடிய நெய்யொடு நறவு முற்றிய
சாடிகள் பொரியொடு தகர்ந்து தள்ளுற
கோடிகள் பலபடு குழாம் குழாங்களாய்
ஆடின அறுகுறை அறுக்கும் ஆக்கைகள்.
51

உரை
   
 
இலக்குவன் அரக்கர் சேனையை
விரைந்து அழித்தல்

9121.கால் என கடு என கலிங்கக் கம்மியர்
நூல் என உடற் பொறை தொடர்ந்த நோய் என
பால் உறு பிரை என கலந்து பல்முறை
வேல் உறு சேனையைத் துணித்து வீழ்த்தினான்.
52

உரை
   
 
தன் சேனைகள் நிலைகுலைந் தழிதலை
இந்திரசித்து காணுதல்

9122.கண்டனன் திசைதொறும் நோக்கி கண் அகல்
மண்தலம் மறிகடல் அன்ன மாப் படை
விண்டு எறி கால்பொர மறிந்து வீற்று உறும்
தண்டலை ஆம் எனக் கிடந்த தன்மையே.
53

உரை
   
 
9123.மிடலின் வெங் கடகரிப் பிணத்தின் விண்தொடும்
திடலும் வெம் புரவியும் தேரும் சிந்திய
உடலும் வன் தலைகளும் உதிர்ந்து ஓங்கு அலைக்
கடலும் அல்லால் இடை ஒன்றும் கண்டிலன்.
54

உரை
   
 
9124.நூறு நூறாயிர கோடி நோன் கழல்
மாறுபோர் அரக்கரை ஒருவன் வாள்கணை
கூறு கூறு ஆக்கிய குவையும் சோரியின்
ஆறுமே அன்றி வேறு அரக்கன் கண்டிலன்.
55

உரை
   
 
9125.நஞ்சினும் வெய்யவர் நடுங்கி நா உலர்ந்து
அஞ்சினர் சிலர்சிலர் அடைகின்றார்; சிலர்
வெஞ்சின வீரர்கள் மீண்டிலாதவர்
துஞ்சினர் துணை இலர் எனத் துளங்கினார்.
56

உரை
   
 
இந்திரசித்து தான் தொடங்கிய வேள்வியில் ஓமகுண்டத்துத் தீ அவிந்தமை கண்டு மனம் வெதும்புதல்

9126.ஓம வெங் கனல் அவிந்து உழைக் கலப்பையும்
காமர் வண் தருப்பையும் பிறவும் கட்டு அற
வாம மந்திரத் தொழில் மறந்து நந்துறு
தூம வெங்கனல் எனப் பொலிந்து தோன்றினான்.
57

உரை
   
 
இந்திரசித்தினைக் காவலாகச் சூழ்ந்து நின்ற அரக்கர் சேனையினை வானரசேனை எதிர்த்து அடைதல்

9127.அக்கணத்து அடுகளத்து அப்பு மாரியால்
உக்கவர் ஒழிதர உயிர் உேளார் எலாம்
தொக்கனர் அரக்கனைச் சூழ்ந்து சுற்றுற
புக்கது கவிப்பெருஞ் சேனைப் போர்க்கடல்.
58

உரை
   
 
இந்திரசித்து தன் சேனைகள் அழிந்தமையினையும் அதுகண்டு முனிவர் முதலியோர் கைகுலைப்பதனையும் கண்டு தனது நியமம் குலைந்து வருந்துதல்

9128.ஆயிரம் மலர் உடை ஆழி மாப் படை
‘ஏ ‘எனும் மாத்திரத்து இற்ற கொற்றமும்
தூயவன் சிலைவலித் தொழிலும் துன்பமும்
மேயின வெகுளியும் கிளர வெம்பினான்.
59

உரை
   
 
9129.மெய் குலைந்து இருநில மடந்தை விம்முற
செய் கொலைத் தொழிலையும் செய்கை தீயவர்
மொய் குலத்து இறுதியும் முனிவர் கண்டனர்
கை குலைக்கின்றதும் கண்ணின் நோக்கினான்.
60

உரை
   
 
9130.மானமும் பாழ்பட வகுத்த வேள்வியின்
மோனமும் பாழ்பட முடிவு இலா முரண்
சேனையும் பாழ்பட சிந்தை மந்திரத்து
ஏனையும் பாழ்பட இனைய செப்பினான்.
61

உரை
   
 
9131.‘வெள்ளம் ஐ ஐந்துடன் விரிந்த சேனையின்
உள்ளது அக்குரோணி ஈர் ஐந்தொடு ஓயுமால்;
எள்ள அரு வேள்வி நின்று இனி இயற்றுதல்
பிள்ளைமை; அனையது சிதைந்து பேர்ந்ததால்.
62

உரை
   
 
9132.‘தொடங்கிய வேள்வியின் தூம வெம் கனல்
அடங்கியது அவிந்துளது அமையுமாம் அன்றே?
இடம்கொடு வெம்செரு வென்றி இன்று எனக்கு
அடங்கியது என்பதற்கு ஏது ஆகுமால்.
63

உரை
   
 
9133.‘அங்கு அது கிடக்க; நான் மனிதர்க்கு ஆற்றலென்
‘சிங்கினன் என்பது ஓர் எளிமை; தேய்வுற
இங்கு நின்று இவை இவை நினைக்கிலேன்; இனி
பொங்குபோர் ஆற்ற என் தோளும் போனவோ?
64

உரை
   
 
9134.“‘மந்திர வேள்விபோய் மடிந்ததாம் ” எனச்
சிந்தையின் நினைந்து நான் வருந்தும் சிற்றியல்
அந்தரத்து அமரர்தாம் “மனிதற்கு ஆற்றலன்
இந்திரற்கே இவன் வலி “ என்று ஏசவோ?
65

உரை
   
 
அப்பொழுது அரக்கர்சேனை வானர சேனையினால் நிலைகுலைதல்

9135.என்று அவன் பகர்கின்ற எல்லையின் இருங்
குன்றொடு மரங்களும் பிணத்தின் கூட்டமும்
பொன்றின கரிகளும் கவிகள் போக்கின;
சென்றன பெரும்படை இரிந்து சிந்தின.
66

உரை
   
 
9136.ஒதுங்கினர் ஒருவர்கீழ் ஒருவர் புக்குறப்
பதுங்கினர் நடுங்கினர்; பகழி பாய்தலின்
பிதுங்கினர் குடர் உடல் பிளவு பட்டனர்.
மதம் புலர் களிறு எனச் சீற்றம் மாறினார்.
67

உரை
   
 
9137.வீரன் வெம் கணையொடும் கவிகள் வீசிய
கார்வரை அரக்கர் வெம் கடலின் வீழ்ந்தன
போர்நெடுங் கால்பொர பொழியும் மாமழைத்
தாரையும் மேகமும் படிந்த தன்மைய.
68

உரை
   
 
இந்திரசித்துக்குச் சினம் மிகும்படி அனுமன் அவனை யடைந்து எள்ளி நகையாடுதல்

9138.திரைக் கடல் பெரும்படை இரிந்து சிந்திட
மரத்தினின் புடைத்து அடர்த்து உருத்த மாருதி
அரக்கனுக்கு அணித்து என அணுகி அன்னவன்
வரக் கதம் சிறப்பன மாற்றம் கூறுவான்.
69

உரை
   
 
9139..‘நான் உனை இரந்துகூறும்
    நயமொழி ஒன்றும் கேளாய்;
சானகி தன்னை வாளால்
    தடிந்ததோ? தனதன் தந்த
மானம்மேல் சேனையோடும்
    வடதிசை நோக்கிமீது
போனதோ? கோடிகோடி
    வஞ்சமும் பொய்யும் வல்லாய்!
70

   
 
9140.‘தடம் திரைப் பரவை அன்ன
    சக்கர யூகம் புக்குக்
கிடந்தது கண்டது உண்டோ?
    நாண் ஒலி கேட்டிலோமே,
தொடர்ந்து போய் அயோத்தி
    தன்னைக் கிளையோடும் துணிய நூறி
நடந்தது எப்பொழுது? வேள்வி
    முடிந்ததே? கருமம் நன்றே?
71

உரை
   
 
9141.ஏந்து அகல் ஞாலம் எல்லாம்
    இனிது உறைந்து இவரத் தாங்கும்
பாந்தளின் பெரிய திண்தோள்
    பரதனை பழியின் தீர்ந்த
வேந்தனை, கண்டு நீர் நும்
    வில்வலி காட்டி மீண்டு,
போந்தது, எவ் அளவை நன்றே,
    போனமை பொருந்திற்று அன்றே.
72

உரை
   
 
9142.‘அம்பரத்து அமைந்த வல்வில்
    சம்பரன் ஆவி வாங்கி
உம்பருக்கு உதவி செய்த
    ஒருவனுக்கு உதயஞ் செய்த
நம்பியை முதல்வர் ஆன
    மூவர்க்கு நால்வர் ஆன
தம்பியைக் கண்டு, நின்தன்
    தனு வலம் காட்டிற்று உண்டோ?
73

உரை
   
 
9143.‘தீ ஒத்த வயிர வாளி
    உடல் உற, சிவந்த சோரி
காயத்தும், செவியின் ஊடும்,
    வாயினும், கண்கள் ஊடும்
பாய, போய், இலங்கை புக்கு,
    வஞ்சனை பரப்பச் செய்யும்
மாயப் போர் ஆற்றல் எல்லாம்
    இன்றொடு மடியும் அன்றே!
74

உரை
   
 
9144.‘பாசமோ, மலரின் மேலோன்
    பெரும் படைக் கலமோ, பண்டை
ஈசனார் படையோ, மாயோன்
    நேமியோ, யாதோ, இன்னும்
வீச நீர் விரும்புகின்றீர்?
    அதற்கு நாம் வெருவி, சாலக்
கூசினோம்; போதும் போதும்;
    கூற்றினார் குறுக வந்தார்.
75

உரை
   
 
9145.‘வரங்கள் நீர் உடையவாறும்,
    மாயங்கள் வல்லவாறும்,
பரம் கொள் வானவரின் தயெ்வப்
    படைக்கலம் படைத்தவாறும்
உரங்கேளாடு உன்னி அன்றோ,
    உம்மை நாம் உயிரினோடும்
சிரம் கொளத் துணிந்தது? அன்னது
    உண்டு; அது திறம்பினோமோ?
76

உரை
   
 
9146.‘விடம் துடிக்கின்ற கண்டத்து
    அண்ணலும், விரிஞ்சன் தானும்,
படம் துடிக்கின்ற நாகப்
    பாற்கடல் பள்ளியானும்,
சடம் துடிக்கிலராய் வந்து
    தாங்கினும், சாதல் திண்ணம்;
இடம் துடிக்கின்றது உண்டே?
    இருத்திரோ? இயம்புவீரே!
77

உரை
   
 
9147.“கொல்வென் “ என்று, உன்னைத்தானே
    குறித்து ஒரு சூளும் கொண்ட
வில்லி, வந்து அருகு சார்ந்து, உன்
    சேனையை முழுதும் வீட்டி,
“வல்லையேல் வா வா “ என்று
    விளிக்கின்றான்; வரிவில் நாணின்
ஒல் ஒலி, ஐய! செய்யும்
    ஓமத்துக்கு உறுப்பு ஒன்று ஆமோ?
78

உரை
   
 
9148.‘மூவகை உலகும் காக்கும்
    முதலவன் தம்பி பூசல்
தேவர்கள், முனிவர், மற்றும்
    திறத்திறத்து உலகம் சேர்ந்தார்,
யாவரும் காண நின்றார்;
    இனி இறை தாழ்ப்பது என்னோ?
சாவது சரதம் அன்றோ? ‘
    என்றனன், தருமம் காப்பான்.
79

உரை
   
 
இந்திரசித்து வெகுண்டு அனுமன் முதலியோரை இகழ்ந்துரைத்தல்

9149.அன்ன வாசகங்கள் கேளா,
    அனல் உயிர்த்து, அலங்கல் பொன் தோள்
மின் உக, பகு வாய் ஊடு
    வெயில் உக, நகைபோய் வீங்க,
‘முன்னரே வந்து இம் மாற்றம்
    மொழிகின்றீர் ‘மொழிந்த மாற்றம்
என்னதோ நீயிர் என்னை
    இகழ்ந்தது என்று இனைய சொன்னான்.
80

உரை
   
 
9150.மூண்ட போர்தோறும் பட்டு
    முடிந்தநீர், முறையின் தீர்ந்து
மீண்டபோது அதனை எல்லாம்
    மறத்திரோ? விளிதல் வேண்டி
‘ஈண்டவா ‘என்னா நின்றீர்;
    இத்தனை பேரும் பட்டு
மாண்டபோது, உயிர் தந்தீயும்
    மருந்து வைத்தனையோ மான?
81

உரை
   
 
9151.‘இலக்குவன் ஆக, மற்றை
    இராமனே ஆக, ஈண்டு
விலக்குவர் எல்லாம் வந்து
    விலக்குக; குரங்கின் வெள்ளம்
குலக்குலம் ஆக மாளும்
    கொற்றமும், மனிதர் கொள்ளும்
அலக்கணும், முனிவர் தம்மோடு
    அமரரும் காண்பர் அன்றே.
82

உரை
   
 
9152.‘யானுடை வில்லும், என் பொன்
    தோள்களும், இருக்க இன்னும்
ஊனுடை உயிர்கள் யாவும்
    உய்யுமோ ‘ஒளிப்பு இலாமல்?
கூனுடைக் குரங்கினோடு
    மனிதரைக் கொன்று, சென்று அவ்
வானினும் தொடர்ந்து கொல்வென்;
    மருந்தினும் உய்ய மாட்டீர்.
83

உரை
   
 
9153.‘வேட்கின்ற வேள்வி இன்று
    பிழைத்தது; “வென்றோம் “ என்று
கேட்கின்ற வீரம் எல்லாம்
    கிளத்துவீர்! கிளத்தல் வேண்டா;
தாழ்க்கின்றது இல்லை; உம்மைத்
    தனித்தனி தலைகள் பாறச்
சூழ்க்கின்ற வீரம் என்கைச்
    சரங்களாய்த் தோன்றும் அன்றே.
84

உரை
   
 
9154.‘மற்று எலாம் நும்மைப் போல
    வாயினால் சொல்ல மாட்டேன்;
வெற்றிதான் இரண்டு தந்தீர்;
    விரைவது வெல்லக் கொல்லாம்?
உற்று நான் உருத்த காலத்து
    ஒருமுறை எதிரே நிற்கக்
கற்றிரோ? இன்னம் மாண்டு
    கிடத்திரோ? கடத்திரோதான்?
85

உரை
   
 
இந்திரசித்து, போர் செய்தற்கு ஆயத்தனாகித் தேரேறி வில்நாண் எறிந்து போர்ச்சங்கினை ஊதுதல்

9155.‘நின்மின்கள்; நின்மின்! ‘என்னா,
    நெருப்பு எழ விழித்து, நீண்ட
மின்மின்கொள் கவசம் இட்டான்;
    வீக்கினான், தூணி; வீரப்
பொன் மின்கொள் கோதை கையில்
    பூட்டினான்; பொறுத்தான், போர்வில்;
எல் மின்கொள் வயிரத் திண்தேர்
    ஏறினான்; எறிந்தான் நாணி;
86

உரை
   
 
9156.ஊதினான் சங்கம்; வானத்து
    ஒண்தொடி மகளிர் ஒண்கண்
மோதினார்; ‘கணத்தின் முன்னே
    முழுவதும் முருங்க முற்றக்
காதினான் ‘என்ன, வானோர்
    கலங்கினார்; கயிலை யானும்,
போதினான்தானும், ‘இன்று
    புகுந்தது பெரும்போர் ‘என்றார
87

உரை
   
 
பின் விளைவு எண்ணித் தேவர்கள் வாட்டமுறுதல்

9157.‘இழைத்த பேர் யாகம் தானே
    யாம் செய்த தவத்தினாலே
பிழைத்தது; பிழைத்ததேனும்,
    வானரம் பிழைக்கல் ஆற்றா;
அழைத்தது விதியேகொல் என்று
    அஞ்சினார்; அம்பினாலே
உழைத்தது காண்கின்றோம் ‘என்று,
    உணங்கினார், உம்பர் உள்ளார்.
88

உரை
   
 
குரங்குகள், இந்திரசித்தின் நாணொலி கேட்டு நிலை குலைந்தோடுதலும் அனுமன் மலையினைப் பறித்து எதிர்த்தலும்

9158.நாண்தொழில் ஓசை வீசிச்
    செவிதொறும் நடத்தலோடும்,
ஆண் தொழில் மறந்து, கையின்
    அடுக்கிய மரனும் கல்லும்
மீண்டன மறிந்து, சோர
    விழுந்தன; விழுந்த, ‘மெய்யே
மாண்டனம் ‘என்றே உன்னி,
    இரிந்தன, குரங்கின் மாலை.
89

உரை
   
 
9159.படைப் பெருந்தலைவர் நின்றார்;
    அல்லவர், இறுதி பற்றும்
அடைப்ப அருங்காலக் காற்றால்
    ஆற்றலது ஆகிக் கீறிப்
புடை, திரிந்து ஓடும் வேலைப்
    புனல் என, இரியலுற்றார்;
கிடைத்த போர் அனுமன் ஆண்டு, ஓர்
    நெடுங்கிரி கிழித்துக் கொண்டான்.
90

உரை
   
 
இந்திரசித்து வீரவுரை பகர்ந்து அனுமனுடன் பொருதல்

9160.‘நில், அடா! நில்லு நில்லு!
    நீ, அடா! வாசி பேசிக்
கல் எடாநின்றது, என்னைப்
    போர்க்களத்து, அமரர் காண,
கொல்லலாம் என்றோ? நன்று;
    குரங்கு என்றால் கூடும் அன்றே?
நல்லை; போர், வாவா ‘என்றான்
    நமனுக்கு நமனாய் நின்றான்.
91

உரை
   
 
9161.வில் எடுத்து உருத்து நின்ற
    வீரருள் வீரன் நேரே,
கல் எடுத்து, எறிய வந்த
    அனுமனைக் கண்ணின் நோக்கி,
‘மல் எடுத்து உயர்ந்த தோளாற்கு
    என்கொலோ வலியது? ‘என்னா
சொல் எடுத்து, அமரர் சொன்னார்;
    தாதையும் துணுக்கம் உற்றான்.
92

உரை
   
 
9162.வீசினன் வயிரக் குன்றம்,
    வெம் பொறிக் குலங்கள் விண்ணின்
ஆசையின் நிமிர்ந்து செல்ல,
    ‘ஆயிரம் உரும் ஒன்றாகப்
பூசின பிழம்பு இது ‘என்ன,
    வரும் அதன் புரிவை நோக்கி,
கூசின, உலகம் எல்லாம்;
    குலைந்தது அவ் அரக்கர் கூட்டம்.
93

உரை
   
 
9163.குண்டலம் நெடுவில் வீச,
    மேருவின் குவிந்த தோளான்,
அண்டமும் குலுங்க ஆர்த்து,
    மாருதி, அசனி அஞ்ச,
விண் தலத்து எறிந்த குன்றம்
    வெறுந் துகள் ஆகி வீழக்
கண்டனன்; எய்த தன்மை
    கண்டிலர், இமைப்பு இல் கண்ணார்.
94

உரை
   
 
இந்திரசித்து ஏவிய அம்புகளால் அனுமன் அயர்தல்

9164.மாறு ஒரு குன்றம் வாங்கி
    மறுகுவான் மார்பில், தோளில்,
கால்தரு காலில், கையில்,
    கழுத்தினில், நுதலில், கண்ணில்,
ஏறின என்ப மன்னோ
    எரிமுகக் கடவுள் வெம்மை
சீறின பகழிமாரி,
    தீக்கடு விடத்தின் தோய்ந்த.
95

உரை
   
 
9165.வெதிர் ஒத்த சிகரக் குன்றின்
    மருங்கு உற விளங்கலாலும்,
எதிர் ஒத்த இருளைக் கீறி
    எழுகின்ற இயற்கையாலும்,
கதிர் ஒத்த பகழிக் கற்றை
    கதிர் ஒளி காட்டலாலும்,
உதிரத்தின் செம்மை யாலும்,
    உதிக்கின்ற கதிரோன் ஒத்தான்.
96

உரை
   
 
எதிர்த்துப் போர் செய்ய வந்த அங்கதன் முதலியோரை நோக்கிய இந்திரசித்து, இலக்குவன் எங்குள்ளான் என வினவுதல்

9166.ஆயவன் அயர்தலோடும்,
    அங்கதன் முதல்வர் ஆனோர்,
காய்சினம் திருகி, வந்து
    கலந்துளார் தம்மைக் காணா,
‘நீயிர்கள் நின்மின் நின்மின்,
    இருமுறை நெடிய வானில்
போயவன் எங்கே நின்றான்? ‘
    என்றனன், பொருள் செயாதான்.
97

உரை
   
 
9167.வெம்பினர் பின்னும் மேன்மேற்
    சேறலும் வெகுண்டு, ‘சீயம்
தும்பியைத் தொடர்வது அல்லால்,
    குரங்கினைத் தொடர்வது உண்டோ?
அம்பினை மாட்டி, என்னே?
    சிறிது போர் ஆற்ற வல்லான்
தம்பியைக் காட்டித் தாரீர்;
    சாதிரோ, சலத்தின்? ‘என்றான்.
98

உரை
   
 
9168.‘அனுமனைக் கண்டிலீரோ?
    அவனினும் வலியிரோ? என்
தனு உளதன்றோ? தோளின்
    அவ் வலி தவிர்ந்தது உண்டோ!
இனம் முனை தீர்கிலீரோ?
    எவ் வலி ஈட்டி வந்தீர்?
மனிதனைக் காட்டி, நும்தம்
    மலைதொறும் வழிக் கொளீரே. ‘
99

உரை
   
 
இலக்குவன் மேற்சென்ற இந்திரசித்தினை எதிர்த்து
வானரர் வலியழிதல்

9169.என்று உரைத்து இளவல் தன்மேல்
    எழுகின்ற இயற்கை நோக்கி,
குன்றமும் மரமும் வீசிக்
    குறுகினார்; குழாங்கள் தோறும்
சென்றன பகழி மாரி,
    மேருவை உருவித் தீர்வ,
ஒன்று அல, கோடி கோடி
    நுழைந்தன; வலியும் ஓய்ந்தார்.
100

உரை
   
 
வீடணன், விரைந்தழெுக என்றவாறு இலக்குவன் இந்திரசித்தின்மேல் போருக்கு முந்துதல்

9170.‘படுகின்றது அன்றோ, மற்று உன்
    பெரும் படை? பகழி மாரி
விடுகின்றது அன்றோ, வென்றி
    அரக்கனாம் காள மேகம்?
இடுகின்ற வேள்வி மாண்டது;
    இனி, அவன் பிழைப்பு உறாமே
முடுகு ‘என்றான், அரக்கன் தம்பி;
    நம்பியும் சென்று மூண்டான்.
101

உரை
   
 
9171.வந்தான் நெடுந்தகை மாருதி,
    மயங்கா முகம் மலர்ந்தான்,
‘எந்தாய்! கடிது ஏறாய், எனது
    இருதோள்மிசை ‘என்றான்;
‘அந்தாக ‘என்று உவந்து, ஐயனும்
    அமைவு ஆயினன் ‘இமையோர்
சிந்தாகுலம் துறந்தார்; அவன்
    நெடுஞ் சாரிகை திரிந்தான்.
102

உரை
   
 
இந்திரசித்தும் இலக்குவனும் பெரும்போர் புரிதல்

9172.‘கார் ஆயிரம் உடன் ஆகிய ‘
    எனல் ஆகிய கரியோன்,
ஓர் ஆயிரம் பரிபூண்டது ஓர்
    உயர் தேர்மிசை உயர்ந்தான்;
நேர் ஆயினர் இருவோர்களும்;
    நெடுமாருதி, நிமிரும்
போர் ஆயிரம் உடையான் என,
    திசை எங்கணும் பெயர்ந்தான்.
103

உரை
   
 
9173.தீ ஒப்பன, உரும் ஒப்பன,
    உயிர் வேட்டன திரியும்
பேய் ஒப்பன, பசி ஒப்பன,
    பிணி ஒப்பன, பிழையா
மாயக் கொடுவினை ஒப்பன;
    மனம் ஒப்பன, கழுகின்
தாய் ஒப்பன, சில வெங்கணை
    துரந்தான் துயில் துறந்தான்.
104

உரை
   
 
9174.அவ் அம்பினை அவ் அம்பினின்
    அறுத்தான், இகல் அரக்கன்;
‘எவ் அம்பு இனி உலகத்து உள? ‘
    என்னும்படி எய்தான்
வெவ் அம்பரம், வையம், திசை,
    மலை, வேலைகள், பிறவும்,
வவ்வும் கடையுக மாமழை
    பொழிகின்றது மான.
105

உரை
   
 
9175.ஆயோன், நெடுங் குருவிக் குலம்
    எனலாம் சில அம்பால்
போய் ஓவிடத் துரந்தான்; அவை
    ‘பொறியோ ‘என, மறிய,
தூயோனும், அத்துணை வாளிகள்
    தொடுத்தான், அவை தடுத்தான்;
தீயோனும், அக்கணத்து, ஆயிரம்
    நெடுஞ் சாரிகை திரிந்தான்.
106

உரை
   
 
9176.கல்லும், நெடுமலையும்,
    பலமரனும், கடைகாணும்
புல்லும் சிறு பொடியும்
    இடை தரெியாவகை, புரியச்
செல்லும் நெறிதொறும் சென்றன
    தறெு கால்புரை மறவோன்
சில்லின் முதிர்தேரும், சின
    வயமாருதி தாளும்.
107

உரை
   
 
9177.இருவீரரும், ‘இவன் இன்னவன்,
    இவன் இன்னவன் ‘என்னச்
செருவீரரும் அறியாவகை
    திரிந்தார், கணை சொரிந்தார்;
‘ஒரு வீரரும் இவர் ஒக்கிலர் ‘
    என, வானவர் உவந்தார்;
பொரு வீரையும் பொரு வீரையும்
    பொருதால் எனப் பொருதார்.
108

உரை
   
 
9178.‘விண் செல்கில, செல்கின்றன
    விசிகம் ‘என, இமையோர்
கண் செல்கில; மனம் செல்கில :
    கணிதம் உறும் எனின், ஓர்
எண் செல்கில; நெடுங்கால வன்
    இடை செல்கிலன், உடல்மேல்
புண்செய்வன அல்லால், ஒரு
    பொருள் செல்வன தரெியா.
109

உரை
   
 
9179.எரிந்து ஏறின, திசை யாவையும்;
    இடி ஆம் எனப் பொடியாய்
நெரிந்து ஏறின, நெடுநாண் ஒலி;
    படர் வான் நிறை உருமின்
சொரிந்து ஏறின சுடுவெங்கணை;
    தொடுந் தாரகை முழுதும்
கரிந்து ஏறின, உலகு யாவையும்,
    கனல் வெம்புகை கதுவ.
110

உரை
   
 
9180.வெடிக்கின்றன, திசை யாவையும்,
    விழுகின்றன, இடிவந்து
இடிக்கின்றன, சிலைநாண் ஒலி;
    இருவாய்களும் எதிராக்
கடிக்கின்றன, கனல் வெம் கணை,
    கலி வான் உற விசைமேல்
பொடிக்கின்றன, பொறி வெம் கனல்;
    இவை கண்டனர் புலவோர்.
111

உரை
   
 
9181.கடல் வற்றின; மலை உக்கன;
    பருதிக் கனல் கதுவுற்று
உடல் வற்றின; மரம், உற்றன
    கனல் பட்டன; உதிரம்
சுடர் வற்றின; சுறு மிக்கது;
    துணிபட்டு உதிர்கணையின்,
திடர் பட்டது, பரவை குழி;
    திரிவுற்றது புவனம்.
112

உரை
   
 
9182.எரிகின்றன அயில் வெம் கணை
    இரு சேனையும் இரியத்
திரிகின்றன, புடை நின்றில,
    திசை சென்றன; சிதறிக்
கரி பொன்றின; பரி மங்கின;
    கவி சிந்தின; கடல் போல்
சொரிகின்றன, பொரு செம்புனல்;
    தொலைகின்றனர், கொலையால்.
113

உரை
   
 
9183.புரிந்து ஓடின; பொரிந்து ஒடின;
    புகைந்து ஓடின; புகை போய்
எரிந்து ஓடின; கரிந்து ஓடின;
    இடம் ஓடின; வலமே
திரிந்து ஓடின; பிரிந்து ஓடின;
    செறிந்து ஓடின; திசைமேல்
சரிந்து ஓடின கருங் கோளரிக்கு
    இளையான் விடு சரமே.
114

உரை
   
 
9184.நீர் ஒத்தன; நெருப்பு ஒத்தன;
    பொருப்பு ஒத்தன; நிமிரும்
கார் ஒத்தன; உரும் ஒத்தன;
    கடல் ஒத்தன; கதிரோன்
தேர் ஒத்தன; விடைமேலவன்
    சிரிப்பு ஒத்தன; உலகின்
வேர் ஒத்தன; செரு ஒத்து இகல்
    அரக்கன் விடு விசிகம்.
115

உரை
   
 
9185.ஏமத் தடங் கவசத்து இகல்
    அகலத்தன; இருவோர்
வாமப் பெருந்தோள் மேலன;
    வதனத்தன; வயிரத்
தாமத்துணைக் குறங்கோடு இரு
    சரணத்தன, தம் தம்
காமக் குல மட மங்கையர்
    கடைக்கண் என, கணைகள்.
116

உரை
   
 
9186.‘எந்நாளினின், எத்தேவர்கள்,
    எத் தானவர், எவரே,
அன்னார் செரு விளைத்தார்? ‘
    என, இமையோர் எடுத்து ஆர்த்தார்;
பொன் ஆர் சிலை இரு கால்களும்,
    ஒருகால் பொறை உயிரா,
முன்நாளினில் இரண்டாம் பிறை
    முளைத்தால் என வளைத்தார்.
117

உரை
   
 
9187.வேகின்றன உலகு இங்கு இவர்
    விடுகின்றன விசிகம்
போகின்றன, சுடர் வெந்தன;
    இமையோர்களும் புலர்ந்தார்;
‘ஆகின்றது ஒர் அழிகாலம் இது
    ஆம், அன்று ‘என அயிர்த்தார்;
நோகின்றன திசை யானைகள்,
    செவி நாண் ஒலி நுழைய.
118

உரை
   
 
9188.மீன் உக்கது, நெடு வானகம்;
    வெயில் உக்கது, சுடரும்;
மான் உக்கது, முழு வெண்மதி
    மழை உக்கது, வானம்;
தான் உக்கது, குல மால் வரை;
    தரை உக்கது; தகைசால்
ஊன் உக்கது, எவ் உலகத்தினும்
    உள ஆயினம் உயிரும்.
119

உரை
   
 
9189.அக்காலையின் அயில்வெங்கணை
    ஐ ஐந்து புக்கு அழுந்த,
திக்கு ஆசு அற வென்றான் மகன்
    இளங்கோ உடல் செறித்தான்;
கைக் கார்முகம் வளையச் சில
    கனல் வெங்கணை, கவசம்
புக்கு, ஆகமும் கழன்று ஓடிட,
    இளங் கோளரி பொழிந்தான்.
120

உரை
   
 
9190.தரெிந்தான் சில சுடர் வெங்கணை,
    தேவேந்திரன் சினமா
இரிந்து ஓடிடத் துரந்து ஓடின,
    இமையோரையும் முன்நாள்
அரிந்து ஓடின, எரிந்து ஓடின,
    அவை கோத்து, அடல் அரக்கன்
சொரிந்தான், உயர் நெடு மாருதி
    தோள்மேலினில் தோன்ற.
121

உரை
   
 
9191.குருதிப் புனல் சொரிய, குணம்
    குணிப்பு இல்லவன், குணபால்
பருதி படி பொலிவுற்றதை
    இளங் கோளரி பார்த்தான்;
ஒரு திக்கிலும் பெயராவகை,
    அவன் தேரினை உதிர்த்தான்;
‘பொருது இக்கணம் வென்றான் ‘என,
    சரமாரிகள் பொழிந்தான்.
122

உரை
   
 
9192.அத்தேர் அழிந்தது நோக்கிய
    இமையோர் எடுத்து ஆர்த்தார்;
முத்தேவரும் உவந்தார்; அவன்,
    உரும் ஏறு என முனிந்தான்,
தத்தா; ஒரு தடந்தேரினைத்
    தொடர்ந்தான், சரம் தலைமேல்
பத்து ஏவினன்; அவை பாய்தலின்,
    இளம் கோளரி பதைத்தான்.
123

உரை
   
 
9193.பதைத்தான், உடல் நிலைத்தான்,
    சில பகுவாய் அயில் பகழி
விதைத்தான்; அவன் விலக்காதமுன்,
    விடைமேல் வரு விமலன்,
மதத்தால் எதிர்வரு காலனை
    ஒரு காலுற மருமத்து
உதைத்தால் என, தனித்து ஓர் கணை
    அவன் மார்பிடை உய்த்தான்.
124

உரை
   
 
9194.கவசத்தையும் நெடு மார்பையும்
    கழன்று அக்கணை கழிய,
அவசத் தொழில் அடைந்தான்;
    அதற்கு இமையோர் எடுத்து ஆர்த்தார்;
திவசத்து எழு கதிரோன் எனத்
    தரெிகின்றது ஓர் கணையால்
துவசத்தையும் துணித்தே, அவன்
    மணித் தோளையும் தொளைத்தான்
125

உரை
   
 
9195.உள் ஆடிய உதிரம் புனல்
    கொழுந் தீ என ஒழுக,
தள்ளாடிய வடமேருவின்
    சலித்தான்; உடல் தரித்தான்;
தொள்ளாயிரம் கடும் போர்க் கணை
    துரந்தான்; அவை, சுடர் போய்
விள்ளா நெடுங் கவசத்து இடை
    நுழையாது உக, வெகுண்டான்.
126

உரை
   
 
9196.மறித்து ஆயிரம் வடிவெங்கணை,
    மருமத்தினை மதியாக்
குறித்து, ஆயிரம் பரித்தேரவன்
    விடுத்தான்; அவை குறி பார்த்து
இறுத்தான், நெடுஞ் சரத்தால்,
    ஒரு தனி நாயகற்கு இளையோன்;
செறித்தான் உடல் சில பொன் கணை,
    சிலை நாண் அறத் தரெித்தான்.
127

உரை
   
 
9197.‘வில் இங்கு இது நெடுமால் சிவன்
    எனும் மேலவர் தனுவே
கொல்? ‘என்று கொண்டு அயிர்த்தான்;
    நெடுங் கவசத்தையும் குலையாச்
செல்லுங் கடுங்கணை யாவையும்
    சிதையாமையும் தரெிந்தான்;
வெல்லும்தரம் இல்லாமையும்
    அறிந்தான், அகம் மெலிந்தான்.
128

உரை
   
 
இந்திரசித்து மெலிவுற்றமையை யறிந்த வீடணன் இலக்குவனுக்கு அதனைத் தரெிவித்தல்

9198.அத்தன்மையை அறிந்தான் அவன்
    சிறுதாதையும், அணுகா,
முத்தன் முகம் நோக்கா, ‘ஒரு
    மொழி கேள் ‘என மொழிவான்,
‘எத்தன்மையும் இமையோர்களை
    வென்றான் இகல் கண்டாய்!
பித்தன் மகன் தளர்ந்தான்; இனிப்
    பிழையான் ‘எனப் பகர்ந்தான்.
129

உரை
   
 
இந்திரசித்து ஏவிய படைக்கலங்களை ஏற்ற கணைகளால் இலக்குவன் விலக்குதல்

9199.கூற்றின்படி கொதிக்கின்ற
    அக் கொலை வாள் எயிற்று அரக்கன்,
ஏற்றும் சிலை நெடுநாண் ஒலி
    உலகு ஏழினும் எய்த,
சீற்றம் தலைத்தலை சென்று உற,
    ‘இது தீர் ‘எனத் தரெியா,
காற்றின் படை தொடுத்தான்; அவன்
    அதுவே கொடு காத்தான்.
130

உரை
   
 
9200.அனலின் படை தொடுத்தான்; அவன்
    அதுவே கொடு தடுத்தான்;
புனலின் படை தொடுத்தான்; அவன்
    அதுவே கொடு பொறுத்தான்;
கனல் வெங் கதிரவன் வெம்படை
    துரந்தான், மனம் கரியான்;
சினவெந் திறல் இளங் கோளரி
    அதுவே கொடு தீர்த்தான்.
131

உரை
   
 
இந்திரசித்து அயன் படை தொடுத்தானாக இலக்குவன் அப்படையினையே தொடுத்து அதனை அழித்தல்

9201.‘இது காத்திகொல்? ‘என்னா, எடுத்து,
    இசிகப்படை எய்தான்;
அது காப்பதற்கு அதுவே உளது
    என்னா, தொடுத்து அமைந்தான்;
செதுகாப் படை தொடுப்பேன் என
    நினைந்தான், திசை முகத்தோன்
முதுமாப்படை துரந்தான், ‘இனி
    முடிந்தாய் ‘என மொழிந்தான்.
132

உரை
   
 
9202.வானின்தலை நின்றார்களும்
    மழுவாளியும், மலரோன்
தானும், முனிவரரும், பிற
    தவத்தோர்களும், அறத்தோர்
கோனும், பிறபிற தேவர்கள்
    குழுவும், மனம் குலைந்தார்;
‘ஊனம், இனி இலது ஆகுக
    இளங்கோக்கு ‘என உரைத்தார்.
133

உரை
   
 
9203.ஊழிக்கடை இறுதி தலை,
    உலகு யாவையும் உண்ணும்
ஆழிப் பெருங்கனல் தன் ஒரு
    சுடர் என்னவும் ஆகாப்
பாழிச் சிகை பரப்பித் தனி
    படர்கின்றது பார்த்தான்
ஆழித் தனிமுதல் நாயகற்கு
    இளையான் அது மதித்தான்.
134

உரை
   
 
9204.‘மாட்டான் இவன், மலரோன்படை
    முதற்போது தன் வலத்தால்
மீட்டான் அலன்; தடுத்தான் அலன்;
    முடிந்தான் ‘என, விட்டான்;
‘காட்டாது இனிக் கரந்தால், அது
    கருமம் அலது ‘என்னா,
‘தாள் தாமரை மலரோன் படை
    தொடுப்பேன் ‘எனச் சமைந்தான்.
135

உரை
   
 
9205.‘நன்று ஆகுக உலகுக்கு ‘என
    முதலோன்மொழி நவின்றான்;
‘பின்றாதவன் உயிர்மேற் செலவு
    ஒழிக ‘என்பது பிடித்தான்;
‘ஒன்றாக இம் முதலோன்படை
    தனை மாய்க்க ‘என்று உரைத்தான்;
நின்றான், அது துரந்தான்; அவன்
    நலம் வானவர் நினைத்தார்
136

உரை
   
 
9206.‘தான் விட்டது மலரோன் படை
    எனின், மற்று இடை தருமே?
வான் விட்டதும், மண் விட்டதும்,
    மறவோன் உடல் அறுமே,
‘தேன் விட்டிடு மலரோன் படை
    தீர்ப்பாய் ‘எனத் தரெிந்தான்;
‘ஊன் விட்டவன் மறம் விட்டிலன் ‘
    என, வானவர் உவந்தார்.
137

உரை
   
 
9207.உருமேறு வந்து எதிர்ந்தால், அதன்
    எதிரே நெருப்பு உய்த்தால்,
வரும் ஆங்கது தவிர்ந்தால் என,
    மறவோன் படை மாய,
திருமால் தனக்கு இளையான் படை
    உலகு ஏழையும் தீய்க்கும்
அருமாகனல் எனநின்றது,
    விசும்பு எங்கணும் ஆகி.
138

உரை
   
 
9208.படை அங்கு அது படரா வகை,
    பகலோன் குல மருமான்,
இடை ஒன்று அது தடுக்கும்படி
    செந்தீஉக எய்தான்,
தொடை ஒன்றினை, கணைமீமிசைத்
    துறுவாய் இனி ‘என்றான்;
விடம் ஒன்றுகொடு ஒன்று ஈர்ந்தது
    போல் தீர்ந்தது, வேகம்.
139

உரை
   
 
தேவர்களது மகிழ்ச்சியும் சிவபெருமான் இராம இலக்குவரது பிறப்பின் உண்மையினை விளக்குதலும்

9209.விண்ணோர் அது கண்டார், ‘வய
    வீரர்க்கு இனி மேன்மேல்
ஒண்ணாதன உளவோ? ‘என
    மனம் தேறினர், உவந்தார்;
கண்ணார் நுதல் பெருமான், ‘இவர்க்கு
    அரிதோ? ‘எனக் கடைபார்த்து,
‘எண்ணாது இவை பகர்ந்தீர்; பொருள்
    கேளீர்! ‘என இசைத்தான்.
140

உரை
   
 
9210.‘நாராயண நரர் என்று இவர்
    உளராய், நமக்கு எல்லாம்
வேராய், முழு முதல் காரணப்
    பொருளாய், வினை கடந்தார்;
ஆராயினும் தரெியாதது ஒர்
    நெடு மாயையின் அகத்தார்;
பாராயண மறை நான்கையும்
    கடந்தார்; இவர் பழையோர்.
141

உரை
   
 
9211.“அறத்தாறு அழிவு உளது ஆம் “ என,
    அறிவும் தொடர்ந்து அணுகாப்
புறத்தார், புகுந்து அகத்தார் எனப்
    பிறந்தார், அது புரப்பார்;
மறத்தார் குலம் முதல் வேர் அற
    மாய்ப்பான், இவண் வந்தார்;
திறத்தால் அதுதரெிந்து, யாவரும்
    தரெியாவகை திரிவார்.
142

உரை
   
 
9212.“உயிர்தோறும் உற்றுளன், தோத்திரத்து
    ஒருவன் “ என உரைக்கும்
அயிராநிலை உடையான் இவன்;
    அவன், இவ் உலகு அனைத்தும்
தயிர்தோய் பிரை எனல் ஆம் வகை
    கலந்து, ஏறிய தலைவன்;
பயிராதது ஒர் பொருள் இன்னது என்று
    உணர்வீர்; இது பரமால்.
143

உரை
   
 
9213.‘நெடும் பாற்கடல் கிடந்தாரும், பண்டு,
    இவர்; நீர் குறை நேர,
விடும்பாக்கியம் உடையார்களைக்
    குலத்தோடு அற வீட்டி,
இடும்பாக்கியத்து அறம் காப்பதற்கு
    இசைந்தார் ‘என இது எலாம்,
அடும்பு ஆக்கிய தொடைச் செஞ்சடை
    முதலோன் பணித்து அமைந்தான்.
144

உரை
   
 
உண்மையினை அறிவுறுத்திய சிவபெருமானைத் தேவர்கள் தொழுது போற்றுதல்

9214.‘அறிந்தே, இருந்து அறியேம், அவன்
    நெடு மாயையின் அயர்ப்பேம்;
பிறிந்தேம் இனி முழுது ஐயமும்;
    பெருமான் உரை பிடித்தோம்;
எறிந்தேம் பகைமுழுதும்; இனித்
    தீர்ந்தேம், இடர் கடந்தேம்;
செறிந்தோர் வினைப் பகைவா! ‘
    எனத்தொழுதார், நெடுந்தேவர்.
145

உரை
   
 
மாயோன் படையினை இந்திரசித்து ஏவுதலும் இலக்குவன், தன்னைத் திருமாலாகத் தியானித்த அளவில் அது விலகிப் போதலும்

9215.மாயோன் நெடும்படை வாங்கிய
    வளைவாள் எயிற்று அரக்கன்,
‘நீயோ இது தடுத்தாய் எனின்,
    நினக்கு ஆர் எதிர் நிற்பார்?
போயோ விசும்பு அடைவாய்? இது
    பிழையாது ‘எனப் புகலா,
தூயோன்மிசை, உலகு யாவையும்
    தடுமாறிட, துரந்தான்.
146

உரை
   
 
9216.சேமித்தனர் இமையோர்தமை,
    சிரத்து ஏந்திய கரத்தால்;
ஆம் இத் தொழில், பிறர் யாவரும்
    அடைந்தார்; பழுது அடையாக்
காமிப்பது முடிவிப்பது,
    படர்கின்றது கண்டான்;
‘நேமித் தனி அரி, தான் ‘என
    நினைந்தான், எதிர் நடந்தான்.
147

உரை
   
 
9217.தீக்கின்றது இவ் உலகு ஏழையும்
    எனச் செல்வதும் தரெிந்தான்;
நீக்கும் தரம் அல்லா முழு
    முதலோன் என நினைந்தான்;
மீச் சென்றிலது, அயல் சென்றது,
    விலங்கா, வலங்கொடு, மேல்
போய்த்து, அங்கு அது; கனல் மாண்டது
    புகை வீய்ந்தது, பொதுவே.
148

உரை
   
 
9218.ஏத்து ஆடினர், இமையோர்களும்
    கவியின் குலம் எல்லாம்
கூத்து ஆடின; அர மங்கையர்
    குனித்து ஆடினர்; தவத்தோர்
‘காத்தாய் உலகு அனைத்தும் ‘எனக்
    களித்து ஆடினர்; கமலம்
பூத்தானும் அம் மழுவாளியும்
    முழு வாய் கொடு புகழ்ந்தார்.
149

உரை
   
 
சிவனது படையினை இந்திரசித்து விடுதல்

9219.அவன் அன்னது கண்டான்,
    ‘இவன் ஆரோ? ‘என அயிர்த்தான்;
‘இவன் அன்னது முதலே உடை
    இறையோன் என வியவா,
‘எவன் என்னினும் நின்று ஆகுவது
    இனி எண்ணிலன் ‘என்னா,
‘சிவன் நன்படை தொடுத்து
    ஆருயிர் முடிப்பேன் ‘எனத் தரெிந்தான்.
150

உரை
   
 
9220.பார்ப்பான் தரும் உலகு யாவையும்
    ஒரு நாள் ஒருபகலே
தீர்ப்பான் படை தொடுப்பேன் ‘
    எனத் தரெிந்தான்; அது தரெியா,
மீப் பாவிய இமையோர் குலம்
    வெரு உற்றது; ‘இப்பொழுதே
மாய்ப்பான் ‘என உலகு யாவையும்
    மறுகுற்றன, மயங்கா.
151

உரை
   
 
9221.‘தானே சிவன்தரப் பெற்றது,
    தவம் நாள்பல உழந்தே;
தானே, ‘பிறர் அறியாதது
    தந்தேன் ‘எனச் சமைந்தான்;
ஆனால், இவன் உயிர் கோடலுக்கு
    ஐயம் இலை ‘என்னா,
மேல்நாளும் இதனையே விடின்
    எதிர் நிற்பவர் இல்லை.
152

உரை
   
 
9222.மனத்தால், மலர் புனல் சாந்தமொடு
    அவி தூபமும் வகுத்தான்;
நினைத்தான்; ‘இவன் உயிர்கொண்டு இவண்
    நிமிர்வாய் ‘என நிமிர்ந்தான்;
சினத்தால் நெடுஞ்சிலை நாண் தடந்
    தோள்மேல் உறச் செலுத்தா,
எனைத்து ஆயது ஒர் பொருளால் இடை
    தடை இல்லதை விட்டான்.
153

உரை
   
 
சிவனது படையினால் தோன்றிய விளைவுகள்

9223.சூலங்களும், மழுவும், சுடு
    கணையும், கனல் சுடரும்,
ஆலங்களும், அரவங்களும்,
    அசனிக்குலம் எவையும்,
காலன்தனது உருவங்களும்,
    கரும்பூதமும், பெரும் பேய்ச்
சாலங்களும் நிமிர்கின்றன,
    உலகு எங்கணும் தான் ஆய்.
154

உரை
   
 
9224.ஊழிக் கனல் ஒருபால் அத
    னுடனே தொடர்ந்து உடற்றும்;
சூழிக் கொடுங் கடுங்காற்று அத
    னுடனே வர, தூர்க்கும்
ஏழிற்கும் அப் புறத்தாய் உள
    பெரும் போர்க்கடல் இழிந்த ஆங்கு
ஆழித்தலைக் கிடந்தால் என
    நெடுந்தூங்கு இருள் அடைய.
155

உரை
   
 
9225.இரிந்தார் குலநெடுந் தேவர்கள்;
    இருடிக் குலத்து எவரும்
பரிந்தார். ‘இதுபழுது ஆகிலது,
    இறுவான் எனும் பயத்தால்;
நெரிந்து ஆங்கு அழிகுரங்கு உற்றது
    பகருந்துணை நெடிதே.
திரிந்தார், இரு சுடரோர்; உலகு
    ஒரு மூன்று உடன் திரிய.
156

உரை
   
 
அதுகண்டு அஞ்சிய வீடணன் இதனை விலக்க இயலுமோ என வினவ இலக்குவன் அதனை நோக்கிச் சிரித்தல்

9226.பார்த்தான் நெடுந்தகை வீடணன்,
    உயிர் கால் உற, பயத்தால்
வேர்த்தான், ‘இது விலக்கும் தரம்
    உளதோ, முதல் வீரா!
தீர்த்தா! ‘என அழைத்தான்;
    அதற்கு இளங்கோளரி சிரித்தான்;
போர்த்தார் அடல் கவிவீரரும்,
    அவன் தாள்நிழல் புகுந்தார்.
157

உரை
   
 
அபயம் அடைந்தவர்களை அஞ்சற்க எனக் கையமைத்துத் தானும் சிவன் படையை விட, அது இந்திரசித்தின் படையினை விழுங்குதல்

9227.‘அவயம்! உனக்கு அவயம்! ‘எனும்
    அனைவோரையும், ‘அஞ்சேல்
அவயம் உமக்கு அளித்தோம் ‘எனத்
    தன் கைத் தலத்து அமைத்தான்
‘உவயம் உறும் உலகின் பயம்
    உணர்ந்தேன், இனி ஒழியேன்;
சிவன் ஐம் முகம் உடையான் படை
    தொடுப்பேன் ‘எனத் தெளிந்தான்.
158

உரை
   
 
9228.அப்பொன்படை மனத்தால் நினைந்து,
    அர்ச்சித்து அதை, ‘அழிப்பாய்
இப்பொன் படைதனை மற்றொரு
    தொழில் செய்யலை ‘என்னா,
துப்பு ஒப்பது ஒர்கணை கூட்டினன்
    துரந்தான்; இடை தொடரா
எப்பொன்படை எவையும் புக
    விழுங்குற்றது, ஒர் இமைப்பின்.
159

உரை
   
 
9229.விண் ஆர்த்தது; மண் ஆர்த்தது,
    மேலோர் மணிமுரசின்
கண் ஆர்த்தது, கடல் ஆர்த்தது,
    மழை ஆர்த்தது, கலையோர்
எண் ஆர்த்தது, மறை ஆர்த்தது,
    விசயம் என இயம்பும்
பெண் ஆர்த்தனள், அறம் ஆர்த்தது,
    பிறர் ஆர்த்தது பெரிதால்.
160

உரை
   
 
இலக்குவனது வன்மையைக் கண்டு திகைப்புற்ற இந்திரசித்து தன் வன்மையால் மேலும் அம்புகளைச் செலுத்துதல்

9230.இறு காலையின் உலகு யாவையும்
    அவிப்பான் இகல் படையை,
மறுகா வகை வலித்தான், அது
    வாங்கும்படி வல்லான்;
தறெுகாலனின் கொடியோனும், மற்று
    அதுகண்டு, அகம் திகைத்தான்;
அறுகால்வயக் கவிவீரரும்
    அரி என்பதை அறிந்தார்.
161

உரை
   
 
9231.‘தயெ்வப்படை பழுது உற்றது
    எனக் கூசுதல் சிதைவால்;
எய் வித்தகம் உளது; அன்னது
    பிழையாது ‘என இசையா,
கைவித்தகம் அதனால் சில
    கணை வித்தினன்; அவையும்
மொய்வித்தகன் தடந்தோளினும்
    நுதற் சூட்டினும் மூழ்க.
162

உரை
   
 
9232.வெய்யோன் மகன்முதல் ஆகிய
    விறலோர், மிகு திறலோர்,
கை ஓய்வு இலர், மலைமாரியின்
    நிருதக் கடல் கடப்பார்;
‘உய்யார் ‘என வடி வாளிகள்
    சதகோடிகள் உய்த்தான்.
செய்யோன் அயல் தனிநின்ற தன்
    சிறுதாதையைச் செறுத்தான்.
163

உரை
   
 
இலக்குவனது அயலில் நின்ற வீடணனை இந்திரசித்து இகழ்ந்துரைத்தல்

9233.‘முரண்தடம் தண்டும் ஏந்தி,
    மனிசரை முறைமை கூறிப்
பிரட்டரின் புகழ்ந்து, பேதை
    அடியரின் தொழுது பின்சென்று,
இரட்டுறும் முரசம் என்ன,
    இசைத்ததே இசைக்கின்றாய் ஐப்
புரட்டுவன் தலையை, இன்று;
    பழி என ஒழிவென் போலாம்.
164

உரை
   
 
9234.‘விழிபட, முதல்வர் எல்லாம்
    வெதும்பினர் ஒதுங்கி வீழ்ந்து
வழிபட, உலகம் மூன்றும்
    அடிப்பட வந்த தேனும்,
அழிபடை தாங்கல் ஆற்றும்
    ஆடவர், யாண்டும் அஃகாப்
பழிபட வந்த வாழ்வை
    யாவரே நயக்கற் பாலார்?
165

உரை
   
 
9235.‘நீர் உள்ளதனையும் உள்ள
    மீன் என, நிருதர் எல்லாம்
வேர் உளதனையும் வீவர்,
    இராவணனோடு; மீளார்;
ஊர் உளது; ஒருவன் நின்றாய்
    நீ உளை உறைய; நின்னோடு
ஆர் உளர் அரக்கர் நிற்பார்,
    அரசு வீற்றிருக்க? ஐயா!
166

உரை
   
 
9236.‘முந்தைநாள், உலகம் தந்த
    மூர்த்தி வானோர்கட்கு எல்லாம்
தந்தையார் தந்தை யாரைச்
    செரு இடை சாயத் தள்ளி,
கந்தனார் தந்தை யாரைக்
    கயிலையோடு ஒருகைக் கொண்ட
எந்தையார் அரசு செய்வது,
    இப்பெரும் பலம் கொண்டேயோ?
167

உரை
   
 
9237.‘பனிமலர்த் தவிசின் மேலோன்
    பார்ப்பன குலத்துக்கு எல்லாம்
தனிமுதல் தலைவன் ஆன
    உன்னை வந்து அமரர் தாழ்வார்;
மனிதருக்கு அடிமையாய் நீ
    இராவணன் செல்வம் ஆள்வாய்;
இனி உனக்கு என்னோ, மானம்?
    எங்கேளாடு அடங்கிற்று அன்றே.
168

உரை
   
 
9238.‘சொல்வித்தும், பழித்தும், நுங்கை
    மூக்கினைத் துணிவித்தோரால்,
எல்வித்தும் படைக்கை உங்கள்
    தமையனை எங்கேளாடும்
கொல்வித்தும், தோற்றுநின்ற
    கூற்றினார் குலத்தை எல்லாம்
வெல்வித்தும், வாழும் வாழ்வின்
    வெறுமையே விழுமிது அன்றே?
169

உரை
   
 
9239.‘எழுதி ஏர் அணிந்த திண்தோள்
    இராவணன், இராமன் அம்பால்,
புழுதியே பாயல் ஆகப்
    புரண்டநாள், புரண்டுமேல் வீழ்ந்து,
அழுதியோ? நீயும் கூட
    ஆர்த்தியோ? அவனை வாழ்த்தித்
தொழுதியோ? யாதோ, செய்யத்
    துணிந்தனை? விசயத் தோளாய்!
170

உரை
   
 
9240.‘ஊனுடை உடம்பின் நீங்கி,
    மருந்தினால் உயிர்வந்து உய்யும்
மானிடர் இலங்கை வேந்தைக்
    கொல்வரே? நீயும் அன்னான்
தான் உடை செல்வம் துய்க்கத்
    தகுதியோ? சரத்தினோடும்
வான் இடைப் புகுதி அன்றே,
    யான் பழி மறுக்கின்! ‘என்றான்.
171

உரை
   
 
வீடணன், மறுமொழி பகர்தல்

9241.அவ் உரை அமையக் கேட்ட
    வீடணன், அலங்கல் மோலி
செவ்விதின் துளக்கி, மூரல்
    முறுவலும் தரெிவது ஆக்கி,
‘வெவ்விது பாவம்; சாலத்
    தருமமே விழுமிது; ஐய;
இவ் உரை கேட்டி ‘என்னா,
    இனையன விளம்பல் உற்றான்.
172

உரை
   
 
9242.‘அறம்துணை ஆவது அல்லால்,
    அருநரகு அமைய நல்கும்
மறம்துணை ஆக, மாயாப்
    பழியொடும் வாழ மாட்டேன்;
துறந்திலேன் மெய்ம்மை; எய்தும்
    பொய்ம்மையே துறப்பது அல்லால்,
பிறந்திலேன் இலங்கை வேந்தன்
    பின், அவன் பிழைத்த போதே.
173

உரை
   
 
9243.‘உண்டிலென் நறவம்; பொய்ம்மை
    உரைத்திலென்; வலியால் ஒன்றும்
கொண்டிலென்; மாய வஞ்சம்
    குறித்திலென்; யாரும் குற்றம்
கண்டிலர் என்பால்; உண்டே?
    நீயிரும் காண்டிர் அன்றே?
பெண்டிரின் திறம்பினாரைத்
    துறந்தது பிழையிற்று ஆமோ?
174

உரை
   
 
9244.“மூவகை உலகும் ஏத்தும்
    முதலவன், எவர்க்கும் மூத்த
தேவர்தம் தேவன், தேவி
    கற்பினின் சிறந்துளாளை
நோவன செய்தல் தீது ‘‘
    என்று உரைப்ப, நுன் தாதைசீறி
‘போ ‘எனப் போந்தேன்; இன்று
    நரகதில் பொருந்துவேனோ?
175

உரை
   
 
9245.‘வெம்மையின் தருமம் நோக்கா
    வேட்டதே வேட்டு, வீயும்
உம்மையே புகழும் பூண்க;
    துறக்கமும் உமக்கே ஆக;
செம்மையில் பொருந்தி, மேலோர்
    ஒழுக்கினோடு அறத்தைத் தேறும்
எம்மையே பழியும் பூண்க;
    நரகமும் எமக்கே ஆக.
176

உரை
   
 
9246.“அறத்தினைப் பாவம் வெல்லாது “
    என்னும் அது அறிந்து “ஞானத்
திறத்தினும் உறும் ‘‘ என்று எண்ணி,
    தேவர்க்கும் தேவைச் சேர்ந்தேன்;
புறத்தினில் புகழே ஆக,
    பழியொடும் புணர்க, போதச்
சிறப்பு இனிப் பெறுக; தீர்க ‘
    என்றனன், சீற்றம் தீர்ந்தான்.
177

உரை
   
 
9247.‘பெறும் சிறப்பு எல்லாம் என்கைப்
    பிறைமுக வாளி ஒன்றால்
இறும் சிறப்பு அல்லால், அப்பால்
    எங்கு இனிப் போவது? ‘என்னா,
தறெும் சிறைக் கலுழன் அன்னது
    ஒருகணை தரெிந்து, செம்பொன்
உறும் சுடர்க்கழுத்தை நோக்கி,
    நூக்கினான், உருமின் வெய்யோன்.
178

உரை
   
 
9248.அக் கணை அசனி என்ன
    அன்று என, ஆலம் உண்ட
முக்கணான் சூலம் என்ன,
    முடுகிய முடிவை நோக்கி,
‘இக்கணத்து இற்றான் ‘இற்றான் ‘
    என்கின்ற இமையோர் காண,
கைக்கணை ஒன்றால், வள்ளல்,
    அக்கணை கண்டம் கண்டான்.
179

உரை
   
 
9249.கோல் ஒன்று துணிதலோடும்,
    கூற்றுக்கும் கூற்றம் அன்னான்,
வேல் ஒன்று வாங்கி விட்டான்;
    வெயில் ஒன்று விழுவது என்ன,
நாலொன்றும் மூன்றும் ஆன
    புவனங்கள் நடுங்கலோடும்,
நூல் ஒன்று வரிவிலானும்,
    அதனையும் நுறுக்கி வீழ்த்தான்.
180

உரை
   
 
9250.‘வேல்கொடு கொல்லல் உற்றான் ‘
    என்று, ஒரு வெகுளி பொங்க,
கால்கொடு காலின் கூடிக்
    கைதொடர் கனகத் தண்டால்,
கோல்கொளும் ஒருவனோடும்,
    கொடித் தடந்தேரில் பூண்ட
பால்கொளும் புரவி எல்லாம்
    படுத்தினான், துடிப்பு மாற.
181

உரை
   
 
9251.அழிந்த தேர்மீது நின்றான்
    ஆயிர கோடி அம்பு
பொழிந்து, அவன் தோளின் மேலும்,
    இலக்குவன் புயத்தின் மேலும்,
ஒழிந்தவர் உரத்தின் மேலும்
    உதிர நீர் வாரி ஓதம்
அழிந்து இழிந்து ஓட நோக்கி
    அண்டமும் இரிய ஆர்த்தான்.
182

உரை
   
 
9252.ஆர்த்தவன்; அனைய போழ்தின்,
    ‘அழிவு இலாத் தேர்கொண்டு அன்றிப்
போர்த்தொழில் வெல்லல் ஆகாது ‘
    என்பது ஓர் பொருளை உன்னி,
பார்த்தவர் இமையா முன்னம்
    ‘விசும்பிடைப் படர்ந்தான் ‘என்னும்
வார்த்தையை நிறுத்திப் போனான்,
    இராவணன் மருங்கு புக்கான்.
183

உரை