போர்முரசுகேட்டு அரக்கர்சேனை திரளுதல்

9785.எற்றிய முரசங் கேளா,
    ஏழ் இரு நூறு கோடி
கொற்ற வாள் நிருதர் சேனை
    குழீஇயது; கொடித்திண் தேரும்
சுற்றுறு துளைக் கைம்மாவும்,
    துரகமும், பிறவும் தொக்க;
வற்றிய வேலை என்ன
    இலங்கை ஊர் வறளிற்று ஆக.
2

உரை
   
 
இராவணன் சிவபூசைசெய்து தானம் முதலியன நல்குதல்

9786.ஈசனை, இமையா முக்கண்
    ஒருவனை, இருமைக்கு ஏற்ற
பூசனை முறையின் செய்து,
    திருமறை புகன்ற தானம்
வீசினன் இயற்றி, மற்றும்
    வேட்டன வேட்டோர்க்கு எல்லாம்
ஆசு அற நல்கி, ஒல்காப்
    போர்த்தொழிற்கு அமைவது ஆனான்
3

உரை
   
 
இராவணன் போர்க்கோலம் கொள்ளுதல்

9787.அருவி அஞ்சனக் குன்றிடை
    ஆயிரம் அருக்கர்
உருவினோடும் வந்து உதித்தனர் ஆம்
    என ஒளிர,
கருவி நான்முகன் வேள்வியில்
    படைத்ததும், கட்டிச்
செருவில் இந்திரன் தந்த
    பொன்கவசமும், சேர்த்தான்.
4

உரை
   
 
9788.வாள் வலம்பட, மந்தரம்
    சூழ்ந்த மாசுணத்தின்
தாள் வலந்து ஒளிர் தமனியக்
    கச்சொடும் சார்த்தி;
கோள் வலந்தன குவிந்தனவாம்
    எனும் கொள்கை
மீள்வு இல் கிம்புரி மணிக்
    கடிசூத்திரம் வீக்கி;
5

உரை
   
 
9789.மறை விரித்து என, ஆடுறு
    மான மாக் கலுழன்
சிறை விரித்தனெ, கொய்சகம்
    மருங்கு உறச் சேர்த்தி;
முறை விரித்தன்ன முறுக்கிய
    கோசிக மருங்கில்
பிறை விரித்தன்ன வெள் எயிற்று
    அரவமும் பிணித்து;
6

உரை
   
 
9790.மழைக் குலத்தொடு வான் உரும்
    ஏறு எலாம் வாரி
இழைத்து எடுத்தன அனைய
    வாள் உடை மணி ஆர்த்து;
முழைக் கிடந்த வல் அரி இனம்
    முழங்குவ போல்வ
தழைக்கும் மின் ஒளிப் பொன்மலர்ச்
    சதங்கையும் சாத்தி;
7

உரை
   
 
9791.உரும் இடித்தபோது அரவு உறு
    மறுக்கம், வான் உலகின்
இரு நிலத்திடை, எவ்
    உலகத்திடை, யாரும்
புரிதரப் படும் பொலம் கழல்
    இலங்குறப் பூட்டி;
சரியுடைச் சுடர் சாய்நலம்
    சாய்வுறச் சாத்தி;
8

உரை
   
 
9792.நால் அஞ்சு ஆகிய கரங்களின்
    நனந்தலை அனந்தன்
ஆலம்சார் மிடற்று அருங் கறை
    கிடந்து என, அலங்கும்
கோலம் சார் நெடுங் கோதையும்
    புட்டிலும் கட்டி;
தாலம் சார்ந்த மாசுணம் எனக்
    கங்கணம் தழுவ
9

உரை
   
 
9793.கடல் கடைந்த மால் வரையினைச்
    சுற்றிய கயிற்றின்
அடல் கடந்த தோள் அலங்கு போர்
    வலயங்கள் இலங்க,
உடல் கடைந்த நாள் ஒளியவன்
    உதிர்த்த பொன் கதிரின்
சுடர் தயங்குற, குண்டலம்
    செவியிடைத் தூக்கி;
10

உரை
   
 
9794.உதயக் குன்றத்தோடு அத்தத்தின்
    உலாவுறு கதிரின்
துதையும் குங்குமத் தோெளாடு
    தோள் இடை தொடர,
புதை இருள்பகைக் குண்டலம்
    அனையவை பொலிய;
சிதைவு இல் திங்களும் மீனும்போல்,
    முத்து இனம் திகழ;
11

உரை
   
 
9795.வேலைவாய் வந்து வெய்யவர்
    அனைவரும் விடியும்
காலை உற்றுளர் ஆம் எனக்
    கதிர்க் குலம் காலும்
மாலை பத்தின்மேல், மதியம்
    முன் நாள் இடைப் பலவாய்
ஏல முற்றிய அனைய
    முத்தக் குடை இமைப்ப;
12

உரை
   
 
9796.பகுத்த பல்வளக் குன்றினில
    முழை அன்ன பகுவாய்
வகுத்த வான்கடை கடைதொறும்
    வளை எயிற்று ஈட்டம்,
மிகுத்த நீலவான் மேகம்சூழ்
    விசும்பிடை, தசும்பு ஊடு
உகுத்த செக்கரின் பிறைக் குலம்
    முளைத்தன ஒக்க.
13

உரை
   
 
9797.ஒத்த தன்மையின் ஒளிர்வன,
    தரளத்தின் ஓதம்
தத்துகின்றன, வீரபட்டத்
    தொகை தயங்க;
முத்த ஓடைய முரண்திசை
    மும்மத யானை
பத்து நெற்றியும் சுற்றிய
    பேர் எழில் படைக்க;
14

உரை
   
 
9798.புலவி மங்கையர் பூஞ் சிலம்பு
    அரற்று அடி போக்கி,
தலைமை கண்ணினர்த் தாழ்கிலா
    மணிமுடித் தலங்கள்,
உலகம் ஒன்றினை விளக்குறு
    கதிரினை ஓட்டி
அலகு இல் எவ் உலகத்தினும்
    வயங்கு இருள் அகற்ற;
15

உரை
   
 
9799.நாகம், நால் நிலம், நான்முகன்
    நாடு என நயந்த
பாகம் மூன்றையும் வென்று கொண்டு,
    அமரர் முன்பு அணிந்த
வாகை மாலையின் மருங்கு உற
    வரி வண்டொடு அளவித்
தோகை அன்னவர் விழி தொடர்
    தும்பையும் சூடி;
16

உரை
   
 
9800.அகழும் வேலையை, காலத்தை,
    அளக்கர் நுண் மணலை,
நிகழும் மீன்களை, விஞ்சையை
    நினைப்பது என்? நின்ற
இகழ்வு இல் பூதங்கள் இறப்பினும்
    இறுதி செல்லாத
புகழ் எனச் சரம் தொலைவு இலாத்
    தூணி பின் பூட்டி;
17

உரை
   
 
வருக தேர் ‘என இராவணன் கூறத் தேர் வருதல்

9801.‘வருக, தேர்! ‘என வந்தது
    வையமும் வானும்
உரக தேயமும் ஒருங்கு உடன்
    இவரினும், உச்சிச்
சொருகு பூ அன்ன சுமையது;
    துரகம் இன்று எனினும்,
நிருதர் கோமகன் நினைந்துழிச்
    செல்வது, ஓர் இமைப்பில்.
18

உரை
   
 
தேரின் சிறப்பியல்புகள்

9802.ஆயிரம் பரி அமுதொடு
    வந்தவும், அருக்கன்
பாய் வயப் பசுங் குதிரையின்
    வழியவும், படர்நீர்
வாய் மடுக்கும் மா வடவையின்
    வயிற்றின், வன்காற்றின்
நாயகற்கு வந்து உதித்தவும்,
    பூண்டது நலத்தால்.
19

உரை
   
 
9803.பாரில் செல்வது, விசும்பிடைப்
    படர்வது, பரந்த
நீரில் செல்வது, நெருப்பினும்
    செல்வது, நிமிர்ந்த
போரில் செல்வது, பொன் நெடு
    முகட்டிடை விரிஞ்சன்
ஊரில் செல்வது, எவ் உலகத்தும்
    செல்வது, ஓர் இமைப்பின்.
20

உரை
   
 
9804.எண்திசைப் பெருங் களிற்றிடை
    மணி என இசைக்கும்
கண்டை ஆயிர கோடியின்
    தொகையது; கதிரோன்
மண்டிலங்களை மேருவில்
    குவித்தனெ வயங்கும்
அண்டம் விற்கும் நன் காசு இனம்
    குயிற்றியது, அடங்க.
21

உரை
   
 
9805.முனைவர் வானவர் முதலினர்,
    அண்டத்து முதல்வர்
எனைவர் அன்னவர் ஈந்தவும்,
    இகலில் இட்டனவும்,
வினையின் வெய்யன படைக்கலம்,
    வேலை என்று இசைக்கும்
சுனையின் நுண் மணல் தொகையன
    சுமந்தது, தொக்க.
22

உரை
   
 
9806.கண்ணன் நேமியும், கண்ணுதல்
    கணிச்சியும், கமலத்து
அண்ணல் குண்டிகைக் கலசமும்,
    அழியினும், அழியாத்
திண்மை சான்றது; தேவரும்
    உணர்வு அரும் செய்கை
உண்மை ஆம் எனப் பெரியது;
    வென்றியின் உறையுள்.
23

உரை
   
 
9807.அனைய தேரினை அருச்சனை
    வரன்முறை ஆற்றி,
எனையர் என்பது ஓர் கணக்கு இலா
    மறையவர் எவர்க்கும்
வினையின் நல்நிதி முதலிய
    அளப்ப அரும் வெறுக்கை
நினையின் நீண்டது ஓர் பெருங்கொடை
    அருங் கடன் நேர்ந்தான்.
24

உரை
   
 
இராவணன் தேரில் ஏறுதல்

9808.ஏறினான் தொழுது; இந்திரன்
    முதலிய இமையோர்
தேறினார்களும் தியங்கினார்,
    மயங்கினார், திகைத்தார்;
வேறு நாம் சொலும் வினை இலை,
    மெய்யின் ஐம்புலனும்
ஆறினார்களும் அஞ்சினார்,
    உலகு எலாம் அனுங்க.
25

உரை
   
 
இராவணன் கூறிய வஞ்சினம்

9809.‘மன்றல் அம்குழல் சனகி தன்
    மலர்க் கையால் வயிறு
கொன்று, அலந்தலைக் கொடு நெடுந்
    துயரிடைக் குளித்தல்;
அன்று இது என்றிடின், மயன்மகள்
    அத்தொழில் உறுதல்;
இன்று, இரண்டின் ஒன்று ஆக்குவென்,
    தலைப்படின் ‘என்றான்.
26

உரை
   
 
போருக்கு எழுந்த இராவணனது தோற்றப் பொலிவு

9810.பல களம் தலை மௌலியோடு
    இலங்கலின் பல் தோள்
அலகு அளந்து அறியா நெடும்
    படைகேளாடு அலங்க,
விலகு அளம் தரு கடல் திரை
    விசும்பொடும் விம்ம,
உலகு அளந்தவன் வளர்ந்தனன்
    ஆம் என உயர்ந்தான்.
27

உரை
   
 
இராவணன் தன் தோள்களைத்தட்டி ஆரவாரித்தல்

9811.விசும்பு விண்டு இரு கூறு உற,
    குலம் வரை வெடிப்ப,
பசும் புண் விண்டு என புவிபட,
    பகலவன் பசும் பொன்
தசும்பு நிள்று இடைந்து இரிந்திட,
    மதிதகை அமிழ்தின்
அசும்பு சிந்தி நொந்து உலைவுற,
    தோள் புடைத்து ஆர்த்தான்.
28

உரை
   
 
இராவணன் தன் வில் நாணைத்தறெித்தல்

9812.‘நணித்து வெஞ் சமம் ‘என்பது ஓர்
    உவகையின் நலத்தால்
திணித் தடம் கிரி வெடித்து உக,
    சிலையை நாண் தறெித்தான்;
மணிக் கொடுங்குழை வானவர்
    தானவர் மகளிர்,
துணுக்கம் எய்தினர், மங்கல
    நாண்களைத் தொட்டார்.
29

உரை
   
 
உயிர்கள் யாவும் நடுங்க இராவணன் போர்க்களத்திலே தோன்றுதல்

9813.சுரிக்கும் மண்டலம் தூங்கு நீர்ச்
    சுரிப்பு உற வீங்க,
இரைக்கும் பல் உயிர் யாவையும்
    நடுக்கம் உற்று இரிய,
‘பரித்திலன் புவி, படர் சுடர்
    மணித் தலை பலவும்
விரித்து எழுந்தனன், அனந்தன் மீது ‘
    எனப் பொலி மெய்யான்
30

உரை
   
 
9814.தோன்றினான் வந்து சுரர்கேளாடு
    அசுரரே தொடங்கி
மூன்று நாட்டினும் உள்ளவர்
    யாவரும் முடிய,
‘ஊன்றினான் செரு ‘என்று உயிர்
    உமிழ்தர, உதிரம்
கான்று, நாட்டங்கள் வட அனற்கு
    இருமடி கனல.
31

உரை
   
 
அப்பொழுது உலகில் தோன்றிய கலக்கத்தைக்கண்டு சுக்கிரீவன் முதலியோர் துணுக்குற்றெழுதல்

9815.உலகில் தோன்றிய மறுக்கமும்,
    இமைப்பிலர் உலைவும்,
மலையும் வானமும் வையமும்
    மறுகுறும் மறுக்கும்,
அலைகொள் வேலைகள் அஞ்சின
    சலிக்கின்ற அயர்வும்,
தலைவனே முதல் தண்டல்
    இலோர் எலாம் கண்டார்.
32

உரை
   
 
9816.‘பீறிற்றாம் அண்டம் ‘என்பது ஓர்
    ஆகுலம் பிறக்க,
வேறிட்ட ஓர் பெருங் கம்பலை
    பம்பி மேல் வீங்க,
‘மாறிப் பல் பொருள் வகுக்குறும்
    காலத்து மறுக்கம்
ஏறிற்று; உற்றுளது என்னை கொலோ? ‘
    என எழுந்தார்.
33

உரை
   
 
இராவணன் தேர்மீதேறிச் சேனையொடு வருகின்றான் என்பதைச் சுக்கிரீவன் முதலியோர் அறிதல்

9817.கடல்கள் யாவையும், கன மலைக்
    குலங்களும், காரும்,
திடல்கொள் மேருவும், விசும்பிடைச்
    செல்வன சிவண,
அடல்கொள் சேனையும், அரக்கனும்,
    தேரும், வந்து ஆர்க்கும்
கடல் கொள் பேர் ஒலிக் கம்பலை
    என்பதுங் கண்டார்.
34

உரை
   
 
இராவணன் வருகையை வீடணன் இராமனுக்குக் கூறுதல்

9818.‘எழுந்து வந்தனன் இராவணன்;
    இராக்கதத் தானை
கொழுந்து முந்த வந்து உற்றது;
    கொற்றவ! குலுங்குற்று
அழுந்துகின்றது, நம் பலம்!
    அமரரும் அஞ்சி,
விழுந்து சிந்தினர் ‘என்றனன்,
    வீடணன், விரைவான்.
35

உரை
   
 
இராமன் போருக்கு எழுதல்

9819.தொழும் கையொடு, வாய் குழறி,
    மெய்ம் முறை துளங்கி,
விழுந்து கவி சேனை இடு
    பூசல் மிக, விண்ணோர்
அழுந்து படு பால் அமளி
    ‘அஞ்சல் ‘என அந்நாள்,
எழுந்தபடியே கடிது
    எழுந்தனன், இராமன்.
36

உரை
   
 
இராமன் போர்க்கோலங் கொள்ளுதல்

9820.கடக் களிறு எனத்தகைய
    கண்ணன், ஒரு காலன்
விடக் கயிறு எனப் பிறழும்
    வாள் வலன் விசித்தான்,
‘மடக்கொடி துயர்க்கும், நெடு
    வானின் உறைவோர் தம்
இடர்க் கடலினுக்கும் முடிவு,
    இன்று ‘என இசைத்தான்.
37

உரை
   
 
9821.தன் அக வசத்து உலகு
    தங்க, ஒரு தன்னின்
பின்ன கவசத்த பொருள்
    இல்லை; பெரியோனை
மன் அக வசத்து உற
    வரிந்தது எனின், மாதோ!
இன்ன கவசத்தையும் ஒர்
    ஈசன் எனல் ஆமால்.
38

உரை
   
 
9822.புட்டிலொடு கோதைகள்,
    புழுங்கி எரி கூற்றின்
அட்டில் எனல் ஆய மலர்
    அங்கையின் இலங்கக்
கட்டி, உலகின் பொருள்
    எனக் கரை இல் வாளி
வட்டில் புறம் வைத்து
    அயல் வயங்கு உற வரிந்தான்.
39

உரை
   
 
சிவபெருமான் தேவர்களைநோக்கி இராமனுக்குத் தேரனுப்புமாறு பணித்தல்

9823.‘மூண்டசெரு இன்று அளவில்
    முற்றும்; இனி, வெற்றி
ஆண்தகையது; உண்மை; இனி
    அச்சம் அகல்வுற்றீர்,
பூண்ட மணி ஆழி வய
    மா நிமிர் பொலந்தேர்
ஈண்ட விடுவீர் அமரர்! ‘
    என்று அரன் இசைத்தான்.
40

உரை
   
 
இந்திரன், இராமனுக்கு உதவக்கருதித் தேரைக் கொணருமாறு மாதலிக்குக் கட்டளையிடுதல்

9824.தேவர் அதுகேட்டு, ‘இது
    செயற்கு உரியது ‘என்றார்;
ஏவல் புரி இந்திரனும்
    அத் தொழில் இசைந்தான்,
‘மூவுலகும் இன்று ஒரு
    கணத்தின் முறை முற்றிக்
காவல்புரி தன் பொரு
    தேர் கொணர்தி ‘என்றான்.
41

உரை