மாதலி தேர் கொணர்தல்

9825.மாதலி கொணர்ந்தனன் மகோததி வளாவும்
பூதலம் எழுந்துபடர் தன்மைய பொலந்தேர்;
சீத மதிமண்டலமும் ஏனை உளவும் திண்
பாதம் எனநின்றது பரந்தது விசும்பின்.
42

உரை
   
 
வந்த தேரின் சிறப்பியல்புகள்

9826.குலக் கிரிகள் ஏழின்
    வலிகொண்டு உயர்கொடிஞ்சும்,
அலக்கும், உயர்பாரும், வலி
    ஆழியும், நல் அச்சும்
கலக்கு அற வகுத்தது;
    கதத்து அரவம் எட்டின்
வலக் கயிறு கட்டியது;
    முட்டியது வானை.
43

உரை
   
 
9827.ஆண்டினொடு நாள் இருது திங்களிவை என்னா
மீண்டனவும் மேலனவும் ஈட்டி விரிதட்டில்
பூண்டு உளது; தாரகை மணிப்பொரு இல் கோவை
நீண்ட புனைதாரின் அது; நின்றுளது குன்றின்.
44

உரை
   
 
9828.மாதிரம் அனைத்தையும் மணி சுவர்கள் ஆகக்
கோது அற வகுத்தது; மழைக்குழுவை எல்லாம்
மீது உறு பதாகை என வீசியது; மெய்ம்மைப்
பூதம் அவை ஐந்தின் வலியின் பொலிவது அம்மா!
45

உரை
   
 
9829.மரத்தொடு மருந்து உலகில் யாவும் உளவாரித்
தரத்தொடு தொடுத்த கொடி தங்கியது; சங்கக்
கரத்தொடு தொடுத்த கடல்மீது நிமிர்காலத்து
உரத்தொடு தொகுத்த கதழ் ஓசை அதன் ஓதை.
46

உரை
   
 
9830.பண்டு அரிதன் உந்தி
    அயன் வந்த பழ முந்தைப்
புண்டரிக மொட்டு அனைய
    மொட்டினது; பூதம்
உண்டவை வயிற்றிடை
    ஒடுக்கி உமிழ்கிற்போன்
அண்டச மணி சயனம்
    ஒப்பது அகலத்தின்.
47

உரை
   
 
9831.வேதம் ஒரு நாலும்,
    நிறைவேள்விகளும், வெவ்வேறு
ஓதம் அவை ஏழும், மலை
    ஏழும், உலகு ஏழும்,
பூதம் அவை ஐந்தும், எரிமூன்றும்,
    நனி பொய் தீர்
மாதவமும், ஆவுதியும்,
    ஐம்புலனும், மற்றும்;
48

உரை
   
 
9832.அருங் கரணம் ஐந்து, சுடர்
    ஐந்து, திசை நாலும்,
ஒருங்கு குணம் மூன்றும், உழல்
    வாயு ஒரு பத்தும்,
பெரும் பகலும், நீள் இரவும்,
    என்று இவை, பிணிக்கும்
பொரும் பரிகள் ஆகி நனி
    பூண்டது, பொலந்தேர்.
49

உரை
   
 
தங்களுக்குப் போரில் வெற்றி தேடித்தரும்படித் தேவர்கள் அத்தேரை வேண்டுதல்

9833.வந்ததனை வானவர்
    வணங்கி, ‘வலியோய்! நீ
எந்தை தர வந்தனை;
    எமக்கு உதவுகிற்பாய்;
தந்தருள்வை வென்றி ‘என
    நின்று, தகை மென் பூச்
சிந்தினர்கள்; மாதலி
    கடாவி நனி சென்றான்.
50

உரை
   
 
தேர் இராமனருகே விரைந்து வருதல்

9834.‘வினைப்பகை விசைக்கொடு
    விசும்பு உருவி, மான
மனத்தின் விசைபெற்றுளது
    வந்தது ‘என வானோடு
அனைத்து உலகமும் தொழ,
    அடைந்தது, அமலன்பால்;
நினைப்பும் இடை பின் பட
    நிமிர்ந்து உயர் நெடுந்தேர்.
51

உரை
   
 
தேரினைக் கண்டு இராமன் வியத்தல்

9835.‘அலரி தனி ஆழி புனை
    தேர் இது எனின், அன்றால்;
உலகின் முடிவில் பெரிய
    ஊழ் ஒளி இது அன்றால்;
நிலைகொள் நெடு மேரு கிரி
    அன்று; நெடிது அம்மா!
தலைவர் ஒரு மூவர் தனி
    மானம் இது தானோ?
52

உரை
   
 
இராமன், தேர்ப்பாகனாகிய மாதலியை
நோக்கி வினவுதல்

9836.‘என்னை இது நம்மை இடை
    எய்தல்? ‘என எண்ணா,
மன்னவர்தம் மன்னன்மகன்,
    மாதலியை, ‘வந்தாய்,
பொன்னின் ஒளிர்தேர் இதுகொடு,
    ஆர்புகல? ‘என்றான்;
அன்னவனும் அன்னதனை
    ஆக உரை செய்தான்.
53

உரை
   
 
மாதலியின் மறுமொழி

9837.‘முப்புரம் எரித்தவனும்,
    நான்முகனும், முன்நாள்
அப்பகல் இயற்றி உளது;
    ஆயிரம் அருக்கர்க்கு
ஒப்பு உடையது; ஊழி திரி
    காலும் உலைவு இல்லா
இப்பொரு இல் தேர் வருவது
    இந்திரனது எந்தாய்!
54

உரை
   
 
9838.‘அண்டம் இது போல்வன
    அளப்பு இல அடுக்கிக்
கொண்டுபெயரும்; குறுகும்;
    நீளும்; அவை கோள் உற்று
உண்டவன் வயிற்றினையும்
    ஒக்கும், உவமிக்கின்;
புண்டரிக! நின்சரம்
    எனக்கடிது போமால்.
55

உரை
   
 
9839.‘கண்ணும் மனமும் கடிய
    காலும் இவை கண்டால்,
உண்ணும் விசையால் உணர்வு
    பின்படர ஓடும்;
விண்ணும் நிலனும் என
    விசேடம் இலது; அஃதே
எண்ணும் நெடுநீரினும்,
    நெருப்பிடையும் எந்தாய்!
56

உரை
   
 
9840.‘நீரும் உளவே, அவை ஓர்
    ஏழு; நிமிர்கிற்கும்
பாரும் உளவே, அதின்
    இரட்டி; அவை பண்பின்
பேரும் ஒருகாலை,
    ஒருகாலும் இடைபேராத்
தேரும் உளதே, இது
    அலால்? உலகு செய்தோய்!
57

உரை
   
 
9841.‘தேவரும், முனித்தலைவரும்,
    சிவனும், மேல்நாள்,
மூவுலகு அளித்த அவனும்,
    முதல்வ! முன் நின்று!
ஏவினர்; சுரர்க்கு இறைவன்
    ஈந்து உளது இது ‘என்னா,
மாவின் மனம் ஒப்ப உணர்
    மாதலி, வலித்தான்.
58

உரை
   
 
இத்தேர் அரக்கர் மாயையால் தோன்றியதோ ‘என இராமன் ஐயுற, தேர்க்குதிரைகள் அந்த ஐயத்தைப்போக்குதல்

9842.ஐயன் இதுகேட்டு, ‘இகல்
    அரக்கர் அகல் மாயச்
செய்கை கொல்? ‘எனச் சிறிது
    சிந்தையில் நினைந்தான்;
‘மெய் அவன் உரைத்தது ‘என
    வேண்டி, இடை பூண்ட
மொய் உளை வயப்பரி
    மொழிந்த, முது வேதம்.
59

உரை
   
 
தெளிவுபெற்ற இராமன் மாதலியை நோக்கி ‘உனது பெயரைக் கூறுக ‘என அவன் தன் பெயரைக் கூறுதல்

9843.‘இல்லை இனி ஐயம் ‘என
    எண்ணிய இராமன்,
நல்லவனை, ‘நீ உனது
    நாமம் நவில்க! ‘என்ன,
‘வல் இதனை ஊர்வது ஒரு
    மாதலி எனப்பேர்
சொல்லுவர் ‘எனத் தொழுது,
    நெஞ்சினொடு சொன்னான்.
60

உரை
   
 
9844.மாருதியை நோக்கி, இள
    வாள் அரியை நோக்கி,
‘நீர் கருதுகின்றதை
    நிகழ்த்தும் ‘என, நின்றான்
ஆரியன்; வணங்கி அவர்,
    ‘ஐயம் இலை, ஐயா!
தேர் இது புரந்தரனது ‘
    என்றனர், தெளிந்தார்.
61

உரை
   
 
இராமன் தேரில் ஏறுதல்

9845.விழுந்து புரள் தீவினை
    குலத்தோடும் வெதும்ப,
தொழும் தகைய நல்வினை
    களிப்பினொடு துள்ள,
அழுந்து துயரத்து அமரர்
    அந்தணர் கைமுந்துற்று
எழுந்து தலை ஏற, இனிது
    ஏறினன் இராமன்.
62

உரை