கமை ஒப்பது ஒர்தவமும் - பொறுமை என்னும் குணமே (வடிவு பெற்றது) எனலாம் படியான தவத்தையும்; சுடுகனல் ஒப்பது ஒர் சினமும் - சுடுகின்ற தீயே (வடிவு பெற்றது) எனலாம் படியான சீற்றத்தையும்; பெரிதும் சமைய உடையான் - மிகவும் பொருந்தியிருப்பவனும்; எதிர் தளர்வுற்று இடை தவிரும் அமையத்து - (மானச வாவிக்குச் செல்லுகையில்) எதிரே (பறக்கும் வழியை) இடையே தவற விட்டுத் தளர்ந்த போது; உயர் பறவைக்கு - உயர்ந்த (அன்னப்) பறவைகட்கு; இனிது ஆறு ஆம் வகை - இனிய வழியாகும்படி; சீறா - சீற்றம் கொண்டு; சிமையக் கிரி உருவ - சிகரத்தையுடைய (கிரௌஞ்ச) மலையைத் துளைத்து ஊடுருவிச் செல்லுமாறு; தனி வடிவாளிகள் - ஒப்பற்ற கூரிய அம்புகளைத்; தெரிவான் - தெரிந்து ஏவ வல்லானும் - பரசுராமனும் முருகப் பெருமானும். சிவ பிரானிடம் வில்வித்தை பயின்று முடித்த பின்பு. ஆற்றல் அறிய. கிரௌஞ்ச கிரியின் சிகரமொன்றைத் துளைக்குமாறு. சிவபெருமான் ஆணையிட. முருகன் தயங்குகையில். பரசுராமன் தயங்காது கணையைச் செலுத்தி. அச்சிகரத்தைத் துளைக்க. பருவ மாற்றங்களில் இடம் மாறும் அன்னம் முதலிய பறவைகள் செல்வதற்கு. இவன் சிகரந் துளைத்த வழி மிகவும் உதவிற்று என்னும் கதையை உட்கொண்டது பின் இரண்டடியில் உள்ள கருத்து ஆகும். இவன் தவம் புரிவது பொறுமைக்குணமே தவம் புரிவது போலிருந்தது என்பார். கமை ஒப்ப தோர்தவமும் என்றார். கமை - பொறை. வெகுண்டால் தீப்போல் வெகுள்வான்; பொறுத்தால் பொறையே ஆவான் என இவன் இருகுணங்களின் எல்லையாகவே இருந்தமை குறிப்பித்தவாறு. பரசுராமன் கிரௌஞ்ச கிரியைத் துளைத்து. பறவைகட்கு வழியமைத்த அரிய செய்தி முதல் நூலாம் வான் மீகத்தில் இல்லை என்பர். 14 |