இலக்குவன், சூர்ப்பணகையின் உறுப்புக்களை அறுத்தல் 2824. | 'நில் அடீஇ' என, கடுகினன், பெண் என நினைத்தான்; வில் எடாது அவள் வயங்கு எரி ஆம் என விரிந்த சில் வல் ஓதியைச் செங் கையில் திருகுறப் பற்றி, ஒல்லை ஈர்த்து, உதைத்து, ஒளி கிளர் சுற்று-வாள் உருவி, |
(அதைக் கண்ட இலக்குவன்) 'அடீ இ நில்' என - 'அடீ நில்' என்று அதட்டி; கடுகினன் - விரைந்தான், பெண் என நினைத்தான் - இவள் ஒரு பெண் என்று எண்ணினான்; வில் எடாது - தன்னுடைய வில்லை எடுக்காமல்; அவள் வயங்கு எரி ஆம் என விரிந்த சில் வல் ஓதியை - சூர்ப்பணகையின் விளங்குகின்ற தீப்போன்று பரந்து செந்நிறம் கொண்ட சிலவாகிய வலிய கூந்தலை; செங்கையில் திரு குறப்பற்றி - தனது சிவந்த கைகளால் சுருட்டிப் பிடித்து; ஒல்லை ஈர்த்து உதைத்து - விரைவில் பற்றி இழுத்து அவளைத் தன் காலால் உதைத்துத் தள்ளி; ஒளிகிளர் சுற்றுவாள் உருவி - ஒளி விளங்கும் தன் உடைவாளை உறையிலிருந்து உருவி எடுத்து, சூர்ப்பணகை சீதையைப் பின் தொடரும் நோக்கத்தை அறிந்த இலக்குவனின் சினம் பொங்க 'நில் அடீ இ' என அவளைத் தடுத்தான். இராமன் காடு செல்வான் என அறிந்த இலக்குவன் சீற்றம் கொண்டதை நகர் நீங்கு படலத்தில் விளக்கமாகக் காணலாம் (1716-1724). இராமனை அழைத்துச் செல்ல வந்த பரதனையும் அவன் படையையும் கண்டு இலக்குவன் சீறிய சீற்றமும் கூறிய சின மொழியும் இவனுடைய பண்பு நலத்தை நன்கு காட்டும் (2400-2415). சூர்ப்பணகையைப் பெண்ணென இலக்குவன் நினைப்பது தாடகையை இராமன் கண்டு 'பெண்' என மனத்திடை நினைத்த தோடு ஒப்பிடலாம் (374). சில்லல் எனப் பாடம் ஓதிச் சிறு எனப் பொருள் கூறுவர். எனினும் வல் என்பது அரக்க மகளிர்க்குரிய மென்மையற்ற கூந்தலைக் குறிக்கும் எனலாம். சுற்று என்பது இடையைச் சுற்றியுள்ளதான இடைக் கச்சைக் குறிக்கும். சுற்றுவாள் என்பது அதில் கட்டப்பட்ட வாளைச் சுட்டும், (பெரும்பாண். 73, முல்லைப். 46-47) இலக்குவன் அயோமுகி உறுப்பையும் வாளால் துணித்தமை இங்கு நினைத்தற்குரியது (3631). 93 |