நோக்கிய- (அவ்வாறு சீதை) பார்த்த; நோக்கு எனும் - பார்வையாகிய; நுதிகொள் வேல் இணை - கூரிய இரண்டு வேல்கள்; ஆக்கிய மதுகையான் - ஆக்கம் பெற்ற வன்மையுடைய இராமனின்; தோளின் ஆழ்ந்தன - தோள்களிலே அழுந்தின; வீக்கிய கணைகழல் - ஒலிக்கும் வீரக்கழல் கட்டிய; வீரன் செங்கணும் - வீரனான இராமனுடைய சிவந்த கண்களும்; தாக்கு அணங்கு - பிறரை வேட்கையால் தாக்குகின்ற மோகினியாகிய பெண் தெய்வத்தை; அனையவள் - போன்ற சீதையின்; தனத்தில் தைத்த - கொங்கைகளில் தாக்கின. இராமன். சீதை ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் கண்களால் பருகினர். ஓர் ஆவிற்கு இரு கோடுபோல ஒத்த காதல் கொண்டவராயினர். ‘கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள். என்ன பயனும் இல’ - குறள்:1100 தாக்கணங்கு: பார்க்கின்ற ஆடவர்க்கு வேட்கையை விளைவித்து அதனால் அவர்களைத் தாங்கும் தேவதை. 36 |