கருடன் துதி
 

8251.‘வந்தாய் மறைந்து; பிரிவால் வருந்தும்,
     மலர்மேல் அயன்தன் முதலோர்-
தம் தாதை தாதை இறைவா! பிறந்து
     விளையாடுகின்ற தனியோய்!
சிந்தாகுலங்கள் களைவாய்! தளர்ந்து
     துயர் கூரல் என்ன செயலோ?
எந்தாய்! வருந்தல்; உடையாய்! வருந்தல்’
     என, இன்னி பன்னி மொழிவான்:
 

மறைந்து   வந்தாய்  -  (நீ  நின்   திவ்யமங்கள  சொரூபத்தை)
மறைத்துக்கொண்டு; (சங்கற்ப  மாத்திரையாய் மானிடச்  சட்டை தாங்கி)
வந்தாய்; பிரிவால் வருந்து - உன் பிரிவினால் வருந்துகிற; மலர் மேல்
அயன்  தன்  முதலோர்  தம்
- மலரின் மேல் தாங்கி உள்ள அயன்
முதலியோருக்குக்  காரணன்  ஆன;  தாதை  தாதை  - பிதா மகனே;
இறைவா  -   எல்லாப்  பொருள்களிலும்   அந்தர்யாமியாய்த்   தங்கி
உள்ளவனே; பிறந்து விளையாடுகின்ற தனியோய் - (வினை வயத்தால்
அன்றிச்  சங்கல்பத்தால்)  பிறந்து  (மனித உருவத்துக்கு  ஏற்ப  நடித்து
விளையாடுகின்ற     ஒப்பற்ற              தலைவனை!      சிந்தா
குலங்கள்    களைவாய் 
-  சரணாகதி    அடைந்தவர்களின்  மனத்
துன்பங்களைப்    போக்குபவனே;   தளர்ந்து  துயர்  கூரல் என்ன
செயலோ
-  நீயே   மனம்  தளர்ந்து  துன்பம்  மிகப்படுதல்   என்ன
செயலோ? எந்தாய்  வருந்தல்  -  எனது   தலைவனே  வருந்தாதே;
உடையாய்  வருந்தல் -   எப்பொருளையும்  சரீரமாக   உடையவனே
வருந்தாதே; என இன்ன - என்று இத்தன்மையான சொற்கள் பலவற்றை;
பன்னி மொழிவான் - திரும்பத் திரும்பக் கூறுபவனாயினான்,
 

கருடன் உண்மையை இராமனுக்குத் தெரிவித்துத் தேற்றுsவது போல்
பாடல்கள்  அமைந்துள்ள  தன்மையை உணர்ந்து கொள்க. இறைவன்
மானிட  உருத்தாங்கி  வந்து மானுட இன்பதுன்பங்களை அனுபவித்து
மானிட  வெற்றியின்  கொடுமுடியாய் உயர்வதை விளக்க வந்த கம்பர்
இவ்வாறு தானே பாடமுடியும்.
 

                                                (250)