8258.‘சொல் ஒன்று உரைத்தி; பொருள் ஆதி; தூய
    மறையும் துறந்து, திரிவாய்;

வில் ஒன்று எடுத்தி; சரம் ஒன்று எடுத்தி;
     மிளிர் சங்கம் அங்கை உடையாய்;
“கொல்” என்று உரைத்தி; கொலையுண்டு நிற்றி;
     கொடியாய்! உன் மாயை அறியேன்;
அல் என்று, நிற்றி; பகல் ஆதி!-ஆர், இவ்
     அதிரேக மாயை அறிவார்?

 

ஒன்று  சொல்  உரைத்தி  -  ஒப்பற்ற   நாதவடிவினன்  என்று
சொல்லப்படுகிறாய்;   பொருள்   ஆதி  -  சொற்களின்  பொருளும்
ஆகிறாய்;  தூய   மறையும்   துறந்து  திரிவாய்  -  தூய்மையான
வேதங்களையும்  கடந்து விளங்குகிறாய்;  வில்  ஒன்று எடுத்தி சரம்
ஒன்று எடுத்தி
- (அறம் தலை நிறுத்துதற்காகக் கையில்) வில் ஒன்றை
ஏந்தியுள்ளாய்;   (அதில்    வைத்துத்    தொடுப்பதற்காக)   ஒப்பற்ற
அம்புகளையும்  கைக்கொண்டு  இருக்கிறாய்;  அங்கை மிளிர் சங்கம்
உடையாய்
 -  அழகிய கைகளில் ஒளி பொருந்திய (பாஞ்ச சன்னியம்
என்ற)  சங்கினைக் கையில் ஏந்தியுள்ளாய்; கொல் என்று உரைத்தி -
(தீயவர்க்குப்  பகைவனாய்  இருந்து) கொல்லுக  என்று சொல்லுகிறாய்;
கொலையுண்டு நிற்றி  -  (நீயே பகைவராய் இருந்து) கொல்லப்பட்டுக்
கிடக்கிறாய்;  கொடியாய் -  (இவ்வாறு)  முரண்  பல  கொண்டவனே;
உன்மாயை அறியேன் - உனது  மாயச் செயல்களை  எவ்வகையிலும்
என்னால் அறியமுடியவில்லை; அல் என்று நிற்றி - (நீ)  இரவு என்று
கூறும்படியும்  நிற்கின்றாய்;  இவ்  அதிரேகமாயை  -   இந்த  மிக்க
மாயச்செயலை; ஆர் அறிவார் - யார் அறிவார்கள்.
 

இப்பாடல்   முரண்களின்   சேர்க்கையாக   இறைவனை   விளக்க
முயல்கிறது.   திருமால்,   சொல்,   பொருள்,   கொலை   செய்பவன்,
கொல்லப்படுபவன்,  இரவு  பகல் ஆகியவைகளாக இருக்கிறான்  என்று
கூறி அனைத்தும் கடவுளின் சொரூபம் என்று விளக்குகிறார்.
 

                                                (257)