9259.

'அன்றில் தீவினின் உறைபவர், இவர்; பண்டை 

அமரர்க்கு

என்றைக்கும் இருந்து உறைவிடம் என்றிட மேருக் 

குன்றைக் கொண்டு போய், குரை கடல் இட, அறக் 

குலைந்தோர்

சென்று, 'இத் தன்மையைத் தவிரும்' என்று 

இரந்திடத் தீர்ந்தோர்.

 

இவர்  அன்றில் தீவினின் உறைபவர்- இவர்கள் அன்றில்
தீவில்   வாழ்பவர்கள்;   அமரர்க்கு   என்றைக்கும் இருந்து
உறைவிடம்   என்றிட
-   தேவர்கட்கு   எக்காலத்தும் இருந்து
வாழ்கின்ற   இடம்    இது    என்று     பிறர் கூறிய அளவில்;
மேருக்குன்றைக் கொண்டு போய் பண்டைக் குரைகடல் இட
-  அம்மேருமலையினைப்    பெயர்த்துக்    கொண்டு   போய்ப்
பண்டைக்காலத்தில்    ஒலிக்கின்ற   கடலில்   இட முயலாநிற்க;
அறக்குலைந்தோர் சென்று- மிகவும் நிலை குலைந்தவர்களாகிய
அத்தேவர்கள் சென்று;   இத்தன்மையைத்    தவிரும் என்று
இரந்திடத் தீர்ந்தோர்
- 'இந்தச் செயலைக் கைவிடுங்கள்' என்று 
இரந்து கேட்டுக்கொள்ள அச்செயலை விடுத்த வீரமுடையவர்கள்.
 

அன்றில் தீவு - அன்றில்    பறவைகள்   நிறைந்த தீவாகலின்
இப்பெயர் பெற்றது. இதனைக் கிரௌஞ்சம் என்பர் வடமொழியாளர். 
அறக்குலைதல் - மிகவும் நிலை குலைதல்.
 

(13)